2

    உன் இதழ் சொல்லும் 
    வார்த்தைகளை விட., 
     உன் இமை திறந்து 
    சொல்லும் வார்த்தைகள் 
    இன்னும் அழகு., 

எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத அவ்வீடு.,  அந்த மாலை நேரத்தில் அமைதியை தத்தெடுத்துக் கொண்டது போல நிசப்தமாய் இருந்தது.

உள்ளே அமர்ந்திருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க.,  சற்று முறைப்போடு பார்த்தபடி அமர்ந்திருந்தான்,  ரகுநந்தன்

அவனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த சோபாவில் அவனுடைய அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருக்க.,  இவன் அவர்களை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.,

அலுவலகத்திலிருந்து வந்திருந்த உடையை கூட மாற்றாமல் தன்னை ரெப்பிரஷ்  செய்து கொள்ளாமல் கோபத்தோடு அமர்ந்திருந்தவன்.,  அவர்களை முறைப்போடு பார்த்தபடி தனது செல்போனை பார்த்துக்கொண்டே..,  அவர்களை பார்ப்பதும் போனை பார்ப்பதுமாக இருந்தான்.,

அதே நேரம் தெருவில் இருக்கும் அவனுடைய நண்பர்களும் ஒவ்வொருவராக தங்கள் வேலை முடிந்து வர அவன் உடை கூட  மாற்றாமல் அமர்ந்திருப்பதை கண்டவர்கள் சரியான கோபத்தில் இருக்கிறான்., என்பதை புரிந்து கொண்டு ஆங்காங்கு இருக்கைகளை இழுத்துப்போட்டு அமர பேச்சுவார்த்தை துவங்கியது.,

அவன் அம்மா தான் முதலில் பேசத் தொடங்கினார்., “ஏன்டா கூடயே சுத்துறீங்க இல்ல.., எவனாவது ஒரு வார்த்தை சொல்லலாம் இல்ல.,  நாங்க சொல்றதுக்கு எல்லாம் முடியாது முடியாது ன்னு சொல்றானே” என்று தொடங்கவும்.,

நந்தனும் கோபத்தில் கத்தி பேச தொடங்கினான்.,

“என்ன நீங்க  நானா போய் அடுத்த வீட்டில்  உறவுமுறை கொண்டாடிட்டு இருந்தேன்.,  எவ்வளவு தான் சொந்தக்காரங்களா பழகினாலும்., அக்கம் பக்கத்தில் உள்ளவங்ககிட்ட ரொம்ப உறவுமுறை வைக்காதீங்க ன்னு., எத்தனை முறை சொல்லி இருக்கேன்.,  நீங்க தான் எப்ப பார்த்தாலும் கொஞ்சிகிட்டு அலைகிறது..,

அப்புறம் அவங்க தேவையில்லாம எடுத்து விட்ட கதையை ஊர் புல்லா பரவ விட்டுட்டு என் உயிரை வாங்கி கிட்டு இருக்கீங்க” என்று சத்தமாக பேசினான்….

அது மத்தியதர மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு தெரு..,

அத்தெருவில் உள்ள நண்பர்களும் அக்கம் பக்கத்து தெருவில் உள்ள நண்பர்களும் அவனுக்கு மிகவும் நெருக்கம்.,  அதில் நால்வர் தான் இப்போது வந்து அமர்ந்திருந்தனர்.

அவர்களும் “டேய் என்னடா எங்களையும்  சேர்த்து தான் சொல்லுறியா” என்று சொன்னார்கள்.

“டேய் ஃப்ரெண்ட்ஷிப் வேற இவங்க பழகினது வேற டா.., பேசாம இருங்க நான் சொல்றது உங்களுக்கு புரியாமல் இருக்காது” என்று அவனும் சொன்னான்.

“புரியுதுடா.,  ஆனா அம்மா  சொல்றதுல என்ன தப்பு இருக்கு., நீ சொல்லுறதுக்கும், அம்மா சொல்லறதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டான்..

“ஏன்டா இந்த தெரு மட்டுமில்ல அக்கம் பக்கத்து தெரு வரைக்கும் இங்கு உள்ள பிரச்சனை என்னன்னு தெரியும்.,  தெரிஞ்சு அம்மா சொல்றதுக்கு என்னைய தலையாட்ட சொல்றியா., நான் நிம்மதியா இருக்குறது  உங்க யாருக்கும் பிடிக்கலையா.., நிம்மதியா இருக்குறது பிடிக்காம.,  நிம்மதிய ஒரேடியா குறைக்க எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணி இருக்கீங்களா” என்று கேட்டான்..

அவர்கள் நண்பர்கள் குழுவில் உள்ள அனைவரும் நல்ல நட்போடு இருந்தார்கள்.,  அதே சமயம் அனைவரும் ஒன்று போல பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு.,பேங்க் எக்ஸாம் என்று எழுதி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் அமர்ந்து இருக்க,  நல்ல நட்பு கூட்டமாக அது அமைந்தது..,  ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வேலை பார்க்க நந்தன்  ஆர்டிஓ ஆபீஸ் இல்., ஆபீஸர் பதவியில் அமர்ந்திருந்தான்.

“புரியுதுடா தப்புதாண்டா.,  நல்ல பழகுனாங்க.,  நம்ம ஏரியால அப்போ நம்ம கொஞ்ச வீடு தான் இருந்துச்சு.., எல்லாரும் ஒன்னுக்கொன்னு நல்ல பழகிட்டோம் இந்த எதிர் வீட்ல இருக்க புள்ள தான் அத்தை மாமா ன்னு பழகவும்., சின்ன புள்ள ரொம்ப  பொடி பிள்ளை ன்னு.,

அதுவும் அத்தை மாமா ன்னு கூப்பிட.., நாங்களும் மருமகளே ன்னு கூப்பிட்டோம்.,  அது ஒரு குத்தமா சாமி அதை  அந்த புள்ள மனசு இப்படி எடுத்துக்கிட்டு..,  இந்த மாதிரி ஒரு எண்ணத்தோட வெளியே பரப்பும் ன்னு நாம  என்ன கனவா கண்டோம்” என்று சொன்னார் நந்தனின் அம்மா…

உடனே பழைய கதையை தொடங்கி விட்டார்., அவனது நண்பனை அருகில் அமர்த்தி கொண்டு.,

“நாங்க இங்க வரும்போது அவ சின்னப்பிள்ளை பாத்துக்கோ.., இவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வளர்ந்த பிறகு சின்னபுள்ளயா இங்க வந்து வந்து பேசும் போது அதை விரட்டவா முடியும்” என்றவர் தொடர்ந்து  “மருமகளே ன்னு  சும்மா பேச்சுக்கு  செல்லி பேசிட்டு இருந்தோம்., சாதா பேச்சை அந்த புள்ள இப்படி நினைக்கும் ன்னு நாம என்ன  கனவா கண்டோம்.

காலேஜ் போற வரைக்கும் ஒழுங்கா தானே இருந்தா.., அது வரைக்கும் இந்த மாதிரி ஒரு நினைப்பு இருக்க மாதிரியே தெரியாது.., நல்ல புள்ளையா இருந்தா..,    அப்படி இருந்த பிள்ளை இன்னைக்கு இப்படி மாறும் ன்னு நாங்க என்ன கனவா கண்டோம்” என்றார் வருத்தத்தோடு..

“அது மட்டும் இல்லடா சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான்., கதையாக அண்ணன் காரன் பெரிய பிரச்சினை பண்ணி விட்டான்” என்று தொடங்கினார்.

நந்தன் மறுபடியும் கோபப்பட தொடங்கினான்.  “அவன் மட்டும்  பிரச்சினை பண்ணலைன்னா..,   உங்க மனசுக்குள்ள அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்திருக்கு தானே”.,  என்று கோபமாக கேட்டான்.,

“இல்ல டா.,  நல்ல புள்ள நம்ம என்ன ஜாதி மதம் எல்லாம் பார்க்கவா செய்கிறோம்., சரி இதுல என்ன இருக்கு நமக்கு தெரிஞ்ச பிள்ளையா இருக்கே., அவ மனசில் ஆசை இருப்பது புரிந்தது..,  சரி ன்னு  நான் மனசுல நான் மட்டும் தான் நினைச்சேன்., நம்ம வீட்ல யாருட்டையும் சொல்லக்கூட இல்லை”., என்றார் பாவமாக…

“அவ என்னைய  தெருவெல்லாம் கேவலப்படுத்தி வச்சுருக்கா., அக்கம் பக்கத்து தெரு வரைக்கும் கேவலப்படுத்தி வச்சிருக்கா.,  நான்தான் கட்டிக்க போறேன் ன்னு.,   நான் என்னைக்காவது அந்த பிள்ளை கிட்ட நின்னு பேசி இருக்கேனா.,  ஆனா இப்போ பாக்குற வழியெல்லாம் என்னைய மறித்து பேசுற அளவுக்கு வந்திருக்கா.,  எல்லாம் யார் கொடுத்த இடம் நீங்க கொடுத்த இடம்., எல்லாம் உங்க மூலமா தான்., அத புரிஞ்சுக்கோங்க”., என்றான்.

” சரிடா நான் தாண்டா தப்பு பண்ணிட்டேன்.., இப்ப இதுல என்னடா வந்துருச்சு.,  இப்ப நம்ம கல்யாணத்துக்கு  பார்க்கிற இடத்தில் கல்யாணம் பண்ணிட்டா வாய மூடிட்டு போயிருவா டா”.,   என்று நந்தனின் அம்மா சொன்னார்.

“ஏன்மா கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா..,  கல்யாணம் பண்ணிட்டு வந்து இன்னொரு பொண்ண இங்க வச்சு கஷ்டப்படுத்த சொல்றீங்களா..,  அந்த பொண்ணுக்கு நம்ம வீட்டில என்ன நடந்துச்சுன்னு புரியுமா..,  புரியாம நாளைக்கு ஏதும் பிரச்சினை ஆச்சுனா என்ன பண்ணுவீங்க.., யோசிச்சு பேசுங்க.,  அந்த பொண்ணுக்கு  எல்லாத்தையும் எல்லா விஷயத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது..,  எவ்வளவு பிரச்சனை வந்துச்சுன்னு தெரியும் இல்ல உங்களுக்கு அதெல்லாம் சொல்ல முடியுமா”..,  என்றான் நந்தன்.

“சரி., விடுடா., அம்மா சொல்றாங்க தானே..,  பொண்ணு பாக்க தானே கூப்பிடுறாங்க”.., என்றான் நண்பன்.,

“நீ பேசாம இரு.., உன்னை எதுக்கு கூப்பிட்டேன்., இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்., அந்த எதிர் வீட்டை விட்டு அந்த பிசாசு கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் கல்யாணம் வச்சிக்கலாம் ன்னு.,  சொல்லத்தான் கூப்பிட்டேன்.,  நீ என்னன்னா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க”., என்றான்.

“இதுல சப்போர்ட் பண்ண., என்னடா இருக்கு.,  பொண்ணு பாரு புடிச்சிருக்கு புடிக்கலைன்னு சொல்லு.,  அதுக்கப்புறம் மத்தத பேசுவோம்.,  உனக்கு  பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டோம் ன்னு தெரிஞ்சாலே.,  ஒருவேளை விலகி போக வாய்ப்பிருக்கு., அல்லது அவ கல்யாணம் பண்ணிட்டு போறதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை”.,  என்றான் நண்பன்.

“அவ திமிர் புடிச்சவ டா., சரியான திமிரு புடிச்ச பிசாசு., நேத்து போன் பண்ணி சொல்றா.,  நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கல னா  சூசைட் பண்ணிக்குவேன்., உன் பேரை எழுதி வச்சுட்டு செத்துப் போவேன் னு சொல்லுறா., கேவலப்படுத்திட்டு இருக்காடா.., ஏதாவது நம்பர் ல இருந்து கூப்பிடுறதால தெரியலை., நிம்மதியா இருக்க விட மாட்டாங்க டா., நாம வெளியே சொன்னா அசிங்கம் அது தான் கண்டுக்காத மாதிரி போயிட்டு இருக்கேன்”.,  என்றான்.

“இங்க பாரு.,  இப்ப கோவப்படுறது ல அர்த்தம் இல்ல.,   உனக்கு கல்யாணம் அப்படினாலே தானா பொட்டி பாம்பா அடங்கிரும்., அதுக்கப்புறம் அவங்க வீட்ல சொல்றவங்கள.,  கட்டிக்கிட்டு போயிடுவா”., என்றார் அம்மா.,

“அம்மா இன்னும் எப்படிமா  நம்புறீங்க..,  அவங்க வீட்டில் உள்ளவர்களை நல்லவங்க னு நினைக்கிறீங்களா.,  உங்களுக்கு புரியலையா எங்கேயாவது தள்ளி விட்டால் போதும் நினைக்கிறாங்களோ என்னவோ தெரியல..,  நல்ல அப்பாவா இருந்தா அவ திரும்பத் திரும்ப இப்படி பேசிட்டு  தெருவுல பரப்புறத பார்த்து நாலு போட்டு இருக்க மாட்டாங்க..,  உண்மையிலேயே நல்ல வளர்ப்பா இருந்தா.,  சூடு வைத்திருப்பாங்க..,

நம்ம ஸ்வேதா கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு பிரச்சினை வந்துச்சு., அப்பவே நல்ல அம்மாவா இருந்தாலும் நல்லா  நாலு மிதி மிதித்து இருக்கணும்.., அத விட்டுட்டு பையனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க தெரிஞ்சிருச்சி இல்ல.., அதை மாதிரி  அந்த பொண்ணுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா நம்ம நிம்மதியா இருந்திருக்கலாம் போங்க”.., என்றான்.

“என்னடா பண்ண ஸ்வேதா கல்யாணத்துக்கு முன்னாடி வந்த பிரச்சினையால  தான்.,  அவங்க  குணமே தெரிஞ்சுச்சு.., இல்லாட்டி எனக்கு ஒன்னும் தெரியாம நான் வெளுத்ததெல்லாம் பாலு ன்னு தான் இருந்திருப்பேன்”., என்றார் நந்தனின் அம்மா தேவகி.

“நீ ஊர்ல உள்ளவங்க கிட்ட எல்லாமே ஏமாறுவதையே  பொழப்பா வச்சிருக்கே”..,  என்று நந்தனின் அப்பா சொன்னார்.,

“இது தான் சாக்கு ன்னு உடனே என்ன திட்ட வந்துருங்க.,  நான் மட்டும் தான் பேசினேன் பாருங்க., நீங்க யார்ட்டையும் பேசவே இல்ல..,  எல்லாரையும் நல்லவங்க நம்பவே இல்லை இல்ல”., என்றார் அம்மாவும் கோபமாக.,

“சரிடா எல்லாம் கிடக்கட்டும் விடு., எதைப்பற்றியும் பேச வேண்டாம்., இப்ப நம்ம பொண்ணு பார்க்கணும் பேசி முடிக்கணும் அதுதான் முக்கியம்., அதுக்கு மட்டும் பதில் சொல்லு”., என்றார்.

பெருமூச்சு விட்டபடி தலையை கோதிக் கொடுத்தவன்., “ஏன்மா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க.,  நான் என்ன சொல்றேன் இன்னொரு பொண்ண கூட்டிட்டு வந்து இங்க கஷ்டப்படுத்த வேண்டாம் ன்னு யோசிக்கிறேன்.., உங்களுக்கு எதிர் வீட்டு பிசாசு பற்றி நல்ல தெரியும்..,  அது ஒன்னுக்கு ரெண்டா ஏதாவது சொல்லி கொடுத்து வெளியே விஷயம் வேற மாதிரி போச்சு னா., இங்க வீட்டுக்கு வர்ற பொண்ணோட மனசு என்ன பாடுபடும் ன்னு யோசிக்க மாட்டீங்களா.., அது கஷ்டப்படும் போது ஓபனா கேட்கும்.., இல்லை னா ஒன்னு தொட்டு ஒன்னு சண்டை வரும்.,  இல்லாட்டி  நானும் அந்த பொண்ணும் மண்டையை பிச்சிட்டு இருக்கணும் இது தேவையா”.என்றான்.