பாகம் -2

மீண்டும் பயணம் கேட்டில் இருந்து காட்டேஜ் செல்வதற்கு 2 கி.மீ தொலைவுதான் ஆனால், வழியோ மிகவும் மோசமாக இருக்க வண்டிக்கு எந்த சேதாரமும் வரக்கூடாதென நிதானமாகவே ஓட்டினான் விக்ராந்த், அதற்கே சிரமப்பட்டார்கள் இருவரும், ஒருவழியாக காட்டேஜ் இருந்த இடம் வந்ததும் ராகுலுக்கு நிம்மதியாகிப் போனது

”அப்பா சாமி முடியலைடா, வண்டி குலுங்கியே என் குடல் எல்லாம் வெளிய வந்துடும் போல இருக்கு, சே முதல்ல சரியான பாதையை போடச் சொல்லு” என ராகுல் சொல்ல விக்ராந்தும் வண்டியை விட்டு இறங்கி சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தான்.

அதற்குள் மாலை நேரம் வந்தது. தூரத்தில் சூரிய அஸ்தமனத்தைக்கண்ட விக்ராந்தோ அதை ராகுலுக்குக் காட்டி மகிழ்ந்தான்

”வாவ் சூப்பர் வியூ அப்ப காலையிலயும் சன்ரைஸ் பார்க்கலாம் போலயே” என்றான் ராகுல் உற்சாகமாக

”ஆமாம் மலைகளுக்கு நடுவுல இப்படி சூரியன் மறையறது அழகா இருக்குல்ல”

”ஆமாம்டா சூப்பரா இருக்கு” என பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் வண்டியில் இருந்து கீ கீ கீ என சத்தம் கேட்டது, என்னவென திரும்பிப் பார்த்தார்கள் இருவரும்

”என்னடா இது சத்தம் யாரும் இல்லை, பின்ன வண்டியை யார் தொட்டிருப்பா” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தோ தனது கார் சாவி மூலம் சத்தத்தை நிப்பாட்டினான்.

”ஏதாவது விலங்கா இருக்கும்”

”விலங்கா“

”ம் முயல் எலின்னு எதுவாகூட இருக்கலாம்” என சொல்ல ராகுல் சுற்றி முற்றி பார்த்தான்.

கேட்டிற்கு வெளியவாவது ஏதோ சில செடிகள் மரங்கள் என இருந்தது கேட்டிற்குள்ளோ ஒரு புல் பூண்டு இல்லை

”டேய் இங்க எப்படிடா விலங்கு இருக்கும் பாரு, இயற்கை வளமே இல்லை”

“சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால இது இப்படியிருக்கு, ஆளுங்களை வைச்சி தோட்டத்தை உருவாக்கலாம்”

”இதுக்கெல்லாம் நிறைய செலவாகும் போலயே”

”செலவை பத்தி பார்க்காத, வரப்போற வரவைப் பாரு, இந்த இடம் மட்டும் சூப்பரா அமைஞ்சிடுச்சின்னா போதும், பார்ட்டி, பிசினஸ் டீலிங்ன்னு எல்லாத்தையும் இங்கயே வைச்சிடலாம் என்ன சொல்ற”

”ஆமாமாம் கலக்கிடலாம் ஆமா காட்டேஜ் சாவி எங்க”

”இதோ இங்க” என தன்னிடம் இருந்த சாவியை அவனிடம் தர ராகுலோ அந்த சாவியை வியப்பாகப் பார்த்தான்

”என்னடா இது சாவியே வித்தியாசமா இருக்கு”

”அந்த காலத்தில கட்டின காட்டேஜாச்சே, அப்ப இருக்கறவங்க பாதுகாப்புக்காக இது போல சாவியை வடிவமைச்சிருக்காங்க“

”பார்றா அந்த காலத்தில கூட வித்தியாசமான விஞ்ஞானிங்க இருக்காங்க, சாவியிலயே இவ்ளோ புதுமையை காட்டியிருக்காங்க, எவ்ளோ நுணுக்கமாக செதுக்கியிருக்காங்க பாரேன், ஆமா இதை எப்படி யூஸ் பண்றது“

”வா பார்க்கலாம்” என விக்ராந்த் சொல்லி ராகுலை அழைத்துக் கொண்டு காட்டேஜ் வாசலுக்குச் சென்றான்.

அங்கிருந்த கதவின் சாவி துவாரத்தைக் கண்டவன் அதில் அந்த சாவியை பொருத்தினான் ராகுல், வித்தியாசமான முறையில் செய்யப்பட்ட சாவி உள்ளே நுழைந்ததும் அதுவே பலவிதமாக சுழன்று வலப்பக்கம் இடப்பக்கம் என திரும்பி உள் நுழைந்து ஒருவழியாக கதவை திறக்க வைத்தது.

”சாவியே வித்தை காட்டுது விக்ராந்த்” என வியப்பாகச் சொல்லிக் கொண்டே கதவை நன்றாக திறந்துவிட்டான் ராகுல்.

உள்ளே சுத்தமாக இருந்தது, இருவரும் உள்ளே சென்றார்கள், பெரிய காட்டேஜ் 2 தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது, ஏகப்பட்ட பர்னிச்சர்கள் வேறு, அனைத்தும் உயர் ரக மரத்தால் ஆனவை

”வாவ் விக்ராந்த் சூப்பரா இருக்கு காட்டேஜ், குறைஞ்ச விலையில இவ்ளோ பெரிய காட்டேஜ் கிடைக்கறது கஷ்டம், அதுலயும் அமைதியா இருக்கு பாரு இந்த இடம்”

”ஆமாம் ரொம்ப அமைதியா இருக்கு ராகுல், அந்த ஜன்னல்களையெல்லாம் திறந்துவிடு காத்து உள்ள வரட்டும்” என சொல்ல அவனும் ஒரு பக்கமாக சென்று இருந்த ஜன்னல் கதவுகளை திறந்துவிட விக்ராந்தும் மறுபக்கம் சென்று ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டான், இப்போது காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் பஞ்சமில்லை.

”மாடியில கூட நிறைய ரூம்ஸ் இருக்கும் போல” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தும்

”ஆமாம் பெட்ரூம் எல்லாம் மாடியில்தான் இருக்கு, கீழே பெரிய ஹால், கிச்சன், ஆபிஸ் ரூம், அதுவே ரொம்ப பெரிசா இருக்கு, டைனிங் ரூம், ஸ்டோர் ரூம் கூட இருக்கு அதனால மேல் தளத்தில மட்டும்தான் பெட்ரூம்ஸ் இருக்கு  மொத்தம் நாலு ரூம்ஸ் இருக்கும்”

”நாலா போதுமே ஆமா தண்ணி வருமா”

”வரும் வரும் போர் இருக்கு, மோட்டார் போட்டு தண்ணி ஏத்தியிருப்பாங்க, இங்க எந்த பிரச்சனையும் இல்லை அமைதியான இடம், இங்க நாம எத்தனை நாள் வேணும்னாலும் நிம்மதியா தங்கலாம்”

”செமையா இருக்கு நண்பா, இதைப் பார்க்கறப்ப இன்னிக்கே ஏதாவது பார்ட்டி வைக்கலாமான்னு தோணுது” என்றான் குதூகலமாக

”அவசரப்படாத இன்னும் கொஞ்சம் பழுது வேலைகள் இருக்கு, அதை முடிச்சிடலாம், காட்டேஜ் உள்ள நல்லா லுக்கா இருக்கு, ஆனா வெளிய போரிங்கா இருக்கு, பாதையை சீரமைக்கனும், தோட்டம் அமைக்கனும், ஏகப்பட்ட வேலைகள் இருக்கு” என சொல்ல ராகுலும் அதற்கு சரிசரியென தலையாட்டிவிட்டு வீட்டை சுற்றிப் பார்க்கச் செல்ல விக்ராந்தும் வேறு பக்கமாக வீட்டை சுற்றிப் பார்க்கலானான்.

அனைத்து இடங்களிலும் பர்னிச்சர்கள் இருந்தது, சுத்தமாக இருந்தது, யாரும் பயன்படுத்தாமல் புதிது போலவே இருந்தது, கீழ் உள்ள அனைத்து அறைகளையும் பார்த்துவிட்டு மாடி படிக்கட்டில் ஏறினார்கள் இருவரும், அங்கிருந்த அறைகளையும் பார்வையிட்டார்கள், நன்றாக இருந்தது, அவர்களுக்கு திருப்தியாக இருந்தது, ஒரு படுக்கையறையில் ராகுல் அங்கிருந்த கட்டிலில் படுத்தபடியே விக்ராந்திடம் பேசினான்

”போதும்டா சொர்க்கம் போல இருக்கு, எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு” என சொல்ல விக்ராந்தோ மென்மையாக சிரித்தபடியே சுற்றிலும் பார்த்தான்.

அழகான ஓவியங்கள் பெரிய பெரிய மரசட்டத்திற்குள் இருந்தது, சுற்றிலும் ஏகப்பட்ட அழகு பொருட்கள் இருக்க

”இவ்ளோ சூப்பராயிருக்கற காட்டேஜை எதுக்காக விலை குறைவா விக்கனும், ஆச்சர்யமா இருக்கு ராகுல்”

”அதான் வதந்தியிருக்கே இங்க ஏதோ அமானுஷ்யம் இருக்குன்னு அதனால கூட இருக்கலாம்”

”என்னால நம்ப முடியலை“

”என்னாலயும்தான்” என சொல்லிய நேரம் ஒரு பெரிய பாத்திரம் விழுந்து உருளும் சத்தம் கேட்கவும் இருவருக்கும் அச்சம் வந்தது, ராகுல் திடுக்கிட்டு எழுந்து விக்ராந்திடம் வந்தான்

”விக்ராந்த் என்ன சத்தம் இது”

”வா போய் பார்க்கலாம்” என சொல்லி அவனை அழைத்துக் கொண்டு வெளியேறி ஹாலுக்கு வந்தார்கள், சுற்றி முற்றி பார்த்துவிட்டு கிச்சனுக்குச் செல்ல, அங்கு ஒரு பாத்திரம் தரையில் விழுந்திருப்பதைக்கண்டு வியந்தார்கள்

”இது எப்படி கீழே” என ராகுல் சொல்ல

”பூனையா இருக்கும்”

”ம்க்கும் இங்க விலங்கு நடமாட்டம் இருக்கற மாதிரி தெரியலை, எப்படி தன்னால இந்த பாத்திரம் கீழே விழுந்துடுச்சி” என சொல்லிக் கொண்டே அந்த பாத்திரத்தை கையில் எடுத்து சுற்றி முற்றி பார்த்தான் அந்த பாத்திரத்தில் ஓரிடத்தில் சோபியா என இருந்தது

”இங்க பாரு விக்ராந்த் இது சோபியாவோடதாம் பேர் பொறிச்சிருக்காங்க பாரேன்” என சொல்ல விக்ராந்தும் அதைப் பார்த்துவிட்டு மற்ற பாத்திரங்களை எடுத்துப் பார்த்தான், கேட்டி, டெய்ஸி, எலினா, எலிசா, எய்டன், அலெக்ஸ், எட்வர்டு, ஆடம் என ஒவ்வொரு பாத்திரத்திலும் விதவிதமான பெயர்கள் இருக்கவே ஆச்சர்யப்பட்டான்

”விக்ராந்த் இதுக்கு என்ன அர்த்தம், இதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்களோட பெயர்களா இது, கிறிஸ்டியன்ஸ் போல இருக்கே, இத்தனை பேரா இங்க வாழ்ந்தாங்க”

”ம் இருக்கலாம்”

”ஆமா நீ இந்த இடத்தை வாங்கறதுக்கு முன்னாடி இந்த இடம் என்னவா இருந்தது”

”ஒரு பேமிலி தங்கியிருந்ததா சொன்னாங்க”

”சொன்னாங்களா அவங்ககிட்டதானே இந்த இடத்தை வாங்கின”

”இல்லை அவங்க கிட்டயில்லை, அவங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒரு ஆள் கிட்டயிருந்து வாங்கினேன்”

”ஏன் இங்க இருந்த பேமிலிகிட்டயே வாங்கியிருக்கலாமே“

”வாங்கியிருக்கலாம் ஆனா அவங்க இறந்துட்டாங்களாம்”

”ஓ இறந்ததால சொத்தை வித்திருக்காங்க”

”ம்”

”ஆமா அவங்க எல்லாரும் எப்படி இறந்தாங்க”

”அதுவா கடன் தொல்லையால குடும்பமே தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்”

”ஓஹோ பாவம் ஆமா எங்க தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்” என கேட்க விக்ராந்தோ மென்மையாக சிரிக்க அந்த சிரிப்பைக்கண்ட ராகுலோ அச்சத்துடன்

”இந்த வீட்லயா“

“ஆமாம்”

”டேய் விக்ராந்த் என்னடா சொல்ற“ என்றான் பயத்துடன்

”இதப்பாரு அவங்களா தற்கொலை செய்து இறந்துப் போயிட்டாங்க, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்“

”பொதுவா தற்கொலை செய்துக்கிட்டா அவங்களுக்கு சொர்க்கத்தில இடம் இல்லை நரகத்திலதான் இடம் உண்டுன்னு சொல்வாங்க, அப்ப அவங்க நரகத்துக்குதானே போயிருப்பாங்க“

“தெரியலை உனக்கு வேணும்னா போய் தெரிஞ்சிக்கிட்டு வா” என சொல்லிவிட்டு விக்ராந்த் ஹாலுக்குச் செல்ல ராகுலோ

”எது நான் நரகத்துக்கு போகனுமா போடா முடியாது” என சொல்லிக் கொண்டே வெளியே வந்தான். இருவரும் ஒரு அறை முன் நின்றார்கள்

”இந்த ரூமை நான் பார்க்கலையே“ என ராகுல் வியப்பாக சொல்ல

”நானும்தான் வா உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்” என சொல்லி விக்ராந்த் கதவை திறக்க உள்ளே மினி லைப்ரரியே இருந்தது, ஏகப்பட்ட அலமாரிகள் அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்க அதைக்கண்டு பிரமித்தனர் இருவரும்

”இந்த மாதிரி ஒரு வீட்ல இப்படி ஒரு லைப்ரரியா அசத்தலா இருக்கே” என ராகுல் பாராட்ட அதற்கு

”ம் எனக்கும் இது ஆச்சர்யமா இருக்கு, எவ்ளோ புக்ஸ் இருக்கு பாரேன்” என விக்ராந்த் சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துப் பார்த்து வியந்தான்

”ரொம்ப பழமையான புக்ஸ் இது” என விக்ராந்த் சொல்ல

”ம்ம்ம் இந்த வீட்ல இருந்தவங்க ரொம்ப படிப்பாளிகளா இருந்திருக்காங்க, ஆனா நமக்கு இந்த இடம் மேட்ச் ஆகாது, இதை அப்படியே பூட்டி வைச்சிட வேண்டியதுதான்” என ராகுல் சொல்ல அதற்கு விக்ராந்தும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே செல்ல முயல அந்நேரம் ஒரு அலமாரியில் இருந்து வரிசையாக 10 புத்தகங்கள் படபடவென தரையில் விழுந்தது அதைக்கண்ட ராகுலோ அதிர்ந்தான் விக்ராந்தோ

”எப்படி அந்த புக்ஸ் கீழே விழுந்தது”

”இங்க யாருமே இல்லையே, பூனை கூட வரவாய்ப்பில்லை அப்புறம் எப்படி”

”காத்துல விழுந்திருக்கும்“

”காத்தா இருந்தா கூட இவ்ளோ கனமான புக்ஸ் எப்படி கீழே விழும்“ என சொல்லிக் கொண்டே அந்த புத்தகங்களை எடுத்துப் பார்த்தான் ராகுல், விக்ராந்தும் விழுந்திருந்த புத்தகத்தில் இருந்து ஒன்றை எடுத்துப் பார்த்தான்