என் கையில் எதுவும் இல்லை உன் கையைத் தவிர, இருந்தும் காதலித்தாய் என் காதலே…
இன்பா மற்றும் மகா இருவரும் ஒருவர் மீது ஒருவர் தோள் சாய்ந்து தூங்குவதை திரும்பி பார்த்த சித்ரா.
ஒன்றும் நடக்காதது போல திரும்பி கொண்டார். அதன் பின் அலுவலகம் வர அங்கிருந்து கம்பெனி காரில் நால்வரையும் அனுப்பி வைத்துவிட்டு இன்பா
“அத்தை….. சீக்கிரம் வாங்க லேட் ஆச்சு உங்கலயும் வீட்டுல விட்டுறேன் “ என்று பைக்கை எடுத்து கொண்டு வந்தவனை ஏதோ யோசனையாக பார்த்த சித்ரா
“இல்ல இன்பா இன்னைக்கு நான் உன் அப்பார்ட்மெண்ட்ல தங்கி கிறேன் “ என்று சொன்னவரை சந்தேகமாக பார்த்த இன்பா
“என்ன அதிசயம் அத்தை….. என்ன உன் புருஷன் மாமா கூட சண்டையா…. “ என்று சந்தேகமாக பார்த்தவனிடம்
“அதென்னடா புருஷன் மாமா “ என்று புரியாமல் அது தான் முக்கியம் என்று கேட்ட சித்திராவை தலையை மறுப்பாக அசைத்து பார்த்த இன்பா
“இப்போ இந்த சந்தேகம் தான் ரொம்ப முக்கியமா…. அத்தை “
“ஆமா, ஆமா அது தான் முக்கியம் “ என்று தலையசைத்தவரை பார்த்து
“அது உன் புருஷர மாமான்னு கூப்பிட எனக்கு மனசு வரல…. உன் புருஷன்னு சொன்னா உனக்கு கோபம் வருது….அதான் ரெண்டையும் சேர்த்து கூப்பிடுறேன் “
“ஓ…..” என்று சித்ரா ஓ போடவும் இன்பா
“ப்ச் அதான் பதில் சொல்லிட்டேன்ல இப்போ சொல்லு அத்தை. அவர் கூட சண்டை போட்டியா ? என் கூட தங்குறன்னு சொல்ற “
“ஏன்டா அவர் கூட சண்டை போடலனா உன் கூட தங்க கூடாதா?”
“ எனக்கு நீ இங்கேயே இருந்தாலும் ஓகே தான் அத்தை. ஆனா அவர் தான் விட மாட்டாரே “ என்று முகம் வாட பேசியவன் தலையை தடவிய சித்ரா
“ ஒரு நாள் தானே இன்பா. நான் பேசிக்கிறேன் நீ அப்பார்ட்மெண்ட்க்கு போடா “ என்று பைக்கில் ஏறி அமர்ந்தவளுக்கும் வருத்தம் தான்.
வீரமுத்துக்கு சித்ரா இன்பாவுடன் இருப்பதே பிடிக்காது. எப்போது இன்பாவை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அழைத்து வந்தாரோ அன்று தொடங்கியது அனைத்தும்.
இன்பாவை இங்கு உன்னுடன் இருக்க வைத்தாள் அவனை படிக்க வைக்க விட மாட்டேன் என்று சண்டை போட்டு தான் ஹாஸ்டலில் சேர்க்க வைத்தார்.
அப்போது பார்த்து சித்திரா குழந்தையை சுமந்து கொண்டிருக்க அவளை அவனை பார்க்க கூட அனுப்ப மாட்டார் குழந்தையின் நலத்தை காரணம் கூறி.
வீரமுத்து தான் சென்று பள்ளி ஹாஸ்டல் என்று அனைத்துக்கும் பீஸ் கட்டி வருவார் அப்போது கூட இன்பாவை பார்த்து வருவோம் என்று நினைக்க மாட்டார்.
அந்த நாட்களில் தனிமையில் குழந்தை இன்பா வாடி தான் போவான்.
பள்ளி விடுமுறை என்றால் பத்து நாள் சித்திரா உடன் இருக்க அனுமதி கிடைக்கும் அவ்வளவே. அதன் பின் மீண்டும் ஹாஸ்டல் தான்.
சரி படிக்க ஆவது வைக்கிறாரே என்று சித்திரா நிம்மதியாக இருந்த போது தான் அடுத்த பிரச்சனை ஆரம்பித்தது.
இன்பா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம் வக்கீலோடு வீட்டுக்கு வந்த வீரமுத்து. இன்பாவின் அம்மா அப்பா சொத்துக்களை விற்க அழைத்து வந்திருப்பதாக கூறி இடியை இறக்கினார்.
இன்பா அம்மா அப்பா வாழ்ந்த வீடு அது. அவர் தாத்தா கட்டிய வீடு என்பதால் சித்ராவுக்கும் பங்கு இருப்பதாக கூறி, அதை விற்று சொத்தை பிரிக்க வீரமுத்து வர, சித்ரா உடைந்து போய் விட்டார்.
“என்னங்க, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? என் அண்ணன் பையனுக்குன்னு இருக்குற ஒரே ஒரு வீடு அது, அதையும் இப்படி எடுத்துக்க பாக்குறிங்களே, அவன் பாவம் இல்லையா?” என்று கண்ணீர் விட்டு நின்றவரை பார்த்து
“இதோ பாரு சித்ரா, பாவம் புண்ணியம் பார்த்தா நம்ம பையனுக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது. நான் ஒன்னும் அவனுக்கு தர வேண்டாம்னு சொல்லலையே, உன் பங்க தான தர சொல்றேன்.”
வீர முத்து பேசியபடி அவர்கள் ஒன்றும் இல்லாதவர் இல்லை. சொந்த வீடு, சொந்த வியாபாரம் என்று நன்றாகத்தான் இருக்கிறார்.
இருந்தும் அந்த வீட்டின் மதிப்பு இவர் கண்ணை உறுத்த, அதை விற்று தன் மகன் பெயரில் இடம் ஒன்று வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவராக வக்கீலை அழைத்து வந்திருக்கிறார்.
“இல்லை, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். அந்த வீடு இன்பாவுக்கு தான்.” என்று சித்திர கத்த
“அப்போ சரி, இந்த டைவர்ஸ் பத்திரத்துல சைன் போட்டு உன் அண்ணன் பையன் கூடவே போ” என்று சொன்னவரை அதிர்ந்து போய் அவர் பார்க்க
“ஒன்னு சொத்த விக்க கையெழுத்து போடு, இல்ல நானும் வேணாம் உன் பையனும் வேணான்னு டைவர்ஸ் பண்ணிட்டு போ” என்று இறக்கம் இல்லாமல் பேசியவரை பார்த்து கோபம் தான் வந்தது.
கோபம் வந்து என்ன, வீர முத்து இல்லாமல் இவரால் என்ன செய்திட முடியும்? பத்து வரை படிக்க வைத்த பெற்றோர், “கல்யாணம் செய்து அடுத்த வீட்டுக்கு போற பெண்ணிற்கு படிப்பு எதுக்கு” என்று வீடு என்ற தங்க கூண்டில் பொத்தி பொத்தி வளர்த்திருக்க.
அதன் விளைவு, தன் அண்ணன் மகனை கூட தனியாக இருந்து பார்த்துக்கொள்ள தெரியாத நிலை. இவை அனைத்தையும் யோசித்தவர்.
எதுவும் பேசாமல் அவர் பாட்டுக்கு வெளியே சென்று விட வீர முத்துவும்
“எப்படியா நாளும் இங்க தான் வந்தாகனும்” என்பது போல அவர் பையனின் கையை பிடித்த படி அங்கேயே இருந்து விட்டார்.
ஒரு வித விரக்தியில் வெளியே வந்த சித்ரா நேராக சென்றது என்னவோ இன்பாவை காணத்தான்.
அவருக்கு அப்போதைக்கு அவனை விட்டாள் வேறு யாரும் இல்லையே.
எப்போதும் மாதத்தில் இருமுறை அவனை பார்க்க ஹாஸ்டலுக்கு சென்று விடுவாள் சித்ரா. இன்றும் வார்டன் வந்து சித்ரா வந்திருப்பதாக சொல்லும் போது எப்போதும் போல சந்தோஷமாக தான் துள்ளி குதித்து வந்தான் இன்பா.
மகிழ்ச்சியாக வந்தவன் சித்ராவின் முகத்தை பார்த்து அவன் முகம் யோசனைக்கு மாற, சித்ரா அருகே சென்று
“அத்தை….” என்று அழைக்கவும் சித்ராவின் கண்கள் அவர் கட்டுப்பாடின்றி கலங்கி தாரை தாரையாக கண்ணீர் ஊற்ற தொடங்கி விட்டது.
அதில் இன்பா பயந்து போய் அவர் கையை பிடிக்க, இன்பாவின் முகத்தை பார்த்த சித்ரா கண்களை துடைத்த படி
“சாரிடா இன்பா….” என்று அவன் கையை பிடித்து கொண்டு அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்து சென்றாள்.
அங்கே இன்பா “என்ன ஆச்சு அத்தை, மாமா ஏதாவது திட்டிட்டாரா?” என்று கேட்டவனின் கையை பிடித்த படி அழுது தீர்த்தவர்
“இன்பா எனக்கு நீ முக்கியம் டா. எப்படி எனக்கு என் புள்ளை எப்படியோ அதே போல தான்டா நீ எனக்கு.”
“எனக்கு அது தெரியும் அத்தை. நீ அழாம என்ன ஆச்சுன்னு சொல்லு” என்று சித்ராவின் அழுகையை பார்க்க முடியாமல் கத்தியவனை பார்த்து
“உங்க மாமா என்ன டைவர்ஸ் பண்ணுறேன்னு சொல்றாருடா” என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சி தான் இன்பாவிற்கு.
அவனுக்கு தெரியும் மாமாவிற்கு இவனை தான் பிடிக்காது, ஆனால் தன் அத்தையை ரொம்ப பிடிக்கும் என்று.
அவன் விடுமுறையில் இவர்களுடன் இருக்கும் அந்த பத்து நாட்களில் வீரமுத்து சித்திராவை பார்த்து கோள்வதிலேயே அதை அறிந்திருந்தான்.
அப்படி இருக்க இது என்ன புது பூகம்பம் என்று யோசித்தவன்
“அத்தை என்ன ஆச்சுன்னு முழுசா சொல்லு” என்று அதட்டவும், தாய் தந்தை தமயன் என்று யாரும் இல்லாதிருந்தவருக்கு இன்பாவே இவர்கள் மூவருமாக அவருக்குத் தெரிய அழுதபடியே சொல்லி முடித்தார்.
அனைத்தையும் கேட்ட இன்பா சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக
“எனக்கு அந்த வீடு வேணாம் அத்தை, நீ அவர்கிட்ட விக்க சொல்லிடு”
என்று இலகுவாக சொன்னவனைப் பார்த்து அதிர்ந்த சித்ரா
“இன்பா அது உன் வீடுடா….அதை வித்துட்டு என்ன பேசுற”
“அத்தை எனக்கு வீடு, குடும்பம் எல்லாம் நீதான் அத்தை, நான் சொல்றதை மட்டும் பண்ணு”
என்று சொன்னவனின் வார்த்தையில் மொழி மறந்து போனவர் மேலும் அவனை கட்டிக்கொண்டு அழுதார்.
அவரை சமாதானம் செய்து இவனே பேசி அந்த இடத்தை விற்க வீரமுத்துவிடம் சொல்லிவிட்டான்.
அதன் பின் இவன் காலேஜ் படிக்கும்போது வீடு விற்ற பணத்தை வைத்தே இந்த அப்பார்ட்மெண்டை வாங்கினான்.
அந்த விஷயத்தில் இருந்து சித்ரா வீரமுத்துவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பெயருக்கு மனைவியாக இருக்கிறார்.
அதில் வீரமுத்துக்கு அத்தனை கோபம் வந்தாலும் சித்ராவிடம் காட்ட மாட்டார். எங்கே இவர் கோபத்தை காட்ட இதுதான் சாக்கு என்று இன்பா உடனே இருந்து விடுவாரோ என்று பயம்.
என்று இன்பா காலேஜ் முடித்து வீடு வாங்கி வேலை பார்த்துக்கொண்டே சி.ஏ. எக்ஸாமுக்கு படிக்கத் தொடங்கினானோ அன்றிலிருந்து அவனுக்குப் பயம் தான், எங்கே சித்ரா அண்ணன் மகன் தான் முக்கியம் என்று போய்விடுவாளோ என்று.
இப்படி பல்வேறு சிந்தனையுடன் இன்பா வீட்டிற்கு வர அவன் வீடே அலங்கோலமாக இருந்தது.
ஹாலில் காய் வெட்டும் கத்தி, சிப்ஸ், சாப்பாட்டுத் தட்டு, கிண்ணம் என்று இருக்க கிச்சனில், சிங்கில் இவன் சட்டை தொங்கிக் கொண்டிருந்தது.
இவற்றைப் பார்த்து பல்லைக் கடித்த சித்ரா “இன்பா….” என்று கத்தவும்
“அத்தை இதோ ஆரம்பிச்சிட்டேன்”
என்று வேக வேகமாக சுத்தம் செய்து அடுத்த ஐந்து நிமிடங்களில் அத்தைக்காக பால் போட்டுக்கொண்டு வந்து நீட்டவும்.
அதை கோபமான முகத்துடன் வாங்கி குடித்தவர் இன்பா முகத்தை பாவமாகப் பார்த்து
“கொஞ்சோண்டு சர்க்கரை டா…” என்று கண்களை சுருக்கி கேட்க அதில் பொய்யாக கோபித்த இன்பா
“உடம்புல ஊருக்கே காப்பி போட்டு தர அளவு சர்க்கரையை சேர்த்து வச்சிட்டு எக்ஸ்ட்ரா சர்க்கரை…. பிச்சி பிச்சி அத்தை”
“ போடா டேய்…அந்த வீரமுத்துவாலயே என்ன சர்க்கரை இல்லாம காப்பி குடிக்க வைக்க முடியல நீ என்ன சின்ன பையன்”
என்று தலையை தோளில் இடித்துக் நொடித்து கொண்டவர் பாலைக் குடித்தார்.
சித்ராவுக்கு வீரமுத்து வீட்டை விற்றது நினைவுக்கு வந்தாலே உன் மாமா என்பது மாறி பேரை சொல்லி தான் பேசுவார்.
இப்போதும் அவரை அப்படி அழைக்கவும் இன்பா மெல்ல சிரித்தபடி அத்தையின் அருகில் அமர்ந்து
“என்ன அத்தை ஓல்ட் மெமரிஸா..” என்று அத்தை தோளில் சாய்ந்தவனின் தலையில் தடவிய சித்ரா
“ம்ம்ம்…இன்பா ஞாபகம் தான் அன்னைக்கு அந்த ஆள் மட்டும் வீட்டை விக்காம இருந்திருந்தா இப்படி சின்ன வீட்டுல கஷ்டப்பட்டுருப்பியா டா”
“என்னது இது சின்னா வீடா? மூனு பெட் ரூம், கிட்சன், ஹால், பெல்கனினு சூப்பரா பெரிசா இருக்க வீடு உனக்கு சின்ன வீடா தெரியுதா அத்தை” என்று முறைத்தனை கண்டுகொள்ளாமல்
“எங்க அப்பா வீடு எத்தனை பெரிசு…. இது கூட அதை சேர்த்து பேசாத டா இன்பா அங்க கீழ மட்டும் அஞ்சு அறை இருக்கும் சமையல் அறையை சேர்க்காம”
“ம்ம்ம் லைட்டா ஞாபகம் இருக்கு அத்தை பின்னாடி தொட்டம் கூட இருந்துச்சி தான”
“ம்ஹூ…. என்ன இருந்து இப்போ என்ன அதான் வித்துட்டாங்களே என்னேரம் இடிச்சிருக்க மாட்டாங்க”
“இல்லை இப்போ வரைக்கும் இடிக்கல. அந்த வீடு வாங்கின ஆளு ரெண்டு வருஷம் தான் அதுல வாழ்ந்தாராம் அப்பறம் அவர் இறந்து போய்ட்டாரு.
அந்த வீட்டு வாங்குனவர் பசங்க எல்லாம் ஃபாரின் செட்டில்டு சோ இப்போதைக்கு காலியா பராமரிப்பு இல்லாம தான் இருக்கு”
என்று சொல்லி முடித்த இன்பாவை அதிர்ந்து போய் சித்ரா பார்க்க, அந்த பார்வையில் சிரித்தான் இன்பா.
“அது…. வேலைக்குச் சேர்ந்த அப்புறம் வீட்டை விசாரிச்சேன் அத்தை. அப்போ தான் விவரம் தெரிஞ்சது.”
“அப்போ இன்பா, நம்ம அந்த வீட்டை வாங்கிடலாமாடா?” என்று ஆசையுடன் கேட்டவரை, மறுப்பாக தலையசைத்து மறுத்தவன்.
“அவ்ளோ காசு இப்போ நம்ம கிட்ட இல்ல அத்தை. என்ன தான் சென்னையில இல்லனாலும், இடம் பெருசு, மெயின் பிளாஸ்ல வேற இருக்கு….ம்ம்ம்….பார்க்கலாம்.”
என்று இன்பா சொன்னதை கேட்டு கைகளை கூப்பி இறைவனிடம் வேண்டினாள் சித்ரா.
“அம்மா மாரியம்மா, என் இன்பாவுக்கே எங்க அண்ணன் வீடு கிடைச்சு, அவன் பிள்ளைகளோட அங்க சந்தோஷமா வாழனும்மா” என்று வேண்டிக்கொண்டவரை பார்த்து வருத்தமாக சிரித்தார் அந்த தாய்.
“என்ன அத்தை, வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கு?” என்று இன்பாவின் சிரிப்பை பார்த்து நினைவு வந்தவராக,
“அட, இதை கேட்க தான் வந்தேனே நானு…அதை விட்டுட்டு உளறிட்டு இருந்திருக்கேன் பாரு” என்று தலையில் தட்டிக்கொண்டவரை புரியாமல் பார்த்தான் இன்பா.
“என்ன அத்தை, எதை பத்தி கேட்கணும்?”
“நீ மகாவை சைட் அடிக்கிறியா இல்ல உண்மையா லவ் பண்றியா டா?” என்று சித்ரா இன்பா முகத்தை பார்க்க, அவனோ என்ன சொல்ல என்று திகைத்து போய் அமர்ந்திருந்தான்.