Advertisement

“எனக்கென்னப்பா வேணும்… என் மருமக இங்கே வந்து இவ்ளோ நாளாச்சு, நீ எங்கயுமே கூட்டிட்டுப் போகலை… அவளை எங்காவது வெளிய கூட்டிட்டுப் போ, சந்தோஷப் படுவா…” என்றார்.

“ஆமாம் அத்தான்… நான் அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்பிருவேன், ஒரே ஒரு நாள் என்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போறிங்களா… உங்களோட வெளியே சுத்தணும்னு ஆசையா இருக்கு, என் செல்ல அத்தான்ல ப்ளீஸ்…” என்றாள். உதட்டை சுளித்துக் கொண்டு, தலையை சரித்து அவள் கேட்டது சிறுவயதில் அவன் முன்னில் நின்று கேட்ட குட்டி பிரீத்தியை நினைவு படுத்த, அவன் இதழில் சிறு புன்னகை நெளிந்தது.

“ஓகே… நாளைக்குக் காலைல ரெடியாரு, போகலாம்…” என்றான்.

“வாவ் சூப்பர், அத்தான்… தேங்க் யூ சோ மச்…” என்றவள் அவனைக் கட்டிக் கொள்ள, ஹர்ஷாவின் முகம் சுருங்கியது. ஆனால் நல்ல மூடில் இருந்ததாலோ என்னவோ… சஞ்சய் கோபப்படாமல் அவளை நாசூக்காய் விலக்கி விட்டான்.

“ஹர்ஷூவையும் கூட அழைச்சிட்டுப் போயேண்டா…” ரேணுகா கூறவும், மனதுக்குள் எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டு அவனை ஏறிட்டாள் ஹர்ஷா.

“உங்களுக்கு கால் வலிக்குதுன்னு சொன்னிங்களேம்மா… ஹர்ஷா உங்களோட வீட்டுலயே இருக்கட்டும்…” என்று அவன் கூறவும் அவள் மனது காற்று போன பலூனானது. அதைக் காட்டிகொள்ளாமல் நின்று கொண்டிருந்தாள் அவள்.

“ஹர்ஷா… உன்னோட ஸ்பெஷல் சுக்கு காபி வேணும், கிடைக்குமா…” என்றான். அதுவரை மனதுக்குள் சுணங்கிக் கொண்டு முகத்தில் காட்டாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தவள், அவன் காபி கேட்டதும் சுறுசுறுப்பானாள்.

“இதோ ஒரு நிமிஷத்தில் கொண்டு வரேன்…” என்றவள் அடுக்களைக்குள் நுழைய, “ஹர்ஷூ… அப்படியே எனக்கும்…” என்று குரல் கொடுத்தாள் பிரீத்தி. அவர்களை சோபாவில் அமர்ந்து சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரேணுகா.

சற்று நேரத்தில் சஞ்சய் மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான்.

கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே ரேணும்மா கையில் இருந்த புத்தகத்தில் கண்ணைப் பதித்திருக்க, அவர் காலில் எண்ணை தேய்த்து நீவிக் கொண்டிருந்தாள் ஹர்ஷா.

தொலைக்காட்சியைப் பார்த்து போர் அடிக்கவே எழுந்து அங்கே வந்தாள் பிரீத்தி.

அவளை ஏறிட்டவர், “என்ன மருமகளே, டீவி பார்க்கலையா…” என்றார்.

“ப்ச்… போர் அடிக்குது அத்தை…” உதட்டைச் சுளித்தாள் அவள்.

“ம்ம்… சரி வா,  இப்படி உக்கார்…” என்றார்.

“என்ன புக் படிக்கறீங்க அத்தை, இங்கே இங்கிலீஷ் புக் ஏதும் இல்லையா…”

“நான் தமிழ் நாவல் தான் படிப்பேண்டா… சஞ்சு ரூம்ல இங்கிலீஷ் புக்ஸ் இருக்கும், அவன் தான் அதெல்லாம் படிப்பான்…”

“ஓ…” என்றவள் அவர் அருகில் இருந்த ஒரு நாவலை எடுத்துப் புரட்டிப் பார்த்தாள்.

“உனக்கு தமிழ் படிக்கத் தெரியுமா பிரீத்தி…” என்றாள் ஹர்ஷா.

“பேச தான் தெரியும்… கொஞ்சம் கொஞ்சம் எழுத்து கூட்டிப் படிப்பேன், நான் ஒவ்வொரு எழுத்தையும் கூட்டி ஒரு பக்கம் படிச்சு முடிக்கறதுக்குள்ளே ஒரு நாள் ஆகிடும்… அதுனால நான் அதைத் தொடறதே இல்லை…” என்றாள் அவள்.

“ம்… தமிழ் எவ்ளோ அழகான லாங்குவேஜ் தெரியுமா, அதைப் படிக்கறதும், எழுதறதும் ஒரு சுகமான அனுபவம்…” என்றாள் ஹர்ஷா.

“ஹர்ஷூ உன்னோட நேட்டிவ் கேரளா தானே… அப்புறம் எப்படி உனக்கு தமிழ் மேல இவ்ளோ கிரேஸ்…”

“நான் பிறப்பால மட்டும் தான் மலையாளி… என் அப்பாவோட சின்ன வயசுல இருந்தே நாங்க தமிழ் நாட்டுல தான் இருக்கோம்… நான் பிறந்தது வளர்ந்தது படிச்சது சுவாசிச்சது  எல்லாமே தமிழ் தான்… எனக்கு மலையாளத்தை விட தமிழ் தான் ரொம்பவும் பிடிக்கும், ஐ லவ் தமிழ் வெரி மச்…” என்றாள் உற்சாகத்துடன்.

“ஓ… சரி எனக்கு ஒரு டவுட்… நீ கோவில்ல சாமி கும்பிடும்போது மனசுக்குள்ளே எந்த பாஷைல வேண்டிக்குவே…” என்றாள் யோசனையுடன்.

“இதென்ன கேள்வி… தமிழ்ல தான் வேண்டிப்பேன்…”

“ம்ம்… எதாவது அதிர்ச்சியான விஷயம் நடக்கும்போது எந்த பாஷைல சத்தம் போடுவே…”

“அப்பவும் தமிழ்ல தான் பேசுவேன்… இதெல்லாம் எதுக்குக் கேக்கறே…”

“ஒரு சினிமால சொல்லுவாங்களே… அதிர்ச்சியில நாம நம்ம தாய் மொழியில் தான் பேசுவோம்னு, அப்ப அது உண்மை இல்லையா…”

“அது நாம உபயோகிப்பது போல தான் வரும்… நான் எந்த நேரமும் தமிழே பேசும்போது எனக்கு அதான் தாய்மொழி போல… கண்டிப்பா நான் மலையாளத்துல கத்த மாட்டேன்…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம்… ஒரு மலையாளிப் பொண்ணு தமிழ் பத்தி இவ்ளோ புகழ்ந்து பேசும்போது, ஒரு தமிழ்ப்பொண்ணு நான்… தமிழ் படிக்க எழுதத் தெரியாம இருக்குறது ரொம்ப பேட்… அதனால நீ என்ன பண்ணுறே, ப்ரீயா இருக்கும்போதெல்லாம் எனக்கு தமிழ் சொல்லித் தர்றே… என்ன அத்தை, நர்சை, டீச்சர் ஆக்கிடுவோமா…” என்றாள் ரேணுகாவிடம்.

அவர்கள் பேசுவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர், “அதெல்லாம் ஓகே தான்… ஆனா பாடம் சொல்லித் தர்ற குருவுக்கு தட்சணை கொடுக்க மறந்திடாதே…” என்றார்.

“கண்டிப்பா கொடுத்திடலாம் அத்தை…” என்றவள், “குருவே… இப்போதே என்னை உங்கள் மாணவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்…” என்று தலை தாழ்த்தி கை கூப்பி நின்றாள்.

“சரி… சரி… ஏற்றுக் கொண்டோம் சிஷ்யையே, ஹஹா… அம்மா, பிரீத்தி சுபாவத்துல அப்படியே உங்களைக் கொண்டிருக்கா… உங்களோட கேலியும், குறும்பும் குறையாம அவகிட்டயும் இருக்கு…” என்று சிரித்தாள் ஹர்ஷா.

“ஹஹா… என் மருமக உடம்புல ஓடுறது என் ரத்தம் இல்லியா… அதான், அவளும் என்னைப் போலவே இருக்கா…..” என்று மருமகளை தோளோடு அணைத்துக் கொண்டார் ரேணுகா.

அங்கே வந்த ராணி, “குடிக்க எதாவது கொண்டு வரட்டுமாம்மா…” என்றார்.

“ஹலோ கிட்சன் குயின்… எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்…” என்று பிரீத்தி கூற, “எனக்கு எதுவும் வேண்டாம் ராணி, நைட் சாப்பிட முடியாது…” மறுத்துவிட்டார் ரேணுகா.

“ஹர்ஷூ… அத்தைக்கு கால் வலி சரியாகிடுச்சாம், நீ பிடிச்சு விட்டது போதும்… வந்து எனக்கு தமிழ் சொல்லிக் கொடு…” என்றாள் பிரீத்தி.

“நாளைல இருந்து சொல்லித்தரேன் பிரீத்தி… இன்னைக்கு எனக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்…” என்றாள் ஹர்ஷா.

“ஏன்மா… என்ன விசேஷம்…” என்றார் ரேணுகா.

என் தங்கையும், அவ பிரண்டும் சென்னைல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னேன்ல… அவங்க நாளைக்கு காலைல ட்ரெயின்ல கிளம்புறாங்கம்மா, அதான் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போகணும்… நான் கிளம்பட்டுமா…” என்றாள் தயக்கத்துடன்.

“ம்ம்… சரிம்மா, நீ கிளம்பு…” என்றவர், “இதைக் கையில் வச்சுக்கோ…” என்று பணத்தை எடுத்துக் கொடுக்க, “வேண்டாம்மா…” மறுத்தாள் ஹர்ஷா.

“அடடா… நான் சும்மா கொடுக்கலை, கடன்தான்… உன் சம்பளத்துல பிடிச்சுக்கிறேன், தங்கைக்கு ஏதாவது வாங்கிக் கொடு…” என்றார் ரேணுகா. அவர் அப்படிக் கூறியதும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அவளுக்குத் தேவையும் இருந்தது.

“அம்மா… நைட் சாப்பிட்டு மாத்திரை போட மறந்திட மாட்டிங்களே…”

“அத்தைக்கு நைட் மாத்திரை கொடுக்க வேண்டியது என் பொறுப்பு… நீ பயப்படாம கிளம்பு ஹர்ஷூ…” என்றாள் பிரீத்தி. அவள் கிளம்பியதும் ரேணும்மாவிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாள் பிரீத்தி.

“அத்தை… நான் வந்து இவ்ளோ நாளாச்சு, விக்ரம் ஏன் வரவே இல்லை… ரெண்டு தடவை என்னோட போன்ல பேசினதோட சரி… வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை…”

“ம்ம்… அவனுக்கு வரணும்னு தான் இருக்கும், லீவ் போட்டுட்டு வந்தா சஞ்சு திட்டுவான்னு தான் அவன் வர மாட்டேங்குறான்…” என்றார் ரேணுகா.

“ஓ… அதானா விஷயம், இந்த அத்தான் ஏன்தான் இப்படி எல்லாத்தையும் மிரட்டிகிட்டு இருக்காரோ தெரியலை…” என்றாள் அவள்.

“ம்ம்… அவனுக்கும் கல்யாணம் ஆகி பொண்டாட்டி, குழந்தைன்னு ஆகிட்டா மாறுவானோ என்னவோ, அந்தக் கடவுளுக்கு தான் வெளிச்சம்…” ரேணுகா நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.

“அவர் ஏன் அத்தை கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறார்… ஏதாவது லவ் பெயிலியரா…” என்றாள் பிரீத்தி.

“அப்படில்லாம் ஒண்ணும் இல்லைம்மா, அவனுக்கு பிசினஸ் தான் பொண்டாட்டி போல… அது பின்னாடிதான் சுத்திட்டு இருக்கான்…” என்றார் அவர் சலிப்புடன்.

“ம்ம்… என்றவளின் கண்ணுக்குள், இந்த அத்தானுக்கு என்ன குறைச்சல், எவ்ளோ அழகா கம்பீரமா ஹீரோ போல இருக்கார்… நல்ல படிப்பும் இருக்கு, பணமும் இருக்கு… அத்தைக்கு வேண்டியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கலாமே…” அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே அவளது அறைக்கு சென்றாள்.

************

“ஹாய் அக்கா, வந்துட்டியா… ஏன்க்கா லேட் ஆகிருச்சு…”

ஸ்கூட்டி சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த வர்ஷா கேட்க புன்னகைத்தாள் ஹர்ஷா.

“ஒண்ணும் இல்லைடா, கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்துச்சு… அதான் லேட், தீபா எங்கே…” கேட்கும்போதே அடுக்களையில் இருந்து வெளியே வந்தாள் தீபா.

“வாங்கக்கா… காபி தரட்டா…” என்றாள்.

“அய்யோ… வேண்டாம் தாயே, எங்களுக்கு நீ போட்டுக் கொடுத்த காபி கஷாயமே போதும்… என் அக்காவுக்கு நான் சூப்பரா காபி போட்டுக்கறேன்…” மறுத்தாள் வர்ஷா.

“அக்கா… இவளைப் பாருக்கா, இன்னைக்கு இவ தான் சமைக்கப் போறேன்னு நம்மளை எல்லாம் பலிகடா ஆக்கப் பாக்குறா…” என்று குற்றம் சொல்லிக் கொண்டே அவள் கொண்டு வந்த கவரை வாங்கிக் கொண்டு பின்னில் வந்த தங்கையைக் கண்டு சிரித்தாள் ஹர்ஷா.

“இவங்க ரெண்டு பேரும் இப்படியே தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க… எப்படித்தான் சென்னைல ஒண்ணா இருக்காங்களோ…” என்றார் உமா.

“அங்க நாங்க சண்டையே போட மாட்டோம்மா… இது சும்மா, உல்லுல்லாயி… அங்க சண்டை போட்டா ஆண்ட்டி குச்சி எடுத்துடுவாங்களே…” என்றாள் வர்ஷா.

“அக்கா… எதுவும் சொல்லக் கூடாது, நைட் என்னோட சமையல் தான்… வேற வழியே இல்லை, இன்னைக்கு எனக்கு மாட்டின பரிசோதனை எலிகள் நீங்கதான்… சூடா சப்பாத்தியும் சன்னாவும் ரெடி ஆகிட்டு இருக்கு, பரிசோதனைக்கு நீங்க தயாரா இருங்க…” என்று தீபா கூற வர்ஷா தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஹஹா… நீ எப்படி செய்தாலும் நாங்க சாப்பிடுவோம்டா, உனக்குத் தெரிஞ்ச போல பண்ணு…” என்றாள் ஹர்ஷா.

“ம்ம்… வெரி குட், அக்கான்னா அக்கா தான்…” என்றவள், ஹர்ஷாவின் கன்னத்தில் முத்தமிட, “ஏய் போடி, நானும் தான் அக்காவுக்கு முத்தம் குடுப்பேன்…” என்று மறு கன்னத்தில் முத்தமிட்டாள் வர்ஷா.

அவர்கள் செய்வதை புன்னகையுடன் பார்த்து நின்றார் உமா.

“சரி இந்தாங்க, உங்களுக்கு சுரிதார் வாங்கிட்டு வந்தேன்… எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” என்றவள் இருவரிடமும் கவரை நீட்டினாள்.

ஒரே போல டிசைனில் வேறுபட்ட வண்ணத்தில் இருந்த அந்த சுரிதாரைக் கண்டதும் இருவரின் முகமும் மலர்ந்தது.

“வாவ்… எனக்குப் பிடிச்ச புளூ கலர்…” என்றாள் வர்ஷா.

“வாவ், எனக்குப் பிடிச்ச லாவண்டர் கலர்…” என்றாள் தீபா. இருவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம்.

“இது என் செல்ல அம்மாவுக்கு…” என்று அன்னையிடம் ஒரு கவரை நீட்டியவள், “இது தீபாவோட அம்மாவுக்கு ஒரு சேலை… நேர்ல வந்து குடுக்கணும்னு நினைச்சேன், இப்போ வர முடியாது… நீங்களே கொடுத்திடுங்கடா…” என்று ஒரு கவரைக் கொடுத்தாள்.

“எனக்கு எதுக்குடா இப்போ வாங்கினே… என்ற அன்னையிடம்,

“எப்பவாவது தானேம்மா, இருக்கட்டும்…” என்று சிரித்தாள்.

“எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தியே… உனக்கு எங்கேக்கா…” என்றாள் வர்ஷா.

“எனக்கு ரேணும்மா வாங்கிக் கொடுத்த ரெண்டு சுரிதார் அப்படியே இருக்கு… அதை உங்களுக்குக் கொடுக்கலாம்னு தான் நினைச்சேன், அவங்களுக்குத் தெரிஞ்சா வருத்தப் படுவாங்க… அதான், புதுசாவே வாங்கிட்டு வந்துட்டேன்… உங்களுக்குப் பிடிச்சிருக்கா…” என்றாள்.

“எல்லாமே உன்னை மாதிரி அழகா இருக்குக்கா… எங்களுக்குப் பிடிச்ச கலரா பார்த்து எடுத்திட்டு வந்திருக்கே, ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்றாள் வர்ஷா.

“ம்ம்… நாளைக்கு சென்னை கிளம்பப் போறீங்க, புது ஆபீஸ்ல சேர்ந்ததும் எனக்கு எல்லா விவரமும் போன்ல சொல்லுங்க… இப்போதைக்கு அம்மாவுக்கு டிராவல் பண்ண முடியாது… அவங்களை தனியா விட்டுட்டு வரவும் முடியாது… கொஞ்ச நாள் போகட்டும், நாங்க ரெண்டு பேரும் சென்னை வரோம்…” என்றாள் ஹர்ஷா.

அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எந்த மாதிரி சூழலில் தங்கையை அழைத்து வர சென்னை செல்லப் போகிறோம் என்பது பற்றி.

“சரிக்கா… எங்க பிரண்ட்ஸ் வொர்க் பண்ணுற ஆபீஸ் தான், நாங்க அங்க போயி இண்டர்வியூ அட்டென்ட் பண்ணதும் உனக்கு எல்லா விவரத்தையும் சொல்லறேன் கா…” என்றாள் வர்ஷா.

“சரிம்மா, நான் குளிச்சிட்டு வந்திடறேன்….” அவளது அறைக்குள் நுழைந்த ஹர்ஷாவின் மனதில் சற்று நேரம் மறந்திருந்த சஞ்சய் பேசிய வார்த்தைகள் மீண்டும் அலையடிக்கத் தொடங்கின.

பிரியமானவனே… உன்

பிரியத்தை ஏனடா

பிடிவாதத்திற்குள் மறைத்து வைக்கிறாய்…

பிரியமில்லாத உன் பார்வைக்கு முன்

பிரிவொன்றும் பெரும் வலியல்லடா…

என் இதயத் தடாகத்தில்

உன் நினைவுகளின் சலசலப்பு…

என் கண்கள் முழுதும்

கனாக்களின் அணிவகுப்பு….

கூரான உன் பார்வையில்

மழுங்கிப் போவது நான் மட்டுமல்ல…

என் இதயமும் கூடத்தானடா…

சிந்தையை நீயே சிதைக்கிறாய்…

சிந்தனையில் நிதமும் சிரிக்கிறாய்…

Advertisement