அத்தியாயம்19

“சைட் அடிச்ச பையன பாத்தா சந்தோஷம் தான படனும் மேம் “

“மேடம் பாத்து வச்ச வேலை அப்படி ஜெனி “

என்று கதையைத் தொடர்ந்தாள் மகா.

சுபா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது தான் ஜெகனைப் பார்த்தாள். ஜெகன் கணினி ஆசிரியராகச் சேர்ந்திருந்தான்.

முதலாம் ஆண்டு வகுப்பிற்கு ஆசிரியராக செல்வான். அதுவரை ஆசிரியர்கள் என்றாலே அலர்ஜி என்று சுற்றும் சுபாவுக்கு இவன் மேல் ஈர்ப்பு வந்தது தான் அதிசயம்.

நல்ல உயரமாக, விறைப்பாக முகத்தை வைத்து வருபவன் பல பெண்களின் க்ரஷ் லிஸ்டில் தான் இருந்தான்.  அவன் இவர்கள் வகுப்பிற்கு வர மாட்டானா என்று எத்தனை முறை ஏங்கியிருக்கிறாள், ஆனால் வாய்ப்பு தான் அமையாமலே இருந்தது.

இப்படி இருக்க இவள் கடைசி ஆண்டில் ப்ராஜெக்ட் செய்ய இவனை தான் இவர்கள் குழுவிற்கு உதவி ஆசிரியராக போட்டிருந்தனர்.

அதில் முகத்தில் பல்ப்பை போட்டு சுற்றி வந்தவள் ப்ராஜெக்ட் ஆரம்பித்த ஒரு வாரத்திலயே பல்ப் ஃப்யூஸ் போய் கடைசியில்  அணைந்தே போய் விட்டது.

ஜெகன் அத்தனை ஸ்டிரிக்ட்டாக இருந்தான். ஒரு சிறு தவறு இருந்தாளும் அமர வைத்து விடுவான், அவர்கள் சரி செய்து காட்டும் வரை. அதனால் ஜெகனை க்ரஷ் லிஸ்டோடு டெரர் லிஸ்டிலும் சேர்த்து வைத்து இருந்தாள் சுபா.

இப்படியே அவளின் ப்ராஜெக்ட் போய்க் கொண்டிருந்த நேரத்தில் வித்தியா ஒரு நாள் லேப்பில்,

“ சுபா அந்த படம் பாத்துட்டியா டி “ என்று கணினியை பார்த்த படி அந்த மாதம் ரிலீஸ் ஆகியிருந்த படத்தை பற்றி மிக பொறுமையாக கேட்க,

“இல்லடி அப்பா பைனல் இயர்னு போக கூடாதுன்னு சொல்லிட்டாரு டி “

“ என் கிட்ட சீடி இருக்கு சுபா “

“ என்னடி சொல்ற அப்போ சீடி தரியா நான் பாத்துட்டு தர்றேன் “

“இது என் அண்ணன் சீடி டி யாருக்கோ இன்னைக்கு கொடுக்கனும்னு சொல்லியிருந்தான். நீ வேணா இத காப்பி பண்ணிக்கோ டி “

“இப்போ எப்படி, எதுல காப்பி பண்ண சொல்ற “

“நீ யூஸ் பண்ற சிஸ்டத்துல பண்ணிக்கோ டி நாளைக்கு வந்து எம்டி சீடில காப்பி பண்ணிக்கோ “ இதை கேட்டு யோசித்தவள்

“இந்த ஐடியாவும் நல்லா தான் இருக்கு “ என்று  வித்தியா சொன்னது போல அவள் எப்போதும் உபயோகிக்கும் கணினியில் காப்பி செய்து வைத்துவிட்டு சென்று விட்டாள்.

அவளின் கெட்ட நேரம் அன்று அனைவரும் சென்றவுடன் ஜெகன் அவன் தீஸிஸ் வேலைக்காக சுபா அமர்ந்த கணினியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஃபைல் சேவ் செய்யும் போது அதை பார்த்து விட்டான்.

பார்த்தவனுக்கு அத்தனை கோபம் “ படிக்க கம்ப்யூட்டர் கொடுத்தா படத்தை ஏத்தி வச்சிருக்கத பாரேன் யார் பார்த்த வேலை இது “ என்று பல்லை கடித்தவன்

“நாளைக்கு இத டெலிட் பண்ண வந்து தான ஆகனும் கண்டு பிடிக்கிறேன் “ என்று சென்றவன் மறுநாள் யார் யார் அந்த கணினியில் அமர்கிறார்கள் என்று கவனித்த படியே இருக்க யாரும் சிக்க வில்லை.

கல்லூரியும் முடிந்து ப்ராஜெக்ட்க்காக மூன்றாம் வருட மாணவ மாணவிகளும் வந்து அமர்ந்து விட அப்போது தான் சுபாவும் வித்தியாவுடன் சிரித்த படியே வந்து அந்த கணினியில் அமர்ந்தாள்.

“என்ன இந்த பொண்ணா? இவளா இருக்குமோ ? சீ இருக்காது இந்த பொண்ணு நல்ல அமைதியான பொண்ணாச்சே “

என்று நெற்றியை நீவி யோசித்து கொண்டிருந்த அதே நேரம் சுபா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சிடியை எடுத்து சிஸ்டத்தில் போடவும், ஜெகன் அதை பார்த்து விட, அவன்  கோபம் எகிறி விட்டது.

“இவ நல்லா படிக்கிற பொண்ணு தான இவள…” என்று முறைத்த ஜெகன் அனைவரும் செல்லும் வரை காத்திருந்தவன் அனைவரும் சென்ற பிறகு வித்தியா சுபா அருகே சென்று வஞ்சனை இன்றி நன்றாக திட்டு மழையை பொழிந்து விட்டான் ஜெகன்.

அதில் சுபா முகம் சிவந்து அழுகைக்கு தயாராக நிற்க “ பண்றத எல்லாம் பண்ணிட்டு அழுறத பாரு கண்ண தொடை “ என்று மிரட்டியவன் முகம் பார்க்காது.

“சாரி…சார் “

“படிக்கிற பொண்ணு ன்ற பேர்ல இப்படி தான் தப்பு பண்ணிட்டு இருக்கியா இத்தனை நாளும் “

“இல்ல..சார் இது தான் ஃபர்ஸ்ட் டைம் திருப்பி இப்படி பண்ண மாட்டேன் “

“இதுக்கு அப்பறம் எதாவது கேஸ்ல மாட்டுன உன்ன எச்சோடி முன்னாடி நிக்க வச்சிருவேன் “

“ சாரி…. சார் “

“போ…. இன்னைக்கு பண்ண தப்புக்கு ப்ராஜெக்ட்ல மார்க் கண்டிப்பா டிடெக்ட் பண்ணுவேன் “

“சார் …” என்று அதிர்ந்து சுபா பார்க்க

“ என்ன பாக்குற போ “ என்று அவளை அனுப்பி வைத்து விட சுபா கண்களை துடைத்த படியே வெளியே சென்றாள்.

“ இந்த சார் ஓவரா பண்றாரு எனக்கு கோபமா வருது டி “ என்று வித்தியாவை கட்டிக்கொண்டு அழுதவளை சமாதானம் செய்து அழைத்து சென்றாள்.

அன்றிலிருந்து ஜெகனை பார்க்கும் போதெல்லாம் ஒரு வித கோபமாக தான் பார்ப்பாள் ஜெகன் திட்டியதை கூட போனால் போகுது என்று விட்டிருப்பாள் ஆனால் அவன் ப்ராஜெக்ட் மார்க்கில் கை வைப்பேன் என்று சொன்னது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் என்னம்மோ இவளை பயமுடுத்த தான் அப்படி சொன்னானே தவிற இவள் மாற்கில் எல்லாம் அவன் கைவைக்கவே இல்லை இது தெரியாத சுபா,

“ இவர ஏதாவது பண்ணனும் டி “ என்று வித்தியா விடம் புலம்பி கொண்டிருந்தாள்.

“ரிவெஞ்ச்சுன்னு எதாவது சம்பவத்துல மாட்டிக்காதடி பக்கி. பைனல் இயர் வந்தோமா படிச்சோமா போனோம்மான்னு என்ஜாய் பண்ணோமான்னு  இருப்போம் டி“ என்று எத்தனை சொல்லியும் அவள் காதில் அது விழாமல் போனது.

அன்று தான் பைனல் இயர் கடைசி எக்ஸாம் எழுதி அனைவரும் முடித்து விட்டு வெளியே வந்தனர்.

அப்போது சுபா வித்தியாவை மட்டும் தனியாக கூட்டிச்சென்று

“ நான் பைக் டயர பஞ்சர் பண்ணும் போது யாரும் வந்தா சொல்லுடி “ என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் பேசியவளை பயத்துடன் பார்த்த வித்தியா

“ ஏ… பக்கி என்னது பைக்கு , என்ன டயர், யார் டயர பஞ்சர் ஆக்க பிளான் போடுற டி “

“அதான்டி அந்த ஜெகன் வண்டிய “

“ரொம்ப தவறு சுபா காலேஜ் லாஸ்ட் டேட் ட லைஃப் லாஸ்ட் டேட்டா மாத்த பிளான் போடுற டி நீ “

“ப்ச் பயப்படாத பக்கி நல்லா பிளான் போட்டு தான் பண்ண போறேன். இப்போ ஸ்டாப் எல்லாம் பேப்பர் சப்மிட்னு பிசியா தான் இருப்பாங்க.

 அங்க ஸ்டாப் பார்க்கிங்லயும் யாரும் இருக்க மாட்டாங்க டி , நைஸ்சா போயி பஞ்சர் ஆக்கிட்டு ஓடி வந்துருவோம் “

“அய்யோ ஆத்தா என்ன கோத்துவிட்டுட்டு போய்டாத டி “

“நான் இருக்கேன்ல, நீ என்ட்ரன்ஸை பார்த்துக்கோ, மத்ததை நான் பார்த்துக்கிறேன்”

 என்று வித்தியாவை பார்க்கிங் வாயிலில் நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்ற சுபா, ஜெகன் பைக்கை தேடி அதை கண்டுபிடித்து அவள் பேகில் இருந்த காம்போஸை எடுத்து டயரை குத்த தொடங்கினாள்.

“ஒரு சின்ன தப்புக்கு மார்க் குறைப்பியா…உனக்கு வேணும், இன்னைக்கு பைக்கை தள்ளிட்டே இந்த வெயில்ல நீ போறதை நான் சந்தோஷமா பார்க்கணும்”

என்று முனங்கிய படி குத்தி முடித்தவள், அடுத்து பின் டயருக்கு போவோம் என்று எழுந்து பார்க்க, ஜெகன் கைகளை கட்டியபடி அவளை முறைத்துக்கொண்டு நின்றான்.

அதில் பயந்த சுபா “அய்யோ சார்” என்று காம்பஸை கீழே போட்டவள் வாசலை பார்க்க, அங்கே வித்தியா இல்லை. சுபாவின் பார்வையை பார்த்த ஜெகன்,

“யாரை தேடுற உன் நட்பையா? அவளை எப்போவோ துரத்தி விட்டுட்டேன்.”

“அடி பாவி, வித்தியா ஒரு சின்ன சிக்னல் கொடுத்திருந்தா கூட ஓடியிருப்பேனே டி” என்று மனதில் பேசியவள், முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,

“சார்……அது….சாரி சார்”

“எல்லாத்தையும் பிளான் போட்டு பண்ணிட்டு ஒரு சாரியில் தப்பிச்சிருவ.”

“சார், தெரியாம பண்ணிட்டேன் சார். இப்படி திருப்பி பண்ண மாட்டேன்.”

“நீ தெரிஞ்சி பண்ணியோ தெரியாம பண்ணியோ எனக்கு என் வண்டி ரிப்பேர் கான மணியை கொடுத்துட்டு போ. டுடே லாஸ்ட் எக்ஸாம்கிறதுனால இதோட விடுறேன்”

என்று கையை நீட்டியவனை பார்த்து விழித்தவள்,

“எவ்ளோ சார் ஆகும்” என்று அவள் பையை திறந்து பணத்தை எடுத்தபடி கேட்டாள்.

“நீ குத்துன சைஸ்ல டயரே போயிருக்கும்னு நினைக்கிறேன். டயரோட வீலை சேஞ்ச் பண்ணா ஒரு இரண்டாயிரம் ஆகும்.”

“என்னது இரண்டாயிரமா? அவ்ளோ காசுக்கு நான் எங்க போறது?”

“நீ எங்க போனா என்ன, என் மணியை கொடுத்துட்டு போ.”

“சார், என்கிட்ட அவ்ளோ காசு இல்ல சார். வெறும் ஐநூறு ரூபா தான் சார் இருக்கு.”

“ஐநூறு ரூபாவை வச்சி நான் என்ன பண்ண? பஞ்சர்  தான் அடிக்க முடியும்.”

“அது சார், இப்போதைக்கு இதை வாங்கிக்கோங்க. பேலன்ஸை நான் நாளைக்கு வந்து தந்துறேன்.”

“என்னது நாளைக்கா? நான் எப்படி உன்ன நம்புறது? லாஸ்ட் எக்ஸாம் வேற, தராம ஓடிட்டினா?”

“இரண்டாயிரத்துக்கு இப்படி கஞ்ச பாட்டு பாடுறாரே” என்று மனதில் பேசியவள்

“சார், அதெல்லாம் மறக்காம தந்துருவேன் சார்.”

“இல்ல இது சரிபட்டு வராது. உங்க அப்பாக்கு கால் பண்ணு, நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்” என்றதும் சுபா கண்கள் கலங்கி விட,

“அப்பாக்கு எல்லாம் கால் பண்ணாதீங்க சார், ப்ளீஸ்”

“இதை என் டயரை குத்தி கிழிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கணும். எனக்கு இப்போ என் வண்டிக்கான மணி வேணும்”

என்று அவளை முறைத்தபடி நின்றவனை என்ன செய்ய என்று புரியாமல் கையை பிசைந்தவள், தலையில் ஒரு யோசனை பிறக்கவும்.

பேகை கலட்டி விட்டு கீழே ஒரு காலை மடக்கி அமர, அதில் ஜெகன் பதறி

 “ ஏ… கால்ல எல்லாம் விழாத “ என்று பதறி பின்னோக்கி நகர்ந்தவனை புருவம் சுருங்க பார்த்த சுபா, அவள் காலில் போட்டிருந்த ஒற்றை கால் கொலுசை கலட்டி எழுந்து

“இந்த கொலுசை காசுக்கு பதிலா வச்சிக்கோங்க. நான் நாளைக்கு காசு கொடுத்துட்டு இதை வந்து வாங்கிக்கிறேன் “

என்று கொலுசை நீட்டிக்கொண்டு நின்றவளை இவன் அசையா பார்வை பார்த்துக்கொண்டு நிற்க, அவன் பார்வையில் நெளிந்த சுபா கொலுசை அந்த பைக்கில் வைத்து விட்டு

“நான் நாளைக்கு வந்து வாங்கிக்கறேன் சார் “ என்று வேகமாக பேகை எடுத்து அவள் ஓடி விட, அவள் ஓடுவதையே அசையாது பார்த்தவன்.

பின் திரும்பி பைக்கை பார்த்து விட்டு

“ சில் வண்டு என்னாம்மா டயர கிழிச்சிருக்கா “ என்றபடி வண்டியை சுற்றி பார்த்தவன், அந்த கொலுசை எடுத்து பார்த்து விட்டு

“எவ்ளோ கோபம் வருது இந்த பொண்ணுக்கு “ என்றபடி கொலுசை காதோரம் ஆட்டி பார்த்தவன், பின் அதை அவன் பேன்ட் பையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு பைக்கை தள்ளிய படி சென்றான்.

இங்கு கல்லூரியை விட்டு திரும்பி திரும்பி பார்த்தபடி ஓடி வந்த சுபா வித்தியா மீது இடித்து நிற்க அவளை பார்த்த சுபா

“ உன்ன வெளிய அந்த சார் வறத தான பாத்துக்க சொன்ன வித்தியா “ என்று சுபா கோபத்தில் கத்த

“ஏ.. கத்தாத டி. நீ என்ன நிக்க சொல்லிட்டு போன அடுத்த நிமிஷம் அந்த சார் வந்து நிக்கிறாரு டி. நான் என்ன பண்ண “ என்று உதட்டை பிதுங்கியவளை பார்க்க பாவமாக இருந்தாலும்

“போ டி…. ப்ச். உன்ன வச்சி பிளான் போட்டேன் பாரு என்ன சொல்லணும் “ என்று தலையை மறுப்பாக ஆட்ட

“என்ன ஆச்சு டி? சார் வண்டிய பாத்துட்டு என்ன சொன்னாரு? நீ மாட்டிகிட்டியா டி? “

“ம்ம்ம்…” என்று பாவமாக தலையாட்டிய படி உள்ளே நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பிவித்த படி நடந்து பஸ் ஸ்டாப் சென்றனர்.

“அடியே அப்போ கொலுசை கொடுத்துட்டு வந்திருக்கியா “

“ஆமா…டி. அப்பாவ கூப்பிடுவேன்னு மிரட்டுறாரு. அப்பாக்கு தெரிஞ்சா முடிஞ்சது சோலி. அதான் கொலுசை கொடுத்துட்டேன்.”

“இப்போ வீட்டுல ஒரு கால் கொலுசு எங்கன்னு கேட்டா என்னடி சொல்லுவ”

“அ… கோவலன் தூக்கிட்டு போய்ட்டாருன்னு சொல்ல வேண்டியது தான் “

“ஒ..ஓ…. நீ அப்படி சொல்ற “ என்று தலையை சுற்றி மூக்கை தொட்டவளை பார்த்து முறைத்த சுபா

“அது ஃப்ளோல சொன்னது வித்தியா. அந்த சார் இத்தன பண்ணது அப்பறம் அவர என்ன க்ரஸ் லிஸ்ட்ல வச்சிருப்பன்னு நினைக்குற? நெவர். அவர அதுல இருந்து தூக்கி பத்து நிமிஷம் ஆகுது டி “

“அவர நீ எந்த லிஸ்ட்ல இருந்து தூக்குவியோ இல்லையோ முதல்ல அவர் கிட்ட இருந்து அந்த கொலுசை தூக்கு “

என்று புலம்பியபடி வீடு சென்றனர்.

“யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி தலை வலின்னு போய் கவுந்திடனும்” என்று பதுங்கி பதுங்கி உள்ளே நுழைந்தவள் ரூமுக்குள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டு

“அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்மா, தலை வலிக்குது. என்ன டிஸ்டர்ப் பண்ணாத” என்று குரல் கொடுத்துவிட்டு தூங்க கண்களை மூடிக்கொண்டாள். அப்போது

“ஏ…. எருமை பெருச்சாளி, யாரை கேட்டு என் சுடிதாரை போட்டுட்டு போன” என்று கத்தியபடி உள்ளே வந்த ஜெயா, அவள் போர்வையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினாள்.

“உனக்கு போட வேற டிரஸ்ஸே இல்லையாடி? என் ட்ரெஸ் தான் கிடைச்சுதா ”

“ஏ… போர்வைய விடுடி, நாளைக்கு துவைச்சித் தர்றேன்.”

“அதெல்லாம் முடியாது. இப்போவே என் டிரஸ்ஸை கழட்டு, நானே தோச்சிக்கிறேன்.”

“இன்னைக்கு ஒரு நாள் போட்டுக்குறேன், விடுடி ஜெயா.”

“முடியாது, இப்போ டிரஸ்ஸை கழட்டுறியா? இல்ல உன்னோட டிரஸ்ஸை எடுத்து நான் போடவா?”

“அதெல்லாம் கழட்ட முடியாது, என்ன வேணுமோ பண்ணிக்கோடி” என்று போர்வையைப் பிடித்து இழுத்து போர்த்திக்கொண்டாள்.

உடனே ஜெயா பீரோ அருகே சென்று சுபாவுக்கு மிகவும் பிடித்த சிவப்பு நிற சல்வார் ஒன்றை எடுத்து போட போக, அதை பார்த்த சுபா உடனே எழுந்து

“ஜெயா…. அதை வச்சிடு. அது எனக்கு பிடிச்ச டிரஸ்ஸு டி”

“நீதானே என்ன வேணா பண்ணிக்கோன்னு சொன்ன. இந்த டிரஸ் இன்னைக்கு முழுக்க எனக்குத்தான்.”

“ஜெயா…” என்று கத்தியபடி அவள் கையில் இருந்த உடையை இவள் பிடித்து இழுக்க, அதை ஜெயா தடுக்க, என்று சத்தம் வெளியே அமிர்தம் வரை கேட்க, அவர் கையில் ஜல்லி கரண்டியுடன்

“கத்தாம இருக்க மாட்டிங்களாடி?” என்று உள்ளே வந்து இருவரையும் விலக்கி விட்டு

“ஏதோ டிரஸ்ஸே இல்லாத மாதிரி அடிச்சிக்கிறீங்களேடி. அக்கா தங்கச்சிங்க தானடி நீங்க. அங்க அங்க அக்கா தங்கச்சிங்க எவ்ளோ ஒத்துமையா இருக்காங்க”

என்று புலம்பியவர், கரண்டியால் ஆளுக்கு ஒரு அடி போடவும் இருவரும் வாயை மூடிக்கொண்டு சமாதானமாக எழுந்து செல்ல போக

போட்ட சண்டையில் சுபாவின் கொலுசு இல்லாத காலை அமிர்தம் பார்த்துவிட்டு…

“எங்கடி உன் கால்ல ஒரு கொலுச காணோம்?” என்று அமிர்தம் கேள்வியில் சுபா கைகளை பிசைந்தபடி நடுங்கி போய்

“அது ம்மா அது வந்து…”

“ஒழுங்கா சொல்லு கொலுசு எங்க தொலைச்சிட்டியாடி?” என்றதுக்கு ஆமாம் என்று சுபா தலையசைக்கவும், கரண்டியை கொண்டு அடி வெளுத்து விட, சுபா கண்களை கசக்கியபடி தேம்பி அழுகவே தொடங்கிவிட்டாள்.

அவள் அழுகையைப் பார்த்து மனம் இறங்கிய அமிர்தம் அவள் அருகே சென்று கன்னம் பற்றி

“சின்ன பொண்ணு மாதிரி இருக்காதடி, வளர்ந்துட்ட. நம்ம போட்டுருக்க நகைய நம்ம தான் பாத்துக்கணும் புரிஞ்சிக்கோ” என்று கண்களை துடைத்து விட்டு உணவு ஊட்டி அவள் சமாதானம் ஆன பிறகே சென்றார்.

கொலுசு தொலைந்து விட்டது என்று சொல்லிய சுபா

“இதுக்கு அப்புறம் அந்த கொலுசு எதுக்கு? இரண்டாயிரம் ரெடி பண்றது கஷ்டமும் கூட. சோ, அத அவரே வச்சிக்கட்டும்” என்று இவளும் அவனை செல்லவில்லை.

அதன் பின் இவளும் அந்த சம்பவத்தையே மறந்து விட்டாள். வீட்டில் அவள் மேல் படிப்பிற்காக போராடவே நேரம் சரியாக இருக்க மற்றதும் மறந்து தான் போனது.

அதன் பின் எப்படியோ போராடி கரஸில் படிக்கவும் சேர்ந்து விட்டாள். இப்படியே அடுத்த இரண்டு வருடம் படிப்பதில் கொண்டு சென்றவள்.

அதற்கு அடுத்த ஆண்டு அருகில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்திருந்தால். வீட்டிலும் இவளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இப்படி மூன்று வருடம் ஓடி போயிருக்க ஒரு நாள் இரவு அமிர்ந்தம்

“சுபா இரண்டு நாள்ல உன்னை பொண்ணு பாக்க வராங்க. பையன் பேரு ஜெகநாத், ஊரு மதுரை தான். ஆனா இங்க சென்னைல தான் வேலை. வீடு எல்லாம் இருக்கு நல்ல பையனாடி. அப்பறம் வேலை கூட உனக்கேத்த வேலை தான். ஏதோ பெரிய டீச்சர்னு சொன்னாங்கடி”

 என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட இங்கு சுபாவின் மனதில் “இவர் தான் இந்த வாட்டி மிஸ் ஆகாது” என்று ஏதோ சொல்ல நகத்தை கடித்தபடி பதட்டமாக

“ஜெகநாத் அ பேரே பயமா இருக்கே, கடவுளே என்ன பாக்க வரவரு அமைதியான சாஃப்ட் பீஸா இருக்கணும் கடவுளே” என்று கை கூப்பி வேண்டிக்கொண்டாள்.

அதேநேரம் இங்கு ஜெகநாத் என்கின்ற ஜெகன் கையில் சுபாவின் கொலுசை தான் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.