8

உன் அபிநயம் பிடிக்கும் 
விழிகளிலே., 
ஆயிரம் வார்த்தைகள் 
நடனம் ஆடுகிறது

காலை எழும்பி குளித்து உடைமாற்றி அவள் தலையை துவட்டிக் கொண்டு இருக்கும் போது தான்.,  நந்தன் குளித்து முடித்து வந்து நின்றான்.,

அவள் வேறு புறமாக திரும்பி கொண்டு தலை துவட்டிக் கொண்டு இருக்க.., அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருந்தவன்., அவள் திரும்பவே இல்லை என்றவுடன் மெதுவாக பின் பக்கம் நெருங்கி அணைக்கவும்.,

ஏய்ய்..,  சத்தத்தோடு திரும்பி நின்றாள்., அவனை பார்க்கவும் அவனும் தலையை சரியாக உலர்த்தாமல்  டி-ஷர்ட் சாட்ஸ்டோடு நின்றவன்.., “என்ன பயந்துட்டீயா”., என்றான்.

“பக்கத்துல வரக்கூடாது தள்ளி நிக்கணும்” என்று சொல்லவும்

“ஏன் நான் பக்கத்தில் வந்தா உனக்கு டிஸ்டர்பா இருக்கா., என்னைய பார்த்து டிஸ்டர்ப் ஆகுறீயா என்ன”.,  என்றான்.,

“நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்து இருக்கீங்க”., என்றாள்.

“ஆமா ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன்., உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் னு.., நான் பக்கத்தில் வந்தா நீ டிஸ்டர்பா ஆகுறதா இருந்தா சொல்லு”.., என்று சொல்லவும்

“எனக்கு தெரியாது”., என்ற படி முழித்தவள்., “நீங்க வரக்கூடாது அவ்வளவு தான்.., பக்கத்துல வந்தீங்கன்னா நான் சத்தம் போட்டு எல்லார்ட்டையும்  சொல்லிடுவேன்”.., என்றாள்.

“என்ன சொல்லுவ”., என்றான்.

அப்பவும் முழித்தவள்.,  அவள் “அதெல்லாம் சொல்லுவேன்.., இவங்க சும்மா சும்மா கையை பிடிக்குறாங்க ன்னு.,  சொல்லி கொடுத்துடுவேன்.., எனக்கு என்ன இங்க இருக்கிறவங்க எல்லாம் உங்களை தெரிஞ்சவங்க தான்.., உங்களை தான் தப்பா நினைப்பாங்க”.., என்று சொன்னவுடன்.,

“பயங்கரமா பிளான் போட்டிருக்க பூனைக்குட்டி.., உனக்கு இவ்வளவு மூளை இருக்கா”..,  என்று அவள் தலையை பிடித்து ஆட்டினான்.

“இப்ப  தானே  சொன்னேன் தொடக்கூடாது ன்னு”., என்று சொல்லி அவன் கையை தட்டி விட்டாள்.

அவனும் சிரித்தபடி “பூனைக்குட்டி நிறைய பிளான் எல்லாம் வச்சிருக்க சரி..,  நானும்  பார்த்துக்குறேன்”., என்று சொல்லவும்.,

அவள் அவசர அவசரமாக தலையை உதறி பக்கவாட்டில் இருந்து முடியை மட்டும் எடுத்தவள்., நடுவில் ஒரு கிளீப்பை மாட்டிக் கொண்டு விரித்துவிட்ட தலையோடு கீழே இறங்க போனவளை வேகமாக பிடித்தவன்.

“கொஞ்சம் நில்லு” என்று சொல்லி அவள் கையில் குங்குமத்தை கொடுத்து “வைச்சிட்டு போ” என்றான்.

“கண்டிப்பா வைக்கனுமா என்ன”., என்றாள்.

“நேத்து என்ன சொன்னாங்க உங்க அம்மா., இனி கண்டிப்பா லேசானாலும் வைக்கணும் சொன்னாங்களா”., என்று சொல்லவும்.

“அவங்களுக்கு மட்டும் நான் சின்ன பிள்ளை ன்னு நம்பவே மாட்டாங்க… இப்ப நீங்களும்”., என்றாள்.

“நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.,  கல்யாணம் ஆனா பொண்ணு”., என்று சொல்லி அவனே குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் லேசாக வைத்துவிட்டான்.

“ரொம்பத்தான் பண்றீங்க”., என்று சொன்ன படி., வவ்வ வவ்வ என்று அழகு காட்டி விட்டு கீழே இறங்கி சென்று விட்டாள்.

அதன் பிறகு அவன் வேறு உடை மாற்றிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருக்கும் போதே அவன் அறியாமல் நிவேதாவை நினைத்து சிரிப்புதான் வந்தது…

கீழே வந்தவளை ஆளாளுக்கு பார்க்க..,  இவளுக்கு அவர்களின் பார்ப்பதின் அர்த்தம் தெரிந்தாலும்.,

கண்டுக் கொள்ளாததுப் போல நேராக கிச்சனில் நின்ற தேவகியின் பின்னே போய் நின்று தேவகியின் சேலை முந்தானையை பிடித்துக்கொண்டு “அத்த காபி”., என்றாள்.

அவருக்கோ சிறுபிள்ளைகள் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றுவது போலவே தோன்றியது., “இருடா”., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாட்டி வந்தவர்.,

“மொதல்ல அவனுக்கு கொண்டு போய் காபி கொடுத்துட்டு வரச் சொல்லு.,  அதுக்கப்புறம் இவளுக்கு கொடு”., என்று சொல்லவும்..,

இவளோ பாட்டியிடம் “பாட்டி எனக்கும் அதே வயிறு தான்.., எனக்கும் பசிக்கும் உங்க பேரனுக்கு  மட்டும் தான் வயிறு இருக்கா., எனக்கு இல்லையா”.,  என்று சொல்லவும்.,

“ஆத்தி என் பேரன் பாடு திண்டாட்டம் தான் போல”., என்றார்  பாட்டி..,

அதற்குள் தேவகி “நீ குடிச்சிட்டு மேல எடுத்துட்டு போறியா மா”.,  என்று கேட்டார்.

“இல்லத்த கொடுத்துட்டு வர்றேன்”., என்று சொல்லி வேகமாக மேலே வந்தவள்.,

அவன் கையில் காபி டம்ளரை திணித்துவிட்டு கீழே இறங்க போகவும்.., “நான் தான் கீழே வந்து குடிப்பேனே” என்றான்.,

அவனை திரும்பி பார்த்து இடுப்பில் கை வைத்த படி பார்த்தவள்.,  “உங்களுக்கு காபி கொடுத்துட்டு தான்., நான் குடிக்கணும் ன்னு சொல்லிட்டாங்க”., ம்ஹூம் என்று வேகமாக கீழே இறங்கவும்.,

“ஐயோ பூனை குட்டி., என் பூனை குட்டி”., என்று சொல்லிக்கொண்டான்…

காலை உணவு வெளியில் தயாராகிக் கொண்டிருக்க அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.,

பெண்களெல்லாம் ஒருபுறமாக கீழே பாய் விரித்து அமர்ந்து இருக்க., வீட்டு ஆண்களோடு சேர்ந்து ஷியாமும் ஒரு புறமாக அமர்ந்து இருந்தான்., அவனோடு சேர்ந்து கீழே வந்த நந்தனும் சென்று அமர்ந்து கொள்ள.,

பாட்டி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் பேச்சை தொடங்கினார்..

“இப்பதான் கல்யாணம் முடிஞ்சி இருக்கு., இனிமேல் தான் போகப்போக தெரியும்”., என்று சொல்ல

பக்கத்தில் இருந்த உறவினர் ஒருவர் “ஏன் அத்தை  போக போக என்ன தெரியும்”.,  என்று கேட்டார்.,

“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப விவரம்., கல்யாணம் முடிஞ்சதுமே தனி குடித்தனம் கூட்டிட்டு போயிருவாங்க.,  இதுக்குள்ள தனிக்குடித்தனம் போகனும் ன்னு சொல்லி வைத்திருக்க மாட்டா”., என்று சொல்லிவிட்டு.,

நேரடியாக நிவேதாவிடமே கேட்டார் பாட்டி.., “என்னம்மா எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க ரெடி பண்ணி இருக்க”., என்றார்.

“காலேஜ் படிக்க தான் பாட்டி செய்யுறேன்., எனக்கு காலேஜ்ல டிரான்ஸ்பர் தர மாட்டாங்க”.,என்றான்.

“நான் உன் புருஷன கேட்டேன்., எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க போறான்”.,  என்று கேட்கவும்.., இவளோ பாட்டி ஏதோ வம்பு வளர்கிறது என்று தெரிந்து கொண்டே.,

“பாட்டி இப்படி கேட்டா., உங்க பேரனை  நான் ஊரைவிட்டு விரட்டிடேன்னு யாரும் தப்பா நினைப்பாங்க… சத்தம் போட்டு சொல்லாதீங்க” என்றாள்.

“ஏனாத்தா., கல்யாணம் முடிஞ்சா தனிக்குடித்தனம் போக ஆசைப்படுவாங்களே.,  அதுக்கு தான் கேட்டேன்”., என்றார்.

“ஏன் பாட்டி உங்க வீட்ல,  யார் யாரெல்லாம் கல்யாணம் முடிஞ்ச உடனே தனிக்குடித்தனம் போயிருக்கா”.,  என்று கேட்டாள்.

பதிலுக்கு பாட்டியோ., “நாங்க கிராமத்துல இருக்கோம்., அங்கெல்லாம் தனிக்குடித்தனம் போவது கிடையாது.,  எல்லாரும் ஒட்டுக்க தான் இருப்போம்.,  அப்படி இல்லனா., நம்மளால பார்க்க முடியாது னா., பக்கத்துல பக்கத்துல வரிசையா வீடு கட்டிக்கொடுத்து புள்ளைகள பக்கத்தில் வெச்சுடுவோம்., என்றார் பாட்டி.,

“சரி அப்ப இப்ப யாரு தனிக்குடித்தனம் போக போறாங்க”., என்று கேட்டாள்.

“ஏன் நீ போலையாக்கும்”., என்றார் பாட்டி.,

“நான் எதுக்கு போகணும்”., என்றவள்., “இப்ப நீங்க தான ஆசைப்படறீங்க ., நீங்க வேண்ணா போங்க பாட்டி”., என்றாள்.

பாட்டியோ “இப்போ உள்ள பிள்ளைங்க ரொம்ப விவரமா இருக்கியே தானே.,  இதுக்குள்ள புருஷனிடம் சொல்லி இருக்கமாட்ட., தனியா போகணும்னு”., என்று சொல்லவும்.

“ஏன் பாட்டி தனியா போறது பற்றியே பேசிகிட்டு இருக்கீங்க”., என்றவள். “தனியா தான் போகணும் அப்படின்னு நினைச்சிருந்தா..,  தனியா இருக்கற ஆளைப் பாத்து கல்யாணம் பண்ணி இருக்கலாமே.., எதுக்கு குடும்பத்துல இருக்கிறவங்கள பாத்து கல்யாணம் பண்ணனும்”.., என்றாள்.

“அது என்ன தனியா இருக்கிறவன்”.,  என்றார் பாட்டி.,

“அதுவா பாட்டி ஆசிரமத்தில் வளர்ந்துருப்பாங்க இல்ல., குடும்பமே இல்லாமல் தனியா இருப்பாங்க.., அப்படி தனியா இருக்க ஆள கல்யாணம் பண்ணியிருந்தா.., தனியாவே இருந்துட்டு போய்டலாம்.,  கடைசி வரைக்கும் நமக்கு குடும்பம்.,  சொந்தம் வேணும்னு நினைச்சா குடும்பத்தோட தான் இருக்கணும்”.., என்று சொல்லவும்.

அனைவரின் முகமும் அவளைத்தான் நோக்கியது.,

“சரி தான் நீ சொல்ற மாதிரி  குடும்பம் வேணும் னாலும்., இப்போ உன் புருஷனுக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்துட்டு என்ன செய்வ”., என்றார்.