இதயம் இணையும் தருணம்

அத்தியாயம் 12 



அடுத்தடுத்து வந்த நாட்களில் முகேனுக்கு அதிக வேலைகள் இருந்தது. அன்று நிவேதாவை வெளியே அழைத்துக் கொண்டு சென்று வந்தது தான். அதன் பிறகு அவள் முகம் பார்த்து பேசக் கூட அவனுக்கு நேரம் இல்லை. நிவேதாவுக்கே சில நேரம் சந்தேகம் வரும். நாம அன்னைக்கு இவங்களோட தான் வெளிய போனோமா என்று… அவன் அப்படித்தான் வேலை வேலையென்று இருந்தான். 


நிவேதாவும் தினமும் மாலை வீட்டிற்குச் செல்வதற்கு முன், முகேனின் அறை சென்று, அவன் சொன்னது போல அங்கிருந்து பைல்களுக்கு எண்கள் போட்டு, அதை தனியாக குறித்தும் வைத்தாள். 


திறப்பு விழாவுக்கு வர வேண்டும் என நிவேதாவின் பெற்றோரை முகேனும் ஜெயஸ்ரீயும் போன்னில் அழைத்தனர். அதே போலச் சாருநதி, மனோகருக்கு முகேன் அழைப்பு விடுத்திருந்தான். 


நாம போக வேண்டுமா என்ன? நிவேதா மட்டும் போனால் போதாதா? என முரளி கேட்க, 

“இன்னைக்கு நிவேதா இப்படி இருக்கக் காரணம், அவங்க தான். எப்படி இருந்த பொண்ணு, இன்னைக்கு நல்ல மனநிலையில் இருக்க, அங்க வேலைக்குப் போனதுதான் காரணம்.” 


“இத்தனை வருஷம் வீட்ல இருந்தவளுக்கு யார் வேலை கொடுத்திருப்பா? அவங்கதானே கொடுத்தாங்க. அதனால அவங்க கூப்பிடும் போது நாம போகாம இருக்கிறது மரியாதையா இருக்காது. நாம போயிட்டு வந்திடலாம்.” எனத் தேவகி எடுத்து சொல்ல.. முரளியும் சரி என்றார். 


வெள்ளிக்கிழமை காலை பூஜை இருக்க… அதற்கு நிவேதா மட்டும் முதலில் கிளம்பி சென்று விட்டாள். பட்டுப் புடவை அணிந்து அதற்கு ஏற்ற வகையில் ஆபரணங்கள் அணிந்து அழகாக வந்திருந்தாள். 


அன்றுதான் வருங்கால மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். நிவேதவைப் பார்த்ததும் ஜெயஸ்ரீக்குத் திருப்தியாக இருந்தது. 


வாசலை துடைத்துக் கோலம் போட்டு, மஞ்சள் குங்குமம் வைப்பது எல்லாம் நிவேதாவையே ஜெயஸ்ரீ செய்ய வைத்தார். முகேன் உதவிக்கு ஒருவரை வைத்துக் கொண்டு வாசலில் பூக்களால் தோரணம் கட்டினான். அதே போல அலுவலகத்தின் உள்ளேயும் அங்கங்கே பூக்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தான். 


வாடகை கட்டிடம் தானே… பூசாரியை வைத்து சிறிய பூஜை மட்டும் போட்டனர். சொந்தகளுக்கு எல்லாம் அழைப்பு இல்லை. அவனிடம் வேலைப் பார்க்கும் அலுவலர்கள் மட்டும் இங்க வந்து பூஜையில் கலந்து கொண்டு, காலை உணவை உணவிட்டு, அந்த அலுவலகம் சென்று விட்டனர். அடுத்த நாள் அலுவலகத்தை இங்கே மாற்றுவதால்… அவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறைதான். அதனால் இன்று விடுமுறை கொடுக்கவில்லை. 


அலுவலகத்தினர் வந்துவிட்டுச் செல்லும்போது முகேன் ஜெயஸ்ரீயை விட்டு எல்லோருக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கச் சொன்னான். 


ஒன்பது மணிக்கு அலுவலர்கள் எல்லாம் கிளம்பி சென்று விட… அதன் பிறகு நண்பர்கள் வந்தனர். குடும்பத்துடன் வருவதால் தாமதமாகத்தான் வந்தனர். அன்றுதான் ஆகாஷ், ஜெய் மற்றும் அருண் எல்லாம் தங்கள் மனைவிமார்களையும் அழைத்து வந்திருக்க, உமாவும் கணவனோடு வந்திருந்தாள். 

வினோதா மகளை அழைத்துக் கொண்டு வந்திருக்க… ஹேமா ஹைதராபாத் சென்று விட்டதால் அவள் வர முடியவில்லை.


சற்று நேரத்தில் நிவேதாவின் பெற்றோரும் வந்துவிட்டனர். மனோகரும் சாருமதியும் அவர்கள் காரிலேயே அழைத்து வந்திருந்தனர். ஜெயஸ்ரீயும் முகேனும் அவர்களை வரவேற்று அழைத்து வந்து அலுவலகத்தைச் சுற்றி காட்டினார்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து உணவருந்தினர். 


மனோகரும் முகேனும் நன்றாகப் பேசிக்கொண்டது பார்த்து முரளிக்கு ஆச்சர்யமாக இருந்தது. 


“எங்க வீடு போற வழியில தான். எங்க வீட்டுக்கு வந்திட்டு போங்க. நானும் உங்களோடவே வீட்டுக்கு வந்திடுறேன்.” என நிவேதாவின் குடும்பத்தினரை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு ஜெயஸ்ரீ கிளம்பினார். 


அவர்கள் சென்றதும் இங்கே நண்பர்கள் குடும்பம் அரட்டையில் இறங்கினர். முகேன், நிவேதா பற்றி ஆகாஷ் அவன் மனைவி ஸ்வேதாவிடம் சொல்லி இருக்க… 


“நிவேதா நல்லாதானே இருக்காங்க. நீங்க சொன்னபடி ஒன்னும் இல்லையே…” என ஸ்வேதா சொல்ல… அப்போது நிவேதா அங்கே இல்லை. வந்திருந்த குட்டீஸ் எல்லாம் அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்க… அவள் அவர்களை ஒரு அறையில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தாள். உடன் முகேன் இருந்தான். அவன் களைப்பில் ஓரமாகப் படுத்து உறங்கி இருந்தான். 


“கொஞ்சம் குண்டா இருந்தா… இப்ப இளைச்சிட்டா…” என வினோதா சொல்ல… 


“இவளும் தான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லியா இருந்தா… இப்ப அப்படியா இருக்கா….” எனக் குழந்தை பிறந்த பிறகு குண்டான தன் மனைவியைக் காட்டி ஆகாஷ் சொல்ல… ஸ்வேதா அவனை முறைத்தாள். 


“என்ன டி முறைக்கிற?” 


“கல்யாணம் ஆனதும் குழந்தை வேணும். அப்படி லேட்டானாலும் உங்களை யாரும் கேட்க மாட்டாங்க, எங்களைத் தான் கேட்பாங்க. நாங்க வயித்தை கிழிச்சு பெத்து கொடுக்கணும். அப்புறம் உடம்பும் போட்டுடாம நாங்க ஸ்லிம்மா வேற இருக்கணுமா?” 


“கல்யாணத்துக்குப் பிறகு ஒல்லியாதான் இருக்கோம். உங்க பிள்ளையைப் பெத்த பிறகுதான் இப்படி ஆகிடுறோம்.” என ஸ்வேதா வைத்து வாங்க… 


“இதை ஒன்னு சொல்லிடுங்க.” என ஆகாஷ் மேலும் வாய் விட…ஸ்வேதா அவனை முறைத்தாள். 


“டேய் உன்னோட கிரைம் ரேட் ஏறிட்டே போகுது, மூடிட்டு இரு.” என்ற வினோதா… 


“கரெக்ட் ஸ்வேதா… குழந்தை பிறந்த பிறகு வெயிட் போட்டிடுறோம். அப்புறம் அதைக் குறைக்க நமக்கு நேரம் இருக்கா என்ன? குழந்தையை வளர்க்கத்தான் நேரம் சரியா இருக்கு. அதுக்குள்ள நமக்கே அப்படி இருந்து பழகிடுது.” என்றாள். 


“நான் உன்னை அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்.” என ஜெய் அவன் மனைவி கவிதாவிடம் சொல்ல… 


“சொல்லித்தான் பாருங்களேன்.” என்றால் அவள். 


“இந்தச் சீனா மாடல் பொம்மை மட்டும் எப்படி அப்படியே இருக்கு.” என அருண் உமாவை காட்டி கேட்க, 


“நானும் தான் டா வெயிட் போட்டிருந்தேன். குள்ளமா வேற இருக்கேனா வெயிட் போட்டா நல்லாவே இல்லை. அப்புறம் கஷ்டப்பட்டுக் குறைச்சிட்டேன்.” 


ஸ்வேதா இன்னும் கோபமாக இருக்க, அதை உணர்ந்த ஆகாஷ் அவளிடம் சாரி சொல்ல… “சொல்றது எல்லாம் சொல்லிட்டு அப்புறம் என்ன சாரி.” என அவள் கோபத்தை விட மறுக்க… 

“உனக்கு இது தேவையா?” என்பது போல பார்த்த வினோதா, கால்ல விழு என செய்கை காட்ட… வீட்டுக்கு போய் என்றான் ஆகாஷும். அதை பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


அங்கே நிவேதா வீட்டினரை அழைத்துச் சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்த ஜெயஸ்ரீ, தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொன்னவர், “நிவேதா பத்தி வினோதா சொன்னா, எங்களுக்கு நிவேதாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. என் பையனுக்கும் பிடிச்சிருக்கு. என் பையனுக்கு நிவேதாவை கல்யாணம் பண்ணித் தர சம்மதமா?” என நேரடியாகக் கேட்டவர், 


“நாங்க இந்த ஜாதி எல்லாம் பார்க்கிறது இல்லை. என் பெண்ணே காதல் திருமணம் தான். வேற ஆளுங்க தான். நல்லாதான் இருக்கா… நீங்க வீட்ல போய்ப் பேசிட்டு சொல்லுங்க. உங்ககிட்ட கேட்காம சொல்லக் கூடாதுன்னுதான் நிவேதாகிட்ட கூட இதைப் பத்தி பேசலை.” என்றார். எங்கே நிவேதாவை தவறாக நினைத்து விடப் போகிறாரோ என்று. 


முரளி முகம் மாறித்தான் போனது. அதை ஜெயஸ்ரீயும் கவனித்து இருந்தார். அவர்கள் சென்றதும் முகனை அழைத்துச் சொன்னவர், அவர் யோசிச்சு சொல்லட்டும் என்றார். 


அன்று மதியம் முகேன் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதாக இருந்தது. எல்லோரும் கிளம்பி ஹோட்டலுக்கு இரண்டு கார்களில் சென்றனர். இவர்களே நிறையப் பேர் இருந்ததால்… தனி ஏசி அறையில், எல்லோரும் ஒரே பெரிய மேஜையில் சேர்ந்து உட்கார்ந்து உண்டனர். 


உணவுண்டு நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி விட, முகேனும் நிவேதாவும் மட்டும் மீண்டும் அலுவலகம் வந்தனர். இன்றே முகேனின் அறையை ஒழுங்கு செய்து விடலாம் என இருவரும் வேலையில் இறங்கினர். 


முகேன் அறையில் அடுக்க வேண்டிய பொருட்களை உரிய இடம் பார்த்து இருவரும் வைத்தனர். நிவேதா இப்போது சுடிதாருக்கு மாறி இருந்தாள். 


அப்போது நிவேதாவின் கைப்பேசி அழைக்க…. எடுத்து பார்த்தால் முரளி, எடுத்ததும், “எங்கப் போன நீ… எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்.” என்றார். 


“சாப்பிட போயிருந்தேன் பா… செல்லை இங்கயே வச்சிட்டு போயிட்டேன்.” 


“சரி நீ எப்போ வீட்டுக்கு வர?” எனக் கேட்க, 


“இன்னைக்கு எனக்கு ஆபீஸ் பா, லீவ் இல்லை.” என்றாள். 


“சரி இனிமே அங்க வேலைக்குப் போக வேண்டாம். ரொம்பத் தூரமா இருக்கு. தினமும் போய்ட்டு வர்றது கஷ்டம். வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு வந்திடு.” என்றார். 


திடிரென்று அவர் அப்படிச் சொன்னதும் நிவேதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 


“ஏன் பா?” என்றவள், “நான் வந்ததும் பேசிக்கலாம் பா… அப்படி ஒன்னும் தூரம் இல்லை.” என வைத்து விட்டாள். 


முகேனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவள் அப்பா சொன்ன விஷயம் மனதை பாதிக்கவே செய்தது. 


நாளையில் இருந்து வேலைக்கு வர முடியாதா? இனி முகேனைப் பார்க்க முடியாதா என நினைத்ததும் கண்களில் கண்ணீர் வழிய… முகேன் அதைப் பார்த்து விட்டான். 


“உங்க அப்பா என்ன சொன்னாரு?” எனக் கேட்க, அவள் அப்பா வேலைக்குச் செல்ல வேண்டாம் எனச் சொன்னதாகச் சொல்ல…. முகேனின் முகமே மாறி விட்டது. கோபத்தை அடக்க முடியாமல் நின்றான். இதற்கு மேல் நிவேதாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது என நினைத்தவன், 


“எங்க அம்மா இன்னைக்கு நம்ம கல்யாணத்தைப் பத்தி உங்க அப்பாகிட்ட பேசினாங்க. உன்னைப் பெண் கேட்டாங்க. அதுதான் உங்க அப்பா இப்படிச் சொல்ல காரணம்.” என்றான்.


“ஏன் முகேன் அப்படிப் பண்ணீங்க? எங்க அப்பா ஜாதி விட்டுக் கல்யாணம் பண்ண எல்லாம் ஒத்துக்க மாட்டார். இனிமே இங்க என்னை வேலைக்கும் விட மாட்டார்.” 


“தெரியும், நீ இப்படித்தான் சொல்வேன்னு தெரியும். உன்கிட்ட பேசி பிரோஜனம் இல்லைன்னுதான், உங்க அப்பாகிட்ட அம்மா பேசுறேன்னு சொன்னாங்க. அப்புறம் வேற என்ன பண்ண சொல்ற? நீ என்னைப் பார்க்கிறதே போதும்னு இருக்க… என்னால அப்படி இருக்க முடியாது.” என்றதும், நிவேதா கண்ணீரோடு அவனைப் பார்க்க… 


“என்ன எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்றான் முகேன். 


“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நாம திரும்பப் பார்க்காம இருந்திருக்கலாம், நீங்களாவது நிம்மதியா இருந்திருப்பீங்க. இல்லைனா நான் அன்னைக்கு அந்த விபத்துல செத்து போய் இருந்திருக்கலாம். இப்படி நான் எல்லோர் நிம்மதியும் கெடுத்திட்டு இருக்க வேண்டாம் .” என நிவேதா சொன்னதும், முகேனுக்கு அப்படியொரு கோபம் வந்தது. 


“உனக்கு இங்க நான் படுற பாடு புரியலை. உனக்குச் செத்து போகனுமா? சரி செத்து போ… இப்பவே செத்து போ டி….” என முகேன் அவளைப் பிடித்துத் தள்ளி விட்டவன், 

“நான் செத்ததெல்லாம் போக மாட்டேன். எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ, எங்க அம்மாவும் அவ்வளவு முக்கியம். அவங்களைத் தவிக்க விட மாட்டேன். ஆனா நடைபிணமா தான் வாழ்வேன். உனக்கு அதுதான் வேணும்னா செத்து போ….” என முகேன் கத்த…. 


“உங்களுக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வேணாம்ன்னு தான் அப்ப விலகி போனேன். ஆனா திரும்ப உங்களைப் பார்த்து, அதே நிலைக்கு நானே தள்ளிட்டேன்.” என நிவேதா புலம்ப… 


“அப்போ இப்பவும் உங்க அப்பாகிட்ட நமக்காகப் பேச மாட்ட?” 


“நான் பேசினாலும் அவர் கேட்கணும் இல்ல…” 


“நிவேதா ஒன்னு புரிஞ்சிக்கோ, உனக்குப் பதினெட்டு வயசு இல்லை இப்போ…  இந்த வயசில கூட உனக்காக முடிவெடுக்க மாட்டியா?” முகேன் கேட்க, நிவேதா யோசித்தாள். 


ஆகாஷும் ஜெய்யும் அவர்கள் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்தனர். முகேனும் நிவேதாவும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்க… அதுவும் இரண்டு பேரின் முகத்தைப் பார்த்ததும், போகும் போது நல்லா தானே இருந்தாங்க, அதுக்குள்ள என்ன ஆச்சு? என நினைத்தவர்கள், முகேனை கேட்க, அவன் நடந்ததைச் சொன்னான். 


“நிவேதா, உனக்கு நிறையத் தெரியாது. உன்னை முகேன் தேடினதுனாலதான் நாங்க எல்லாம் தேட ஆரம்பிச்சோம். அப்பவும் நீ கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருந்தா போதும், நான் அவளைப் பார்க்க வேண்டாம்னு தான் சொன்னான்.” 


“உன்னைப் பத்தி விசாரிச்ச போது, உனக்கு விபத்து நடந்தது தெரிஞ்சு அவன் எப்படி இருந்தான் தெரியுமா? அந்த ஹாஸ்பிடல்ல உன்னைப் பத்தி கேட்க கூட அவ்வளவு பயம். எங்காவது நீ நல்லா இருக்கேன்னு நினைச்சுக்கிறதா சொன்னான். வேற எதுவும் ஆகியிருந்தா அவனால தாங்க முடியாதுன்னு தான். ஆனா நல்லவேளை நீ நல்லபடியா இருந்த, அப்பவும் உனக்குக் கல்யாணம் ஆகி இருந்தா…. அவன் உன்னைத் தேடின சுவடே தெரியாம விலகி தான் இருப்பான். ஆனா உனக்குக் கல்யாணம் ஆகலை.” 


“உன்னைத் திரும்ப அந்த மால்ல தான் பார்த்தோம். ஆனா உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே, உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கிட்டே சொல்லிட்டான்.” 


“இப்பவும் உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு சொல்லித்தான் உன் வீட்ல பேசினது. ஆனா இப்ப நீதான் முடிவு பண்ணனும். உனக்கு முகேன் வேணுமா வேண்டாமான்னு நீதான் முடிவெடுக்கணும். ரெண்டு பேர் வாழ்க்கையும் இப்ப உன் கையில தான் இருக்கு.” என ஆகாஷ் எல்லாவற்றையும் விளக்கி சொன்னான். 


அவனுக்கு இவ்வளவு மன உளைச்சல் கொடுத்து விட்டோமே என நிவேதாவுக்கு வருத்தமாக இருக்க… ஆனால் அவள் அப்போது எதவும் சொல்லவில்லை. அவளுக்கே வீட்டுக்கு சென்றால் என்ன நடக்கும் என்று தெரியாது. 

“பேசாம நீங்க ரெண்டு பேரும் முதல்ல பதிவுத் திருமணம் பண்ணிக்கோங்க. அப்புறம் அவங்க வீட்ல உங்களைப் பிரிக்க முடியாது.” என ஜெய் சொல்ல…

“வேண்டாம் நான் அப்படி எங்க அப்பாவுக்கு தெரியாம பண்ண மாட்டேன். எதுனாலும் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டே பண்ணலாம்.” என்றால் நிவேதா.


அவள் வீட்டிற்குக் கிளம்ப… அவளுடன் ஆகாஷும் ஜெய்யும் வெளியே செல்ல… 


“நிவேதா ஒரு நிமிஷம்.” என முகேன் சொன்னதும், நிவேதா மட்டும் மீண்டும் உள்ளே சென்றாள். தானியங்கி கதவு தானாக மூடிக்கொள்ள…. இங்கே வா என்பது போல முகேன் தலையசைத்தான். 


அவன் அருகில் சென்று அவள் நின்றதும், “என்னைக் கல்யாணம் செஞ்சிப்பியா தெரியாது. ஆனா தப்பா எந்த முடிவுக்கும் போயிட மாட்ட தான…” என உயிரை பிடித்துக் கொண்டு அவன் கேட்க, 


நிவேதா அடக்க முடியாத அழுகையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இப்போதும் அவளுக்காகத்தானே நினைத்துத் தவிக்கிறான் என்று புரிந்தது. 


“நான் திரும்ப வருவேன் முகேன்.” என நிவேதா சொல்ல…. முகேன் அவளை லேசாக அனைத்துக் கொண்டான். 


“எதுவா இருந்தாலும் எனக்குச் சொல்லு…. வீணா மனசை போட்டு குழப்பிக்காத. நானும் அம்மாவும் உங்க வீட்ல வந்து பேசுறோம்.” எனத் தைரியம் சொல்லியே அவளை அனுப்பி வைத்தான்.