7

முரண்பாடு மூட்டையடி நீ 
விலகத் துடிக்கும் 
உன் விரல்களும் 
அணைக்கத் துடிக்கும் 
உன் விழிகளும் 
புதுமை தான் நீ எனக்கு…

திருமண நாளும் அழகாக விடிந்தது.,  ஏனோ காலை முதலே திருமணத்திற்கான படபடப்பு இருவருக்குமே இருந்தது.,

ஆனாலும் நந்தன் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும்., நிவேதாவின் படபடப்பை தோழிகள் உணர்ந்தனர். அவளை பேசியே சரிசெய்த தோழிகள் அவளை வந்திருந்த அழகு நிலைய பெண்ணோடு சேர்ந்து கிளப்ப தொடங்கினர்…

சடங்கு சம்பிரதாயங்கள் என வரிசையாக நடந்து கொண்டிருக்க..,  ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பங்கள் இல்லை..,

ஷியாம் நண்பர்கள் அனைவரும் இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.,  ஸ்வேதாவும் நிவேதாவின் தோழிகளும் மற்றும் உறவு பெண்களுக்கு  நடுவில் நிவேதா இருந்ததால் அவளை யாரும் கண்டு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை…

மணமகனாக பட்டு வேஷ்டி சட்டையில் வந்து மணமேடையில் அமர்ந்து செய்ய வேண்டிய முறைகளை செய்து கொண்டிருந்தான்.

ஐயர் சொல்ல சொல்ல மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் கண்ணும் நொடிக்கொருமுறை பக்கவாட்டில் திரும்பி மணமகள் அறையை பார்த்து திரும்பியது…

அங்கிருந்த மணமகள் அறையில் பெண்களின் கூட்டமாக நின்றனர்.  இவனோ எப்பொழுது அவளைப் பார்ப்போம் என்ற யோசனையில் இருந்து கொண்டிருந்தான்., அவன் யோசனை குரல் காதில் கேட்டது போல ஐயரும் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று சத்தம் கொடுக்க.., எல்லோரும் பார்க்கும் இதோ வந்தாச்சி என்று சொல்லும் சத்தம் கேட்டு இவனும் நன்றாகவே திரும்பிப் பார்த்தான்…

அவன் தேர்ந்தெடுத்த பட்டு புடவையில் தேவதையாக கிளம்பி வந்தவளை பார்த்தவுடன் ஒரு நிமிடம் மூச்சுவிட மறந்தவனாக.., கண்ணிமைக்கவும்  மறந்து அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.,

நண்பர்களின் தோள் தட்டலில் தான் உணர்வுக்கு வந்தவன்., மெதுவாக வாய்திறந்து யாருக்கும் கேட்காத வண்ணம் ஆனால் அவனைப்  பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு மட்டும் புரியும் வண்ணம் பூனைக்குட்டி என்று உதட்டசைவில் தெரிவித்தான்.,

அவளோ விழியாலே மிரட்டுவது போல ஒரு பார்வையோடு அருகில் அமர்ந்தாள்.

அதற்குள் அவன் நண்பர்கள் எல்லாம் “டேய் நேத்து நம்ம பேசினதே  பொண்ணு ட்ட ன்னு தெரியாமல்.,  கதை பேசி இருக்கோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.,

அதே நேரம் நண்பர்களுக்குள் “அந்த எதிர்வீட்டு பொண்ணு இந்த பொண்ணு கையில தான்டா., லெட்டரை கொடுத்துட்டு போச்சு”., என்று பதட்டமாக பேசினர்.

“இப்ப வரைக்கும் எந்த ரியாக்சனும் இல்லையேடா.,  ஒருவேளை மொக்கையா ஏதாவது எழுதி இருக்குமோ”., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.,

அது அவளுக்கும் கேட்டது அவனுக்கும் கேட்டது., அவள் தலை நிமிராமல் அமைதியாக மற்றவர்கள் முன் அமர்ந்து கொண்டாள்.,

ஏற்கனவே பெற்றோர் உறவினர் என ஆளாளுக்கு அறிவுரை செய்து அனுப்பி இருந்ததால் அமைதியாக குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.,

அவனோ யாரும் அறியா வண்ணம் நெருங்கி அமர்ந்து கொண்டான்.

அருகில் இருந்த ஷியாம் நந்தனின் காதருகே குனிந்து… “பேசாம பொண்ண தூக்கி உன்மடில உட்கார வைச்சுக்கோ” என்றான்.

நந்தனோ” நேற்றே சொல்லி இருந்தா நான் இன்னும் கொஞ்சம் பேசி இருப்பேனே”., என்றான்.

அவனோ “டேய் போன் நம்பர் கிடைச்சும் பேசாதது உன் தப்பு., உனக்கு பக்கத்தில் உட்கார்ந்த பிறகு தான் பேசாமல் விட்டுடோம் ன்னு பீல் வருது., ரொம்ப நல்லது இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு மட்டும் சொந்தமா மாறிருவாங்க.., அப்புறம் பேசுங்க”.., என்றான்.

அதன் பிறகு இவள் அருகில் நெருங்கி அமர்ந்த படியே…. மெதுவான குரலில்
“ஏய் பூனைக்குட்டி” என்றான். அவளுக்கு மட்டும் கேட்கும் படி.,

அவளோ “இனி அப்படி கூப்பிட கூடாது”.,  என்றாள் “என்ன பார்த்தா அப்படியா தெரியுது”., என்றாள்..

அவனோ அவள் காதுக்கு மட்டும் கேட்குமாறு “எனக்கு எப்படி எப்படியோ தெரியுது.., என்ன செய்ய”., என்று சொல்லவும்..,

அவனை மெல்லிய குரலில் “தெரியும் தெரியும்., அடிவாங்க போறீங்க”., என்று மிரட்ட தொடங்கினாள்.,

“ஏய் நேத்து ஏன் சொல்லல”., என்று அவன் கேட்க..,

இவளோ “என்ன சொல்லணும்”.,  என்றாள்.

“என் நம்பர் உன்ட்ட இருக்கா”., என்றான்.

“இருக்கு”., என்றாள்.

“அப்புறம் ஏன் போனோ., மெஸேஜோ., பண்ணலை”., என்றான்.

“நீங்க எத்தனை பண்ணுனீங்க”., என்றாள்.

“எனக்கு கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி” என்றான்.

“நாங்க எல்லாம் காலேஜ்க்கு விளையாட தான் போறோம்., தெரியுமா”., என்றாள்.

“சின்னபிள்ளை ன்னு சொன்னா கோபப்படுற.., என்னோட போஸ்ட்டிங் என்ன ன்னு தெரியுமா”.., என்றான்.

“சொன்னாங்க., சொன்னாங்க., ஆர்.டி.ஓ ஆபிஸ் மொத்தமும் உங்க தலையில் தான் இருக்கு ன்னு., நீங்க பேசாம  இப்ப ஒரு வாரத்திற்கு இறக்கி வைச்சிட்டீங்க போல… யாரும் தூக்கிட்டு போயிற மாட்டாங்களே”., என்றாள்.

“தூக்கிட்டு போனாலும்., உன் வாய்க்கு பயந்து வந்து தந்துட்டு போயிருவான்”., என்றான்.

“நேத்து இவ்வளவு பேசலை., இன்னைக்கு பதிலுக்கு பதில் பேசுறீங்க”., என்றாள்.

“நேத்து உன்னை யாருன்னு தெரியாது., ஆனால் இப்ப தெரியும் இல்ல”., என்றான்.

சற்று நேரம் அமைதியில் கழிய..

“உனக்கு என் மேல கோபமா”., என்று அவன் கேட்க.

இவளும் வாயை அசையாமல் “இல்லை” என்று சொன்னாள்.

ஐயர் தான் ரகுநந்தனை  சற்று நேரம் பார்த்து இருந்தவர்.,  “மாப்பிள்ளை தம்பி கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்கோ.,  இப்ப கல்யாணம் முடிஞ்சதும் அதுக்கப்புறம் உங்க வீட்டம்மா  ட்ட காலம் முழுக்க பேசிக்கிட்டே இருங்க.., யாரும் வந்து கேட்க மாட்டாங்க..,  ஏன் இப்ப பேசிக்கிட்டே இருக்கீங்க”..,  என்று கேட்கவும்.,

அவளோ நல்ல பிள்ளையாக வாய் அசையாமல் பேசியதால் தெரியவில்லை., கல்லூரி வகுப்பறையில் பேசுவது இப்போது கைக்கொடுத்து.,

இவன் வாயைத் திறந்து பேசியதால் வெளியே தெரியவும்.,

எல்லோரும் “மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல”., என்று கேட்டார்கள்.

அவள் சிரித்துக்கொண்டே திரும்பி கொள்ள., அவனோ அவளைப் பார்த்து சிரித்தபடி அமைதியாக இருந்து கொண்டான்.

அதன் பிறகு  உற்றார் உறவினரிடம் ஆசி வாங்கிய திருமாங்கல்யம் நந்தனின் கைக்கு வந்து சேர்ந்தது., அதன் பிறகு முறைப்படி மந்திரம் ஓத., கெட்டி மேளம் முழங்க நந்தன் நிவேதா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.,

அப்போதும் அதன் பிறகும் நடந்த சடங்குகளில் பாந்தமாக பொருந்திக் கொண்டனர் இருவரும்.,

தோளணைத்து  நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அவள் காதருகே “இன்றிலிருந்து  நீ  நிவேதா ரகுநந்தன்., ஆனா எனக்கு மட்டும் பூனைக்குட்டி”., என்றான்.

அவள் காதருகே கேட்ட குரலில் அவள் அறியாமல் முகம் சிவந்தாலும்., “அப்போ நீங்க ரகுநந்தன் நிவேதா வா”., என்று கேட்டாள்.

அவனோ சிரிப்போடு அவளைப் பார்த்த படி மற்றவற்றை செய்ய.,  இவளும் அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படி “நான் மிஸஸ் ரகுநந்தன் னா.,  நீங்க மிஸ்டர் நிவேதா சரிதானா”., என்று கேட்டாள்…

“உனக்கு பிடிச்சிருக்கு அப்படின்னா அப்படியே வச்சுக்கோ”., என்றான்.

“அப்ப நான் நிக் நேம் வைப்பேன்”., என்றாள்.

“உனக்கு மட்டும் தான் முழு உரிமையும் இருக்கு”., என்றான்.

அதன்பிறகு அவன் கையில் அவள் கையை வைத்து சில மந்திரங்கள் ஓதி அவள் கையை அவனோடு பிடித்துக் கொடுக்க அப்போது தான் பார்த்தான்.,

அவள் கையில் நந்தன் என்று பெயர் எழுதி இருந்ததை.,  அப்போது யோசித்துக் கொண்டான். ‘நேற்றே  அவள் கையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்’., என்று ஆனாலும் சிரித்துக் கொண்டே கையை பிடித்துக்கொண்டான்.,

பிணைத்திருந்த கைகளை சிறிய பட்டு துணியால் கட்ட அவனும் சற்று அழுத்தியபடி பிடிக்க.., அவளோ அவன் கையை கிள்ளி வைத்தாள்.,

அவனோ அவள் கிள்ள முடியாத அளவுக்கு அழுத்தி பிடித்து பிடித்துக் கொண்டான்.,

இருவரும்  சேர்ந்து அக்னி வலம் வரும் போது இவளோ மெதுவாக ஷியாமிடம்  “கையை கிள்ளி வைக்கிறாங்க அண்ணா”.,  என்று அவனை கோர்த்து விட்டாள்.,

அருகிலிருந்த சிலருக்கு காது கேட்கவும்.,  “மாப்பிள பொண்ண கிள்ளக்கூடாது”., என்று சொல்லி மற்றவர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

இவனோ “நான் எப்போ உன்னை கிள்ளினேன்”  என்றான்.

“நீங்க ஏன் இவ்வளவு டைட்டா கைப் பிடிக்கிறீங்க., லூசா விடுங்க”..,  என்றாள்.

“அப்படி எல்லாம் விட முடியாது”..என்று அவன் சொன்னான்.

” அப்ப நான் அப்படித்தான் சொல்லுவேன்”.,  என்று அவள் சொல்ல ஸ்வேதாவோ இருவரும் சண்டை போடுகிறார்களோ  என்னும் அளவில் அவர்களைப் பார்த்தாள்.,

ஆனால் இருவர் முகத்திலும் முகம் நிறைந்த சிரிப்பு மட்டுமே இருந்தது..

அதன் பிறகு ஒவ்வொருவராக வர அறிமுகப் படலம் நடந்து கொண்டே இருந்தது.,

கல்லூரி தோழிகளும் உடன் பயிலும் மாணவ-மாணவிகள் என கல்லூரியில் பெர்மிஷன் கேட்டு வகுப்பில் அனைவரும் வந்திருந்ததால் அத்தனை பேரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.,

அத்தனை பேரும் சேர்ந்து பரிசை கொடுத்துவிட்டு “நீ இல்லாம கிளாஸ் கிளாஸ் மாதிரியே இல்ல.., எப்ப வருவ காலேஜ்க்கு”.,  என்று கேட்டனர்.

இவனோ மனதிற்குள் ‘நம்ம ஆள் தான் பயங்கர வாலா இருக்கும் போலயே’ என்று நினைத்துக்கொண்டான்.

அவளோ “நான் ஒன் வீக் ல வந்து விடுவேன்”., என்று சொன்னாள்.

சரி என்று அனைவரும் வாழ்த்தி விட்டு சென்றனர்.,

அதற்குள் அவன் நண்பர்களை அழைத்து அவள் நண்பர்கள் அத்தனை பேரையும் நன்றாக கவனித்து அனுப்பும்படி சொல்லி வைத்தான்…