சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த அதிநவீன சொகுசுக் கப்பல் மூன்று நாள் தொடர் கடல் பயணத்திற்கு பிறகு தாய்லாந்தின் புக்கெட் தீவினை நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்போ, மலைகளோ,மரங்களோ இல்லாமல் சுற்றிலும் நீல நிறக் கடல் மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. தூய்மையான சூரிய வெளிச்சத்தில் கடல் நீர் பளபளத்தது. கப்பல் முன்னோக்கி செல்லும் போது நீல நிறக் கடலை கிழித்துக் கொண்டு பின்னோக்கி சென்ற பிரம்மாண்ட அலைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த அலைகளின் ஓசை மனதிற்கு ஒரு விதமான அமைதியை தரும் என்றால் அது மிகையல்ல.
இன்னும் சற்று நேரத்தில் சூரியன் தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அந்த தருணத்திற்காகவே காத்திருந்தவள் போல், தன் கேமராவை தயார் நிலையில் வைத்திருந்தாள் அவள். சூரியன் மறையும் நேரத்தில் ஆரஞ்சும் சிவப்புமாய் மொத்தக் கடலும் தங்க நிறத்தில் மாறி மின்னுவதை இந்த மூன்று நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்படி இருந்தும் சலிப்புத் தட்டவில்லை அவளுக்கு.
கடல் தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த அதே வேளையில்,அதை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவளின் முகமும் கடலுக்கு சற்றும் குறைவின்றி மின்னிக் கொண்டிருந்தது. அழகின் மறு பிறப்பாய் இருந்தவளுக்கு, இயற்கையை ரசிக்கும் போது மட்டும் தான் மனம் நிம்மதியாய் இருந்தது. தன் ரசனையையும் மீறி மனதிற்குள் ஒரு பயமும் படபடப்பும் வந்து போவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஏனோ அந்த கப்பலின் ஆடம்பரம் அவளை கொஞ்சம் கூட கவரவில்லை. உள்ளே இருக்கும் கேளிக்கை கூத்துக்களை அவள் விரும்பவில்லை. அவளுக்குத் தேவை மன அமைதி. அது கப்பலின் வெளிப்புறத்தில் நின்று கடலை ரசிப்பதில் மட்டுமே அவளுக்குக் கிட்டியது. இன்னும் சற்று நேரம் சென்ற பின்னர், நடுக்கடலில் நகரங்களின் செயற்கை ஒளி இல்லாததால் இரவில் வானத்தைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலமும் மிகத் தெளிவாகத் தெரியும். அதற்காகத் தானே காத்திருக்கிறாள். அவள் தான் வெண்மொழி.
அவளின் அமைதியைக் கலைப்பது போல் அங்கு வந்தது அவளின் நண்பர்கள் பட்டாளம்.
“என்ன பேபி எப்போ பார்த்தாலும் இங்கயே தான் இருக்க? இதுக்கு எதுக்கு ட்ரிப் வரணும்? உள்ள அவ்ளோ என்ஜாய்மென்ட்ஸ் கொட்டிக் கிடக்கு. நீ என்னடான்னா சைலண்ட்டா இங்க வந்து நின்னுடுற?” என்ற தாரிக் அவளைத் தோளோடு அணைக்கப் போக, அவனை முறைத்தாள் வெண்மொழி.
“வாட்ஸ் ஹேப்பன் பேபி?” என்றான் தாரிக்.
“ஹேய் தாரிக் அவளைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே? மேடம் ஒரு இயற்கை விரும்பி. கொஞ்சம் ரசனையான ஆள் வேற? அப்பறம் இங்க இல்லாம வேற எங்க இருப்பா?” என்றாள் நந்திதா. வெண்மொழியின் உற்ற தோழி.
“அவளைப் பத்தி தெரிஞ்சதுனால தான லவ் பண்ணவே ஸ்டார்ட் பண்ணேன். சும்மாவா? மூணு வருஷம் பின்னாடியே சுத்தி என்னோட லவ்வை அக்சப்ட் பண்ண வைக்குறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத் தானே தெரியும்?” என்றான் தாரிக் சோகமாக.
“அது தான் என்னோட பயமே தாரிக். அப்பாவுக்கு மட்டும் நம்ம விஷயம் தெரிஞ்சது அவ்வளவு தான். அந்த நிமிஷத்தோட என் கதை முடிஞ்சது” என்றவளின் கண்களில் பயம் அப்பட்டமாய் வந்து போனது.
இப்போது கூட இவர்களுடன் இந்த ட்ரிப் வருவதற்கு தந்தையிடம் அனுமதி வாங்குவதற்குள் அவள் படாத பாடு பட்டுவிட்டாள். வெண்மொழி பொதுவாகவே தைரியமான பெண் தான். ஆனால் தந்தை என்று வந்தால் மட்டும் அவளின் தைரியம் காணாமல் போய்விடும்.
“இப்பவே இப்படி பயப்படுற பேபி. நாளைக்கு நம்ம மேரேஜ்க்கு எப்படி சம்மதம் வாங்கப் போற?” என்றான் தாரிக் தீவிரமான குரலில்.
“அது தான் எனக்கும் புரியலை தாரிக். அப்பாகிட்ட போய் லவ் பண்றேன்னு சொல்ற தைரியம் எனக்கில்லை” என்றவளை வெறித்தான் தாரிக்.
“சோ, உன்னோட அப்பா வேண்டாம்னு சொன்னா நீ பதிலுக்கு ரியாக்ட் பண்ண மாட்ட, அப்படித்தான? அதோட நம்ம லவ்வும் அவ்வளவு தான் இல்லையா?” என்றான் அவளை முறைத்தபடி.
“அப்படி எல்லாம் இல்லை தாரிக்” என்றவளின் தயக்கம் கண்டு நந்திதாவுக்கு அவள் மேல் இரக்கம் பிறந்தது. செல்வந்தன் வீட்டு வாரிசு அவள். அவள் கேட்டால் கப்பலையே வாங்கித் தரும் அளவிற்கு வசதியானவர் தான் அவளின் அப்பா. ஆனால் சரியான கட்டுப் பெட்டிக் குடும்பம். காதல் என்றால் காத தூரம் கசக்கும் அளவிற்கு பாடமெடுக்கும் குடும்பம். அதிலும் இவளிடம் தந்தையின் கண்டிப்பு அதிகம் இருக்கும்.
ராஜ ராஜன்- சங்கரி தம்பதிக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பிரகதி, இளையவள் வெண்மொழி. இரண்டு பெண்களின் மீதும் ராஜராஜனுக்கு அளவு கடந்த பாசமும், அதே நேரம் கண்டிப்பும் இருக்கும்.
தன் வீட்டைப் பற்றிய யோசனையில் இருந்தவளை கலைத்தது தாரிக்கின் குரல்.
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லை பேபி” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
“டாடி கிட்ட கண்டிப்பா பேச ட்ரைப் பண்றேன் தாரு. ஆனா அவர் சம்மதிப்பாருன்னு எனக்குத் தோணலை” என்றாள் உள்ளே போன குரலில்.
“தாரிக் மாதிரி ஒரு அம்சமான பையனை அங்கிளுக்கு பிடிக்காம போகுமா வொயிட்டி. உங்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவன் பேமிலியும் செட்டில்ட் பேமிலி தான். சோ நீ பயமில்லாம அங்கிளை பேஸ் பண்ணு வொயிட்டி” என்றாள் நந்திதா.
‘நீ ஈசியா சொல்லிடுவ? ஆனா அவர்கிட்ட பேசுற கஷ்ட்டம் எனக்குத் தான தெரியும்?’ என்று நினைத்துக் கொண்டவள் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினாள்.
“பார்த்தியா? ஒரு லவ்வர் கூட ட்ரிப் வந்திருக்க மாதிரியா இருக்கா? இந்த ட்ரிப்ல எங்களோட அண்டர்ஸ்டேன்டிங் லெவல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும்னு நீ தான சொன்ன நந்தி. ஆனா எனக்கு அந்த நம்பிக்கை சுத்தமா இல்லை” என்றான் தாரிக்.
“நான் போறேன். மத்த பிரண்ட்ஸ் யாரும் இங்க வராம பார்த்துக்கிறேன். உனக்கு அவகிட்ட என்ன பேசணுமோ பேசு தாரிக்” என்ற நந்திதா அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
“ஹேய் பேபி..! ஜஸ்ட் ரிலாக்ஸ். இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி ரியாக்ட் பண்ற?” என்றவன்,
“பசங்க எல்லாம் சேர்ந்து இன்னைக்கு நைட் பார்ட்டி அரேஞ் பண்ணியிருக்கானுக. ஷெல் வி கோ தேர்” என்றான்.
“நோ தாரிக். எனக்கு இன்டரஸ்ட் இல்ல” என்றாள் பட்டென்று.
“நிஜமாவே நீ ஒரு பட்டிக்காடு மாதிரி தான் பிகேவ் பண்ற பேபி. நல்லா திங்க் பண்ணிப் பாரு? இதுக்கு எதுக்கு நீ ட்ரிப் வரணும்? உங்க வீட்டு மொட்டை மாடியில நின்னே இந்த ஸ்கை, ஸ்டார்ஸ்ன்னு எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்திருக்க வேண்டியது தானே?” என்றான் கடுப்புடன்.
“என் வீட்டு மொட்டை மாடியில இருந்து பார்த்தா இதெல்லாம் தெரியும் தான். ஆனா பக்கத்துல தாரிக் இருக்க மாட்டானே?” என்றவள் மெதுவாய் சிரிக்க, அவள் சிரிப்பின் அழகில் தன்னைத் தொலைத்தான் தாரிக்.
“நிஜமாவே நீ பேரழகு பேபி. இந்த மொத்த அழகும் எனக்கு தான் சொந்தம்னு நினைக்கும் போது அப்படியே உள்ளுக்குள்ள ஒரு மாதிரி ஹெவன் பீல். அதை சொன்னா புரியாது. பீல் பண்ணாத்தான் புரியும்” என்றான் அவளை ரசித்துக் கொண்டே.
“அட அட..! கவிதை கவிதை” என்ற திடகாத்திரமான குரலில் இருவரும் திரும்ப, கையில் பீர் பாட்டிலுடன் கடலைப் பார்த்திருந்தான் அவன்.
இவர்களுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதைப் போல் நின்றிருந்தான்.
தாரிக் அவனை கோபமாய் பார்க்க, வெண்மொழியோ அவனைப் புரியாமல் பார்த்து நின்றாள்.
“ஹலோ மிஸ்டர்? என்ன கிண்டலா?” என்றான் தாரிக் கோபமாக.
அவனோ தனக்கு எதுவும் காதில் விழவில்லை என்பதைப் போல் கடலையே பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தன் கையில் இருந்த பீர் பாட்டிலை ஒரே மூச்சில் குடித்து முடித்திருந்தான்.
“தாரிக் நாம இங்க இருந்து கிளம்பலாம்” என்ற வெண்மொழி அவனைக் கடந்து செல்ல முற்பட,
“இவனுக்கு பயந்து நாம ஏன் போகணும் பேபி. சுத்தி எத்தனை பேர் இருக்காங்க பார். இவனெல்லாம் ஒரு ஆளுன்னு நீ மைன்ட் பண்ணிக்காத” என்றான் தாரிக் அவனை முறைத்தபடி.
இருந்தாலும் தாரிக்கை சற்று தூரம் தள்ளி அழைத்து வந்து விட்டாள் வெண்மொழி.
“எனக்கு அமைதியா இந்த இடத்தை ரசிக்கணும். தேவையில்லாத டென்ஷன் எல்லாம் வேண்டாம் தாரிக்” என்று அவள் கூறியதும் அவனுக்கும் சரி என்று தான் தோன்றியது.
அவளின் கையை பிடித்துக் கொண்டவன்,
“இனி நாம எப்பவும் போல மீட் பண்ண முடியாது பேபி. இந்த ட்ரிப் முடிஞ்சுட்டா இனி உன்னை எப்ப பார்ப்பேன்னு தெரியாது. உன்னைப் பார்க்காம இருக்க முடியுமான்னும் தெரியலை. சோ நாம சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம் பேபி” என்றான் தாரிக்.
“கண்டிப்பா பண்ணிக்கலாம் தாரிக். நீ இவ்வளவு யோசிக்கும் போது நான் மட்டும் யோசிக்காமையா இருப்பேன்” என்று முதன் முறையாக நம்பிக்கை வார்த்தைகள் பேசியவளின் மேல் காதல் பைத்தியமானான் தாரிக்.
“பேபி..!நாம லவ் பண்ண ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு முத்தத்துக்குக் கூட வழியில்லை” என்றவன் அவளை ஏக்கமாய் பார்க்க,
“ஏன் கிஸ் பண்ணாத்தான் லவ் பண்றதா அர்த்தமா என்ன?” என்றாள் புரியாமல்.
“அடிப்பாவி..! நிஜமாவே நீ டூகே கிட் தானா?” என்றவனின் பாவனையில் சிரித்திருந்தாள் வெண்மொழி.
தாரிக்கின் விழிகள் அவளைத் தாபத்துடன் பார்க்க,
“சுத்தம்! ஒரு முத்தத்துக்கு இந்த அக்கப் போரா?” என்றபடி மற்றொரு பீர் பாட்டிலுடன் அவர்களின் அருகில் வந்திருந்தான் அவன்.
“மேடம், இதென்ன உங்க தனிப்பட்ட சொத்தா? இந்த கப்பல்ல எல்லா இடத்துக்கும் போறதுக்கு எனக்கு ரைட்ஸ் இருக்கு. யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது” என்றான் நக்கலாய்.
இருக்கும் இதமான மனநிலையை கெடுத்துக் கொள்ள இப்போது தாரிக் விரும்பவில்லை.