இதயம் இணையும் தருணம்

அத்தியாயம் 5

அந்த வார இறுதி ஆகாஷும், அருணும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இருவரின் மனைவியும் அவர்கள் அம்மா வீட்டில் இருப்பதால்…. … ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே தான் இருப்பார்கள். ஜெயஸ்ரீ வேறு நன்றாகச் சமைப்பார். அவரும் வருந்தி அழைப்பதால், இங்கேதான் இருப்பார்கள். சில நேரம் ஜெய்யும் சேர்ந்து கொள்வான். 


“பாருங்க பா, எந்தப் பொண்ணு பார்த்தாலும், இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு சொல்றான்.” என ஜெயஸ்ரீ உணவை பரிமாறியபடி சொல்ல…. ஆகாஷ் முகேனை முறைத்துப் பார்த்தான். 


“என்ன டா வேற எதுவும் ஐடியால இருக்கியா என்ன?” என ஆகாஷ் கேட்க, முகேனுக்கு அவன் சொல்வது புரியாமல் இல்லை. 


“வேற ஐடியான்னா?” என ஜெயஸ்ரீ கேட்க, ஆகாஷ் பதில் சொல்லாமல் இருக்க…. 


“டேய், சொல்றதை ஒழுங்கா சொல்லு. அவங்க வேற எதாவது நினைச்சுக்கப் போறாங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும்.” என்றான் முகேன். 


“ஆகாஷ் நிவேதாவை பற்றிச் சொல்ல…” 


“இவனுக்கு வேலைக் கிடைச்சு ஒரு வருஷத்துல, வா போய் அங்க இருக்கிற சூழ்நிலை பார்த்திட்டு, அந்தப் பொண்ணு வீட்ல பேசிட்டு வருவோம்னு நான் இவனைக் கூப்பிட்டேன். இவன்தான் அதெல்லாம் அவளுக்குக் கல்யாணம் ஆகி இருக்கும்னு சொல்லி வர மறுத்திட்டான்.” என்றார் ஜெயஸ்ரீ. 


“யாரோ எல்லாம் இல்லைடா… உனக்கு எதிரி நீயே தான்.” என்றான் அருண் கடுப்பாக. 


“மாப்பிள்ளை எல்லாம் பார்த்திருக்காங்க. கல்யாணம் ஆகலைன்னா சொல்றீங்க?” என ஜெயஸ்ரீ மேலும் கேட்க, 


“நீங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சிக்கணும், நான் நல்லா இருக்கணும்னு நினைச்ச பொண்ணு நிவேதா. எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கான்னு எனக்குத் தெரியனும். நான் அதுக்குதான் அவளைத் தேடுறேனே தவிர, நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் பண்ணிக்க இல்லை. அவளுக்குக் கண்டிப்பா கல்யாணம் ஆகி இருக்கும்.” என்றான் முகேன். 


“சரி டா… அவ்வளவுதானே. உனக்கு நிவேதா எப்படி இருக்கான்னு தெரியனும்? அதுக்குப் பிறகு நீ கல்யாணம் பண்ணிப்ப…சரி விடு முதல்ல அவளைத் தேடி கண்டுபிடிக்கிறது தான் வேலை.” என்றான் ஆகாஷ்.
அவன் நண்பர்கள் கிளம்பிய பிறகு, “ஏன் முகேன் இத்தனை நாள் இல்லாம நிவேதாவை இப்ப தேடுற?” என ஜெயஸ்ரீ கேட்க, 


“இங்க இருந்தா நிவேதாவை போய்ப் பார்த்திடுவேன்னு பயத்தில்தான் மா… நான் சென்னையை விட்டு கிளம்பினது. சென்னைக்கு வந்ததுல இருந்து மனசு அறிச்சிடே இருக்கு, என்னவோ என் மனசு சொல்லுது, அது என்னன்னு எனக்குப் புரியலை. அவ நல்லா இருக்கான்னு தெரியனும்.” என்றான் உறுதியாக. 


ஆகாஷுக்கு முன்பே வினோதா அந்த வேலையைத் தொடங்கி இருந்தாள். அவர்கள் கல்லூரி க்ரூப்பில் நிவேதாவை பற்றித் தெரியுமா, யாராவது பார்த்தீங்களா? எனக் கேட்க, தெரியவில்லை என்றே பதில் வந்தது. 


கணவன் அலுவலகம் சென்றதும், வினோதா மகளைக் குளிக்க வைத்து காலை உணவு கொடுத்தவள், பிறகு மகளுடன் விளையாடியபடியே வீட்டை ஒழுங்கு செய்தாள். என்ன வேலை செய்தாலும், மனம் தோழியிடமே சென்றது. எங்க இருக்க நிவி? எனக் கேட்டுக் கொண்டாள். 


மதிய உணவை கொடுத்து மகளை உறங்க வைத்து விட்டு, முகநூலில் நிவேதா பற்றி அவளும் ஆராய்ந்து பார்த்தாள். 


அவர்கள் கல்லூரியில் படித்தவர்கள் சிலரை முகநூலில் கண்டுபிடித்து அவர்களிடம் கேட்டுப் பார்த்தாள். நிவேதாவைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. நிவேதாவின் அக்கா சாருமதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வெகு நேர யோசனைக்குப் பிறகு, அவர்கள் கல்லூரியில் தான் நிவேதாவின் பெரியப்பா பெண் வனிதா படித்தாள். அவளைப் பிடித்தால் தெரியும், என அவளை முகநூலில் தேட…. வெகு நேர முயற்சிக்கு பிறகு நிவேதாவின் பெரியப்பா பெண் கிடைத்தாள்.

 
தான் நிவேதாவின் தோழி என்றும், நிவேதாவின் எண் தனக்கு வேண்டும் எனக் கேட்டும், எதற்கும் தன் எண்ணையும், வனிதாவின் உள் பெட்டிக்கு அனுப்பிவிட்டு, அதைத் தன் நண்பர்களுக்கும் தெரிவித்துவிட்டு, வேறு வழியில்லாமல் காத்திருந்தாள். 


அனிலா அவள் வீட்டில் என்ன சொன்னாளோ, ஒருநாள் அவள் தந்தை சண்முகம் முகேன் இல்லாத நேரமாக வீட்டிற்கே வந்து பேசினார். 


“அனிலாவுக்கு முகேனை பிடிச்சிருக்கு சொல்றா… ரெண்டு பேரும் ஒரே படிப்பு, நாளைக்கு அனிலாவுமே படிப்பை முடிச்சிட்டு, ரெண்டு பேருமா கம்பனியை பார்த்துக்கலாம்.” 


“நீங்க சொல்றது சரிதான். ஆனா ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகம். முகேனுக்கு இருபத்தியொன்பது ஆகுது. அனிலாவுக்கு இப்போதுதான் இருபது வயசு.” 


“அதனால என்ன? ரெண்டு பேருக்கும் மத்த விஷயமெல்லாம் ஒத்து போகுது தான…” என்றதற்கு, 


“முகேனை கேட்காம நான் எதுவும் சொல்ல முடியாது. அதோடு அவனுக்குக் கொஞ்ச நாள் ஆகட்டும்னு ஜோசியர் சொல்லி இருக்கார். பார்த்து தான் பண்ணனும்.” என நல்லவிதமாகவே ஜெயஸ்ரீ சொல்லி அனுப்பினார். 


இந்தக் காரணத்திற்காகத்தான் அனிலா முகேனின் கம்பெனிக்கு வந்திருப்பாளோ என்ற ஜெயஸ்ரீக்கு இப்போது தோன்றியது. முகேனுக்கும் அது புரிந்துதான் வேறு அலுவலகத்திற்கு அவளை அனுப்பி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். 


முகேனின் மூலம் சாதிக்க முடியவில்லை என்று தெரிந்ததும், அவள் அப்பாவை அனுப்பி இருக்கிறது இந்தப் பெண். “இந்தப் பெண் மிகவும் சாமர்த்தியசாலி.” என நினைத்துக் கொண்டார். 


வினோதா நிவேதாவின் அக்காவிடம் இருந்து தகவல் வந்திருக்கிறதா என அடிக்கடி பார்த்துக் கொள்வாள். ஏனோ இன்னும் பதில் வரவில்லை. ஆகாஷின் மனைவிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என அவன் ஊருக்குச் சென்றிருந்தான். அந்த நேரம் வினோதா அவனை அழைத்துப் பேசும் போது, 


“நிவேதா உன்கிட்ட எதாவது முகேனைப் பத்தி சொல்லி இருக்காளா? அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிக்கும். உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, 


“நிவேதா எல்லார் கூடவும் ஒரே மாதிரி தான் பழகுவா.. முகேன் தான் நிவேதா மேல கூடுதலா அக்கறை காட்டி பார்த்திருக்கேன். ஆனா நீ சொல்றபடி இருக்காது. அப்படி இருந்தா நிவேதா என்கிட்டே சொல்லி இருப்பா.” என வினோதா சொல்ல, 


“உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவங்க லவ் பண்ணிகிறேன்னு சொல்லலை. ஆனா அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அது தெரியும்.” என ஆகாஷ் சொன்னதும், வினோதாவுக்கு ஆச்சர்யமே… 


“ஏன் சொல்லிக்கலை?” 


“முகேன் சொல்ல ரெடியா தான் இருந்தான். ஆனா நிவேதா தான் சொல்லவிடலை. அவதான் விலகி போயிட்டா. உங்க வீட்டுக்கு கூட அவ வரலை நியாபகம் இருக்கா.” 


“ஆமாம் நான் கூட அவங்க வீட்டுக்கு அன்னைக்குப் போய் இருந்தேன். அவ அழுதிருந்தது நல்லாவே தெரிஞ்சது. ஒ… இதுதான் காரணமா?” 


“ம்ம்…” 


“நிவேதா எல்லாம் அவங்க அக்கா மாதிரி தைரியமான ஆள் இல்லை. ஒரு விதத்துல அவ எடுத்த முடிவு சரிதான்.” 


“நிவேதா நல்லா இருக்கான்னு முகேனுக்குத் தெரியணுமாம். அப்பத்தான் கல்யாணம் பண்ணவே ஒத்துப்பான் போலிருக்கு.” என்றதும், 


“எருமை நல்லாத்தான் இருக்கும். இந்நேரம் ரெண்டு குழந்தையாவது இருக்கும் பாரு.” என்றால் வினோதா. 


மீண்டும் ஒருநாள் நண்பர்கள் வீடியோ காலில் பேசும் போது, வினோதாவுடன் தியாகுவும் வந்து சேர்ந்து கொண்டான். அன்று பிரவீனும், ஜெய்யும் இல்லை.


“பாஸ் எப்படிப் பாஸ், இந்த இம்சையை வச்சு சமாளிக்கிறீங்க?” என ஆகாஷ் கேட்க, 


“கஷ்டம் தான் என்ன பண்றது?” எனத் தியாகுவும் சேர்ந்து கிண்டல் செய்ய, 


“கஷ்டப்பட்டு எல்லாம் யாரும் இருக்க வேண்டாம்.” என வினோதா முறைக்க, 


“சோத்துல விஷம் வச்சுட போறா பாஸ். எதுக்கும் பார்த்து இருங்க. ” என அருண் சொல்ல…. 


“நீயே சொல்லித் தருவ போல….” என்றான் தியாகு. முகேன் முகத்தில் புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். 


ஹேமா தாமதமாகத்தான் அவர்களுடன் சேர்ந்தாள்… “இவ்வளவு நேரம் எங்க டி போன? என உமா கேட்க, ஹேமா ஒழுங்காகவே பதில் சொல்லவில்லை. அவள் மென்று விழுங்கினாள். அவள் முகமும் சரி இல்லை. 


“என்ன ஆச்சு எருமை சொல்லித் தொலை.” என ஆகாஷ் சொன்னதும், 


“என் பெரியப்பா பையன் சில நேரம் என்னை வண்டியில கொண்டு வந்து காலேஜ் விட்டுட்டு, சில நேரம் கூட்டிட்டும் போவானே நியாபகம் இருக்கா?” 


“ஆமாம் உன்னைக் கூப்பிட்டு போற சாக்குல, எங்களை எல்லாம் நல்லா சைட் அடிப்பான்.” வினோ சொல்ல, தியாகு மனைவியை முறைக்க… 


“அவன் பார்க்க நல்லாவே இருக்க மாட்டான்.” என்றால் வினோ கணவனிடம். 


“அப்ப ஓகே…” என்றான் அவனும். 


“நல்ல புருஷன் பொண்டாட்டி.” என ஆகாஷ் தலையில் அடித்துக் கொண்டான். 


“அவனுக்கு என்ன? அதுவும் நிவேதாவைத்தான் அதிகம் பார்த்து வைப்பான். நான் கூட நினைப்பேன், இவன் நிவேதாவை பார்க்கதான் வரானோன்னு.” 


“அவன் இன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தான்.” 


“இப்ப ரொம்ப முக்கியமா இது?” 


“இல்ல அவன் ஒரு விஷயம் சொன்னான்.”

“என்ன?” 


“ரெண்டு வருஷம் முன்ன தாம்பரம் ஜங்க்ஷன்ல வண்டியில ரோடு கிராஸ் பண்ணும் போது, நிவேதாவுக்குப் பெரிய ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம். ரொம்ப அடியாம், நிறைய ரத்தம் போயிடுச்சு… ஹாஸ்பிடல் போகும் போது உயிர் இருந்துச்சான்னு கூடத் தெரியலைன்னு சொன்னான். அதுதான் பயமா இருக்கு.” என ஹேமா படபடவென்று சொல்லிவிட்டு நெஞ்சில் கைவைக்க… 


உமாவுக்குப் பேச்சு மூச்சே இல்லை. முகேனின் நிலையோ சொல்லவே வேண்டாம். அவன் கணினி இருந்த மேஜையைக் போட்டு கையால் குத்தியபடி ஒரே கத்து. அவனுக்கு அதைத் தங்கவே முடியவில்லை. அவன் குத்திய குத்தில் லேப்டாப் எகிறி சென்று தரையில் விழ….. நல்லவேளை உடன் ஆகாஷும், அருணும் இருந்தனர். சத்தம் கேட்டு ஜெயஸ்ரீ பதறிக் கொண்டு வந்தார். 


முகேனை அருண் பிடித்துக்கொள்ள, கீழே விழுந்த லேப்டாப்பை எடுத்து ஆகாஷ் வைத்தான்.

 
ஜெயஸ்ரீ விவரம் கேட்க, அவரிடம் ஆகாஷ் நடந்ததைச் சொல்ல…
“ஐயோ…” என் அவரும் பதறிப் போனார். முகேன் அங்கருந்து எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் கண்கள் கலங்கியபடி இருந்தது.

 
“எனக்குப் படபடன்னு வருது.” என வினோதா சோபாவில் சாய்ந்து கொண்டாள். அவள் முகம் வெளிறி போய் இருக்க, ஏற்கனவே அவளுக்கு லோ பிபி உண்டு. தியாகு பயந்து போனான். 


“நீ வேற டென்ஷன் பண்ணாத.” என ஆகாஷ் கத்த, தியாகு மனைவிக்கு அதிர்ச்சி தெளியட்டும் என ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தான். 


““ஹேமா அப்புறம் என்ன ஆச்சு?” உன் அண்ணன் எதாவது சொன்னானா…” என அருண் கேட்க, 


ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க. ஆனா எந்த ஹாஸ்பிடல் தெரியலை. நான் அப்பவே உன்கிட்ட சொல்ல நினைச்சேன். உங்க அம்மாகிட்ட உன் நம்பர் கேட்டேன், அவங்கதான் உனக்குச் சொல்ல வேண்டாம் சொல்லிட்டாங்க சொல்றான். 


“வேற எதுவும் அவனுக்கு நிவேதாவைப் பற்றித் தெரியாதா?” 


“உனக்கு எதாவது தெரியுமான்னு அவன் என்னைக் கேட்கிறான்.”
“நிவேதா அப்போ தாம்பரம் ஏரியால தான் இருக்கணும்.”

“ம்ம்… ஆமாம்.” 


“இருப்பா தானே…” என வினோ பயத்துடன் கேட்க, 


“இருக்கணும். இருப்பான்னு நாம நம்புவோம்.” என்றான் ஜெய். 


அடுத்து என்ன செய்வது என்று தெரியாது எல்லோரும் ஒரு வித பீதியில் இருந்தனர். தவறாக எதுவும் நடந்திருக்கக் கூடாது என்பதே எல்லோரின் பிராத்தனையுமாக இருக்க… 


“இந்த உலகத்தில நிவேதா இல்லையா…” என எண்ணம் தோன்ற… முகேனுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. என்ன செய்கிறோம், எங்கே போகிறோம் என்றே தெரியாமல், முகேன் வீட்டை விட்டு கிளம்ப…. ஜெயஸ்ரீ தான் கவனித்து விட்டு சொன்னார். 


தியாகுவை விநோதவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, நண்பர்கள் முகேனை தேடி சென்றனர். முகேன் அவன் பாட்டுக்கு வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனின் பின்னே சென்று அவனை இழுத்து வந்தனர். 


“விடுங்க டா, நான் எங்காவது போறேன்.” என்றான்.
“என்னைப் பத்தி யோசிக்க மாடியா நீ. எனக்கு யாரு இருக்கா?” என ஜெயஸ்ரீ மகனைப் பார்த்துக் கேட்க, தாயின் கண்ணீர் வேலை செய்தது. முகேன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

“உடனே ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டதா சொல்றாங்க. கண்டிப்பா காப்பாத்தி இருப்பாங்க. நாம நிவேதாவை சீக்கிரம் பார்க்கிறோம்.” என ஆகாஷ் சொன்னதற்கு, முகேனும் சரி என்றான். நண்பர்கள் இரவு வரை இருந்துவிட்டே கிளம்பினர். 


வினோதாவை அழைக்க, தியாகு தான் எடுத்தான். “அவளைப் பார்க்கவே பாவமா இருக்கு. சுருண்டு படுத்திட்டா…. நிவேதா பத்தி எதாவது தெரிஞ்சாலும், என் பொண்டாட்டிக்கு சொல்லிடாதீங்க. இவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு.” என்றான். 


சாலை ஓரத்தில் இருந்து தான் அழைத்திருந்தனர். நண்பர்கள் மூவரும் தெருவில் நின்று அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தனர்.