இதயம் இணையும் தருணம் 


அத்தியாயம் 13 


அவளைத் தனியாக அனுப்ப முடியாது தானே வந்து விடுவதாக முகேன் சொல்ல…. அவளை விட்டுவிட்டு மீண்டும் அவன் இவ்வளவு தூரம் வர வேண்டும். அவன் இருக்கும் மனநிலையில் அவனை அலைய விட வேண்டாம் என நினைத்தவள், “நீங்க இருங்க, நான் ஆகாஷோட போறேன்.” என்ற நிவேதா, ஆகாஷுடன் பைக்கில் சென்றாள். செல்லும் வழியிலேயே அவள் சாருமாதியை அழைத்து என்ன நடந்தது எனக் கேட்க, 


“எனக்கு ஒன்னும் தெரியாதே… அப்பாவும் அம்மாவும் வழியிலேயே இறங்கி ஆட்டோவுல வீட்டுக்கு போயிட்டாங்க. என்கிட்டே அவர் ஒண்ணுமே சொல்லலை.” என்ற அக்காவிடம், நிவேதா அவள் அப்பா அழைத்துப் பேசியதை சொல்ல… 


“இதுக்கு மேல எல்லாம் இவர் என்ன வரன் பார்த்திட போறார். ஆனா நிவேதா நீ இன்னும் இவருக்குப் பயந்திட்டு இருந்தேனா… உனக்கு வர்ற நல்ல வாழ்கையை நீ இழந்திட்டு நிற்ப…” 


“முகேன் என்னையும் உன் அத்தானையும் சந்திச்சு பேசினார்.” என்றவள் விவரம் சொல்ல… நிவேதா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள். 


“நீ வீட்டுக்கு வா.. நானும் வந்திடுறேன். அவர் என்னதான் சொல்றார் பார்க்கலாம்.” எனச் சாருமதி வைத்து விட்டாள். 


ஆகாஷ் அவளை இறக்கி விட்டு சென்றுவிட… நிவேதா வீட்டுக்குச் சென்ற போது முரளி ஹாலில் தான் இருந்தார். அவர் கோபமாக இருக்கிறார் எனப் பார்த்ததும் தெரிந்தது. நிவேதா அதைக் கண்டும் காணாதவள் போல உள்ளே சென்றாள். 


“நீ நாளையில இருந்து வேலைக்குப் போகக் கூடாது.” என முரளி சொல்ல… 


“அப்படி உடனே எல்லாம் வேலையை விட முடியாது பா… நான் ஒரு வருஷம் அக்ரிமெண்ட் போட்டு தான் வேலைக்குச் சேர்ந்தேன். அவங்க ட்ரைனிங் கொடுப்பாங்க, வேலையைக் கத்துகிட்டு நாங்க வேற கம்பெனிக்கு போனா… அவங்களுக்குத் தானே நஷ்டம். அதனால அக்ரிமெண்ட் உண்டு.” என்றாள். 

“நாம வேணா பணம் கொடுத்திடலாம்.” என முரளி விடாமல் சொல்ல… 


“நான் எதுக்கு அப்படி வேலையை விடணும்? நான் விட மாட்டேன்.” என்றால் நிவேதாவும் பிடிவாதமாக. 


“என் வீட்ல இருந்தா நான் சொல்றபடி தான் நீ கேட்கணும்.” 


“நான் வேணா எதாவது ஹாஸ்ட்டல்ல போய் இருந்துக்கிறேன். இனியும் என்னைச் சின்னப் பொண்ணு மாதிரி நடத்தாதீங்க. எனக்கு முப்பது வயசு ஆகப்போகுது. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” என்றால் நிமிர்வாக. 


“எல்லாம் அவன் கொடுக்கிற தைரியம். முன்னாடி நீ இப்படி இல்லையே…” 


“அவன் இவன்னு எல்லாம் பேசாதீங்க. அவர் உங்க பெண்ணை இழுத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ண நினைக்கலை… முறையா தான் பொண்ணு கேட்டார்.” 

“அப்போ உனக்கு எல்லாம் தெரியும்.” 


“இப்பத்தான் எல்லாம் சொன்னாங்க.” 


அப்போது சாருமதி உள்ளே வர… “எல்லாம் உன்னால தான். உன்னைப் பார்த்துதான் உன் தங்கச்சியும் கெட்டு போயிட்டா…. நீயும் இவளுக்குக் கூட்டா… உன் புருஷன் அவங்ககிட்ட ரொம்பத் தெரிஞ்சவர் மாதிரி பேசினார்.” என முரளி கோபத்தை மூத்த மகளிடம் காட்ட… 


“அவர் உங்ககிட்ட சொன்ன மாதிரிதான் எங்ககிட்டயும் நிவேதாவை பிடிச்சிருக்கு, உங்க வீட்ல முறையா பேசலாம்னு இருக்கோம்னு சொன்னார்… சரி பேசுங்கன்னு சொன்னோம். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்.” என்றால் சாருமதியும் பதிலுக்குக் காட்டமாக. 


“இங்கப் பாருங்க அவளை எதுவும் சொல்லாதீங்க. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவளுக்கு இப்பதான் நாள் தள்ளி போயிருக்கு, அவளை டென்ஷன் பண்ணாதீங்க.” எனத் தேவகி சொல்ல…. முரளி மீண்டும் இளைய மகளிடம் கேட்டார். 


“நீ முடிவா என்ன சொல்ற?” 


“நான் வேலையை விட முடியாது பா…” என்றால் நிவேதாவும் உறுதியாக.

“வேலைக்குப் போவியா சரி போ… ஆனா நான் சீக்கிரம் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பேன்.” என்றார். 


“அவங்க நல்ல இடமா இருக்காங்க. பேசாம செஞ்சிட்டு போகாம.” எனத் தேவகி சொல்ல, 


“உனக்கு அவங்க வசதியை பார்த்ததும் புத்தி மழுங்கிடுச்சா…அவங்க வேற ஆளுங்க.” என முரளி மனைவியிடம் பாய…. 


“அதை நாம சொன்னாத்தான் தெரியும், நீங்க ஏன் சொல்றீங்க?” எனத் தேவகி சொன்னதும், முரளி மனைவியைத் தீ பார்வை பார்த்தார். 


“நீயே உன் பொண்ணுங்களுக்குச் சொல்லிக் கொடு.” என்றவர், 


“அதெல்லாம் ஒத்து வராது, அன்னைக்கு வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசினாங்க இல்ல… அவங்களயே திரும்பக் கூப்பிட்டு, நீங்க சொன்ன மாதிரி எங்களுக்குப் பிறகு எங்க மகளுக்குன்னு இப்பவே எழுதி கொடுக்கிறோம் சொன்னா.. ஒன்னும் பிரச்சனை இல்லை. அடுத்த முஹுர்தத்துல கல்யாணம் வைக்கப் போறேன்.” என முரளி சொன்னதும், தாய் மகள்கள் எல்லாம் அதிர்ச்சியாகப் பார்க்க… 


“என்னது அந்த மாப்பிள்ளையா?” என அதிர்ந்த தேவகிக்கு, தன் கணவர் நல்ல வரன் எல்லாம் தன் மகளுக்குக் கொண்டு வந்து விட மாட்டார் என்ற எண்ணம் வந்துவிட… வந்த நல்ல இடத்தை எதற்கு விட வேண்டும் என நினைத்தவர், 


“நான் நிவேதாவை முகேனுக்குத் தான் செய்யப் போறேன். போதும் இத்தனை நாள் உங்களை நம்பி நான் என் பொண்ணு வாழ்க்கையைப் பணயம் வச்சத்துக்கு, இப்ப வர்ற நல்ல இடத்தையும் விட்டா.. அவளுக்கு நீங்க ஒழுங்கான மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கக் மாட்டீங்க,” என்றதும், 


“உனக்கு அவ்வளவு திமிரா…. என்னைக் கேட்காம நீயே முடிவு பண்ணுவியா?” என முரளி மனைவியை அடிக்கப் பாய… நிவேதாவும் சாருமதியும் தடுக்க வர…

“சாருமதி நீ போய் உட்காரு.” என்ற தேவகி, 


“ஏன் நான் பெத்த பொண்ணுக்கு நான் மாப்பிள்ளை பார்க்க கூடாதா… என் வீட்ல எனக்குப் போட்ட நகையை நான் என் பெண்ணுக்கு போட்டுக் கல்யாணம் பண்ணுவேன்.” என்றவர், நிவேதா முகேன் அம்மாவுக்குப் போன் போட்டுக் கொடு…. நானே அவங்ககிட்ட பேசுறேன் என்றார். 


“என்கிட்டே முகேன் நம்பர் தான் மா இருக்கு.” என்றவள், முகேனை அழைக்க… நிவேதாவிடமிருந்து அழைப்பு என்றதும், அவன் பதறிக் கொண்டுதான் எடுத்தான். 


“சொல்லு நிவேதா…” 


“எங்க அம்மா உங்க அம்மாகிட்ட பேசணுமாம்?” என்றதும், சரி என்றவன், அருகில் இருந்த ஜெயஸ்ரீயிடம் விவரம் சொல்லிக் கொடுக்க… 


“சொல்லுங்க நிவேதா அம்மா.” 


“நீங்க இன்னைக்கு எங்க பெண்ணைக் கேட்டது நிஜம் தானே… அதுல ஒன்னும் மாற்றம் இல்லையே….” 


“இல்லை… நாங்க நிவேதாவை பிடிச்சு தான் கேட்டோம்.” 


“சரி அப்ப நீங்களே சீக்கிரமா கல்யாணத்துக்கு நாள் பாருங்க. அவங்க அப்பாவுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை. அதனால எங்களால எந்த வேலையும் பார்க்க முடியாது. நான் என்னால என்ன செய்ய முடியுமோ, அதை என் பொண்ணுக்கு செய்யுறேன்.” என்ற தேவகிக்கு அழுகையில் தொண்டை அடைக்க… 


“அதெல்லாம் நாங்க எதிர்ப்பார்க்கலை… உங்க பெண்ணை நீங்க எங்களுக்குத் தந்தா போதும், நான் அவளை நல்லா பார்த்துப்பேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். தைரியமா இருங்க.” என ஜெயஸ்ரீ ஆறுதலாகப் பேச… 


“சரி நீங்களே எல்லாம் பார்த்துக்கோங்க.” எனச் சொல்லிவிட்டு தேவகி வைத்து விட்டார். 


“அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா நீ…” என முரளி கேட்க, 


“எந்த உலகத்தில இருக்கீங்க நீங்க. பதிமூணு பதினாலு வயசு பொண்ணுங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் படிச்ச மேதாவிகள் சிலர் கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழுறாங்க. இன்னும் சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் இந்தக் காலத்தில நடக்குது.” 

“உங்க பெண்ணைப் பிடிச்சிருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு முறையா தானே அவங்க வீட்ல கேட்டாங்க. நல்ல இடமா இருக்கு செஞ்சிட்டு போறதுக்கு என்ன?” 


“அவங்க பழக்க வழக்கம் நம்ம பழக்க வழக்கம் வேற வேற இல்லையா….” 


“என்ன பழக்கவழக்கம்? நாம கும்பிடுற சாமியைத்தான் அவங்களும் கும்பிடுறாங்க. முன்னாடி காலத்திலேயாவது கூட்டு குடும்பத்தில இருப்பாங்க… அனுசரிச்சுப் போறது கஷ்டம்னு சொல்லலாம். இருக்கப் போறது மூணு பேரு… நிவேதா அவங்க வீட்டுக்கு ஏத்த மாதிரி பழகிப்பா… நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.” 


எது சொன்னாலும் பதிலை தயாராக வைத்திருந்த மனைவியைப் பார்த்து முரளிக்குக் கோபமாக வந்தது. 


“என் சம்மதம் உங்களுக்கு முக்கியமா படலை இல்லை… நான் எதுவுமே செய்ய மாட்டேன். உங்க இஷ்டத்துக்கு நீங்களே பண்ணிக்கோங்க.” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். 


“எப்படி மா இப்படி?” எனச் சாருமதி ஆச்சர்யப்பட… 


முகேன், ஜெயஸ்ரீ இருவரையும் தேவகிக்குப் பிடித்திருந்தது. அதோடு அவர்கள் அலுவலகம் வீடு என எல்லாமே அவருக்குத் திருப்தியாக இருந்தது. மகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலேயே, அவர் தன் கணவனை எதிர்க்கவும் துணிந்தார். 


முதலில் தங்களைப் பற்றித் தெரிந்தால்….. நல்ல எண்ணம் தோன்றும் என்ற ஜெயஸ்ரீயின் நம்பிக்கை வீணாக வில்லை. தேவகியும் புரிந்து கொண்டார். முரளியின் வறட்டுப் பிடிவாதத்திற்கு மகளைப் பலியிட அவர் விரும்பவில்லை. 


உடம்பு முடியாமல் போனதில் இருந்து விட்டிடுந்த மது பழக்கத்தை முரளி மீண்டும் ஆரம்பித்தர். வீட்டுக்கே வாங்கி வந்து குடித்தார். அதைப் பார்த்து நிவேதாவுக்கு வருத்தமாகப் போய்விட்டது. குடித்து விட்டு வாய்க்கு வந்தபடி பேசவும் செய்தார். 


“அம்மா எனக்குக் கல்யாணம் எல்லாம் வேண்டாம் மா…” என்றவள் கண்கலங்க… 


“அவர் இந்தக் கல்யாணத்தை நிறுத்த எதாவது பண்ணிட்டு தான் இருப்பார். நீ எதையும் கண்டுக்காத.” என்றவர், “சாரு, நீயே இருந்திருந்து இப்பத்தான் உண்டாகி இருக்க… இங்க அடிக்கடி வாராத…. எதுனாலும் போன்ல பேசு போதும்.” என மூத்த மகளையும் அனுப்பி வைத்தார். 


முரளி மகள்களுக்குத் தெரியாமல் குடித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவர் அறையில் அளவாகக் குடிப்பார். இப்போது வேண்டுமென்றே எதோ மகளால்தான் குடிப்பது போல நாடகம் போட்டார். 


நிவேதா உணவு உண்டுவிட்டு அவள் அறையில் படுத்தவளுக்கு, அவள் அப்பா அம்மா அவர்கள் அறையில் வாக்குவாதம் செய்வது கேட்டுத்தான் இருந்தது. 


ஐயோ அம்மாவைப் போட்டு ஒருவழியாக்கி விடுவாரே எனக் கவலையாகவும் இருந்தது. முகேனை அழைக்கவில்லை என்றால்… அவன் எதுவும் நினைத்துக் கொள்ளப் போகிறான் என அவனை அழைத்தாள். 


“சொல்லு நிவேதா, எதுவும் பிரச்சனை இல்லை தான…” என முகேன் கேட்க, 


“இல்லை… அம்மாதான் உங்க அம்மாகிட்ட பேசினாங்களே…” 


“ம்ம்… ஆமாம் நிஜமா என்னால நம்பவே முடியலை. நம்ம கல்யாணம் நடக்கப் போகுதா….நீ இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பும் போது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. எப்படிப் பேசி எப்படிச் சம்மதிக்க வைக்கப்போறோம்னு கவலையா இருந்தது.” என முகேன் பேச பேச… 


முகேனிடம் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாமல் தான் தவித்தது நிவேதாவுக்கும் நினைவு வந்தது. 


“உங்க அப்பா எப்படி இருக்கார்? ரொம்பக் கோபமா இருக்காரா?” 


“ம்ம் ஆமாம்.” என்றவள், முரளியின் நடவடிக்கை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தன் தந்தையை அவள் குறைவாகச் சொல்ல விரும்பவில்லை. 


“கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்.” என்றவன், 


“அம்மா ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளா இருக்கு, அன்னையில இருந்து கல்யாண வேலை ஆரம்பிக்கலாம் சொன்னாங்க.” என்றான். 

“சரி…. நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம்.” 

முகேன் நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்க… எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வினோதா, ஹேமா உமா என நிவேதாவை அழைத்துப் பேசினர். 


மறுநாள் எப்போதும் போல நிவேதா வேலைக்குக் கிளம்பி சென்றாள். முரளி அவளை முறைத்தபடி உட்கார்ந்து இருந்தார். 


அன்று அலுவலகம் விடுமுறைதான். ஆனால் புது அலுவலகத்தில் வேலை இருந்தது. அப்போதுதான் திங்கட்கிழமை மற்றவர்கள் வந்து வேலையைத் துவங்க எளிதாக இருக்கும்.
முகேன் ரயில் நிலையத்தில் இருந்து அவளைக் காரில் அழைத்துச் சென்றான். 


“நானே இனிமே உன்னை ஸ்டேஷன்ல இருந்து கூடிட்டு போய், திரும்பச் சாயந்திரம் விடுறேன். ஹப்பா நம்ம கல்யாணம் முடிவாச்சு… இனி இதுக்கெல்லாம் பார்க்க வேண்டாம்.” என அவன் புன்னகைக்க… நிவேதாவும் பதிலுக்குப் புன்னகைத்தாள். 


இவர்கள் சென்ற போது, ஏற்கனவே மற்ற வேலைகளுக்கும் ஆட்கள் வந்திருக்க…. அந்த அலுவலகத்தில் இருந்து லாரியில் பொருட்கள் வந்து இருக்க… அதை உரிய இடத்தில் பொருத்தினர். 


நிவேதா முகேனின் அறையில் முக்கியமான கோப்புகளை அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஆகாஷ், அருண், ஜெய் மூவரும் முகேனுக்கு உதவ வந்திருந்தனர்.
நிவேதாவை தேடி வந்து பேசியவர்கள், “ஏய் உனக்குக் கல்யாணமாமே?” என ஆச்சர்யப்பட… 


“நம்பவே முடியலை இல்ல…” என ஜெய் சொல்ல… “வாழ்த்துக்கள்.” என்றான் அருண். 


“எதோ ரெண்டு அம்மாக்களோட புண்ணியத்துல இந்தக் கல்யாணம் நடக்குது. நிவேதா வீட்ல சொல்லனும்னு எல்லாம் காத்திருந்தா… முகேன் உனக்கு அறுபதாம் கல்யாணம் தான்.” என ஆகாஷ் கேலி செய்ய… முகேன் சிரிக்க, நிவேதா அவனைப் பொய்யாக முறைத்தாள். 


அந்த லுவலகத்தில் இருந்து வந்த கணிகிகளை, உரிய இடத்தில் வைத்து பொருத்தும் வேலையை நண்பர்கள் செய்தனர். மதியத்திற்கு உணவு ஆர்டர் செய்து அங்கேயே எல்லோரும் சேர்ந்தே உண்டனர். மாலை நான்கு மணி போல வேலை எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்ப… ஆகாஷ் நிவேதாவை தான் விடட்டுமா என முகேனிடம் கேட்க, 


“டேய், நாங்க இன்னும் லவ்வே சொல்லலை டா… இனியாவது மனசு விட்டு பேசுறோம்.” என முகேன் சொல்ல… 


“சரி பொழச்சுப் போ…” என நண்பர்கள் கிளம்பி சென்றனர். 


அவர்கள் சென்றதும் அலுவலக வாயிலை சாற்றிக் கொண்டு வந்த முகேன், நிவேதா இருந்த அறைக்குச் செல்ல… அவளும் வீட்டுக்கு செல்லக் கிளம்பி கொண்டிருந்தாள். 


“அவங்க எல்லாம் எங்க?” 


“அவனுங்க போயிட்டாங்க.” 


“போயிட்டாங்களா?” என நிவேதா ஒருமாதிரி கேட்க, 


“ஏன் என்னோட தனியா இருக்கப் பயமா?” என முகேன் கேட்க, 


“எனக்கு என்ன பயம்?” என்றாலும், அவனைப் பார்க்க கூடத் தயக்கமாக இருந்த்தது.
அவள் அருகில் சென்றவன், “நேத்து நீயா தான என் மேல சாஞ்ச.” என அவனே அவளை இதமாக அனைத்துக் கொண்டான். 


“நிவேதா எனக்குக் கிடைப்பான்னு எல்லாம் நான் நினைச்சதே இல்லை.” என்றவன், அவள் நெற்றியில் இதழ் ஒற்ற….. நிவேதா பேசும் மனநிலையிலேயே இல்லை. அவன் மார்போடு இன்னும் ஒன்றிக்கொள்ள… 


“எதாவது சொல்லு நிவேதா.” என்றான். 


“நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள். 


அவள் ஆசையில் சொல்வது போல இல்லை. திருமணம் முடிவதற்குள் முரளி இன்னும் என்னென்ன செய்வாரோ என்ற அச்சத்திலேயே சொன்னாள். ஆனால் முகேனிடம் காரணம் சொல்லவில்லை. 


“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். ஓகே வா.” என்றான். 

பிரிய மனமில்லாமல் இருவரும் சிறிது நேரம் அந்த தனிமையை, அணைப்பை இழக்க விரும்பாமல் அப்படியே இருந்தனர். ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும். முகேன் அவனே விலகி “போகலாமா…” என அவளைப் பார்த்து கேட்க, நிவேதாவும் சரி என்றாள். 


அவளை அவனே வீடு வரை காரில் அழைத்துச் சென்றான். செல்லும் வழியில் அவளிடம் நிறையப் பேசினான். 


அவள் அப்பா எதாவது கோபமாகப் பேசி விடுவாரோ என்ற அச்சத்தில் நிவேதா முகேனை வீட்டிற்குள் அழைக்கவில்லை. அவனும் புரிந்து கொண்டு அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.