அத்தியாயம்21

முறைத்து முறைத்து காதலித்தாலும் என் காதல் நீ தான்…

சுபா ஜெகன் நீட்டிய கொலுசை பார்த்தவள் மனதில் “ இவர் ஏன் இவ்வளவு ஸ்டன்ட் பண்றாரு? நானே ஓகே சொல்லலாம்னு தானே இருந்தேன் “

என்று அவன் முகம் பார்க்க, அவன் முகம் விறைப்பாக தெரிந்தாலும் கண்கள் என்னவோ பயத்தை காட்டி கொடுத்து விட்டது.

சுபா ஜெகனை காலேஜி யிலேயே அவனுக்கு தெரியாமல் சைட் அடிப்பவள். இன்று இவன் தான் கல்யாண மாப்பிள்ளை என்றதும் அவன் மீது பயமே இருந்தாலும் மனம் மகிழ்ச்சியில் ஆட தான் செய்தது.

சுபாவின் மயக்கம் கூட ஆனந்தத்தில் வந்தது தான். அவள் பயம் கூட “ எங்க நம்ம டயரை குத்தி கிழிச்சதை சொல்லிடுவாரோ…..” என்று பயந்து தான்

 “ அப்படியே நல்ல புள்ள மாதிரி தலையை குனிஞ்சியே கல்யாணம் வரை ஏமாத்திடணும். தாலி கட்டிட்ட பிறகு இவரை பார்த்துக்கலாம்  “

என்று அவனை நிமிர்ந்து பார்க்க ஜெகன் அதே நேரம் சுபாவை தான் ஆசையுடன் பார்த்து வைத்தான்.

அந்த பார்வையை தவறாக புரிந்து கொண்ட சுபா “ பொண்ணு பார்க்க வந்தவர் மாதிரியா இருக்காரு? எப்படி முறைச்சிட்டு இருக்காரு… இப்போ மட்டும் தனியா சிக்கினா அவ்ளோ தான் போலையே… இந்த சார் கல்யாணம் அப்பறமும் இப்படி தான் முறைச்சிட்டே இருப்பாரா ….

 ம்ஹுன் எப்படி சுபா இவரை போய் பிடிக்குது உனக்கு. முதல்ல கண்ணை கொண்டுட்டு போய் டாக்டர் கிட்ட காமிக்கனும் “ என்று மனதில் ஏதேதோ பேசிய படி இருந்தவளை வெளியே ஜெகன் உடன் போக சொன்னதும்.

“ போச்சு போச்சு தனியா சிக்கிட்டோம் “என்று புலம்பிய படி போனவளுக்கு ஜெகன் பேச்சு, அவன் பார்வை எல்லாம் இன்பா அதிர்ச்சி தான்

“சார் அ…. இது “ என்று அதிர்ந்து போய் கொலுசையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்தவள்.

தலையை குனிந்து புன்னகைத்த படி “ கல்யாணத்துக்கு அப்பறம் நானே உங்களுக்கு தான். இப்போ வந்து அந்த கொலுசை கேக்குறீங்க சார்”

 என்று அவனை பார்க்காமல் இவள் உள்ளே சென்று விட ஜெகன் அவள் சொல்லி சென்றதில் அந்த கொலுசை கையில் வைத்து கொண்டு சிரித்த படி நிற்க , உள்ளே செல்ல போனவள் திரும்பி

“ உங்களுக்கு என்னை விட அந்த கொலுசு ரொம்ப பிடிச்சிருக்கு போல. பார்த்து தாலி மாத்தி அதுக்கு கட்டிட போறீங்க “ என்று கண்கள் சிமிட்டி சொன்ன சுபாவை ஜெகன் முறைக்கவும்

“ அ… இப்போ தான் என் சார் மாதிரி இருக்கீங்க “ என்று ஒற்றை கண் அடித்து விட்டு சுபா உள்ளே ஓடி விட இங்கே ஜெகன் வாயில் கைவைத்து நின்று விட்டான்.

“ அதன பார்த்தன் என்னடா அமைதியா இருக்கா?  அமைதியா அகிட்டால ன்னு ? இந்த வாலை நிமிர்த்த முடியுமா என்ன “ என்று புன்னகை முகமாகவே உள்ளே சென்றான்.

இவன் சென்ற பிறகு கல்யாணம் தேதி குறிக்க பேச தொடங்கி விட்டனர். அதன்படி சுபா, ஜெகன் மற்றும் மகேஷ், குணா இரு ஜோடிகள் திருமணத்தையும் ஒன்றாக வைத்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

அதேபோல மூன்று மாதத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் நல்ல முறையில் திருமணமும் முடிந்தது.

“ சுபா மேம்க்கு புரொஃபசர் ஜெகன் சார், குணா மேம்க்கு மகேஷ் சார் புரோகிராமர். அப்போ ஜெயா மேம்க்கு “ என்று மகா முகத்தை ஜெனிஷா பார்க்க

“சாப்பிட்டு முடிச்சதும் கைகழுவணும்மா, அதை விட்டுட்டு கதை பேசிட்டு இருக்கீங்க” என்று சத்தியா அதட்டவும் ஜெனிஷா வாயை மூடிக்கொண்டு எழுந்து சென்று விட, மகாவும் எழுந்து கைகழுவி விட்டு மூவருமாக மீண்டும் காரில் ஏறினர்.

காரில் ஏறியதும் ஜெனிஷா, “சொல்லுங்க மேம், ஜெயா மேம் என்ன ஆனாங்க?”

“எங்க நாலு பேர்ல எங்க அப்பா சித்தப்பாவ ரொம்ப டார்ச்சர் பண்ணி லேட்டா கல்யாணம் பண்ணது அவ தான்.”

“லேட்டா ன்னா எப்போ மேம்?”

“27 வயசுல தான் கல்யாணமே பண்ணிக்கிட்டா. அதுவும் அவ கல்யாணம் ஏதோ படம் பார்க்குற மாதிரி தான் நடந்துச்சு. அப்புறம் மினிஸ்டருக்கும் சிபிஐ ஆபிசருக்கும் கல்யாணம்னா சும்மாவா?”

“அப்போ ஜெயா மேம் மினிஸ்டரா?” என்ற ஜெனியை முறைத்த மகா, “ஏ…அவ போலீஸா இருக்க கூடாதா?”

“நான் அப்படி நினைச்சி கேட்கல மேம்.”

“ம்ம்ம், அவளுக்கு க்ரைம் பத்தி படிக்க புடிச்சி போய் சிபிஐ ல ஜாயின் பண்ணிட்டா. அங்க ஒரு கேஸ் விஷயமா போன இடத்தில இவளை பார்த்து புடிச்சி கல்யாணம் பண்ணிட்டாரு மினிஸ்டர்.”

“நான்… நம்ம மினிஸ்டர் பத்தி கேள்விப்பட்டுருக்கேன், ஆனா அவருக்கு சிபிஐ மனைவின்னு கேள்விப்படலையே மேம்.”

“நான் எப்போ என் தங்கச்சி தமிழ் நாட்டு மினிஸ்டர கல்யாணம் பண்ணாண்ணு சொன்னேன்?”

“பின்ன …மேம்?”

“என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது ஆந்திர மினிஸ்டரை” என்றதும் ஜெனி வாயை பிளக்க,

“ஏன் இவ இப்படி வாயை புளக்குறா? ஆந்திர ன்னா என்ன, அவரும் மனிஷன் தான” என்று சத்தியா கண்ணாடி வழியே ஜெனிஷாவை பார்த்து முனங்கிக் கொண்டே தான் வந்தான்.

 ஜெனி என்ன செய்தாலும் இவனுக்கு கோபம் தான் வந்தது. அதில் அவளை பார்ப்பதும் ரோட்டை பார்ப்பதும் என்று திட்டிய படியே ஹோட்டலுக்கும் வந்து விட்டான்.

ஹோட்டலை பார்த்து விட்டு கீழே இறங்கிய ஜெனி, “மேம் எப்படி மேம் உங்க வீட்டுல லவ் மேரேஜ் அதுவும் பக்கத்து ஸ்டேட் எப்படி ஒத்துக்கிட்டாங்க?” என்று மகாவுடன் ஹோட்டல் உள்ளே நடந்த படி கேட்க,

“நீ வேற ஜெனி, இந்த ஜெயா கல்யாணமே பண்ண மாட்டேன்னு இருந்ததுல எங்க அப்பா சித்தப்பா கூட இவரை ஒத்துக்கிட்டாங்க. எங்க தங்கச்சி தான் மினிஸ்டர்னு பார்க்காம அவர வச்சி செஞ்சிட்டா. பாவம் கொழுந்தன் எத்தன குட்டி கரணம் போட்டு அவள கல்யாணம் பண்ணாங்க தெரியுமா?”

“நீங்க சொல்றத கேட்டா ரொம்ப ஆர்வமாக இருக்கிறது மேம்… கொஞ்சம் முழு கதையையும் சொன்னா நல்லா இருக்கும்.”

“டைம் ஆச்சு ம்மா, கதையெல்லாம் நாளைக்கு பேசுங்க” என்ற சத்தியாவின் குரலில் அவனை கோபமாக முறைத்து ஜெனி பார்க்க,

“என்ன முறைச்சா பயந்திடுவேனா? டைம் எத்தனன்னு தெரியுமா? உன்ன மாதிரி அம்மா வெட்டியா இருக்காங்கன்னு நினைக்கிறியா?” என்று சீறிக்கொண்டு சத்தியா வர,

“நான் வெட்டியா இருக்கன்னு உங்களுக்கு யார் சொன்னது? இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன வந்ததுல இருந்து முறைச்சிட்டே இருக்கீங்க?”

“என் வேலைக்கு நான் அப்படி தான் முகத்தை வைக்க முடியும். உன்ன மாதிரி பல்ல காட்டிட்டே இருக்குறதுக்கு நான் என்ன லூசா?”

“யார லூசு ன்னு சொல்றிங்க?” என்று ஜெனி கோபத்தில் கத்த, அதற்குள் மகா

“டேய் சாத்தியா என்ன பேச்சி பேசுற டா? ஜெனி கிட்ட சாரி சொல்லு” என்றதும் அதற்கும் சேர்த்து ஜெனியை அவன் முறைத்து வைக்க,

“அவர் சொல்ற சாரிலாம் எனக்கு தேவையில்ல மேம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க மேம் நம்ம மார்னிங் பேசலாம்.” என்று சந்தியாவை முறைத்த படியே ஜெனிஷா பேச,

“ஜெனி ஒய் டென்ஷன் ம்மா… நீ இப்படி முகத்தை வைக்காதே, அப்பறம் அவன் முகம் மாதிரி ஆகிட போது.”

என்று அவள் நாடியை பற்றி திருப்பவும் மெலிதாக சிரித்தாள் ஜெனிஷா.

“நான் அவ்வளவு சீக்கிரம் டென்ஷன் ஆக மாட்டேன் மேம். ரூமுக்கு போகணும்மேன்னு தான் வருத்தம்.”

“ஏன் ஜெனி, தனியா ஸ்டே பண்ண ஒரு மாதிரி இருக்கா ம்மா?”

“அதெல்லாம் இல்ல மேம், நீங்க இன்னும் உங்க மேரேஜ் கதை அப்புறம் எப்படி ரிங் வாங்குனீங்கன்னு சொல்லவே இல்லையே மேம், அதான் சோகம்.”

என்று முகத்தை தொங்க போட்டவளின் மூக்கை பிடித்து ஆட்டினாள் மகா.

“போய் செமத்த படுத்து தூங்கு. மார்னிங் அவார்ட் முடிச்சிட்டு இவன் இன்டர்வியூ முடிஞ்சதும் நம்ம பேசலாம் சரியா? “அதை கேட்டு முகம் பளிச்சென்று மாற தலையசைத்த அவள்.

“அப்போ குட் நைட் மேம், மார்னிங் பார்க்கலாம். எனக்காக உங்க ரூம்ல வெயிட் பண்ணுங்க மேம்.”

என்று கை அசைத்த படி அந்த காரிடரில் மறு முனையில் இருந்த அவள் அறைக்கு ஓடி சென்றுவிட்டாள்.

சத்தியாவை கண்டு கொள்ளாமல் ஓடியவளை முறைத்தான் அவன்.

“அவ கிட்ட ஏன்ம்மா எல்லாத்தையும் சொல்றிங்க? பேப்பர்ல எல்லாத்தையும் எழுதி வைக்க போற பாருங்க.”

“அதெல்லாம் அவ அப்படி செய்ய மாட்டா டா சத்தியா” என்று அவன் தோளை தட்டியவர்

“குட் நைட் டா சத்தியா” என்று மகா அவளுக்கு ஒதுக்க பட்ட அறைக்குள் சென்றுவிட. சத்தியாவுக்கு தான் ஏதோ எரிச்சலாகவே இருந்தது.

அதே எரிச்சலோடு மகாவை தாக்க வந்தவர்களை மிரட்ட சென்று விட்டான்.

இங்கு அறைக்குள் நுழைந்த மகா கட்டிலில் அமர்ந்த படி அவள் கையில் போட்டிருந்த மோதிரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த மோதிரத்தை எந்த நிலையில் அவள் இன்பாவிடம் அடம் பிடித்து வாங்கியிருந்தாள்.

அந்த மோதிரத்தை வருடியவள் முகம் செவ்வானமாக  சிவந்து போக நினைவுகள் காலம் கடந்து பின்னோக்கி நகர்ந்து சென்றது.

போனில் இன்பா கேட்டதற்கு,” அந்த ரிங்க…. ம்ம்ம் போடுங்க எனக்கு ஓகே தான்” என்று அத்தனை சந்தோஷமாக மகா சொல்லியிருக்க ஆனால் அவள் சந்தோஷம் குழையும் வகையில் அவள் நிச்சயதார்த்தம் அன்று இன்பா தங்க வளையலை அவளுக்கு போட்டு விட்டிருந்தான்.

அதில் மகா முகம் வாடி விட்டது. அவள் முகம் வாட்டத்தை பார்த்த இன்பா மேடையில் அவள் அருகே லேசாக சாய்ந்து,

“தங்கமே… சாரிடா……நான் அந்த ரிங்க போடனும் தான் நினைச்சேன். அத்தை தான் அது சின்னதா இருக்கு அதை போட்டா சபையில உனக்கு மரியாதையா இருக்காதுன்னு சொல்லிட்டாங்க டா.”

என்று சமாதானம் செய்தவனை பார்த்து தீயாக முறைக்க அதில்,

“ டேய் தங்கம் கோப படாத டா, இப்போ கூட அந்த மோதிரம் என் பக்கெட்ல தான்டா இருக்கு நான் வேணும்னா நிச்சியம் முடிஞ்சதும் போடுறேன்.”

“மோதிரம் போடுறேன்னு என் கிட்ட வந்துறாதிங்க உங்களுக்கு அவ்ளோ தான். இனிமே அந்த ரிங்க நானா எப்போ கேக்குறனோ அப்போ தான் போட்டு விடனும். நான் கேக்கும் போது மட்டும் உங்க கிட்ட அந்த ரிங் இல்லாம போச்சு அப்போ இருக்கு” என்று மிரட்டி விட்டு மகா திரும்பி கொள்ள இன்பா,

“இந்த மாதிரி மிரட்டியே…. என்ன கவுத்துட்ட டி என் தங்கமே “என்று தலையை கோதியவன் வந்தவர்களுக்கு வணக்கம் சொல்ல தொடங்கிவிட்டான்.

அதன் பின் இன்பா அந்த மோதிரத்தை கையில் தான் வைத்த படி சுற்றி வந்தான் அவன் தங்கம் எப்போது கேட்பாள் என்று யோசித்து திருந்தவன்.

அவளை பார்க்கும் போது எல்லாம் கண்கள் கொண்டே “இப்போ போடவா தங்கமே….” என்று கேட்டுக்கொண்டே சுற்றி வந்தவனை மகேஷ் தான் பயந்து போய் பார்த்தான்.

“டேய் என்னடா பண்ற கையை காத்துல ஆட்டிட்டே சுத்துரியேடா, கைக்கு ஏதாவது அகிடுச்சா?”

“ச்சீ வாய கழுவு பக்கி, நான் என் தங்கத்து கூட பேசிட்டு இருக்கேன் டா.”

“ஏன் அதை பக்கத்துல போய் பேசினா என்ன?”

“ப்ச் போடா, என் மாமனார்கள் உசாரா நாலு அடுக்கு பாதுகாப்பு போட்டு வச்சிருக்கார் டா, அவளை பார்க்க மட்டும் தான் முடியுது.”

“ம்ஹூம்… நீயாவது கையை ஆட்டி காலை ஆட்டின்னு பேசிக்கிற, என்ன பார் பார்க்க மட்டும் தான் முடியுது, அப்படி மீறி தனியா அவளை பார்த்தா கூட அவ எங்க என்ன பார்க்கிறா”

என்று ஏக்கமாக குணாவை பார்க்க அவள் அழகாக மகாவின் கன்னம் பற்றி ஏதோ சீரியஸாக கதை பேசுவது தெரிந்தது.

அதை பார்த்து ஒரே போல இரு நண்பர்களும் ஏக்கமாக பெருமூச்சை இழுத்து விட்டுக்கொள்ள, இன்பா பக்கம் திரும்பிய மகேஷ்,

“சரி சோக கீதம் வாசித்தது போதும் வா, உன்னை அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று அழைத்து சென்று விட்டான்.

அதன் பிறகு எல்லாம் வேகம் வேகம் வேகம் தான், வேலை தலைக்கு மேல இருக்க இன்பாவால் மகாவை பார்க்க கூட முடியாமல் போனது.

வீர முத்துவிடம் உதவி கேட்டு நிற்க கூடாது என்பதற்காகவே அனைத்தையும் இழுத்து போட்டு செய்தவன், தாலி கட்ட மேடை ஏறும் வரை ஓடிக்கொண்டு தான் இருந்தான்.

மேடை ஏறி அமர்ந்த பிறகே அமைதியாக அவளின் அவளாக போகிறவள் எங்கே என்று கண்கள் சுழற்றிக்கொண்டு இருந்தான்.

அப்போது அழகாக பட்டுப்புடவை உடுத்தி மேடை நோக்கி தலை குனிந்த படி வந்தவளை இமைக்காமல் பார்த்தவன் அவள் அவன் அருகே வரும் வரை பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.

அவன் பார்வையில் சித்ரா “டேய் இன்பா இப்படி பார்த்து வைக்காத டா கண்ணு படும்” என்று சொன்னது எதுவும் காதில் விழாது பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் தன்னவள் தன்னை ஒரு முறை நிமிர்ந்து பார்க்க மாட்டாளா என்று பார்த்தவனுக்கு பழத்த ஏமாற்றமே கிடைத்தது, அவள் இவன் அருகே வந்து அமர்ந்த பின்னும் அவள் பார்க்காமலே இருக்க அதில் சிறு கோபம் எட்டி பார்த்தாலும் ஏக்கமும் இருந்ததோ.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்…” என்ற அய்யரின் சத்தத்தில் அவர் கையில் இருந்து தாலியை வாங்கியவன்.

அவள் கழுத்தை சுற்றி தாலியை கட்ட எடுத்து சென்றவன்

“தங்கமே….. என்ன பாரு” என்ற இன்பாவின் குரலில் அவள் தலை லேசாக நிமிர்ந்து அவனை பார்க்கவும் அவளின் கண்களை பார்த்த படி

“கன்ஙரஜிலேஸன் மிஸ்ஸஸ் இன்ப ஆரசன் “என்று கண்களைச் சிமிட்டி சிரித்தது அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

திருமணம் முடிந்து வரவேற்பு முடிந்த பிறகு, இருவருக்கும் பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. மதியம் மூன்று மணி வரை இவர்களின் வரவேற்பு நீடித்தது.

அது முடியவும், இன்பாவும் மகாவும் அவர்களின் அப்பார்ட்மென்டுக்கு காரில் சென்றனர்.

இன்பாவின் வீடு ஏழாவது தளத்தில் இருந்தது. அந்த அப்பார்ட்மெண்டை தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

“எவ்ளோ பெருசா இருக்கு “ என்று பார்க்க,

“மொத்தம் இருபத்து ப்ளோர் “ என்றபடி லிப்டில் அழைத்துச் சென்று அங்கே விளக்கேற்றி சில சம்பிரதாயங்கள் செய்ய வைத்தார் சித்திரா.

அது முடிந்த உடனே மீண்டும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அங்கேதான் மூன்று நாட்கள் இருக்க வேண்டும் என்றும், மூன்று நாட்கள் கழித்தே சாந்தி முகூர்த்தம் என்றும் சொல்லிவிட,

“அருமை சூப்பர்… இந்த முகூர்த்தத்தை குறிச்சி கொடுத்த அந்த நல்லவர் யாருப்பா “ என்று பல்லைக் கடித்தவனை வெட்கப்பட்டு பார்த்துவிட்டு சித்திரா சொல்ல,

“ இவுங்க வேற சும்மாவே தங்கச்சிங்க இருக்காங்கன்னு அட்டேன்சன் ல தான் இருப்பா இதுல இது வேறையா சரி மூணு நாளு தான மூணு நாள் முடியட்டும் தங்கத்த பார்சல் பன்னிறன் “

என்று புலம்பியவன் மகாவிடம் பேசவாவது செய்யலாம் என்று ஆசையாக மகாவை தேடி செல்ல அங்கே இவன் தங்கமோ அவள் தங்கைகளுடன் நானும் என் தங்கைகளும் என்ற போசில் அவர்களுடன் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி இருந்தாள்.

அவர்கள் தூங்குவதைப் பார்த்தவன் “ இவ இவுங்க கூட தூங்கிட்டா நம்ம எங்க தூங்க “ என்று புலம்பியவனின் தோளில் ஒரு கை வந்து விழ யார் என்று திரும்பிப் பார்த்தான்.

சீனி தான் நின்றிருந்தார் “ வாங்க மருமகனே தூங்க போலாம் “ என்று அவருடன் அழைத்துச் சென்றுவிட இன்பா நொந்து போயிட்டான்.

“ கல்யாணம் முடிஞ்சி தங்கத்தோட சந்தோஷமா இருக்கலாம்னு பாத்தா இப்படி மாமனார் கூட போராட வச்சிட்டீங்களே டா “ என்று புலம்பியவன் இதோடு பத்தாவது முறை சீனியின் கையை நகர்த்திப் போட்டிருப்பான்.

ஆனால் அவர் மீண்டும் கையைத் தூக்கி அவன் மீதே தொப் என்று போட “ நல்லா இருக்குடா உங்க முதல் இரவு “ என்று நொந்தபடி உறங்க முயன்றான்.