Epi -3

“விஷ்வ விகாஸ்” சர்வதேசப் பள்ளியின் பிரம்மாண்டமான நுழைவாயில், சத்யமூர்த்தியின் வருகைக்காகக் காத்திருந்தது போலத் திறந்து கொண்டது.

காரில் இருந்து இறங்கிய சத்யமூர்த்தியின் முகம், ஒரு போர்க்களத்தை வென்றுவிட்ட தளபதியின் தோரணையில் இருந்தது. “பெஸ்ட் டீச்சர்ஸ், பெஸ்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்… இதையெல்லாம் தாண்டி அந்த டாக்டர் சொன்ன போல தமிழ் மீடியம் ஸ்கூலில் என் பையன் எதுக்கு படிக்கணும்? அவனுக்குனு சொந்தமா ஸ்கூல் இருக்கும் போது?” என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

சத்யமூர்த்தி மனநிலையில் பணத்தாலும் அதிகாரத்தாலும் எதையும் சாதிக்க முடியும் என்ற மிதப்பில் இருக்கிறான். பார்ப்போம்! பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து ஒருவரை கட்டுப்படுத்த, கட்டிப்போட மட்டுமே முடியும்; அன்பை விலைக்கு வாங்க முடியாது.

ஆனால், அவனது கைக்குள்ளே இருந்த விவானின் பிடிவாதம், கார் கதவு திறந்த நொடியிலிருந்தே ஆரம்பமாகியிருந்தது. மொபைல் போன் பறிக்கப்பட்ட கோபத்தில் இருந்த அவனது சின்னஞ்சிறு முகம், ஆத்திரத்தில் சிவந்திருந்தது.

பள்ளியின் முதல்வர் (Principal) மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் குழுவினர் வாசலிலேயே சத்யமூர்த்தியை மலர்ச்செண்டுகளுடன் வரவேற்க நின்றிருந்தனர்.

“வெல்கம் சார்! விவான் குட்டியை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க எந்தக் கவலையும் இல்லாம ஆபீஸ் ஒர்க்கைப் பார்க்கலாம்,” என்றார் முதல்வர் பவ்யமாக.

சத்யமூர்த்தி பெருமிதத்தோடு விவானை நோக்கி, “விவான், கோ வித் மேம்…” என்று கையை நீட்டினான்.

அவ்வளவுதான்! விவான் தன் கையில் இருந்த பொம்மையை ஓங்கித் தரையில் அடித்தான். ‘டணங்’ என்ற சத்தத்துடன் அந்தப் பொம்மை சிதறியது. சுற்றியிருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியில் பின்வாங்கினர். விவான் கத்தத் தொடங்கினான். அது பேச்சல்ல; ஒருவிதமான மூர்க்கத்தனமான அலறல்.

“விவான்! ஸ்டாப் இட்!” என்று சத்யமூர்த்தி அதட்ட, ஆனால், விவான் அடங்குவதாக இல்லை. அருகில் நின்ற மாண்டிசோரி பெண் ஆசிரியரின் கையை எட்டிப் பிடித்து, நகங்களால் பிறாண்டினான். அந்த ஆசிரியை வலியால் “அம்மா!” என்று கத்தியபடி கையை இழுத்துக் கொண்டார். கையில் ரத்தம் கசிந்தது.

“சாரி மேம், சாரி…” என்று முதல்வர் பதற, விவானோ சுற்றியிருந்த மேசைகளின் மேல் இருந்த ஃபைல்கள், பூந்தொட்டிகள் என அனைத்தையும் கைகளால் தள்ளிவிட்டு உடைக்கத் தொடங்கினான். அவனது பிஞ்சு உடம்பிற்குள் இத்தனை வெறித்தனமான கோபமா என்று பார்க்கும் அனைவரும் மிரண்டனர்.

“விவான்! என் பேச்சைக்கேள்!” சத்யமூர்த்தி அவனது கையைப் பலமாகப் பற்றினான். விவான் சத்யமூர்த்தியின் கையைத் உதறிவிட்டு, தரையில் படுத்துக்கொண்டு கால்களால் உதைக்கத் தொடங்கினான். அவனது மூச்சு பலமாக வாங்கியது. வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தது. அவன் கண்கள் வெறித்துப் பார்த்தன.

ஆபீஸில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒற்றைப் பார்வையில் நடுங்க வைக்கும் சத்யமூர்த்தி, அங்கே தன் சொந்த தம்பியின் மகனைச் சமாளிக்க முடியாமல் வியர்த்து விறுவிறுத்துப் போய் நின்றான். அவனது ‘அதிகாரம்’ அந்த மூன்று வயதுக் குழந்தையின் பிடிவாதத்திற்கு முன்னால் மண்டியிட்டு நின்றது.

“சார்… விவானுக்கு ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ (Hyper activity) ரொம்ப அதிகமா இருக்கு. மத்த பசங்ககூட இவனை இப்போதைக்கு உட்கார வைக்க முடியாது. ரொம்ப மூர்க்கமா நடந்துக்கிறான். ப்ளீஸ் சார், இவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுதான் நல்லது,” என்று முதல்வர் தயங்கியபடியே, ஆனால் உறுதியாகக் கூறிவிட்டார்.

சத்யமூர்த்தியின் ஒட்டுமொத்த அதிகாரமும் திமிரும், அதனுடன் சேர்ந்த ஈகோவும் அந்தப் பள்ளியின் வராந்தாவிலேயே சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவனுக்குத் தன் மீது கோபம் வந்தது; அதை விட அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகள் உண்மையாகிவிட்டதே என்ற ஆத்திரம் தலைக்கேறியது.

வேறு வழியின்றி, கத்திக் கொண்டிருந்த விவானைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு காரில் ஏறினான். அப்படியே ஒருவாரம் சென்றது.

கலாவதி புலம்ப ஆரம்பித்து விட்டார். “இதுக்கெல்லாம் காரணம் நான் தான். இந்த வீட்டுல எனக்கு அடுத்து என் பேரனையும், கிடையில் கிடக்குற என்னோட பையனையும் யார் பார்த்துக்குவா? இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்தால் பரவாயில்லை. என் பேரனை அவள் நல்லா பார்த்திருந்திருப்பா. கண்டிப்பா விவான் இந்நேரம் என்னை பாட்டின்னு ஆசையா கூப்பிட்டு இருந்திருப்பான். இந்த வீட்டு மகாலட்சுமியாக ஒரு பொண்ணு…” என அவர் பேசிக் கொண்டே செல்ல…

“அம்மா!” என அந்த பங்களாவே அதிரும் வண்ணம் கத்தியிருந்தான்.

கலாவதி கண்களில் நீர் கோர்க்க ஏறிட்டுப் பார்த்தார். சத்யமூர்த்தி அத்தோடு விட்டுவிடவில்லை. “போதும் நிறுத்துங்க! அவனை எப்படிச் சரி கட்டணும்னு எனக்குத் தெரியும். விவான் பேசுவான். நான் பேச வைப்பேன்!” என்றவன் வேகமாக அவனது அறைக்கு நடந்தான். “மகாலட்சுமியாம் மகாலட்சுமி…” என அவன் முணுமுணுத்துக்கொண்டே செல்வது அன்னையின் காதுகளில் விழுந்து விட்டது.

அதற்கும் மேல் கலாவதி அவனிடம் பேச்சையே நிறுத்தி விட்டிருந்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு…

கார் மீண்டும் அதே மருத்துவமனையை நோக்கிப் பறந்தது. மருத்துவமனையில் விவானுடன் அமர்ந்திருந்தான் சத்யமூர்த்தி. ஆனால், அவனது கண்களுக்கு முன்னால், தன் மகன் பேச வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருந்தது. வேறு வழி இல்லை.

காரில் வரும் வழிநெடுகிலும் விவான் காரின் சீட்டுகளைக் கடித்தும், கண்ணாடிகளைத் தட்டியும் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டிக் கொண்டே வந்தான். சத்யமூர்த்திக்குத் தலை வெடிப்பது போல இருந்தது. கார்ப்பரேட் உலகில் எத்தனையோ சவால்களைச் சந்தித்தவனுக்கு, இந்தப் பிஞ்சு மனதின் கோபம் ஒரு புரியாத புதிராக இருந்தது. மருத்துவமனைக்குள் நுழையும் போது சத்யமூர்த்தியின் முகத்தில் இருந்த அந்தப் பழைய திமிர் இல்லை; மாறாக, ஒரு தோற்றுப்போன மனிதனின் ஏமாற்றமும், குரோதமும் கலந்திருந்தது.

நேராகக் குழந்தைகள் நல மருத்துவரின் அறைக்குள் விவானுடன் நுழைந்தான். அங்கே மருத்துவர் அமைதியாக அமர்ந்திருந்தார். சத்யமூர்த்தியின் கோலத்தையும், விவானின் அலறலையும் பார்த்தவருக்கு எல்லாமே புரிந்துவிட்டது.

“உட்காருங்க மிஸ்டர் சத்யமூர்த்தி,” என்றார் மருத்துவர் நிதானமாக.

சத்யமூர்த்தி விவானை ஒரு நாற்காலியில் அமர வைக்க முயல, விவான் அந்த நாற்காலியை எட்டி உதைத்துவிட்டு சத்யமூர்த்தியின் காலை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.

மருத்துவர் பொறுமையாக, “சொல்லுங்க சார்?” என கேட்க… சத்யமூர்த்தி கொஞ்சம் தடுமாறியபடி, “Speech training பண்ண teacher கிடைப்பாங்களா?” என கேட்டான்.

மருத்துவர் சாக்லேட் ஒன்றை எடுத்து விவானிடம் கொடுக்க, “ஏற்கனவே சொத்தை பல் இருக்கு, சாக்லேட் கொடுக்காதீங்க. அவன் சொல் பேச்சு சுத்தமா கேட்கிறது இல்லை…” என தடுக்க வந்தான் சத்யா.

மருத்துவர் புன்னகை முகமாக, “விவானுக்குத் தேவை சிலபஸ் (Syllabus) இல்லை; தெரபி (Therapy). நீங்க உங்க ஈகோவைத் தூக்கி வச்சுட்டு இவ்வளவு தூரம் வந்த போதே நீங்க எவ்ளோ suffer ஆகி இருக்கீங்கன்னு தெரியுது. அவனோட மூளை ‘டிஜிட்டல் அடிக்‌ஷன்’ (Digital Addiction) மற்றும் தனிமையாலப் பாதிக்கப்பட்டு இருக்கு. அவன் காட்டுற இந்த மூர்க்கத்தனம்… அவனோட வித்ராயல் சிம்டம்ஸ் (Withdrawal symptoms)!” என அவர் விளக்கிக் கொண்டிருக்க…

“ப்ச்! எனக்கு இந்த லெக்சர் (Lecture) எல்லாம் தேவையில்லை டாக்டர்! இப்போ இவன் பேசணும், நார்மலாகணும். அதுக்கு என்ன வழி? நீங்க சொன்ன அந்த ஸ்பீச் தெரபிஸ்ட் யாரு? அவங்களை என் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க. எவ்வளவு பணம் வேணாலும் தரேன்!” என்றான் சத்யமூர்த்தி, தன் பணத் திமிரை மீண்டும் கவசமாகப் பயன்படுத்தியபடி.

மருத்துவர் லேசாகப் புன்னகைத்தபடி, “பணம் இருக்கிற ஓவர் confidence-ல பேசுறீங்களே சார், உங்க ஸ்கூல விட்டுட்டு இங்கே எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியுது தானே?”

“டாக்டர்!” என சத்யமூர்த்தி எகிறிக்கொண்டு வர…

“ஃபர்ஸ்ட் நீங்களே therapist-கிட்ட போகணும்,” என்று மருத்துவர் பட்டென சொல்லி விட, சத்யமூர்த்தியின் வாய் மூடிக் கொண்டது.

“சரி, நான் நேரடியாக விஷயத்திற்கு வரேன். அந்தத் தெரபிஸ்ட் பேர் ‘சாவித்ரி’. அவங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சர் ஆக ஒர்க் பண்ணவங்க. நல்ல knowledge, நல்ல கனிவு, திறமைசாலியும்கூட. அவங்க விவானை ஹேண்டில் பண்ணுவாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.”

“என்ன கண்டிஷன்? சம்பளம் டபுளா வேணுமா? இல்ல கார், பங்களா வசதி வேணுமா?” என்று சத்யமூர்த்தி இடைமறித்தான்.

“இல்லை!” என மருத்துவரின் குரல் அசைக்க முடியாத பாறையைப் போல ஒலித்தது. “அவங்க உங்க வீட்டுக்கு வந்து தங்கும்போது, நீங்க அவங்க விஷயத்துல தலையிடக் கூடாது. விவானை அவங்க எப்படிப் பார்த்துக்கணும், என்ன சொல்லித் தரணும்ங்கிறதை அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. முக்கியமா, உங்க வீட்டுக்குள்ள உங்க ‘அதிகாரமும்’, ‘ஆணவமும்’ செல்லாது. விவானோட நல்லதுக்காக அவங்க சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகணும்,” என்று மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டார்.

சத்யமூர்த்திக்குத் தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. யாரோ ஒரு தெரியாத பெண்ணின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் தன் மகன் இயங்க வேண்டுமா? இதை சத்யாவின் ஆண் ஆதிக்க மனநிலை அதை ஏற்க மறுத்தது. ஆனால், தன் காலைக் கட்டிக்கொண்டு, வெறித்த பார்வையோடு தரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவானைப் பார்த்தபோது, அவனது அண்ணன் பாசம் மற்றும் குற்றவுணர்வு அவனது ஈகோவைத் தட்டிப் பறித்தது.

“சரி… அவங்களை நாளைக்கே என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. ஆனா, என் பையன்கிட்ட எந்த முன்னேற்றமும் இல்லைன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன்,” என்று எச்சரிக்கை தொனியில் கூறிவிட்டு, விவானைத் தூக்கிக்கொண்டு வெளியேறினான்.

சத்யமூர்த்தி வெளியேறிய சில நிமிடங்களில், சாவித்ரி மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள். அவளது கண்கள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. அவளது இதயம் பலமாக அடித்துக் கொண்டது.

“டாக்டர்… என்னாச்சு? அவர் சம்மதிச்சாரா?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

மருத்துவர் சாவித்ரியைப் பார்த்துப் புன்னகைத்து, “சம்மதிச்சுட்டான் சாவித்ரி! அவனோட திமிரும் ஈகோவும் அவனோட சொந்த ஸ்கூல்லயே உடைஞ்சு போச்சு. நாளைல இருந்து நீ விஷ்வ பவனத்துக்குப் போகலாம். விவானோட கேர் டேக்கரா, ஸ்பீச் தெரபிஸ்ட்டா நீ அங்கே காலடி எடுத்து வைக்கப்போற,” என்றார்.

சாவித்ரியின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. அது சோகத்தின் கண்ணீர் அல்ல; நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின் கிடைத்த வெற்றியின் கண்ணீர்!

“தேங்க்ஸ் டாக்டர்… ரொம்ப தேங்க்ஸ். என் விவானை நான் அள்ளி அணைக்கப்போற அந்த நொடிக்காகத்தான் இத்தனை நாளா நான்…” என்று குரல் தழுதழுக்க கண்ணீர் வடித்தாள்.

“கவலைப்படாதேம்மா!! இனி எல்லாமே நல்லதா நடக்கும்,” என மருத்துவர் கூற, கண்களைத் துடைத்துக் கொண்ட சாவித்ரி, “கண்டிப்பா டாக்டர், விவானை மீட்டெடுக்க நான் எந்த எல்லைக்கும் போவேன். அப்படியே சீக்கிரமாக விஷ்வா சரியாக வேணும்; அவர் கோமாவில் இருந்து எழுந்துக்க வேணும், அவருக்கு நினைவு திரும்ப வேணும்,” என கூறினாள்.

விஷ்வ பவனத்தின் கோட்டைக்குள் சாவித்ரி நுழையும் போது, சத்யமூர்த்தியின் அதிகாரக் கவசம் என்னவாகும்?

**- தொடரும்.**