அத்தியாயம் 14

என்னில் பாதி நீ என்பதும் காதல் தான்…

நான் தான் நீ என்பதும் காதல் தான்….

மகா வை சபைக்கு நடுவே அமர வைத்திருக்க சித்திர காக்கட்டான் மற்றும் கனகமுறம் பூவை எடுத்து அழகாக அடுக்கி அதை மகா தலையில் வைத்து விட்டு தட்டில் இருந்த மஞ்சள் குங்குமத்தை தொட்டு அவள் நெற்றியில் கொஞ்சம், கன்னங்களில் கொஞ்சம் என்று வைத்து மலர்களை தூவி ஆசிர்வதித்தவர்.

ஒரு தட்டில் புடவை, ஸ்வீட், பழம், பூ என்று வைத்து மகாவின் கையில் கொடுத்து விட்டு வந்து அமர்ந்தார்.

சித்திரா அமர்ந்ததும் அவர் காதில் இன்பா “எல்லாம் நீயே பண்ணா நான் எதுவும் பண்ண வேணாமா த்தை “ என்று மெல்ல காதை கடித்தான்.

“உன்னோட வேலை… இன்னைக்கு பொண்ணு பாக்குறது மட்டும் தான் இன்பா, இப்போவே நல்லா பாத்துக்கோ. இதுக்கு அப்பறம் இனி கல்யாணத்துல தான் பாக்க முடியும்“

“வெய் ? ஏன்? பொண்ண காட்ட மாட்டாங்களா என்ன ?“

“அதெல்லாம் அப்படி தான் சம்பிரதாயம் டா, கொஞ்சம் அமைதியா இரு “ என்று அவனை அமைதியாக இருக்க சொல்லி விட்டு சித்திரா மற்றும் சாந்தா பேச தொடங்கினர்.

“ அப்பறம் என்னன்னு பேசலாமா “ என்று சாந்தா தொடங்க, சீனி

“நாங்க எங்க ஜோசியர் கிட்ட ஜாதகம் பாக்க கொடுத்தோம். அப்போவே அவர் தேதி குறிச்சி கொடுத்து இருந்தாரு. உங்களுக்கு சரின்னா அந்த தேதியிலேயே பாக்கலாம், இல்லனா உங்க பக்கத்து ஜோசியர் கிட்டயும் காட்டுங்க“

“ அத்தான், அதெல்லாம் வேணாம் நீங்க பாத்துட்டீங்களே அதுவே சரியா தான் இருக்கும் “

உடனே அமிர்தம் ஜோசியர் குறித்து கொடுத்த தேதியை எடுத்து வந்து காட்ட அதை பார்த்து கலந்து பேசி

“நாலு மாசம் கழிச்சி கல்யாணம், அதுக்கு ஒரு வாரம் முன்னாடி நிச்சயம் செஞ்சிடலாம் “ என்று சாந்தா சொல்ல

“பொண்ணுக்கு அந்த மூணு தேதியில் எது சரியா வரும்னு பாத்து சொல்லுங்க க்கா “

“ இருபது சரியா இருக்கும் சித்திரா “ என்று தேதி வரை முடிவு செய்து விட்டனர்.

“சித்தி மகா கிட்ட தான கேட்டு சொல்ல சொன்னாங்க , அனா இந்த அம்மா என்னன்னா அவுங்களே பாத்து சொல்லிட்டாங்க “ என்று குணா வடையை சாப்பிட்ட படி சுபா காதை கடிக்க

“எனக்கும் அதான் புரியல இவுங்க எல்லாம் போயிட்ட பிறகு அம்மா கிட்டயே கேப்போம் “ என்று இருவரும் சீரியஸாக போசிக்கொண்டு இருக்க

இங்கே மகேஷ் குணா சாப்பிடும் அழகை தான் ரசித்து கொண்டு இருந்தான்.

“ அந்த லீட்டில் கார்ல் க்கு அடுத்து இவளா ? தெரியலையே பேசாம அம்மா கிட்ட இப்போவே நமக்கும் சேர்த்து பேசிட சொல்லுவோமா “ என்ற யோசனையில் தீவிரமாக இவன் இருக்க

சபையில் இன்னும் பேசிக்கொண்டு தான் இருந்தனர் அப்போது

“ நான் பொண்ணு கூட கொஞ்சம் பேசணும் “ என்று இன்பாவின் குரலில் அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு அவனை பார்க்க

“என்ன எல்லாம் இப்படி பார்க்கிறாங்க, நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா என்ன” என்று மைண்டில் வாய்ஸ் ஓட்டினாலும் முகத்தில் எதுவும் காட்டாமல் சந்தானம் மற்றும் சீனியை பார்க்க.

“வெளிய தொட்டம் இருக்கு அதை போய் காட்டிட்டு வா மகா” என்று சந்தானம் அனுமதி தரவும் இன்பா எழுந்த வேகத்தில்.

“சீக்கிரம் காட்டிட்டு வாம்மா” என்று சந்தானம் அழுத்தி மகாவை எச்சரிக்கவும் தலையசைத்த படி மகா வீட்டின் பின்னே செல்ல இன்பாவும் சென்றான்.

“பேச தான கூப்பிட்டான் அதுக்கு ஏன் இப்படி கண்ணாலயே இவர் மிரட்டுறாரு” என்று முனங்கியபடி இன்பா வெளியே வந்தான்.

சிறு தோட்டம் என்று எண்ணி வந்தவன் இந்த பெரிய தோட்டத்தை  எதிர்பார்த்திருக்க வில்லை.

பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் அதுவும் இன்றி பெயர் தெரியாத பல செடிகள் கொடிகள் அங்கே இருக்க அதை பார்த்து வாயை பிளந்தவன்.

“கத்தரிக்காயா இது ? என்ன செடியில முளைச்சு இருக்கு? செடியிலயா இது முளைக்கும்?”

“இதை கேட்க தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்களா” என்று மகா முறைத்த முறைப்பில் உடனே செடிகள் இடம் இருந்து கண்ணை திருப்பி அவளை பார்த்து சிரித்தவன்.

“அது ஃபர்ஸ்ட் டைம் இந்த செடியை பார்த்தேனா அதான்” என்று சமாளித்து சிரித்தவன். என்ன பேச எப்படி பேச என்று முழித்து.

“இந்த சாரியில அழகா இருக்க மகா.” என்று மேலிருந்து கீழ் பாதம் வரை அவளை ரசித்து பாராட்ட

அதற்கு அவள் “தக்ஸ்…” என்று விட்டு எப்போதும் போல முகத்தை விறைப்பாக வைத்து, கைகளை கட்டியபடி நிற்க, அவளின் முகத்தை பார்த்த இன்பா.

“உனக்கு ஓகேவா மகா இந்த மேரேஜ்ல” என்று கேட்டுவிட்டான் தான், ஆனால் பயம் என்ன சொல்லி விடுவாளோ என்று அந்த பயத்தில் மீண்டும் அவனுக்கு வேர்த்து ஊத்த அதை கைக்குட்டையால் துடைத்தவன் மகாவை குனிந்து பார்த்தான்

“எனக்கு ஓகே தான் அதான் அங்கேயே சொன்னேனே.” அந்த வார்த்தை பின் தான் மூச்சே வந்தது இன்பாவுக்கு

“ம்ம்ம்…” என்று தடுமாறிய இன்பா

 “அட, நமக்கு தான் இந்த பயம் பதட்டம் எல்லாம் போல, அவ ஸ்டெடியா தான் நிக்கிறா” என்று மனதில் பேசியவன், அவன் தலையை கோதி பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டவன் கண்களை மூடி தயாராக.

இன்பா செய்வதெல்லாம் ரசித்து பார்த்தபடி அவள் இருக்க அவன் இவளை பார்த்து திரும்பியதும் பழையபடி முகத்தை வைத்தவள் என்ன என்பது போல பார்த்தாள்.

“எப்பவும் கடப்பாறைய முழுங்குன மாதிரியே இருந்த, நான் என்ன பண்ண. உன் நிலைமை ரொம்ப கஷ்டம் இன்பா “ என்று முனங்கி கொண்டு.

 பக்கெட்டில் இருந்த ஒரு மோதிர பெட்டியை எடுத்து அவள் பக்கம் திறந்து வைத்து.

“இது நீ இந்த ஆபீஸ்க்கு இன்டர்வியூவுக்கு வந்தியே அன்னைக்கு நான் போய் வாங்குனது உனக்காக.

அன்னைகே உன்கிட்ட கொடுத்து என் காதலை சொல்லணும்னு தான் ஆசைப்பட்டேன். பட் இன்னைக்கு தான் கொடுக்க முடிஞ்சிருக்கு” என்று அவள் அருகே நெருங்கி அந்த மோதிரத்தை கையில் எடுத்து நீட்டி.

“ஐ லவ் யூ தங்கமே…..” என்று சிரித்த முகமாக இன்பா நீட்ட.

அந்த மோதிரத்தையும் அவனையும் கண்களில் காதலை நிறைத்து பார்த்த மகா

 “ என்ன பாத்த நாள்ல இருந்து லவ் பன்றான? லவ் அட் பஸ்ட் சைட்டா? அதுவும் என்ன பாத்தா “ என்று மனதில் நினைத்தபடி அதிர்ந்து போய் காதலுடன் அவனை பார்க்க

அவள் கண்களில் காதலை பார்த்த அடுத்த நொடி அவள் கையை இன்பா பிடித்து மோதிரம் போட போக உடனே கையை இழுத்து கொண்ட மகாவின் கண்ணில் கள்ளம் குடியேற.

“ என்ன லவ் சொல்றீங்க, கல்யாணம் பண்ணத்தானே வந்தீங்க? இதுல எங்க இருந்து லவ் வந்துச்சு? இதெல்லாம் எனக்கும் சரி எங்க ஃபேமலி க்கும் சரி செட் ஆகாது.” என்று தலையை திருப்பி வந்த சிரிப்பை அடக்கிய படி மகா நிற்க

“என்ன தங்கமே சொல்ற, கல்யாணம் ஓகே தான உனக்கு, என்ன அக்செப்ட் பண்ணிட்ட தான?” என்று மீ்ண்டும் கண்ணில் கலவரத்துடன் பார்க்க

“யெஸ்…. பண்ணிட்டேன் தான். ஆனா மேரேஜ் தான ஓகே சொன்ன, லவ் பண்றேன்னு எப்போ சொன்ன? அண்ட் இந்த ரிங் உங்க லவ்வருக்கு சொந்தமானது.

நான் உங்க லவ்வர் இல்ல , ஃப்யூச்சர் வைஃப் தான். சோ… இதை பத்திரமா வச்சிக்கோங்க” என்று சொல்லிவிட்டு, இல்லை குழப்பிவிட்டு உள்ளே சென்றவளை

அ….என்று தான் முழித்து பார்த்தான், மகாவிடம் மாட்டிக்கொண்ட இன்பா.

மகாவின் பின்னாலேயே வந்த இன்பா குழம்பிய முகமாகவே வந்து அமர, அவன் முகம் பார்த்த சித்திரா

“என்னடா இப்படி வந்து உக்காந்துருக்க? மகா கூட பேசிட்டியா டா?”

“ம்ம்ம் பேசுனா” என்று குழப்பத்துடனே பதில் சொன்னவனை ஏற இறங்க பார்த்தவர், “என்னமோ போ” என்று திருமணம் பற்றி பேச தொடங்கி விட்டார்.

“என்னடா இன்பா, ஏன் ஒரு மாதிரி இருக்க? லிட்டில் கார்ல கூட்டிட்டு போய் எதாவது பண்ணிட்டு வந்துட்டியா என்ன? ஆனா, நீ அதுக்குலாம் சரிப்பட்டு வர மாட்டியே டா. “என்று யோசித்தபடி மகாவை பார்க்க

அவள் சிரித்த முகமாக இவனை பார்ப்பதும், திரும்பி அவளின் தங்கைகளை பார்ப்பதுமாக இருந்தால்.

“லிட்டில் கேர்ளை கூட்டிட்டு போய் கிஸ்ஸு எதாவது அடிச்சி வச்சிட்டியா? அப்போ கூட அவ தான அதுக்கு ஷாக் ஆகி இருக்கனும், நீ ஏன் ஷாக் ஆகி இருக்க?

ஒரு வேலை லிட்டில் கேர்ள் எதாவது பண்ணிட்டாங்களா என்ன…” என்று வாயில் கை வைத்தவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்த இன்பா

“ஒழுங்கா வாயை மூடிட்டு இரு மாமா.” என்று அதட்டவும்

“டேய் அசிங்கமா கூட திட்டிக்கோ டா, அனா மாமான்னு கூப்பிடாத டா. முறையே மாறுது”

என்று புலம்பியவனை அப்போது இன்பா கவனிக்காமல் விட்டு விட, மகேஷ் தப்பித்தான்.

இங்கு மகேஷின் சைட் பற்றி இன்பாவுக்கு மட்டும் தெரியனுமே இன்னைக்கே எல்லாத்தயும் முடிச்சி வச்சிருவான் இன்பா.

“கல்யாணத்துக்கு இன்னும் நாலு மாசம் தான் இருக்கு மாப்பிள்ளை. மகாவ வேலைய விட்டு நிப்பாட்டலாமா இல்ல அவ போகட்டுமா மாப்பிள்ளை? “

என்று திடீரென்று இன்பாவிடம் பேசிய சந்தானத்தை மகாவின் மூன்று தங்கைகளும் முறைத்து பார்த்து கொண்டிருந்தனர்.

“அக்கா எத்தனை கஷ்டப்பட்டு இந்த வேலைய வாங்கிருக்கா, அதை நிப்பாட்ட பாக்குறாரு இந்த பெரியப்பா” என்று ஜெயா வாய்க்குள் திட்டிய படி இருக்கும் போது

“வேலைக்கு மகா இனிமே போக வேணாம் மாமா. கல்யாணத்துக்கு அப்பறம் எதுக்கு வேலை பாக்கணும் எல்லாம் நான் பாத்துக்குறேன்” என்று சிரித்தவனை உக்ரமான முகத்துடன் நால்வரும் பார்க்க, அதை கண்டு கொள்ளாமல் இன்பா பேசிய படி இருந்தான்.

“என்ன மேம் சொல்றீங்க, அப்போ இன்பா சார் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலையா? அப்பறம் எப்படி நீங்க கலெக்டரா இப்போ? சார் கிட்ட போராடி தான் இந்த நிலைக்கு வந்தீங்களா?” என்று மூச்சு பிடிக்க கேள்வி கேட்டவளை சிரித்த முகத்துடன் பார்த்த மகா.

“எந்த ரெயிலை பிடிக்க இப்படி மூச்சு விடாம பேசுற ஜெனி?”

“மேம் ஒரே ஆர்வமா இருக்கு மேம். நீங்க ஷார்ட்டா சொல்லுங்களேன். ஏன் சார் கிட்ட இருந்து அந்த ரிங்க வாங்கல? அப்பறமா நீங்க வாங்கினீங்களா? ரிங் வாங்கும் போது உங்க லவ் சொன்னீங்களா? சார் ஏன் வொர்க் போக வேணாம் சொன்னாரு?” என்று கேள்வியை ஜெனிஷா அடுக்க

“ஏன் ஜெனி பொருமை ம்மா. இத்தன பாஸ்ட்டா பதில் சொல்ல என்னால முடியாதும்மா.”

“மேம் என்னால ஆர்வத்தலாம் கண்ட்ரோலே பண்ண முடியாது மேம். எப்படின்னா இந்த சஸ்பென்ஸ் மூவியெல்லாம் ஆர்வம் தாங்காம லாஸ்ட்ல இருந்து பாத்துட்டு வருவேன்னா பாருங்களேன்.

 அப்படி ஒரு ஆர்வக் கோளாறாகிய என்கிட்ட இத்தனை பொறுமையா நீங்க ரசிச்சு ருசிச்சி கதைய சொன்னா நான் என்ன செய்ய மேம்?”

என்று உதடு பிதுக்கி இருந்தவளை  தலையை சாய்த்து பார்த்த மகா சிரிக்க, ஸ்பீக்கரில்

 “டியர் பேசஞ்சர்ஸ் ப்ளீஸ் புட் யுவர் சீட் பெல்ட். வி ஆர் லேண்டிங் இன் டெல்லி இன் பீயூ  மினிட்ஸ் ” என்ற சத்தம் கேட்டு ஜெனிஷா…

“மேம்…..” என்று மகாவின் முகத்தை உதட்டை பிதுக்கி பார்க்க அதில் சத்தமாக சிரித்த மகா.

“பாவம் ஜெனி….நீ” என்று மகா மேலும் சிரிக்க ஜெனிஷா அவளை கெஞ்சி என்று அவர்கள் போடும் அரட்டையை பார்த்திருந்த மகாவின் பாதுகாவலன் ஒரு வித அதிர்ச்சியில் தான் பார்த்தான்.

மகாவின் பாதுகாவலனாக பாலாஜி பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் மகா இப்படி தெரியாத நபருடன் இத்தனை சிரிப்புடன் பேசி பார்த்தது இல்லை இவன்.

அளவாக சிரிப்புடன் பேசுபவள் வெகு நேரமும் பேச மாட்டாள். அப்படி இருக்க இவ்வளவு நேரம் ஒரு சிறு பெண்ணுடன் மகா பேசுவதை பார்த்து போனை எடுத்தவன் இங்கு நடந்ததை அனைத்தையும் மெசேஜாக அனுப்பி விட்டு விமானம் தரையிறங்க காத்திருந்தான்.

இங்கு விமானத்தை விட்டு மகா உடன் ஜெனி கெஞ்சிய படி கீழே இறங்க அவர்கள் பின்னாலேயே பாலாஜியும் இறங்கினான்.

அதற்கு அடுத்த நிமிடம் அவனுக்கு கால் வர அதை எடுத்து பேசிய படி பின்னே சென்றவன் ஜெனிஷாவை பற்றி தான் அனைத்தையும் சொல்லிக்கொண்டு வந்தான்.

“சார் ஃபேட்டே கூட அனுப்பி வச்சிருக்கேன் சார். இப்போ நான் என்ன பண்ணட்டும் சார்?”

அந்த கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் அவனின் முறட்டு தனமான குரலில்

“அவள அம்மா பாத்துப்பாங்க. நீ அவங்க என்ன பண்றாங்களோ அதை உங்க லோகேஷனோட எனக்கு அப்டேட் பண்ணு” என்று போனை வைத்து விட்டான்.

இங்கு ஜெனிஷா விமான நிலைய வாசலில் மகாவின் கையை பற்றிய படி தொங்கி போன முகத்துடன் நிற்க அவளின் முகத்தை பார்த்து சிரித்த மகா.

“என்ன ஜெனிம்மா இப்போ… வெய் சாட் ஸ்மைல் ப்ளீஸ்.”

“அட போங்க மேம். எங்க இருந்து ஸ்மைல் பண்ண. உங்க ஸ்டோரியும் பாதில நிக்குது நீங்களும் பாதில போறீங்க” என்று சொன்னவளின் வாயில் பட் என்று அடி வைத்த மகா.

“இப்படி பேசாத ஜெனி…” என்று கோபமாக அதட்டவும் ஜெனிஷா முகம் சிவந்து அழுவதற்கு தயாராக, அதில் சமாதானம் ஆன மகா.

“இப்படி பாதில போறீங்கன்னுலாம் பேச கூடாது சரியா ஜெனி?” என்று கையை நீட்டி மிரட்டிய மகாவை பாவமாக பார்த்த ஜெனி.

“ம்ம்ம்….” என்று தலையாட்டவும் மகாவிற்கு கார் வரவும் சரியாக இருக்க அதில் ஜெனிஷாவுக்கு அழுகையே வந்து விட்டது.

அவளின் சிவந்த முகத்தைப் பார்த்து அவள் தலையில் செல்லமாகத் தட்டிய மகா,

 “முகத்த பாறேன், தக்காளி மாதிரி சிவந்து போயிருக்கு. ஏன் இப்போ அழுகுற ஜெனி?”

அதற்கு கண்களைத் துடைத்த ஜெனிஷா, “மிஸ் யூ மேம்” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்லவும் மகா மீண்டும் தலையில் தட்டி

“இப்போ நீ எங்க போகப் போற?”

“ப்ளூ ஸ்டார் ஹோட்டலுக்கு மேம்.”

“நானும் அங்கதான் போறேன் வா..” என்று அழைக்கவும் கண்கள் விரிய ஜெனிஷா பார்த்தாள்.

“மேம் நெஜமாவா? நான் உங்க கூட கார்லயா?” என்று ஷாக் ஆகி நின்றாள்.

“நீதானே என் லவ் ஸ்டோரி முழுசா கேட்ட? அதை சொல்ல வேணாமா?” என்று சிரித்து நின்ற மகாவை.

“மேம்…” என்று பாலாஜி அழைக்கவும் என்ன என்று மகா திரும்பிப் பார்க்க,

“அது சார் கிட்ட பெர்மிஷன் கேட்டுக்கவா மேம்?” என்று தயங்கியபடி அவன் கேட்டு நின்றான்.

“ஜஸ்ட் இன்பார்ம் பண்ணு அது போதும். வேற எதாவது அவன் சொன்னா எனக்கு கால் பண்ண சொல்லு, நான் பேசிக்கிறேன்.”

என்று பேசி முடித்து காரில் ஜெனிஷாவுடன் ஏறி அமர்ந்து கொள்ள, வேறு வழி இன்றி பாலாஜியும் முன்புறம் ஏறி அமர்ந்து கொண்டான்.