”ஆமாம் நைட் டைம்ல குழந்தைகளை தூங்க வைக்கறதுக்கு முன்னாடி சொல்ற குட்நைட் ஸ்டோரிஸ் புக், இங்கிருந்த குழந்தைகளுக்கு படிச்சி காட்டியிருப்பாங்க போல” என சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை புரட்ட அதில் இருந்து ஒரு பேமிலி போட்டோ விழுந்தது அதை எடுத்துப் பார்த்தான் விக்ராந்த்
ஒரு அப்பா அம்மா இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி 9 குழந்தைகள் வயது வாரியாக நின்றபடியிருந்தார்கள், அனைத்து குழந்தைகளும் கவுன் போன்ற உடையில் இருக்க அப்பா அம்மா இயல்பான உடையில் இருந்தார்கள்.
”ராகுல் இந்த போட்டோவைப் பாரேன்” என போட்டோவை காட்ட ராகுலும் பார்த்தான்
”ஓ இவங்கதான் இந்த வீட்ல தங்கினவங்களா“
”இருக்கலாம்”
“ஒன்று ரெண்டு மூணு….. ம் மொத்தம் 9 குழந்தைகள் இருக்காங்க, இந்தாளு ஒரே வேலைதான் செய்திருப்பான் போலடா“ என சொல்லி கலகலவென சிரிக்க விக்ராந்திற்கும் சிரிப்பாக இருந்தது
”கலாய்க்காதடா, இந்த போட்டோவை எடுத்தே கிட்டத்தட்ட 30 வருஷமாயிருக்கு, அந்த காலத்தில ஒரு வீட்லயே 10 பிள்ளைங்க இருப்பாங்க, இங்க 9 தானே இருக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை”
”அப்பாவை பாரேன் சாந்த சொரூபியா இருக்காரு, இவரா நிறைய கடன் பட்டாரு”
”பின்ன இவ்ளோ பெரிய குடும்பத்தை நடத்தனும்னா பணம் வேணாமா“
”அம்மாவோட முகமும் அமைதியாதான் இருக்கு, பிள்ளைகள் கூட அழகாக சிரிக்கறாங்க, எப்படிதான் இந்தாளுக்கு மனசு வந்ததோ, இவ்ளோ அழகான குழந்தைகளையும் சேர்த்து தற்கொலை செய்துக்கறதுக்கு”
”அவங்க கஷ்டம் அவங்களுக்கு, அந்த சமயத்தில அவங்க நிலைமையில இருந்து பார்த்திருந்தா விசயம் தெரிஞ்சிருக்கும்”
”ம் இருக்கலாம், இதுல மூத்தது பொண்ணுன்னு நினைக்கிறேன், ஏன்னா இதுதான் பெரிசா இருக்கு எப்படியும் ஒரு பதினைஞ்சி இல்லை பதினாறு வயசு இருக்கும்ல”
”இருக்கும் இருக்கும் வருஷத்துக்கு ஒரு குழந்தைன்னு கடைசி குழந்தைக்கு எப்படியும் 6 இல்லை 7 வயசாவது இருக்கும்”
”ம் எல்லாருமே க்யூட்டா இருக்காங்க பாரேன்” என சொல்லிவிட்டு அந்த போட்டோவை விக்ராந்திடமே தந்தான் ராகுல். விக்ராந்தும் அந்த போட்டோவை அதே புத்தகத்தில் வைத்துவிட்டு
”சரி வா இந்த ரூமை மூடிடலாம்” என சொல்ல ராகுலும் சரியென தலையாட்டி அவனுடன் வெளியேறினான்
அவர்கள் அந்த அறையின் மேற்கூரையை பார்க்கவில்லை, பார்த்திருந்தால் சில விசயங்கள் தெரிந்திருக்கும், 11 தூக்கு கயிறுகள் அறுந்த நிலையில் இப்போதும் தொங்கிக் கொண்டு இருந்தன, அவை அனைத்தும் ஒரே சமயத்தில் மெதுவாக அசையவும் செய்தன.
ஹாலுக்கு வந்த விக்ராந்தோ
”இப்ப நைட் ஆயிடுச்சி, இங்கயே தூங்கி நாளைக்கு காலையில எழுந்துப் பார்க்கலாம், எல்லாரும் சொல்ற மாதிரி இங்க ஏதாவது அமானுஷ்யம் இருந்தா அதை சரிசெய்ய ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம்”
”இங்க எந்த அமானுஷ்யமும் இருக்கற மாதிரி தெரியலை, ரொம்ப அமைதியா இருக்கு” என சொல்லிய ராகுலோ
”பார்ட்டியில அதிகமா சாப்பிட்டாச்சா ஒருவேளை நடுராத்திரியில பசிச்சா என்ன செய்றது”
”ஸ்நாக்ஸ் இருக்கு இப்போதைக்கு அதை சாப்பிட்டுக்கலாம்”
”கார்லதானே இருக்கு நானே போய் கொண்டு வரேன்” என சொல்லிய ராகுல் வீட்டை விட்டு வெளியேறி காரிடம் செல்ல கார் கதவு திறந்திருக்கவும் அதிர்ந்தான் ராகுல் உடனே பதட்டமாக அக்கம் பக்கம் பார்த்தவன்
”விக்ராந்த் விக்ராந்த்” என சத்தமாக அழைக்க விக்ராந்தோ அவசரமாக வெளியே வந்தான்
”என்னடா ஏன் கத்தற”
”கார் கதவு திறந்திருக்கு பாரேன்” என சொல்ல விக்ராந்தும் காரைக் கண்டான் ஒரு பக்க கதவு திறந்திருந்து எப்படி என குழம்பினான்
”என்னடா யோசிக்கற இது எப்படி சுத்திலும் யாரும் இல்லையே”
”பொறு, அப்பவே கார் கீகீன்னு சத்தம் போட்டுச்சில்ல, அப்ப நான்தான் காரை லாக் பண்ணேன், இப்ப எப்படி கதவு திறந்திருக்கு தெரியலையே, யாரும் வந்த மாதிரியில்லை ம்” என சொல்லிக் கொண்டே காருக்குள் ஏறி என்ன ஏதுவென பார்த்தான். கெட்ட துர்நாற்றம் அடித்தது
”நாத்தம் தாங்கலை, ஏதோ கெட்டுப் போன மாதிரி வாசனை அடிக்குது” என விக்ராந்த் சொல்ல ராகுலும் காருக்குள் ஏறி என்னவென பார்த்தான்
ஏதாவது அனில் பூனை போன்ற விலங்குகள் இறந்து கிடக்குமோ என பார்த்தனர் ஆனால் அப்படி ஏதும் இல்லை, அதனால் ராகுலோ ஸ்நாக்ஸ் ஐட்டங்களை எடுத்தான் அதில் இருந்துதான் துர்நாற்றம் அடிக்கவே
”விக்ராந்த் ஸ்நாக்ஸ்தான் நாறுது” என சொல்ல அதற்கு விக்ராந்தோ அவற்றை வாங்கிப் பிரித்துப் பார்க்க அனைத்தும் பூஞ்சை பிடித்து கெட்டு அழுகியிருந்தது, அந்த துர்நாற்றத்தை சுவாசிக்க முடியாமல் திணறி இருவரும் காரை விட்டு வெளியேறி அந்த ஸ்நாக்ஸ்களை தூரமாக வீசி எறிந்தார்கள்
”என்னடா இது, காலையில வாங்கி வைச்ச ஸ்நாக்ஸ் அதுக்குள்ள எப்படி பூஞ்சை பிடிச்சி கெட்டுப் போயிருக்கும்”
”தெரியலையே மேபி இங்க வீசற காத்தால இருக்கலாம், காருக்குள்ளயே வைச்சதால கூட இருக்கலாம்“ என விக்ராந்த் சமாளிக்க அதற்கு
”டேய் நண்பா இதெல்லாம் பேக்கட் ஐட்டம், இதுக்குள்ள எப்படி காத்து போகும் சம்திங் ராங் விக்ராந்த்” என ராகுல் சொல்ல விக்ராந்தோ
”இல்லை யாரோ மறைஞ்சிருந்து நம்மளை பயமுறுத்தறாங்க“
“இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலை வெளிச்சத்தில விட இருட்டுல சுத்தியிருக்கற இடத்தைப் பார்க்கவே பயமா இருக்கு”
”ஷ் அதெல்லாம் இல்லை வா உள்ள போலாம்” என தன் நண்பனை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் விக்ராந்த்
”ஒண்ணும் ஆகாது நீ வா” என விக்ராந்த் சொல்லி ஆளுக்கொருவர் தனித்தனி அறையில் தங்கினார்கள்.
விசாலமான படுக்கையறை ஏசியில்லை, ஆனாலும் குளிர்ச்சியாக இருந்தது, மின்விசிறி சுழல அந்த காற்றே அருமையாக இருந்தது, இருவரும் உறக்கம் வரும் வரை அப்படி இப்படி என பொழுது ஓட்டி ஒருவழியாக உறங்கிப் போனார்கள்
நடு ஜாமத்தில் திடீரென விக்ராந்த்துக்கு ஏதோ சங்கடமாக இருந்தது மெல்ல கண்கள் விழித்துப் பார்த்தான், அவனின் முகத்துக்கு வெகு நெருக்கத்தில் ஒரு குழந்தையின் முகம், அதுவும் பார்க்க அகோரமாக இருந்தது, அதைக்கண்டு அடித்துப் பிடித்து எழுந்துப் பார்த்தான் யாருமில்லை, அவனது உடல் எங்கும் வியர்த்திருந்தது, அறைக்கதவு திறந்திருக்க அதைக்கண்டு குழம்பினான் விக்ராந்த்
”கதவு சாத்திட்டுதானே வந்து படுத்தோம்” என நினைத்தபடியே கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு கதவை சாத்த கதவிடம் சென்றான்
அந்நேரம் ஹாலில் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கவும் அதிர்ந்தான், மெதுவாக அறையை விட்டு வெளியேறியதும் படார் என அந்த அறைக்கதவு சாத்தப்பட்டது, அதில் விக்ராந்தின் உடல் நடுங்கிவிட்டது, ஆனாலும் மேல்மாடியில் இருந்தபடியே ஹால் பகுதியை எட்டிப்பார்த்தான், யாரும் இல்லை, ஒரே அமைதி ஆங்காங்கு சிறிய விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருந்தது, விக்ராந்தோ நொந்துப் போனான்
”பார்ட்டியில அடிச்ச சரக்கு இப்பதான் நல்லாவே வேலைகாட்டுது போலயே” என நினைத்தபடியே அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்து படுக்கையில் படுக்க அந்நேரம் ராகுலின் ஆஆஆஆ என அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து ராகுலை தேடி சென்றான் விக்ராந்த்.
அங்கு அவனுக்கும் இதே போல ஒரு குழந்தையின் முகம் தெரிந்துள்ளது, அதில் பயத்தில் அறையை விட்டு வெளியேறியவன் எதிரே வந்த விக்ராந்தின் மீது மோதி நின்றான் விக்ராந்தோ
”என்னடா ஆச்சி ஏன் இப்படி வந்து மோதற”
”டேய் குழந்தை ஒண்ணு பேய் மாதிரி முகத்துக்கு முன்னாடி வந்து போச்சிடா” என பயத்துடன் சொல்ல அதைக்கேட்ட விக்ராந்தும்
”உனக்குமா எனக்கும் இப்பதான் அப்படி ஒரு பிரமை வந்தது”
”பிரமையா ரியலா தெரிஞ்சதே” என்றான் பதட்டமாக
”அடிச்ச சரக்கு இப்பதான் வேலை காட்டுது ஆமா சரக்குல என்னத்த கலந்த”
”ஓ அதுவா அது கொஞ்சம்” என ராகுல் இளித்தபடியே இழுத்துப் பேச
”தெரியும்டா போதைதானே”
”ம் இது ஸ்பெஷல் நண்பா நேரம் ஆக ஆகதான் போதை தலைக்கேறும்”
”இப்பவும் அப்படித்தான் தலைகேறியிருக்கு“
”ஆனா நான் நிஜமாவே பார்த்தேன்டா”
”எல்லாரும் சொன்ன கதையை கேட்டும், அந்த பேமிலி போட்டோவை பார்த்தும் தூங்கப் போனதால ஏதேதோ கனவு வந்திருக்கு உனக்கு”
”ஓ அப்ப இது கனவா”
”ஆமாம்” என சொல்ல அந்நேரம் கிச்சனில் இருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கவும் ராகுல் விக்ராந்தை அணைத்துக் கொள்ள விக்ராந்தோ
”டேய் ஏன்டா இப்படி பயந்து சாகற விடு என்னை” என சொல்ல ராகுலும் அவனை விட்டு விலகி நின்றான்.
”என்னடா இது சத்தம்”
”ஏதாவது பூனையா இருக்கும்டா வா பார்க்கலாம்” என சொல்லி ராகுலை அழைத்துக் கொண்டு கிச்சனுக்குச் சென்றான், அங்கு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் அனைத்தும் தரையிலும் சில பாத்திரங்கள் டைனிங் டேபிள் மீதும் இருந்தது அதைக்கண்ட ராகுல் பயப்பட விக்ராந்தோ
”யாரோ வீட்டுக்குள்ள வந்திருக்காங்க” என்றான் மெதுவாக
”வந்திருக்காங்க இல்லை இது பேயோட வேலை”
”அடிவாங்காத”
”இல்லைடா அங்கப் பாரேன், வரிசையா டேபிள் மேல பாத்திரங்கள் இருக்கு” என சொல்லிக் கொண்டே எண்ணிப் பார்த்தான் 9 இருந்தது
”9 இருக்கு” என சொல்ல விக்ராந்தோ ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்தான் அதில் ஒவ்வொரு பெயர் இருந்தது
”இதுல சோபியான்னு இருக்கு ஒருவேளை அந்த 9 குழந்தையில ஒரு குழந்தை பேரு சோபியாவா இருக்கலாம்”
என சொல்லிக் கொண்டே மற்ற பாத்திரங்களை பார்வையிட்டுவிட்டு இது எப்படி இங்கு என யோசித்தவன் ராகுலைப் பார்த்தான், அவனோ பயத்தில் முகம் வெளிறிப் போயிருந்தான்
”டேய் ராகுல் பயப்படாதடா, இங்க ஒண்ணும் இல்லை, யாரோ நம்மளை விரட்டப் பார்க்கறாங்க புரியுதா, எவனோ ஒருத்தன் வீட்டுக்குள்ள இருக்கான், அவனை பிடிச்சி விரட்டிட்டா சரியாயிடும், நீ அப்படி போய் தேடு, நான் இப்படி போய் தேடறேன்” என சொல்லிவிட்டு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தேடிச் சென்றார்கள்
பெரிய காட்டேஜ் என்பதால் அனைத்து இடங்களையும் கவனமாக தேடிவிட்டு ஹாலுக்கு வர சிறிது நேரம் பிடித்தது
”இங்க பாரு ராகுல், பயப்படாத நான் இருக்கேன்ல, வா நாம ஒண்ணா ஒரு ரூம்ல தூங்கலாம், இப்பவே மிட் நைட் ஆயிடுச்சி, இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடும் வா வா” என அவனை அழைத்துக் கொண்டு விக்ராந்த் தனது படுக்கையறைக்குச் சென்று ராகுலுடன் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டான்