ஒற்றை நொடியில் மூடி திறக்கும் இமைகள் சொல்கிறது ஓராயிரம் வார்த்தைகளை…
“ஷியாம் நீயாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.., நான் எதுக்கு சொல்றேன் தெரியுதா”., என்று மறுபடியும் கேட்டான் நந்தன்.
அனைவரும் வந்ததிலிருந்து அவனை மூளைச்சலவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் போல திருமணத்தைப் பற்றியே பேசி பேசி அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.,
அவனும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை., என்ற உடன் தங்கை கணவன் ஆன தன் நண்பனை துணைக்கு அழைத்தான் ஆனால் அவனும்…
“டேய் பார்க்கத் தானே போறாங்க., அதுக்குள்ள நீயே ஏன் முடிவு பண்ற.., பார்த்தவுடனே இந்த பொண்ணையே வா முடிக்கப் போகுது.., ஏன் இப்படி யோசிக்கிற ஜெஸ்ட் பாக்க ஆரம்பிக்கட்டும்., பாக்க ஆரம்பிச்சிட்டா தன்னால எல்லாம் செட் ஆயிடும்.,
அதுக்குள்ள இங்க இருக்கிற பிராப்ளம் சால்வ் ஆக ஆரம்பிச்சுரும்., புரிஞ்சிச்சா அதனால தைரியமா இரு., எல்லாத்தையும் யோசிக்காதே., எல்லாம் சரியாயிடும் சரியா”., என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினான்..
அமைதியாக அமர்ந்திருந்த அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருக்க., இவர்களுக்கு பெண் பற்றி சொல்லியிருந்த தரகருக்கு நந்தனின் அப்பா போன் செய்தார்.
அவரோ இரவுக்குள் போட்டோவையும் பெண்ணை பற்றிய தகவல்களோடு தருவதாக சொல்லியிருந்தார்.
அதற்கு மேல் நந்தனும் எதுவும் சொல்லவில்லை., பின்பு ஸ்வேதாவும் ஷ்யாமும் அவர்கள் வீட்டை நோக்கி கிளம்பி சென்றனர்.,
இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவன் என்ன செய்வது என்ற யோசனையோடு அமர்ந்திருந்தான்., பின்பு எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு தன் வேலை பற்றிய எண்ணங்களோடு உறங்கி போனான்.,
இரவே போட்டோ வந்திருக்க நந்தனின் பெற்றவர்களுக்கு பெண்ணைப் பார்த்ததும் அத்தனை திருப்தி.., வயது தான் இருவருக்கும் ஆறு வயதுக்கு மேல் சில மாதங்களும் வித்தியாசமாக இருந்தது.
மற்றபடி பெண்ணை பார்த்தவுடன் அவர்களுக்கு அவ்வளவு பிடித்து போனது., பார்க்கும் போதே கண்களில் ஒரு துறுதுறுப்பு இருப்பதைக் கண்டவுடன் தேவகிக்கு அத்தனை பிடித்தமாக இருந்தது.,
“ஜாதகம் பார்க்கிறது இருக்கட்டும்., அவனுக்கு பிடித்திருந்தா., ஜாதகம் பார்ப்பது இரண்டாம் பட்சம்”., என்று சொன்னார் தேவகி.
“அது அப்புறம் பார்ப்போம்., நீ பேசாம இரு”., என்று சொல்லிக்கொண்டே தெரிந்த ஜோதிடரிடம் நந்தனின் ஜாதகத்தையும் பெண்ணின் வீட்டிலிருந்து அனுப்பியிருந்த ஜாதகத்தையும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப அவர் காலை சொல்வதாக சொல்லியிருந்தார்.,
எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு நந்தனின் பெற்றோரும் உறங்கச் சென்றனர்…
மறுநாள் காலை ஜோதிடரும் முதல் வேலையாக அவர்கள் இருவருக்குரிய பொருத்தத்தையும் பார்த்து நந்தன் வீட்டுக்கு போன் செய்து சொல்ல அனைவருக்கும் அத்தனை திருப்தி.,
ஜாதகப்பொருத்தம் அமோகமாக அமைந்தது என்று காலையிலேயே ஸ்வேதாவிற்கு அம்மா போன் செய்து சொன்னார்.
ஸ்வேதா வீட்டு வேலைகள் பாதி முடித்திருந்தாலும் மீதியை அவள் மாமியார் பார்த்துக் கொள்வதாக சொன்னார்.
ஷியாமும் ஸ்வேதாவும் கிளம்பி வந்திருந்தனர்., வந்தவர்களுக்கு பெண்ணின் சுய விவரத்தையும்., பெண்ணின் புகைப்படத்தையும் பார்த்தவுடன் மிகவும் பிடித்தது..,
ஸ்வேதாவை தான் கையில் பிடிக்க முடியவில்லை., “அம்மா பொண்ணு ரொம்ப நல்லா இருக்காங்க ம்மா”., என்றார்.
அப்போது தான் வீட்டில் உள்ளவர்களும் பெண்ணின் வீட்டில் சொல்லியிருந்ததாக சொன்ன தகவல்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்., அனைவருக்கும் அத்தனை திருப்தி…
“அண்ணன் ட்ட போட்டோ காட்டிட்டீங்களா ம்மா” என்று ஸ்வேதா கேட்டாள்..
“இல்லடி வந்து காபி குடிச்சிட்டு மாடிக்கு போயிட்டான்., இனி ரெடியா குளித்து கிளம்பி தான் கீழே வருவான்” என்று சொன்னார்.
“போட்டோ குடுங்க நான் மேலே போய் கொடுக்கிறேன்”., என்று சொன்னார்.
அவர் ஜாதகத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பெண்ணின் சுய விவரம் அடங்கிய பேப்பரையும் கையில் கொடுத்தவர்., போட்டோவை கவரில் போட்டு எடுத்து ஸ்வேதாவிடம் கொடுத்தார்.,
அவளோ எடுத்துக் கொண்டு மாடிக்கு சந்தோஷமாக சென்றாள்.
“அறை கதவை தட்ட அப்போது தான் குளிக்க கிளம்பி கொண்டிருந்தவன் உள்ள வர வேண்டியது தானே ம்மா” என்றான்.
அம்மா என்று நினைத்து அழைக்க ஸ்வேதாவோ., “நான் தான் அண்ணா” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.,
“என்ன ஸ்வேதா இந்த நேரத்தில்”., என்று கேட்டான்.
அவளோ சிரித்த முகமாக “போட்டோ வந்துருச்சு ன்னு சொன்னாங்க., பொண்ணு சூப்பரா இருக்குது., எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு., நைட்டே அம்மா ஜாதகத்தை வாட்ஸ் அப்ல அனுப்பி ஜோஸியர் ட்ட கேட்டுட்டாங்க போல., காலை ல பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கார்.,
அம்மா இந்த இடத்தையே பேசி முடித்து விடலாம் நினைக்காங்க”.., என்றாள்.
“ஓஓஓ.., முடிவே பண்ணிட்டீங்களா., நேற்று பார்க்க தானே போறோம்., உடனேவா மூடிய போது னு தானே நீங்க எல்லாம் சொன்னீங்க”.., என்று சொன்னான்.,
“அண்ணா ப்ளீஸ்” என்று சொன்னாள்.,
“முதலில் பொண்ணுக்கு புடிக்குதா ன்னு பார்க்கலாம்., நான் எல்லாம் சாதாரண ஆளுமா.., ஒன்னும் பார்த்த உடனே பிடிக்குற அளவிற்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய பெர்சனாலிட்டி கிடையாது”., என்று சொன்னான்.
அண்ணே உன்னை போய் பெர்சனாலிட்டி இல்லேன்னு சொல்லாதே.., உனக்கு என்ன குறை ஜம்முனு இருக்க., உன் கைட்டுக்கும்., உன் வேலைக்கும் அப்படி ஒரு பொருத்தம்., இந்த பொண்ணு பொருத்தமாக இருக்கும்., பேசாம இரு”., என்று சொன்னாள்.
“பொண்ணு போட்டோ கவர்ல இருக்கு., இது பொண்ணோட பயோடேட்டா” என்று சொல்லி இரண்டையும் வைத்தவள். அதன் மேல் கனமான பொருளை எடுத்து வைக்கப் போனவள் அவனிடம் பேசிக்கொண்டே வைத்ததால் சரியாக போட்டோவின் மேல் வைக்காமல் அவளுடைய சுயவிவரத்தில் மட்டும் வைத்து விட்டாள்.
அதை திரும்பி பார்த்தவன் “சரி நான் பாத்துக்குறேன் போ”., என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
போட்டோவையும் பேப்பரையும் எடுக்க போனவனுக்கு குளிச்சிட்டு வந்து பார்ப்போம் என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்று விட்டான்.
குளித்து கிளம்பி அவன் திரும்பி பார்க்க சுயவிவரப் பேப்பர் மட்டும் இருக்க போட்டோவை தேடியவன் போட்டோ கவரை காணாமல் தேடினான்., ஒருவேளை ஸ்வேதா எடுத்துக்கொண்டு சென்றிருப்பாளாக இருக்கும்., அவள் மாமியாரிடம் காட்டுவதற்காக எடுத்து சென்றிருப்பாள்., என்று நினைத்துக்கொண்டான்.,
அப்படி நினைத்துக் கொண்டவன் அதன் பிறகு அம்மாவிடமோ ஸ்வேதாவிடமோ., போட்டோவை பற்றி கேட்க தயங்கியபடி விட்டுவிட்டான்..,
பெரிதாக எதுவும் ஈடுபாடு காட்டாமல் அப்படியே விட்டுவிட்டான்., அவனது நிலை அங்கு தான் ஒரு சிக்கலில் வந்து மாட்டிக்கொண்டது.,
அறையில் ஓடிக்கொண்டிருந்த பேன் காற்றில் போட்டோ பறந்து பீரோக்கும் ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கும் இடையில் விழுந்திருந்தது.
சுயவிவரப் பட்டியலை எடுத்து பார்த்தவன் சின்ன பொண்ணு என்று நினைத்துக்கொண்டான்., ஆறு வயது இன்னும் சில மாதங்களும் வித்தியாசம் இருந்தது., இப்பொழுது தான் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று போட்டிருந்தது.., அவனுக்கு ரொம்ப சின்ன பொண்ணா இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றியது..,
அதற்குமேல் அதை பற்றி யோசிக்காமல் சுயவிவரம் இருந்த பேப்பரை மட்டும் மடித்து எடுத்து தன் துணிகளுக்கு அடியில் சொருகி விட்டு கிளம்பிவிட்டான்.,
கீழே உணவருந்த வந்தவனிடம் “பொண்ணு பிடிச்சிருக்கா” என்று கேட்டார்.
அவனோ மனதிற்குள் ‘நான் தான் போட்டோவையே பார்க்கலையே., அப்புறமா பொண்ணு புடிச்சிருக்குன்னு கேள்வி வேற’ என்று மனதிற்குள் நினைத்தவன்.,
அவன் அம்மாவிடம் “உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா ஓகே மா., பாருங்க”.., என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.
அவருக்கு அத்தனை சந்தோஷம் அவன் சம்மதித்ததில் உடனே ஸ்வேதாவிற்க்கும் போன் செய்து சொல்லிவிட்டார்.
ஸ்வேதாவோ போன் செய்து அவள் கணவனிடம் சொல்ல., அவனும் நண்பர்கள் குழுவிடம் சொல்ல.., அங்கு அனைவருக்கும் அவன் திருமணத்திற்கு சம்மதித்த விஷயம் தெரிந்தது….
நிவேதா ஊரில் இருந்து வந்தவள்., வந்ததும் வராததுமாக வீட்டில் பேச்சை தொடங்கியிருந்தாள்…
வந்தவளை சந்தோஷமாக வரவேற்றனர் பெற்றோர்.,
“வா டா நிவி ம்மா.., எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க” என்ற அப்பாவிடம் மூஞ்சியை திருப்பி கொண்டு போனாள்.
“நிவேதா ஏன்டா அப்பா நல்லா எழுதி இருக்கியா ன்னு தானே கேட்டாங்க.., ஏன்மா இப்படி போற” என்று கேட்டார்.,
அவள் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு “உங்களை யார் எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னா.., நான் கேட்டேனா., இப்போ உங்க கிட்ட கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி சொன்னேனா., எனக்கு வேலைக்கு போகணும்.., கேம்பஸில் எனக்கு தான் கிடைச்சிருக்கு.., அப்படின்னு எவ்வளவு சந்தோஷமா சொன்னேன்., அப்போ எல்லாம் சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப உங்கள யாரு மாப்பிள்ளை பார்க்க சொன்னா” என்று கோபமாக கேட்டாள்..,
அருகில் வந்து அமர்ந்த அப்பாவோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு “நிவி குட்டி.., இதுக்கு தான் கோபமா., நல்ல இடம் டா.., அதனால தான் அப்பா கேட்டு வந்த உடனே சரின்னு சொல்லிட்டேன்”., என்றார்.