“எதிராளியின் பலத்தை மட்டும் அல்லாது, பலவீனத்தையும் சேர்த்து யோசி..”
இந்த வரிகள் தான் மிதுனாவின் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது. விமலாவிடம் பேசிய பிறகு, மனது கொஞ்சம் தைரியமாய் உணர, அன்றைய இரவு உணவு முடித்துவிட்டு, வழக்கம் போல விடுதியின் வராண்டாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தாள்.
அதற்குள் விடுதி முழுவதும், மிதுனா காலி செய்து கிளம்புவது தெரிந்திருக்க, ஒருசிலர் வந்து அவளோடு பேசிக்கொண்டு இருந்தனர்.
“ஏன் மிதுனா வேற வேலை கிடைச்சுடுச்சா?!” என்று பொதுவாய் கேள்வி வர, என்ன வேலை என்று அவளுக்கு சொல்ல முடியுமா?!
“ஆமா.. இன்னும் கொஞ்சம் பெரிய ஸ்கூல்..” என்றுமட்டும் சொல்லி வைத்தாள்.
அங்கே வெராண்டாவில் தான் அவர்களது தளத்தின் தொலைக்காட்சி வேறு இருக்க, ஒருசில பெண்கள் அமர்ந்து அங்கே படமும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதில் தான், மேற்கூறிய இந்த வரி வசனமாய் பேசப்பட்டுக் கொண்டு இருக்க, மிதுனாவின் புத்தி விழித்துக்கொண்டது.
நிஜம் தானே. யார் ஒருவருக்கும் பலம், பலவீனம் இரண்டும் இருக்கத்தானே செய்யும். இதனை ஏன் தான் யோசிக்கவே இல்லை என்று நினைத்தவள், அறைக்குள் வந்து புகுந்துகொண்டாள். சரவணனை கண்ட பிறகு, முதல்முறையாய் மனதால் அல்லாமல், அறிவால் சிந்தித்தாள் மிதுனா.
அவன் என்னென்ன பேசினான் என்பதனை எல்லாம், உணர்வுகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு யோசிக்க, அவன் பேச்சினில் இருந்தே பல விஷயங்கள் புரிந்தது. முதல் விஷயம், அவன் பெரிய குடும்பத்துப் பையன். மிஞ்சி போனால் இவளை விட ஒன்றோ இல்லை இரண்டோ வயது அதிகமிருக்கும். அடுத்து, அவனுக்கு குடும்பத்தின் மீதிருக்கும் பாசமும், அதன் கௌரவம் கெடக் கூடாது என்ற நினைப்பும். அடுத்து அவனின் அண்ணன் மீதான பயம்.
‘என் பேக்கிரவுண்ட் அப்படி…’ என்று அவன் எத்தனை பெருமிதமாய் சொல்லிக்கொண்டான்.
ஒன்று தொழில் முறையில் மிக மிக வசதியான வீட்டு ஆளாய் இருக்கவேண்டும். ஆள் பலம், பண பலம் என்று நிறைய இருக்கவேண்டும். இல்லை அரசியல் பின்புலம் உள்ள குடும்பமாய் இருக்கவேண்டும். ஆனால் அத்தனை வசதியுள்ளவன், அனைத்தும் நிறைந்தவன், குடும்பத்தின் மீது உயிராய் இருப்பவன், ஏன் பணத்திற்காக இப்படியொரு நாடகம் ஆடவேண்டும்?!
அதுவும் அவன் உயிராய் நினைக்கும் குடும்பத்தினரையே ஏமாற்றி?!
நல்லவிசயத்திற்கு பணம் தேவை என்றால், நிச்சயம் அவன் வீட்டாட்களே கொடுத்திருப்பார்களே. இத்தனை வயதாகியும் எந்த பொறுப்பும் இல்லாமலா சுற்றுகிறான்?!
அப்படியெனில் என்னவோ இருக்கிறது.
சரியான விசயத்திற்கு பணம் வேண்டும் என்றால், நேரடியாய் கேட்டு வாங்கியிருக்கலாம். இப்படி ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அவளை பகடையாய் உருட்டி, அவளது மானத்தை வாங்குவேன் என்று மிரட்டி, வீட்டிலும் காதல் அது இதென்று சொல்லி, பணம் வாங்க நினைப்பது எதில் சரி?!
முதலில் இதெல்லாம் எப்படி சரியாய் வரும்.
ஆனாலும் இத்தனையை மீறியும், அவன் இதனை சாத்தியப்படுத்த நினைக்கிறான் என்றால், அவன் சரியான ஒரு விசயத்திற்கு பணம் வாங்க நினைக்கவில்லை. இதை உறுதியாய் அவளால் புரிந்துகொள்ள முடிய, இத்தனை நாள் இல்லாத ஒரு தைரியம் அவளுக்கு இப்போது.
தான் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று, இப்போதும் அவளுக்கு முடிவாய் புரிபடவில்லை தான். ஆனாலும் நிச்சயம் இதில் இருந்து வெளிவர, அவளுக்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. என்னவொன்று அதனை அவள் வெளிக்காட்டவில்லை.
சரவணன் அடுத்து அழைத்து, எப்போது எப்படி கிளம்பவேண்டும் என்றெல்லாம் சொல்ல, அப்போதும் கூட அவள் மறுப்பைச் சொல்ல “நோ வே..” என்று முடித்துவிட்டான் அவன்.
‘எனக்கும் ஒரு நேரம் வரும் சரவணா..’ என்று மனதினில் சொல்லிக்கொண்டவள், வியாழனோடு பள்ளியில் இருந்து நின்றுவிட்டாள். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேலே தான் பயணம். தனக்கு தேவையான உடைகள், சர்டிபிகேட்கள், பொருட்கள் என்றுமட்டும் எடுத்துக்கொண்டவள், விடுதியில் தான் பயன்படுத்திய மற்ற பொருட்கள் அனைத்தையும், ரம்யாவின் வீட்டிலேயே கொண்டு சென்று வைத்தும்விட்டாள்.
இது ரம்யாவின் கட்டளை. அதனை அவளால் மீறவும் முடியவில்லை. ஏதேனும் மறுத்துப் பேசினால், மேற்கொண்டு பேச்சுக்கள் வளரும் என்றே ரம்யா சொன்ன அனைத்திற்கும், மிதுனா சரி என்று சொல்லியிருக்க, இதோ பொருட்களை எல்லாம் அங்கே கொண்டு சேர்த்துவிட்டு, ரம்யா பெற்றோரிடமும் நல்லவிதமாய் பேசிவிட்டு வந்துவிட்டாள்.
ரம்யாதான் “ட்ரைன்ல தானே போற. நானும் வர்றேன் வழியனுப்ப..” என்று சொல்ல, இதற்குமட்டும் மிதுனா சம்மதிக்கவில்ல.
“நான் போயிப்பேன் ரமி. சொன்ன கேளு..” என்று அவளை தடுத்துவிட்டாள்.
மீண்டும் விடுதிக்கு வந்தவள், விமலாவிடம் சொல்லிவிட்டு, அவளது பையை எடுத்துக்கொண்டு நடந்துவர, என்னதான் முடிவு செய்துவிட்டாலும் கூட, இப்படி எவனோ ஒருவனோடு கிளம்பிச் செல்லும் சூழலை எண்ணி, மனது நடுங்கத்தான் செய்தது.
அவர்கள் விடுதி வாயிலில் இருக்கும், சிறு பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்துவிட்டே தான் சென்றாள். சரவணனோ சொன்ன இடத்தினில் அவளுக்காக காத்திருக்க, அவனிடம் எதையும் காட்டிக்கொள்ள கூடாது என்பதற்காகவே, முகத்தை சோகமாகவும், கோபமாகவும் வைத்துக்கொண்டு தான் சென்று நின்றாள்.
“வாங்க டீச்சரம்மா..” என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவளது பையை எடுத்து, டிக்கியில் வைத்துவிட்டு, அவளுக்கு கார் கதவை வேறு திறந்து விட, அவனை நன்றாகவே முறைத்து வைத்தாள் மிதுனா.
“நீயெல்லாம் ஒரு மனுசனான்னு நினைக்கிறது தெரியுது..” என்று நக்கலாய் மொழிந்தவன், ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்துகொள்ள, மிதுனாவோ வாயே திறக்கவில்லை.
“நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குதானே. அங்க வந்து ஸ்மார்ட்டா எதுவும் ப்ளே பண்ணனும்னு நினைச்சா, அவ்வளோதான் சொல்லிட்டேன். நான் சொல்றபடி கேட்டு நடந்தா, வேலை சீக்கிரம் முடிஞ்சிடும். என் கைக்கு பணம் வந்ததும், உன்னை அனுப்பிடுவேன். அடுத்தும் கூட இது எதுவும் வெளிய தெரியக் கூடாது.. ஓகே..” என்று அப்படியொரு அதிகாரத் தொனியில் அவன் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்தவள், பின் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொள்ள,
“எங்க அண்ணா, என்ன கேட்டாலும் என்ன பேசினாலும் நீ வாயே திறக்கக் கூடாது மிதுனா. நான் எல்லார் முன்னாடியும் என்ன சொல்றேனோ, அதைதான் நீ பாலோ பண்ணனும்…” என்று சரவணன், ஊர் செல்லும் வரைக்கும் அவளுக்கு போதனைகளை வழங்கிக்கொண்டே தான் வந்தான்.
ஒருவேளை அவனுக்கே பதற்றமாய் இருந்ததுவோ என்னவோ. முன்னரை விட நிறைய பேசினான். சில நேரம் இயல்பாய் பேசினான். பின் அவனே சுதாரித்து இறுக்கமாய் பேசினான். ஆனால் அதனை எல்லாம் மிதுனா, கண்டும் கானதவள் போல எல்லாம் கவனித்துக்கொண்டே தான் வந்தாள்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி பயணம். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகலாம். ஆனால் சரவணனோ மெதுவாய் செல்வது போலத்தான் இருந்தது. பயணம் தொடங்கி சிறிது நேரத்தில், சரவணன் காரை ஒரு ஓரமாய் மாற நிழலில் நிறுத்த, என்னவென்று பார்த்தாள் அவனை.
அவனோ அவனது அலைபேசி எடுத்தவன், அவளிடம் “இவங்க என்னோட பேரன்ட்ஸ்.. அப்பா அரசியல்வாதி..” என்று பிரபல கட்சி பெயரை சொல்லியவன் “அடுத்து அம்மா. அடுத்து இவர்தான் எங்கண்ணா. குடும்ப பொறுப்பு, பிஸ்னஸ் எல்லாமே அண்ணன் கைல தான். அண்ணன் சொல்றதுதான் வீட்ல எப்பவுமே. அது தப்பாகாது. ஆனாலும் அண்ணன் பார்வைக்கு ஒருவிசயம் தப்பா பட்டுச்சுன்னா, யார் என்ன சொன்னாலும் அவன் மனசு மாறாது..” என்றவன்
“அடுத்து இவங்க என்னோட பாட்டி. அம்மாவோட அம்மா. பிறப்புல இருந்தே பணம், வசதி, மேல்தட்டு வாழ்க்கை, முதலாளித்துவம்னு இருக்கிறவங்க. இப்போவரைக்கும் அப்படித்தான். அப்பா ஏற்கனவே ஒருதடவை MLAவா இருந்தார். இப்போ அடுத்து வர்ற எலக்சன்ல, எங்க தொகுதில அவர்தான் நிக்கிறார்..” என்றும் சொல்ல,
‘இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் ..’ என்பதுபோலத்தான் பார்த்தாள் மிதுனா.
“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, நம்ம லவ் பண்றோம். இருந்தாலும் உனக்கு தயக்கமா இருக்கு. பெரிய இடத்து பையன் அப்படின்னு யோசிக்கிறன்னு தான் வீட்ல சொல்லிருக்கேன்…” என்று அவன் சொல்லவுமே, அந்த வார்த்தைகளை கேட்டு மிதுனாவிற்கு அவனை அப்படியே கொன்றுவிடலாம் போல இருந்தது.
காதல் எத்தனை அழகான விஷயம்.
அதனைப் போய் காரணமாய் சொல்லி, அதுவும் அவன் பெரிய இடத்துப் பையன் என்பதால் இவனுக்கு அஞ்சி, தயக்கம் வேறா என்று எண்ணியவள் பல்லைக் கடித்துக்கொண்டு பார்வையை திருப்ப
“லுக் மிதுனா.. இப்போவரைக்கும் எல்லாமே ஓகே தான். அம்மா எப்படியும் அப்பாவை, பாட்டியை கன்வின்ஸ் பண்ணிடுவாங்க. ஆனா அண்ணன் நிச்சயமா உடனே நம்ப மாட்டான்..” என்று சொல்ல,
‘அதுதானே டா எனக்கும் வேண்டும்…’ என்று நினைத்துக்கொண்டாள் மிதுனா.
“திரும்பவும் சொல்றேன், எனக்கு என்னோட ப்ளான் சக்சஸ் ஆகுறவரைக்கும், நீ நான் சொல்றதை மட்டும் தான் கேட்கனும்…” என்று சொல்ல, கண்களை இறுக மூடித் திறந்து, வேகமாய் மூச்சினை எடுத்து விட்டவள் “ம்ம்…” என்று தலையை மட்டுமே ஆட்டினாள்.
“குட்…” என்றவன், அவனின் அம்மாவிற்கு அழைத்து “ம்மா நாங்க கிளம்பிட்டோம்…” என்று சொல்ல,
“சரிடா.. பார்த்து வாங்க. அண்ணன் ஊர்ல இல்ல. அப்பாவும் இன்னும் வரலை. எப்படியும் நாளைக்குத்தான் வருவாங்க…” என்றார் ராஜேஸ்வரி.
“அண்ணனோட நேத்து கூட பேசினேன் ம்மா. வரத்தான் சொன்னான்..”
“ம்ம் சந்தோசம். பாட்டி என்ன பேசுனாலும், காதுல போட்டுக்காத..” என்ற ராஜேஸ்வரிக்கு, மகள் தான் அப்படி போய்விட்டாள், பெரிய மகனோ திருமணம் என்ற ஒன்றை யோசிப்பதே இல்லை. இளையவனாவது ஒருத்தியை விரும்பிகிறேன் என்று அழைத்து வருகிறானே, என்று கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது.
ஆனால் ராஜேஸ்வரியின் அம்மா, அகிலாண்டேஸ்வரியோ “கொஞ்சமாவது உனக்கு ஏதாவது இருக்க ராஜி?!” என்று அவரையே வசைபாட,
“ம்மா…” என்றார் பாவம் போல.
“ஏன் நீ இப்படி மாறிட்ட? முன்ன எல்லாம் இப்படி இல்லையே. யாரோ எவளோ, அவளை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி வர்றான். நீயும் சந்தோசமா நிக்கிற.. இதெல்லாம் என்ன பெரிய குடும்பத்துக்கு லட்சணமா?!” என்று அதிகாரக் குரலில் கேட்க,
“அவனை ஏன் விடனும். அவன் நம்ம வீட்டு பிள்ளை. நம்ம ரத்தம். அவளை இல்லையா போக வச்சிருக்கனும். பெரியவன் எப்படி இதுக்கு சரின்னு சொன்னான். இப்போ வரைக்கும் மனசு எனக்கு ஆறல. சாமிக்கிட்ட நான் பேசுறேன்..” என்று சொன்னவர், வேகமாய் பெரிய பேரனுக்கு அழைக்கப் போக,
“ம்மா ம்மா ப்ளீஸ். எதுவா இருந்தாலும், அவங்க இங்க வந்துக்கட்டும்..” என்றார் ராஜேஸ்வரி வேகமாய் அவரின் கை பற்றி.
அகிலாண்டேஸ்வரிக்கு தன் மகள், இப்படி கெஞ்சி நிற்பதே பிடிக்கவில்லை. என் மகள் கெஞ்சிக்கொண்டு நிற்கலாமா?!
அதுவும் யாரோ ஒருத்திக்காக?!
‘ச்சே…’ என்று கைகளை உதறியவர், அங்கேயே அமர்ந்தும் கொள்ள, ராஜேஸ்வரிக்கோ நேரத்தை கடப்பது பெரும் விசயமாய் இருந்தது.
‘கடவுளே.. இனியாவது என் குடும்பத்துல நல்லது நடக்கட்டும்..’ என்று ராஜேஸ்வரி வேண்ட, அதே நேரம் சாவித்ரியும், அவரது கணவரும் வெங்கடேசனும் வந்தனர்.
ராஜேஸ்வரிக்கு அவர்களை கண்டதுமே, முகம் மலர்ந்து “வாங்க அண்ணா.. அண்ணி..” என்று வரவேற்க,
“என்ன ராஜி, இன்னும் வரலையா?!” என்றார் சாவித்திரி.
“ம்ம்ஹூம்…” என்றவர், அகிலாண்டேஸ்வரியை கண் காட்ட “அட.. அத்தை.. நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?!” என்று சாவித்திரி கேட்டபடி அவரிடம் செல்ல,
“நீ ஒன்னும் பேசாத போ..” என்று அவரின் கையை தட்டிவிட்டார் அகிலாண்டேஸ்வரி.
வெங்கடேசனோ, அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு “என்ன சித்தி, ரொம்ப கோபமா இருக்கீங்களோ?” என்று கேட்க,
“நடக்குறது எல்லாம் பார்த்தா கோபிக்காம எப்படி வெங்கட்டா?!” என்றார் அகிலாண்டேஸ்வரி.
ராஜேஸ்வரி ‘ப்ளீஸ் அண்ணா..’ என்பதுபோல் வெங்கடேசனைப் பார்க்க, சாவித்திரியோ “இப்போ லவ் மேரேஜ் எல்லாம் சகஜமா போச்சு அத்தை..” என்றார் மெல்ல.
“அதுக்காக.. ஒரு தராதரம் வேண்டாமா?! யாரு என்னன்னே தெரியாத ஒருத்தியை, எப்படி மருமகளாக்க முடியும். சரவணனை நினைச்சு, சாமி எத்தனை ப்ளான் பண்ணி வச்சிருந்தான். இப்போ காதலுங்கிற பேர்ல எவளையோ கூட்டிட்டு வர்றான். நம்மளும் சரின்னு சொல்லி, கல்யாணம் பண்ணி வச்சு, அவனுக்குன்னு எல்லாம் செய்யணும்..” என்று பாட்டி உறும, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அகிலாண்டேஸ்வரி, அந்த குடும்பத்தின் ஆலமரம். அவரது கணவர் இறைவனடி சேர்ந்து பல வருடங்கள் ஆனது. அவருக்கு ராஜேஸ்வரி ஒரே மகவு என்றால், அவர் பெறாத பிள்ளைகள் தான் சாவித்ரியும், சுந்தரேசனும். இருவருமே, அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் பிள்ளைகள். விபத்து ஒன்றில் அண்ணனும் அண்ணியும் இறந்துவிட, பிள்ளைகளின் பொறுப்பும், சொத்துக்களில் பொறுப்பும் அகிலாண்டேஸ்வரி கையில் வந்தது.
மூவரையுமே, ஒன்றுபோலவே தான் வளர்த்தார். சொந்தமும் விட்டுப் போகக் கூடாது, சொத்தும் பிரியக் கூடாது என்று, ராஜேஸ்வரியை அண்ணன் மகனான சுந்தரேசனுக்கு மணம் முடித்து வைத்தார்.
அதே போல, சாவித்திரிக்கு மருத்துவம் படிக்க விருப்பம் என்று அறிந்து, அவரை மருத்துவம் படிக்கவைத்து, அவர்களின் சொந்தத்திலேயே மருத்துவராய் இருந்த வெங்கடேசனுக்கு மணம் செய்துவைத்தார்.
இதுநாள் வரைக்கும், அவரது கடமைகளில் இருந்தோ, பொறுப்புகளில் இருந்தோ என்றும் அகிலாண்டேஸ்வரி தவறியதில்லை. அதிலும் அவரது போதனைகளின் மொத்த உருவமாய் அவர் வளர்த்தது ராஜேஸ்வரி – சுந்தரேசனின் பெரிய மகனைத்தான்.
அவனுக்கு அடுத்து ஏழாண்டுகள் கழித்துப் பிறந்தவர்கள் தான் சரவணனும் – சாந்தினியும். இரட்டையர்கள்.
இப்போதும் பெரியவன் என்றால், குடும்பத்தில் அனைவர்க்கும் தனி பிரியமும், மரியாதையும் தான். அதிலும் சாவித்திரிக்கு சொல்லவே வேண்டாம். அண்ணனைக் காட்டிலும், அண்ணன் மகன் மீது தனி பாசம். தனக்கு பெண் பிள்ளை இருந்திருந்தால், நிச்சயம் அவனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருப்பேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஆனால் இன்னாருக்கு இன்னாரென்று இருக்கிறது தானே.
அனைத்துமே, பெரியவர்கள் தலைமுறை வரைக்கும் சரியாய் தான் போனது. சொத்துக்கள் ஒன்றுமேல் ஒன்றாய் பெருகத்தான் செய்தது. பேரும், புகழும் பெருகிக்கொண்டே தான் போனது. சுந்தரேசனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் விரும்பம் என்பதால், பெரிய மகன் படிப்பு முடித்து, கொஞ்சம் தொழில் பழகவுமே அனைத்தையும் அவன் கையில் கொடுத்துவிட்டார்.
முழுக்க முழுக்க அரசியல் தான் அவருக்கு. அதனால் வீட்டினில் பெரிய மகன் என்ன முடிவுகள் எடுத்தாலும் சரி என்ற நிலை அங்கே. இப்போது வரைக்கும் கூட அப்படித்தான்.
அகிலாண்டேஸ்வரிக்கு சிலது எல்லாம் இப்போது பிடிக்கவில்லை. சாவித்திரியும், ராஜேஸ்வரியும் காலத்திற்கு ஏற்றது போல மாறிக்கொள்ளவேண்டும் என்று சில பழக்கங்களை மாற்றிக்கொள்ள, பாட்டியோ பேரனை தான் துணைக்கு அழைப்பார்.
அவனுக்கும் அப்படிதான் பாட்டி சொல்லே வேதம்..
இது எல்லாமே இப்படி இருக்க, சுருதி பேதம் ஆனது என்பது சந்தியாவின் விசயத்தில் தான். அதனை தொட்டு, இப்போது சரவணன் இப்படியொரு செயலில் இறங்கிவிட, மிதுனாவின் வரவு என்பது யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை.