“அதி அங்க பாரு, கடல்ல யாரோ குதிச்சுட்டாங்க” என்ற விவேக்கின் பதட்டமான குரலில் வெளியே வந்த அதிதீரன் விவேக் கட்டிய இடத்தைப் பார்த்தான்.

“இந்நேரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிருக்கும். அவங்க பார்த்துப்பாங்க. நீ ஏன் பதட்டப்படுற விவேக்” என்றான் சாவகாசமாய்.

“இல்ல அதி, விழுந்தது ஒரு பொண்ணு மாதிரி இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விவேக் கைகாட்டிய இடத்தில் ஒருமுறை மேலெழும்பி வந்தாள் வெண்மொழி. அவளைக் கண்டு திகைத்த அதிதீரன் அடுத்த நிமிடம் யோசிக்காமல் கடலில் குதித்திருந்தான்.

அவளை அடையவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருந்தவளை அந்த இடத்தில் காப்பாற்றுவது அவனுக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த பகுதியில் கடலின் ஆழம் வேறு அதிகமாய் இருந்தது.

அதற்குள் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் செல்ல, அவர்களும் வந்து விட்டிருந்தனர். ஒரு வழியாக அவளை மீட்டிருந்தான் அதி தீரன். அவன் தங்கியிருந்த அறையின் பால்கனி வழியாக அவளைத் தூக்கியிருந்தனர்.

“உடனே மெடிக்கல் சென்ட்டர் தூக்கிட்டு போய்டலாம்” என்று விவேக் பதட்டத்துடன் சொல்ல,

“நோ..! எமெர்ஜென்சி டீமை இங்க வர சொல்லு” என்றான் அதி அதிகாரமாய். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவளுக்கு மருத்துவம் அளிக்கப்பட, அவளுக்கோ மயக்கம் தெளியவில்லை.

“என்னாச்சு டாக்டர்?” என்றான்.

“இவங்க ட்ரக் யூஸ் பண்ணியிருக்காங்க. அதான் இன்னமும் மயக்கம் தெளியலை. எப்படியும் அவங்க நார்மல் கண்டிஷனுக்கு வர பியூ ஹவர்ஸ் ஆகும்” என்றனர்.

“வேற எந்த பிரச்சனையுமில்லையே?” என்றான் அதி.

“நோ..! டைம்க்கு நீங்க காப்பாத்திட்டிங்க, கிரேட் ஜாப்” என்றபடி செல்ல, விவேக் அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

அதி அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“அவங்க பிரண்ட்ஸ்கிட்ட இன்பார்ம் பண்ணனும் அதி. அவங்க ட்ரெஸ் எல்லாம் ஈரம். அதையெல்லாம் மாத்தணும். இல்லைன்னா பீவர் வர சான்ஸ் இருக்கு” என்றான் விவேக்.

அதி தன் போனில் யாருக்கோ அழைப்பு விடுக்க, சில நிமிடங்களில் உடையுடன் வந்தாள் ஒரு பெண்.

“இவங்களுக்கு சேன்ஜ் பண்ணி விடுங்க” என்றவன் விவேக்கை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

“ஏன் அதி? இதை அவங்க பிரண்ட்ஸ்கிட்ட இன்பார்ம் பண்ணியிருந்தா அவங்களே வந்து பண்ணியிருப்பாங்க. எப்படியும் அவங்க நம்மளை நம்பப் போறதில்லை. என்னமோ நீதான் கடல்லயே தள்ளி விட்ட மாதிரி பேசுவாங்க” என்றான் விவேக்.

அவன் பேசுவதை அதி கேட்பதைப் போன்றே தெரியவில்லை. அவனின் யோசனைகள் எல்லாம் வேறு எங்கோ இருந்தது.

“சார், டிரஸ் சேன்ஜ் பண்ணிவிட்டுட்டேன் சார்” என்றபடி அந்த பெண் வெளியே வர,

“ம்ம்..! நீங்க போகலாம்” என்றான் அதி.

“விவேக் நீ போய் பிரன்ட் டெஸ்க்ல இன்பார்ம் பண்ணிடு. இப்படி ஆனதையும் அந்த பொண்ணு இப்போ நம்ம ரூம்ல இருக்கான்றதையும்” என்றான்.

“ம்ம்! ஓகே அதி” என்ற விவேக்கிற்கு நண்பனின் மனநிலை புரியவில்லை.

அறைக்குள் சென்று அவளின் அருகில் சேரைப் போட்டு அமர்ந்தவனுக்கு அப்படி ஒரு ஆயாசம். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெண்மொழி அவ்வளவு சீக்கிரத்தில் கண் விழிக்கவில்லை. சில மணி நேரங்கள் கடந்த பின்னும் அவள் அப்படியே இருக்க, அவளைக் காணாமல் தேடிய நண்பர்கள் அவளின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அது கடலின் ஆழத்தில் கிடந்தது.

“இப்போ என்ன பண்றது நந்தி? ரூம்ல தான இருக்கேன்னு சொன்னா? வேற எங்கயும் போயிருப்பாளா? ஒருவேளை சைட் சீயிங் பார்க்க மேல போயிருப்பாளோ?” என்று அவர்கள் அவளைத் தேடிக் கலைத்துவிட்டனர்.

“நாம போய் கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்” என்ற டயானா, அவளை அழைத்துக் கொண்டு பிரன்ட் டெஸ்க் ஏரியாவிற்கு செல்ல, அங்கே அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.

“என்ன சொல்றிங்க? அதெப்படி நடந்திருக்கும்?” என்றனர் நம்பாமல். அவர்கள் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளைக் காட்ட, பால்கனியில் இருந்து அவள் விழுந்தது தவறி விழுந்ததைப் போல் தெரிந்தது அவர்களுக்கு.

அவள் இருப்பிடத்தை சொல்ல, வேகமாய் அங்கு விரைந்திருந்தனர் நந்திதாவும், டயானாவும்.

தோழியைத் தேடி வந்த இருவரையும் கண்களில் அனலுடன் முறைத்திருந்தான் அதிதீரன்.

“ப்ரோ” என்று டயானா எச்சில் கூட்டி விழுங்க,

“ட்ரிப் வர்றது முக்கியமில்லை. நம்ம கூட வர்றவங்க சேப்பா இருக்காங்களான்னு பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை” என்றான் கடுமையான குரலில்.

“நாங்க கூப்பிட்டோம் ப்ரோ. அவதான் வரலைன்னு சொல்லிட்டா” என்றாள் நந்திதா குற்ற உணர்வுடன்.

“சாரி ப்ரோ..! அன்ட் தேங்க்ஸ் பார் யுவர் டைம்லி ஹெல்ப். பிரன்ட் டெஸ்க்ல சொன்னாங்க. நீங்க தான் ஹெல்ப் பண்ணிங்கன்னு. இவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா அங்கிள் எங்களை கொன்னே போட்ருப்பார்” என்றாள் டயானா.

அதற்குள் விஷயம் கேள்விப் பட்டு தாரிக்கும் பதட்டத்துடன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

“ஹேய் ராஸ்கல் என்னடா பண்ண அவளை? நீதான் ஏதோ பண்ணியிருக்க அவளை. நானும் வந்தப்ப இருந்து பார்க்குறேன். அவளை டீஸ் பண்ணிட்டே இருக்க? நானும் பிரச்சனையை வேண்டாம்னு ஒதுங்கிப் போனா, இப்போ அவளை கொலை பண்ற அளவுக்கு போயிருக்க. உன்னை சும்மா விட மாட்டேன்டா நானு” என்றான் கோபமாய்.

அவனை ஏற இறங்க பார்த்த அதி, தன் காதை குடைந்தபடி,

“மெதுவா பேசுடா..! காதுக்குள்ள வேற கடல் தண்ணி போய் காது அடைச்சுகிச்சு” என்றான் சாவகாசமான குரலில்.

“என் பேபிக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தது, நீ உயிரோட இருந்தது இன்னைக்குத் தான் கடைசி நாளா இருந்திருக்கும்” என்றான் தாரிக்.

“வாயை மூடு தாரிக். விஷயம் என்னன்னு தெரியாம வாய்க்கு வந்ததை பேசாத. அவர்தான் அவளை காப்பாத்தியிருக்கார். அவர் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு வொயிட்டி இல்லை. நடந்தது என்னன்னு முழுசா தெரியாம இந்த ஓவர் சீனெல்லாம் தேவையில்லை” என்றாள் நந்திதா கோபமாய்.

“என்ன சொல்ற நந்தி?” என்றவனின் குரலின் ஸ்ருதி குறைய, அவர்கள் நடந்ததைக் கூறினர்.

“நோ, நிச்சயம் பேபி அப்படி பண்ணியிருக்க மாட்டா” என்றான் தாரிக்.

“நாங்களும் அதைத் தான் சொல்றோம். அவ பேலன்ஸ் தவறி விழுந்திருக்கா. இதோட இந்த பேச்சை விடு” என்றனர் முடிவாய்.

“ப்ரோ நாங்க இவளை எங்க ரூம்க்கு அழைச்சுட்டு போறோம்” என்றனர்.

“மயக்கம் இன்னும் தெளியலை. மயக்கம் தெளிஞ்ச உடனே நானே கொண்டு வந்து விடுறேன். உங்க பிரண்டை நான் ஒன்னும் பண்ண மாட்டேன். நம்பிக்கை இல்லைன்னா, இங்கயே இருந்து பார்த்துக்கோங்க” என்றான் அதி தீரன்.

“நான் இருந்து பார்த்துக்கிறேன் பேபியை” என்றான் தாரிக்.

“நீ ரூம்க்கு போ தாரிக். நாங்க பார்த்துக்கிறோம்” என்று அவனை அனுப்பி வைக்க முற்பட்டனர் டயானாவும், நந்திதாவும்.

‘எல்லாம் இவளால வந்தது. இவ மட்டும் என்கிட்ட தள்ளி நிக்காம உரிமையா பழகியிருந்தா இன்னைக்கு என்னோட நிலைமை இப்படி ஆகியிருக்குமா? நாங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கப் போறோம். ஆனா நான் யாரோ போல நிக்கிறேன். யாருன்னே தெரியாதவன் என்னமோ உரிமை இருக்குற மாதிரி பேசிட்டு இருக்கான்’ என்று மனதிற்குள் வெம்பிப் போன தாரிக், கோபத்துடன் அங்கிருந்து சென்றிருந்தான்.

அங்கு நடப்பதை எல்லாம் விவேக் ஒரு பார்வையாளனாய் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் அருகில் சென்ற அதி,”நான் கேட்டது என்னாச்சு?” என்றான்.

“இவங்க அந்த ரூமை விட்டு வெளிய போனதுக்கு பிறகு யாரும் அங்க போன மாதிரி புட்டேஜ்ல இல்லை அதி. நான் நல்லா செக் பண்ணிட்டேன்” என்றான் விவேக்.

“எங்கயோ இடிக்குது விவேக். இவளைப் பார்த்தா ட்ரக் யூஸ் பண்ற பொண்ணு மாதிரியா இருக்கு?” என்றான்.

“கண்டிப்பா இல்லை அதி” என்றான் விவேக்.

“அப்பறம் எப்படி?” என்றவன், அவள் தண்ணீரில் விழுந்த காட்சியையே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்களை கசக்கி யாரையோ பார்ப்பதைப் போன்று இருந்தது. அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பிருந்த புட்டேஜை பார்க்க, அவள் பால்கனிக்கு வருவதற்கு முன்பு, ஏதோ ஒரு பொருள் உள்ளிருந்து பறந்து வந்து கடலில் விழுவது தெரிந்தது. ஆம் வெண்மொழியின் அலைபேசி தான் அது.

“கண்டிப்பா யாரோ ரூம்க்குள்ள இருந்திருக்காங்க விவேக். வெளிய வந்து விழுந்தது இவளோட செல்போனாத்தான் இருக்கணும். யாராவது தன்னோட போனை தானே கடல்ல தூக்கிப் போடுவாங்களா?” என்றான் அதி தீவிரமான குரலில்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கண்ணு முழிச்ச உடனே அதுவே சொல்லிடப் போகுது. சோ நாம எதுக்கு குழப்பிக்கணும்?” என்றான் விவேக்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு லேசாக மயக்கம் தெளிய, இமைகளைப் பிரித்தவளின் கண்களில் பட்டது தனக்கு அருகில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த தோழிகளும், சற்று தள்ளி நின்றிருந்த அதிதீரனும், விவேக்கும் தான்.

தலையைப் பிடித்தவளுக்கு போதையின் மயக்கம் இன்னமும் இருந்தது.

“வொயிட்டி..! ஆர் யு ஓகே” என்றாள் நந்திதா.

நடந்தது ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக அவளுக்கு ஞாபக இடுக்குகளில் படையெடுக்க, மயக்கத்தையும் மீறி சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சு?” என்று பதறியபடி வந்தான் அதிதீரன்.

அவனின் முகம் பார்த்தவளுக்கு அவன் தன்னைக் காப்பாற்றியதும் நினைவிற்கு வந்தது.

“இது யாரோட ரூம்?” என்றாள் தோய்ந்த குரலில்.

“இது ப்ரோ தங்கியிருக்க ரூம் தான் வொயிட்டி. நீ தவறி விழுந்த உடனே அவர் தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றாள் நந்திதா.

“தவறி விழுந்தேனா?” என்றவளின் கண்களில் வந்து போன அதிர்ச்சியை சரியாக இனம் கண்டு கொண்டான் அதி தீரன்.

“நீ இப்போ ஓகே வா. நாம நம்ம ரூம்க்கு போகலாமா?” என்றனர் இருவரும்.

அவள் கண்களில் பயமும் அதிர்ச்சியும் தெரிய,

“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நீங்க இங்கயே தங்கிக்கோங்க. எங்களுக்கு இன்னொரு ரூம் இருக்கு. தேவைப்பட்டா உங்க ரூமை யூஸ் பண்ணிகோங்க” என்றான் அதிதீரன் அவளின் பயம் உணர்ந்தவனாய்.

“இல்ல ப்ரோ” என்று நந்திதா எதையோ சொல்ல வர,

“இங்கயே இருக்கலாம்” என்றவளின் குரலில் அவன் உறுதியே பண்ணிவிட்டான். அவனை நோக்கி திரும்பியவள்,

“தே..தேங்க்ஸ்” என்றவுடன் தலையைத் திரும்பிக் கொண்டாள்.

தனக்கு அருகே வந்து தன் முகத்தருகே குனிந்தவனை பீதியுடன் பார்த்தாள் வெண்மொழி.

“ஆர் யு ஓகே” என்றவனின் குரலில் என்ன இருந்தது?

“ஐ..ஆம் ஓகே” என்று திக்கிக் திணறியவளின் முகபாவத்தை ஒரு நிமிடமானாலும் அவன் மனம் ரசித்திருந்தது.

“நாங்க பக்கத்து ரூம்ல தான் இருப்போம். எதுன்னாலும் உடனே கூப்பிடுங்க” என்றபடி விவேக்கை அழைத்துக் கொண்டு அவன் வெளியே செல்ல எத்தனிக்க,

“உன்னோட மொபைல் எங்கடி? எத்தனை டைம் கால் பண்ணோம். சுவிட்ச் ஆப்னு வந்துச்சு” என்றாள் டயானா.

மொபைல் என்ற வார்த்தையில் அவள் அதிர்ந்து பார்த்திருக்க, அதிதீரனின் நடையும் தடைபட்டு திரும்பி அவளைப் பார்த்திருந்தான். அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியில் அவன் நினைத்தது சரிதான் என்று முடிவே பண்ணிவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்தாள் வெண்மொழி.