அத்தியாயம் 9:

“என்ன தீரன் சொல்றிங்க?” என்ற ராஜ ராஜனுக்கு தீரன் சொல்லும் விஷயத்தில் உடன்பாடில்லை.

“அங்கிள் பிளீஸ்! உங்க பொண்ணோட சேப்டிக்கு நான் பொறுப்பு. என்னை நம்பி அனுப்பி வைங்க. நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்திடுவேன்” என்று பொறுமையாய் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சியில் யோசனைக்கு சென்றவர்,”விஷயம் என்னன்னு சொல்லாம திடீர்னு கோயம்புத்தூர் கூட்டிட்டு போறேன்னு சொல்றிங்க. இதை நான் எப்படி எடுத்துக்கிறது?” என்றார்.

“ஒரு கேஸ்ல மொழியோட ஹெல்ப் தேவைப்படுது அங்கிள்” என்றான்.

“அது தான் தீரன் எனக்கும் புரியலை. கேஸ்ல ஹெல்ப் பண்ற அளவுக்குன்னா? எந்த மாதிரி ? என்ன கேஸ்? இதுக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்?” என்றார் புரியாமல்.

“சாரி அங்கிள்..! அதை இப்போதைக்கு சொல்ல முடியாது.பட் கூடிய சீக்கிரம் நீங்களே தெரிஞ்சுப்பிங்க” என்றான் தீரன்.

“அமைச்சர் ராஜராஜனா.. இது என்ன கேஸ்னு நான் தெரிஞ்சுக்கலாமே தீரன்” என்றவரிடத்தில் மறுக்க முடியாதவனாய் விஷயத்தை சுருக்கமாய் சொல்லி முடித்திருந்தான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இருக்கையில் இருந்து எழுந்து விட்டார் ராஜன்.

“நீங்க என்ன சொல்றிங்க தீரன்? என்னால நம்பவே முடியலை” என்றவர்,

“ஆனா மொழி எப்படி? அவளுக்கு என்ன தெரியும்?” என்றவருக்கு படபடப்பாய் வந்தது.

“அங்கிள் ரிலாக்ஸ்..!” என்றவருக்கு அவரைப் பார்த்து பாவமாய் கூட இருந்தது. வெளியே கரடு முரடாய் தெரிபவர்கள்  சட்டென்று உணர்ச்சிவசப் படக் கூடிய ஆட்களாக இருப்பர். ராஜனும் அப்படித்தான் இருந்தார்.

அவரின் நிலை அவனுக்கும் புரிந்தது. அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

“அட்லீஸ்ட் இப்பவாவது தெரிய வந்துச்சேன்னு நினைச்சுக்குவோம் அங்கிள்” என்றவனிடத்திலும் ஆழ்ந்த அமைதி.

“தீரன் கல்யாணத்தை முடிச்சுட்டு” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தடுத்திருந்தான் தீரன்.

“அங்கிள் பிளீஸ்! இனி அந்த பேச்சு வேண்டாம். விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி மேரேஜ் பண்றதுல எனக்கு விருப்பமில்லை. இனி இதைப் பத்தி பேச வேண்டாம். அவங்களுக்கு கொஞ்ச நாள் டைம் குடுங்க. அவங்க லைப்க்கு என்ன வேணும்னு அவங்க டிசைட் பண்ணட்டும். அவங்களோட டிசிஷன் ஓகேவான்னு மட்டும் பாருங்க. இன்னைக்கு நைட் அவங்க என்கூட வர்ற மாதிரி இருக்கும்” என்றான்.

“எதுல போறீங்க தீரன்?”

“கார் தான் பெஸ்ட் அங்கிள். பிளைட்னா மீடியாக்கு தெரிய வாய்ப்பிருக்கு” என்றான்.

“வீட்ல எல்லாரும் கேட்பாங்க தீரன். என்ன பதில் சொல்றதுன்னு தான் தெரியலை” என்ற ராஜனுக்கு அனைத்தும் குழம்பிய நிலை.

தீரன் தான் மாப்பிள்ளை என்று உறுதியாய் எண்ணிக் கொண்டிருந்தவருக்கு, அவனின் தீர்க்கமான முடிவு மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அவனை விடவும் மனமில்லை. அவனின் இந்த முடிவைக் கேட்ட பிறகு அவனுடன் அனுப்பவும் யோசனை. அதை அவன் தெளிவாக புரிந்து கொண்டான். நிச்சயத்திற்கு முன்னால் அவளை பார்த்து பேசுவதற்கே தடை சொல்லியவர் ஆயிற்றே.

“நீங்க என்ன யோசிக்கிறிங்கன்னு எனக்கு புரியுது. ஏசிபி தீரன் கூட அனுப்புறதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்கத் தேவையில்லை. அப்பறம் இந்த காலத்துலயும் இவ்வளவு கட்டுப் பெட்டி தேவையில்லை அங்கிள். எனக்குத் தெரிஞ்சு நீங்க மொழிகிட்ட நார்மல் அப்பாவா இருந்திருந்தாலே எந்த பிரச்சனையும் வந்திருக்காது. உங்க வீட்ல கேட்டா மாப்பிள்ளை கூட அனுப்பி வைக்கிறேன்னு சொல்லுங்க” என்றான் பட்டென்று.

“என்ன சொல்றிங்க தீரன்? அப்போ நிச்சயத்தை ஏற்பாடு பண்ணிடலாமா?” என்றார் மகிழ்ச்சியுடன்.

“நான் சொல்றதை முழுசா கேளுங்க அங்கிள். இப்போதைக்கு வேற வழியில்லை. நீங்க அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. பட், முடிவு உங்க பொண்ணு தான் எடுக்கணும். எந்த விதத்துலையும் நீங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவங்களே வந்து என்கிட்ட சம்மதம்னு சொல்லணும். அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது பார்த்துக்கலாம்” என்றவன் ஆயாசமாய் நிமிர்ந்தான்.

சிட்டியின் பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அசைவத்திற்கு பெயர் போன உணவகம் அது. கடையின் அளவு சிறியதாய் இருந்தாலும் உணவின் தரமும் ருசியும் தாறுமாறாய் இருக்கும்.

நரேந்திரனும் வானதியும் முதலில் உள்ளே சென்று விட,  காரை பார்க் செய்துவிட்டு பின்னால் சென்றான் அதிதீரன். அவன் செல்லும் போது தான் அந்த நண்பர்கள் பட்டாளமும் உள்ளே நுழைந்தது. அதில் ஒருத்தி மட்டும் துப்பட்டாவை தலையை சுற்றி, பாதி முகம் மறைத்தார் போல் சென்றாள்.

“அதி இங்க” என்று நரேந்திரன் குரல் கொடுக்க, அங்கே சென்று அமர்ந்தான் தீரன். அந்த நண்பர்கள் பட்டாளமும் இவர்களுக்கு பக்கத்து டேபிளில் அமர்ந்தனர்.

“அம்மா இவ்வளவு கூட்டமா இருக்கு. இங்கயே தான் சாப்பிடனுமா?” என்றான் சிடுசிடுப்புடன்.

“சரி விடு அதி, ஒரு நாளைக்காவது நல்ல பிரியாணி சாப்பிடுவோமே” என்ற நரேந்திரனை வானதி முறைக்க, இருவரையும் பார்த்து சிரித்தபடி ஆர்டர் கொடுத்திருந்தான் அதி தீரன்.

பக்கத்து டேபிளில் ஒரே சத்தமாக இருக்க திரும்பிப் பார்த்தான் தீரன். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததே அப்படி ஒரு சத்தமாய் இருந்தது.

அங்கிருந்த சப்ளையரை அழைத்தவன்,

“அவங்களை கொஞ்சம் அமைதியா பேசச் சொல்லுங்க. எல்லாருக்கும் டிஸ்டபர்ன்ஸா இருக்கா இல்லையா?” என்றான். அவரும் அவர்களிடம் சென்று சொல்ல,

“எவன் அவன் அப்படி சொன்னது? நாங்க அப்படித்தான் பேசுவோம், கத்துவோம். ஏன் ஆடக் கூட செய்வோம்” என்று வயது முறுக்கில் எகத்தாளமாய் வந்தது பதில்.

“வாயை மூடுடா..! நானும் வந்தப்ப இருந்து சொல்றேன், அமைதியா பேசுன்னு. மத்தவங்களை டிஸ்டர்ப் பண்றதுக்கு நமக்கு எந்த ரைட்சும் இல்லை. வால்யூமை கம்மி பண்ணு” என்ற குரல் அமைதியாய் அழுத்தமாய் ஒலித்தது. அதே சமயம் இனிமையாகவும்.

அந்த குரலில் கவரப்பட்ட தீரன் திரும்பிப் பார்க்க, முகத்தை பாதி மறைத்திருந்த பெண் தான் பேசிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் எதுக்கு இந்த முக மூடி. இங்க யாரும் உன்னைப் பார்க்க மாட்டாங்க. அதானால துப்பட்டாவை எடு மொழி” என்ற நந்திதாவின் குரலில் அவள் மெதுவாய் விலக்க, அவளைப் பார்ப்பதற்காகவே கை கழுவும் இடம் நோக்கி சென்றான் தீரன். அங்கிருந்து இவளைப் பார்த்தவனுக்கு ஏனோ பார்த்த நிமிடத்திலேயே அவளைப் பிடித்துப் போனது. மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்களுக்கு, அவனை கவனிக்கவெல்லாம் நேரமில்லை.

திரும்பிப் பார்க்க உந்திய மனதை அடக்கியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் தீரன்.

“என்ன சொல்லு நந்தி..! இந்த கடை பிரியாணியை டேஸ்ட்ல அடிச்சுக்க முடியாது. வாட்ட  அரோமா” என்றபடி சாப்பிட்டவளைப் பார்த்து சிரித்தது நண்பர்கள் பட்டாளம்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க?” என்றாள் கடுப்புடன்.

“பின்ன என்ன மொழி? நீ கேட்டா இன்டர்நேஷனல் புட் சமைச்சு குடுக்கக் கூட வீட்ல ஆள் இருக்கு, நீ என்னடான்னா இதை பெருசா பேசிட்டு இருக்க?” என்றாள் நந்தி.

“ஆனா எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. ஒரு சின்ன விஷயத்துல கிடைக்குற மனநிறைவு இருக்கே அது சொன்னா புரியாது” என்றவள் அமைதியாய் சாப்பிட, கேட்டுக் கொண்டிருந்த தீரனின் முகத்தில் ஒரு புன்னகை.

“உன்னையப் பார்த்தா அமைச்சர் வீட்டு பொண்ணு மாதிரியா இருக்கு?” என்றான் தாரிக்.

“வாயை மூடு தாரிக்” என்று அடிக் குரலில் சீரியவளின் கண்கள் அவனை முறைத்தது.

“அவளே பயந்து பயந்து வந்திருக்கா. அவங்கப்பா காதுக்கு மட்டும் விஷயம் போச்சுன்னா என்ன ஆகும்னு தெரியும்ல” என்றாள் நந்திதா.

“ஏன் நந்தி?இங்கெல்லாம் சாப்பிட வர்றது அவ அப்பாவுக்கு பிடிக்காதா?” என்று ஒருத்தி கேட்க,

“இங்கன்னு இல்லை, வெளிய போறது..பிரண்ட்ஸ் கூட சுத்துறதுன்னு எதையுமே அலோவ் பண்ண மாட்டார். அதாவது எம்டன் மகன் நாசர் மாதிரி. அவரும் அனுபவிக்க மாட்டாரு. அவர் பொண்ணையும் அனுபவிக்க விட மாட்டாரு” என்றாள் நந்திதா.

“ராஜ ராஜன் பொண்ணுனா சும்மாவா?” என்றான் தாரிக் மீண்டும்.

“இப்போ நீ வாயை மூடலை, அடுத்த பிரியாணி குண்டால மட்டன் பிரியாணிக்கு பதிலா மனுஷ பிரியாணி தான் வேகும், பார்த்துக்க” என்று அடிக் குரலில் சீறினாள் வெண்மொழி.

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த தீரனின் முகம் புன்னைகை முகமாகவே இருந்தது.

“என்னங்க இது? உள்ள வரும் போது சிடுசிடுன்னு வந்தான். இப்போ சிரிச்சுகிட்டே சாப்பிட்டுட்டு இருக்கான்” என்றார் வானதி அதிசயம் போல்.

“ம்ம்ம்..! உங்க பேவரைட் கடை பிரியாணியோட டேஸ்ட்டு என்னோட நாக்குலையும் ஒட்டிகிச்சு, அதான்” என்றான்.

மொழியும் அவள் நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அங்கிருந்த சற்று வயதான சப்ளையர் ஒருவர் வெகு நேரமாய் பார்த்துக் கொண்டே இருந்தார். அதிலும்அவர்களுள் ஒருவனை மட்டுமே அவர் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவரின் பார்வையில் எரிச்சலுற்றவன், அவரை அழைத்தான்.

“தம்பி” என்றபடி அவர் வேகமாய் வர,

“எதுக்காக என்னையவே பார்த்துட்டு இருக்க? அதுவும் வச்ச கண்ணு வாங்காம?” என்றான் அதிகாரமாய்.

“டேய்..! இதென்ன மரியாதை இல்லாம பேசுற பழக்கம்?” என்று மற்றவர்கள் கடிந்து கொள்ள,மொழியோ அவனை முறைத்திருந்தாள்.

“இல்ல தம்பி அது சும்மாதான்” என்றார். அவரின் முகத்தில் வேலை செய்த களைப்பும், வாழ்ந்து முடித்த வாழ்வின் அனுபவங்களும் சுருக்கங்களாய் தெரிந்தது.

“என்னைப் பார்த்தா உனக்குத் தம்பி மாதிரி இருக்கா?” என்றவனின் பேச்சில் தன் நிலையை வெறுத்தவர்,

“மன்னிச்சிடுங்க தம்பி”  என்றவாறு நகரப் போனார்.

“திரும்பவும் தம்பின்னு சொல்ற? ஏன் சார்னு கூப்பிட்டா ஆகாதோ?” என்று வெகுண்டு எழ,

“உங்க வயசுல இருக்கும் போது என் பையன் கூட இப்படித்தான் இருப்பான் தம்பி. அதான் என்னை மறந்து பார்த்துட்டேன். இதுல என்னை தப்பைக் கண்டிங்க?” என்றார்.

“உன் பையன் மாதிரி இருக்கேனா நானு? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? ஆப்ட்ரால் சப்ளையர் நீ” என்று அவன் வார்த்தையை விட, தீரன் எழுந்து வருவதற்குள் மொழி அவனை அதட்டியிருந்தாள்.

“தாரிக் உன் பிரண்டை வாயை மூட சொல்லு. இல்ல என்ன பண்ணுவேன்னு தெரியாது. இவன் அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா இருந்தா எதுக்கு நம்ம கூட வரணும். இப்பவே இவனை அனுப்பி விடு. இல்லைன்னா நீயும் சேர்ந்து கிளம்பு. இவனை சார்ன்னு வேற கூப்பிடனுமா? இடியட். வயசுக்கு மரியாதை குடுத்து பேசணும்னு தெரியாது” என்றாள் எரிச்சலுடன்.

அந்த பெரியவரை பார்த்தவளுக்கு பார்த்த உடனே தெரிந்து போனது, அவர் வாழ்ந்து கெட்டவர் என்பது. அவனைப் பார்க்கும் போது அவர் கண்களில் தெரிந்த ஏக்கமும், இயலாமையும் அவளுக்குத் தெளிவாய் புரிந்தது.

“அய்யா, உங்களைப் பார்த்தாலே முடியாதவர் போல இருக்கீங்க. நீங்க ஏன் இங்க வேலை செய்றிங்க? இந்த வயசுல ரெஸ்ட் எடுக்குறதை விட்டுட்டு?” என்றாள் மொழி.

“அடுத்த வேளை சாப்பிடனுமேம்மா. எனக்காக இல்லைன்னாலும் என்னைக் கட்டிகிட்டவளை பார்த்துக்கனுமே?” என்றவரின் குரலில் இருந்தது விரக்தியா? இயலாமையா?

“உங்க பையன்?” என்றாள்.

“பையன் இப்போ உயிரோட இல்லம்மா. ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துட்டான். மகன் இருக்கும் போதே மருமகளுக்கு நாங்க பாரம். இப்போ சொல்லவா வேணும்?” என்றவரின் நிலை கண்டு அவளுக்கு பாவமாய் போனது.

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, நான் ஒரு ஒல்டேஜ் ஹோம் அட்ரஸ் தரேன். உங்களுக்கு முடியாத சூழ்நிலையில நீங்க உங்க மனைவியை அழைச்சுட்டு அங்க போய்டுங்க. அது என் அப்பா நடத்துற இலவச ஹோம் தான். புட் எல்லாம் தரமா இருக்கும். நீங்க அங்க மன நிம்மதியோட இருக்கலாம்” என்றவளை நன்றியுடன் பார்த்தவர், அவள் கொடுத்த கார்டையும் வாங்கிக் கொண்டார்.

“ரொம்ப நன்றிமா” என்றவரைப் பார்த்து புன்னகைத்தவள்,

இந்த வயசுலயும் வேலை செஞ்சு உங்க மனைவியை பார்த்துக்கணும்னு நினைக்கிறிங்க பாருங்க. ரொம்ப பெரிய விஷயம். இவன் பேசுனது எதையும் மனசுல வச்சுக்காதிங்க” என்றாள் அமைதியாய்.

அவர் எதுவும் பேசாமல் மீண்டும் அவனை கண்களில் நிரப்பிக் கொண்டு செல்ல, பெற்ற பிள்ளையை இழந்த தவிப்பு அவர் கண்களில்.

திரும்பி அவனை முறைத்தவள், “உன்னைப் பார்த்ததுல இப்போ என்ன குறைஞ்சு போய்டுச்சு? அவர் தம்பின்னு உன்னை மரியாதையா தான் பேசினார். பதிலுக்கு நீ மரியாதையா பேசுனியா முதல்ல. ஏதோ அவர் பையன் ஞாபகத்துல உன்னைப் பார்த்திருக்கலாம். அதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ற. இது தான் முதலும் கடைசியுமா இருக்கணும். இனியும் இப்படி தான் பிகேவ் பண்ணுவன்னா, எங்களோட நீ வெளிய வர்றது இது தான் கடைசியா இருக்கும்” என்றவளின் வார்த்தைகளில் கோபமில்லை, அதிக சத்தமில்லை. ஆனால் அழுத்தம் இருந்தது.

“இதுக்குத்தான் இப்படி சின்ன ஹோட்டலுக்கு நான் வர்றது இல்லை” என்றான் அவன் எரிச்சலுடன்.

“ரொம்ப நல்லது. அப்போ இனி வராத. இப்போவே கிளம்புறதுன்னாலும் கிளம்பு. ஒரு பிரச்சனையும் இல்லை” என்றாள் பட்டென்று.

அவன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருக்க, அதற்கடுத்து வந்த நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது.

“ஹேய் மொழி! ராஜன் அங்கிள்” என்றாள் நந்தி.

“எங்க?” என்று பதட்டத்தில் திரும்பியவள் வேகமாய் துப்பட்டாவை வைத்து முகத்தை மறைக்க,

அவளைப் பார்த்து சிரித்த நந்திதாவோ,

“இல்ல, இங்க ஒருத்தி தைரியமா பேசிட்டு இருந்தாளே அவளைப் பார்த்த?” என்றாள் கிண்டலுடன்.

“எனக்கு எங்கப்பான்னா தான் பயம். மத்தபடி நான் தைரியசாலி தான்” என்று சிறுபிள்ளையாய் சொல்லியவளின் முக பாவனையை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்த மனதை கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான் தீரன்.