கையைப் பிசைந்தபடி போர்ட்டிகோவில் தேவிக்காய் காத்திருந்த விஜயா ஆட்டோ வந்து நிற்கவும், வேகமாய் ஒரு குடையுடன் கேட் அருகே சென்றார்.
“அ..அக்கா, ஆட்டோவுக்குக் காசு கொடு..த்திருங்க…” எனச் சொல்லி முடிக்குமுன் தேவி மயங்கி விழப்போக வேகமாய் தாங்கிக் கொண்டார்.
பதட்டத்துடன், “தேவிம்மா…” என எழுப்ப முயல, அந்த ஆட்டோக் காரரும் ஓடி வந்து மறுபுறம் பிடிக்க இருவருமாய் அவளை வீட்டுக்குள் அழைத்து வந்து சோஃபாவில் அமர்த்தினர்.
சட்டென்று முடிந்து போன நிகழ்வுகள் மனதுக்குள் வரிசை கட்டி வர, உடலோ இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால் முகம் மட்டும் கோபத்தில் சிவந்து ஜொலித்துக் கொண்டிருந்தது.
“தேவிம்மா, முதல்ல போயி நனைஞ்ச சேலையை மாத்துங்க. உடம்பெல்லாம் நடுங்குது பாருங்க…” என்றவர், “ஏன்தான், இந்த விக்ரம் தம்பி இப்படிப் பண்ணுறாரோ?” எனப் புலம்பியபடி அவள் தலையை டவலால் துடைத்தார்.
அவரிடமிருந்து டவலை வாங்கிக் கொண்டு எழுந்தவள் மாடியில் அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள். உடல் குளிரில் நடுங்கினாலும் மனதில் கோபத்தின் வெப்பம் நிறைந்திருந்தது.
கதவைத் திறந்ததும் சில்லென்ற ஏசி அவளது குளிர்ந்திருந்த தேகத்தை இன்னும் நடுங்க வைத்தது.
கோபத்துடன் விக்ரமைத் திட்ட நினைத்து உள்ளே சென்றவளை ஜீரோவாட்ஸ் லைட் வெளிச்சம் வரவேற்க, விக்ரம் உறங்கத் தொடங்கி இருந்தான். டீப்பாயின் மீதிருந்த காலி மதுக் குப்பியும், ஆம்லெட் பிளேட்டும் கண்டவளுக்கு அவன் நிலை புரிந்தது.
உடல் நடுங்கிக் கொண்டிருந்தாலும் கோபத்துடன் அருகில் சென்றவளுக்கு, இடுப்பில் மட்டும் ஷார்ட்ஸ் அணிந்து வெற்று மார்புடன் கட்டிலில் ஒரு காலும், ஒரு காலைக் கீழே தொங்கப் போட்டும் அலங்கோலமாய் படுத்திருந்தவனைக் கண்டதும் ஆத்திரமாய் மாறியது. ஆனாலும் போதையில் சுயம் மறந்து படுத்திருப்பவனிடம் என்ன கேட்பது என நினைத்து வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.
உடல் வேறு வெடவெடக்கத் தொடங்கி இருந்தது. அதற்குமேல் தாங்க முடியாமல் மாற்று உடையுடன் குளியலறைக்குச் சென்றவள் அந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் மேலுக்கு ஊற்றினாள். கண்கள் கலங்கth தன் நிலையை எண்ணிக் கண்ணீர் விட்டாள்.
‘கடவுளே! இன்று மட்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால், நான் என்ன செய்வேன்? மனதில் கடுகளவும் இரக்கமில்லாத அரக்கனா இவன்? கொஞ்சம் கூட யோசிக்காமல் கொட்டும் மழையில், இரவு நேரத்தில் தெருவில் இறக்கி விட்டுப் போகும் அளவுக்குக் கல் நெஞ்சமா இவனுக்கு? இப்படிப்பட்ட ஒருவனிடம் அன்பை யாசித்துப் பெற்று எனக்கென்று ஒரு வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?’ அவள் மனதில் இத்தனை நாளும் அவனுக்காய் ஒதுக்கி வைத்திருந்த நேசமும், அந்தத் தண்ணீரில் கரையத் தொடங்க நெஞ்சமெங்கும் அவன்மேல் வெறுப்பு நிறையத் தொடங்கியது.
உடல் சோர்வும், மனச் சோர்வும் அவளை அழுத்த உடையை மாற்றிக் கட்டிலுக்குக் கீழே பாய் விரித்துப் படுத்தாள்.
உடல் மிகவும் நடுங்கியது.
‘ஏசியை ஆஃப் பண்ணி விடலாமா? ‘என யோசித்தவளுக்கு எழக் கூட முடியாத அளவுக்கு உடம்பு அசதியில் வலித்தது.
காய்ச்சல் வரும் போலிருந்தது. போர்வையை எடுத்துத் தலையோடு போர்த்திக் கொண்டவள் தனை மீறி அலுப்பில் உறங்கிப் போனாள். சிறிது நேரத்தில் காய்ச்சலில் அனத்தத் தொடங்கினாள்.
ஏதேதோ நினைவுகள் கனவில் வந்து அச்சுறுத்த, முழுமையாய் உறங்க முடியாமல் அரைகுறை மயக்கத்தில் இருந்தவள் அப்படியே சோர்ந்து உறங்கிப் போயிருந்தாள்.
தன்னை மறந்து நல்ல உறக்கத்தில் இருந்த விக்ரமுக்குச் சட்டென்று உறக்கம் கலைந்தது. மதுவின் போதை விலகியிருக்க. தலை பாரமாய் உணர்ந்தவனுக்குச் சட்டென்று முன் தினம் இரவு நடந்ததெல்லாம் மின்னலாய் மனதில் வந்து போக வெடுக்கென்று கண் திறந்தான்.
‘ஐயையோ! கோபத்தில் யோசிக்காமல் அவளை மழைல இறக்கி விட்டு வந்தமே, வீட்டுக்கு வந்தாளா, இல்லியான்னு தெரியலியே?’ மனம் அடித்துக் கொள்ள மனசாட்சி கேலி பேசியது.
‘ஆமா, கோபம் வந்தா பின்விளைவுகள் எதையும் யோசிக்காம கிறுக்குத்தனம் பண்ண வேண்டியது. இப்ப உக்கார்ந்து புலம்பு… பாவம் இந்தப் புதிய ஊருல, மழைல எப்படி வீட்டுக்கு வர்றதுன்னு தெரியாம அந்தப் பொண்ணு எத்தனை கஷ்டப் பட்டாளோ? தெரியாத இடத்துல ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா? அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா?’ எனக் கேட்க அதற்கு மேல் அவனால் உறங்க முடியவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவனின் பார்வைக்குக் கீழே படுத்திருந்த தேவியின் உருவம் நிழலாய் தெரிய, அவளிடமிருந்து வந்த அனத்தல் ஒலியில் அதிர்ந்தவன் இறங்கி அருகே சென்றான்.
சுவரிலிருந்த சுவிட்சைத் தட்ட அறை வெளிச்சமானது.
தலையோடு போர்த்திப் படுத்திருந்தவளின் உடல் வெடவெடவென நடுங்குவதை வெளியிலிருந்தே உணர்ந்தவன் வேகமாய் அவளை நெருங்கி மெல்லப் போர்வையை விலக்க முயன்றான்
அவள் அதை நன்றாய் சுருக்கி இறுக்கிப் பிடித்தபடி படுத்திருக்க, முதலில் ஏசியை அணைத்தவன் அவள் போர்வையை மெல்ல விலக்கி நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் சுட்டது.
“மஞ்சக்கிளி, ஏய்ய்… எழுந்திருடி…” என்றவன் அவளை எழுப்ப முயல, அவளிடம் முனகலைத் தவிர வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை. அவள் நடுங்கிக் கொண்டே படுத்திருக்க அவனுக்கு மனதில் ஒரு கலக்கம் தொற்றிக் கொண்டது.
மெல்ல அவளைப் போர்வையோடு தூக்கியவன் கட்டிலில் படுக்க வைத்தான். அப்போதும் அவள் நடுக்கம் நின்ற பாடில்லை. அதற்கு மேல் யோசிக்காமல் அவள் போர்வையை விலக்கி அவள் உள்ளங்காலைத் தேய்த்துவிட்டுச் சூடாக்கினான்.
அவளது உள்ளங்கையில் அவன் தன் கையால் உரசிச் சூடாக்க முயல, அவளோ நடுக்கத்துடன் அவன் கையைப் பற்றிக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
அதில் திகைத்தவன் மெல்ல அவள் நெற்றியில் வருடிக் கொடுத்து தன் கையை மெல்ல உருவிக் கொண்டான்.
“உஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” என நடுங்கியபடி அவளது அனத்தல் குரல் அறையெங்கும் நிறைந்திருக்க கட்டிலில் இருந்த தனது பிளாங்கெட் எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டான்.
உடலைக் குறுக்கிக் கொண்டு ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருந்தவளுக்கு அது கொஞ்சம் சுகமாய் இருந்திருக்க வேண்டும். இப்போது அனத்தல் சற்றுக் குறைந்திருந்தது.
அவளையே பார்த்தபடி அருகே அமர்ந்திருந்தவனுக்குத் தன்னை நினைத்தே வெறுப்பாய் வந்தது. அவளது இந்த நிலைக்குத் தானே காரணம் என்ற குற்றவுணர்வு தோன்றியது.
‘சாரிடி, மஞ்சக்கிளி… என்னை மன்னிச்சிரு, நான் எந்தத் தப்பும் பண்ணாமலே அடுத்தடுத்து என்னைக் குற்றவாளியா நிக்க வைக்கவும் என்னால தாங்கிக்க முடியல. இனி எல்லாத்தையும் மறந்திட்டு மெல்ல உன்னை ஏத்துக்கணும்னு கூட மனசுல நினைச்சேன்… என்னதான் போதைல இருந்தாலும் நான் உன்னைக் கர்ப்பமாக்கிட்டேன்னு சொல்லுறதை என்னால இப்பவும் நம்பவோ ஏத்துக்கவோ முடியல. நான் அவ்வளவு கேடு கெட்டவன் இல்ல… அப்படி என்னையே அறியாம ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம, அவ கூட உறவு வச்சுக்கற அளவுக்கு நான் பொம்பளைப் பொறுக்கி இல்ல. அப்புறம் எப்படி என்னால நீ கர்ப்பமாக முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காம என்னால நிம்மதியா உன்னோட வாழ முடியும்னு தோணல…
அதே நேரம் உன் கர்ப்பத்துக்கு நான் காரணமில்லேன்னு உறுதியா சொன்னா, உன் கர்ப்பத்துக்கு யாரு காரணம்னு அடுத்த கேள்வி வரும். அது உன்னைச் சந்தேகப்படற போல ஆயிடும். அதை உன்னால தாங்கிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்… நானும் உன்னைச் சந்தேகப்படவெல்லாம் இல்லை. அதான் எதையும் நான் யோசிக்கக் கூடாதுன்னு போதையை ஏத்திக்கறேன். கோபத்துல என்ன பண்ணறோம்னு தெரியாம உன்னையும் கஷ்டப் படுத்திட்டேன்.’ என்றவன் மெல்ல அவளது கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டான்.
அவள் கண்களிலிருந்து சூடாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மெல்ல அதைத் துடைத்து விட்டு அருகில் படுத்துக் கொண்டான்.
அவளையே பார்த்திருந்தவனுக்கு உறக்கம் வரவில்லை. தேவியின் சோர்ந்த முகம் கண்டு என்ன நினைத்தானோ, அருகே நெருங்கிப் படுத்த விக்ரம் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, உடல் சூட்டின் சுகத்தில் அவளும் அவனிடம் வாகாய் ஒட்டிக் கொண்டாள்.
அவளது அனலாய் கொதித்த சூடு அவன் தேகத்தில் பரவி வியர்க்க வைத்தது. இருந்தாலும் தன் அணைப்பில் அனத்தல் நின்று போயிருக்க, அவள் அமைதியாய் உறங்குவது கண்டு அவளை விலகாமல் அணைப்பிலேயே வைத்திருந்தான் விக்ரம்.
‘ச்சே… நான் எத்தனை கொடுமைக்காரனா இருந்திருக்கேன். இவளை மழைல நனைய விட்டு வந்ததால தான் இப்படி ஒரு கஷ்டம். பாவம், எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ? இனி அந்தக் கருமம் பிடிச்ச பாட்டிலைத் தொடக் கூடாது. அது என்னை மறக்க வைக்குதோ இல்லியோ மிருகமாய் மாற்றிடும் போலிருக்கு…’ என ஏதேதோ யோசித்தபடி அவனும் உறங்கிப் போயிருந்தான்.
காலை ஏழு மணிக்கு விக்ரம் கண் விழிக்க, தேவி அப்போதும் அவன் மார்பில் தான் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தாள். மெல்ல அவளை விலக்கிப் படுக்க வைத்தவன் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, இப்போதும் காய்ச்சல் அப்படியே இருந்தது.
எழுந்து குளியலறைக்குள் நுழைந்தவன் வெளியே வரும்போதும், தேவி உறங்கிக் கொண்டிருந்தாள். கீழே சென்றவன் விஜயாவிடம்,
“சரி, சூடா ஒரு காபி போட்டுக் குடுங்க, தேவிக்கு மாத்திரை கொடுக்கணும்…” எனவும் அவனைப் பார்த்தவர்,
“தேவிம்மாவுக்கு காய்ச்சலா தம்பி… நேத்து அவங்க மழைல அப்படி நனைஞ்சிட்டு வரும்போதே நினைச்சேன்… பாவம், வரும்போதே ரொம்ப அசதியா இருந்தாங்க. மயங்கி விழப் போனாங்க…” என்றவரிடம், என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன், “வரவர நான் ரொம்ப மோசமா நடந்துக்கறேன்ல…” என்றான் எங்கோ பார்த்தபடி.
இதற்கு விஜயா என்ன பதில் சொல்லுவார். அவர் பரிதாபமாய் அவனைப் பார்த்து நின்றார்.
“தேவிம்மா பாவம், நல்ல பொண்ணு தம்பி… குடும்பத்துக்கேத்த பொண்ணு… எனக்கு வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல. நான் காபி எடுத்திட்டு வர்றேன்…” என்றவர் ஒரு சின்ன பிளாஸ்க்கில் காபியை ஊற்றி இரண்டு கப்புகளையும் ஒரு டிரேயில் வைத்து எடுத்து வர, சோஃபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்தான்.
“குடுங்க, நான் கொண்டு போறேன்… நீங்க சீக்கிரம் டிபன் ரெடி பண்ணிட்டுச் சொல்லுங்க…” என்றவன் மாடிக்கு காஃபியுடன் செல்ல விஜயாவின் முகம் சற்று மலர்ந்தது.
‘கடவுளே! தான் செய்தது தப்புன்னு விக்ரம் தம்பிக்குப் புரிஞ்சதே… அதுவே பெரிய விஷயம். இனி இப்படி நடந்துக்காம அந்தப் பொண்ணோட நல்லபடியா குடும்பம் நடத்தினா சரி. அதுக்கு நீதான் அருள் புரியணும் முருகா…’ என மனதில் நினைத்தபடி சென்றார்.
“தேவி… தேவி… இங்க பாரு மா, கண்ணைத் திற…” அவன் எழுப்ப முயல மெல்ல அசைந்தவள் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தாள். சட்டென்று எதுவும் புரியாமல் திகைத்தவளுக்கு எதிரில் கண்ட கணவனின் முகம் எல்லாவற்றையும் நினைவு படுத்தச் சட்டென்று எழுந்து அமர்ந்தாள். தான் கட்டிலில் இருப்பது புரியவும் அதிர்ந்தவள், அவனை முறைப்புடன் நோக்கினாள்.
அவனை எரிப்பது போல் பார்த்தவள் அவனது கையை விலக்கி விட, அவளது கோபத்தை உணர்ந்து கொண்டவன், “ஸ..சாரி தேவி, நேத்து நான் அப்படி நடந்து கிட்டிருக்கக் கூடாது. ஏதோ கோபத்துல பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு…” என்றவனை அத்தனை முடியாத போதும் முறைத்து வைத்தவள் எதுவும் சொல்லவில்லை.
“ப்ளீஸ், இந்தக் காப்பியைக் குடிச்சிட்டு காய்ச்சல் மாத்திரை போட்டுக்க, கொஞ்ச நேரம் கழிச்சு டாக்டரைப் பார்த்திட்டு வரலாம்…”
“போதும், உங்க அக்கறையும், சக்கரையும் எல்லாம் என்னன்னு நேத்தே நல்லாத் தெரிஞ்சுகிட்டேன். எனக்கு இப்ப உங்ககூட சண்டை போடக் கூடத் தெம்பில்ல, அதனால பேச வேண்டாம்னு பார்க்கறேன்…” படபடத்தபடி சொன்னவளைக் கனிவுடன் பார்த்தவன்,
“எனக்கு உன் ஃபீலிங் புரியுது… நான் செய்தது தப்புதான். ப்ளீஸ், இப்ப இந்த காப்பியைக் குடி…” எனச் சொல்ல அவளால் நிற்கக் கூட முடியாமல் இருக்க, ஓரமாய் சாய்த்து வைத்திருந்த பாயை விரித்துப் படுக்கப் போனவளை அவன் முறைத்தான்.
“காய்ச்சலா இருக்கும்போது தரையில படுக்க வேண்டாம்னு தான் கட்டில்ல படுக்க வச்சேன். காபியைக் குடிச்சிட்டு கட்டில்ல படு…”
“எதுக்கு? இல்ல எதுக்குன்னேன்? உங்களுக்கு ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரித் தோணும். நான் இங்கயே படுத்துக்கறேன்…” என்றவள் பாயில் படுக்கப் போக வேகமாய் அதைப் பறித்து ஓரமாய் மடக்கி வைத்தவன், அடுத்த நொடி அவளைக் கைகளில் தூக்கியிருக்க அவள் அதிர்ந்தாள்.
கட்டிலில் அவளை விட்டவன், “இதைக் குடி…” எனக் காபியை நீட்ட, வாங்கா விட்டால் அவனே வாயைத் திறந்து ஊற்றினாலும் ஊற்றுவான் என நினைத்தவள் கடுப்புடனே வாங்கிக் கொண்டாள்.
“பின்ன எப்படிச் சொல்லணும் பாண்டியரே… உங்களை நம்பிக் கூட வந்தவளை கொட்டுற மழையில, ராத்திரி நேரத்துல, முன்னப் பின்னத் தெரியாத இடத்துல, கையில காசில்லாம, மொபைல் இல்லாம இருக்கறவளை அம்போன்னு நடுவழியில விட்டுட்டு வந்த உங்களை நான் எந்த அடிப்படைல நம்பணும்னு நினைக்கறிங்க, சொல்லுங்க.”
அவள் கேள்விகளுக்கு அவனிடம் பதிலில்லை. குற்றவுணர்ச்சியில் தலை கவிழ்ந்து நின்றவன், “நான் செய்தது தப்பு தான்… மன்னிச்சிடு…” என்றான் வருந்தும் குரலில்.
“நீங்க செய்தது தப்பு இல்ல பாண்டியரே, துரோகம்… உங்களை நம்பிக் கூட வந்த பொண்ணை நடுத்தெருவுல விட்டுட்டு வந்ததுக்குச் சரியான வார்த்தை துரோகம் தான்… அன்னைக்கும், இப்படி தான் பண்ணினீங்க. அப்பக் கூட கோபத்துல இருக்கீங்கன்னு நினைச்சேன். நேத்து உங்களை நம்பி வந்தேன், கையில மொபைல் கூட எடுக்கல… உ..உயிர் போயிருந்தா போகட்டும்னு நினைச்சுக்கலாம். எ..எவனாவது ஏதாச்சும் ப..பண்ணி மானம் போயிருந்தா?” என்றவளுக்குக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட அவனுக்கு அப்போது தான் அது உரைத்தது.
“சாரிடி மஞ்சக்கிளி, நான் கொஞ்சம் போதைல, கோபத்துல அப்படி பண்ணிட்டேன்…” என்றவன் அவள் கையைப் பற்றப் போக, உதறினாள்.
“உங்களுக்கு அப்படி என்ன போதை வேண்டிக் கிடக்கு? எதுக்குக் கோபம்? நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னதுக்கா? அதும் உங்க போதைல நீங்க பண்ண வேலையால தான… தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு தண்டனை மட்டும் எனக்குக் கொடுப்பிங்களா?”
“தேவி, வேண்டாம்… நான் இப்பவும் சொல்லறேன், நான் அன்னைக்கு உன்னை எதுவும் பண்ணல… நமக்குள்ள என்ன நடந்ததோ இல்லியோ, உன்னை நான் அந்தக் கோலத்துல பார்த்தது உண்மைதான். அதுக்காக தான் இந்தக் கல்யாணத்தை அரை மனசாவாச்சும் என்னால ஒத்துக்க முடிஞ்சது. உனக்கு இன்னும் என் மேல டவுட் இருந்தா நாளைக்கே டாக்டர்கிட்டப் போய் செக் பண்ணிக்கலாம்…”
“போதும், இனி உங்களை நம்பி நான் எங்கயும் வர மாட்டேன்… நான் சொல்லறது உண்மையா இல்லையான்னு இன்னும் சில மாசத்துல என் வயிறு காட்டிக் கொடுத்துடும். அப்பவும் இப்படியே தான் சொல்லிட்டு இருக்கப் போறிங்களான்னு பார்க்கறேன்…” என்றவளுக்கு அதற்குமேல் பேச முடியாமல் மூச்சு வாங்கியது. தளர்ந்து போய் கட்டிலில் சாய்ந்தவளின் அருகில் வந்தவன், “சரி, இப்ப அதைப் பத்திப் பேச வேண்டாம். நீ இந்த மாத்திரையைப் போட்டுட்டு ரெஸ்ட் எடு. டிபன் சாப்பிட்டு டாக்டரைப் பார்க்கலாம்.”
“போதும், ஓவரா அக்கறை உள்ளவனாட்டம் நடிக்காதிங்க…” என்றவள் எழுந்து பாத்ரூமுக்குத் தள்ளாடியபடி நடந்து சென்றாள்.
அவள் சென்றதும் படுக்கை விரிப்பை மாற்றி விரித்தான் விக்ரம். சிறிது நேரத்தில் திரும்பியவளுக்குக் காய்ச்சலில் நடப்பது கூடப் பாரமாய் இருந்தது. படுக்கை விரிப்பு மாறியிருக்கக் கட்டிலில் படுக்கத் தயங்கி நின்றவளிடம்,
“ப்ளீஸ் தேவி, ரொம்பக் காய்ச்சலிடிக்குது. இந்த மாத்திரையைப் போட்டுக்க…” என்று கையில் மாத்திரையை நீட்டினான் விக்ரம்.
அவன் கையைத் தட்டி மாற்றிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தவளுக்கு இப்போதும் நடுக்கமாய் இருக்கப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.
அதற்குமேல் அவளை வற்புறுத்த முடியாமல், தூங்கி எழுந்தால் காய்ச்சல் குறையலாம் என நினைத்து விக்ரமும் விட்டு விட்டான். கதவைத் திறக்க கீழிருந்து அவன் அன்னை பத்மாவின் குரல் கேட்டது.
“உலகத்துக்கே விடிஞ்சு இத்தன நேரமாச்சு. இந்த வீட்டு மருமகளுக்கு இன்னும் விடியலியோ? வயசான காலத்துல கை, கால் வலியோட நானே எழுந்து வந்துட்டேன். இந்தச் சீமாட்டிய இன்னும் காணோம்…” எனச் சொல்லிக் கொண்டிருக்க கணேசன் அங்கே வந்தார்.
“என்ன பத்மா, அதான் மருமகளுக்கு காய்ச்சல்னு விஜயா சொல்லிட்டுப் போச்சே… பக்கத்துல இருக்கற மளிகைக் கடைக்குத்தான போயிருக்கா… இப்ப வந்து உனக்கு வேணுங்கறதைச் செய்து குடுக்கப் போறா…” எனச் சமாதானம் சொல்ல,
“ஹூம், இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு கொஞ்சம் முடியலன்னா உடனே படுத்துக்க வேண்டியது. வீட்டுப் பெரியவங்களப் பத்தி எங்க யோசிக்கறாங்க?” எனக் கேட்கும்போதே படுத்திருந்த தேவி எழுந்து விட்டாள்.
“ஏய், நீ போய் படு, அம்மாட்ட நான் சொல்லிக்கறேன்…”
விக்ரம் சொல்ல, “யாரோட சிபாரிசும், தயவு தாட்சண்யமும் எனக்கு வேண்டாம்…” முகத்திலடித்தாற் போல் சொல்லிவிட்டு அவனைத் தாண்டி தடுமாற்றத்துடன் கீழே சென்றாள் தேவி.
பத்மாவின் முன் சென்று நின்றவள், “வந்துட்டேன், என்ன வேணும் உங்களுக்கு…” என்றாள்.
அவளது முகமும் தோற்றமுமே அவளுக்கு முடியவில்லை என்று சொல்ல, அவளுக்குப் பின்னால் வந்த மகனைப் பார்த்தார் பத்மா.
“இங்க யாரும் எனக்குப் பரிஞ்சிட்டு வர வேணாம். என்ன வேணும்னு சொல்லுங்கத்தை…” என்றாள் மீண்டும் அவரிடம்.
“நீ இட்லிக்கு ஒரு காரச்சட்னி செய்வியே, அதைப் பண்ணிடு. இந்த விஜயா செய்யற சட்னி வாயில வைக்க முடியல. உப்பும், உரப்பும் சரியாவே இல்ல…”
‘இத்தனை வருஷம் அதானே தின்னோம்…’ என நினைத்தபடி கணேசன் மனைவியைப் பார்க்க விக்ரம், “வேணாம் தேவி, நீ மாத்திரையும் போடல, டாக்டரைப் பார்க்கவும் வர மாட்டேன்னு சொல்லிட்ட, ஒழுங்கா போய் ரெஸ்ட் எடு…” என விக்ரம் சொல்ல அவனை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டுப் பெருமூச்சுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள் தேவி.
எப்படியோ சமாளித்துக் கொண்டு அந்தக் காரச்சட்னியை செய்து முடிக்கையில் விஜயாவும் வந்துவிட, தேவி வேலை செய்வதைப் பார்த்து அவளுக்குப் பதறியது.
“நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…” என அனுப்பி வைத்தாள்.
ஆனால், தேவிக்கோ சாப்பிட்ட அடுத்த நிமிடமே நெஞ்சைக் கரித்துக் கொண்டு வர, வேகமாய் வாஷ் பேஸினுக்கு ஓடியவள் சாப்பிட்டதை அப்படியே வாந்தி எடுத்திருந்தாள்.
“இவ என்ன மசக்கக்காரி மாதிரி சாப்பிட்ட எல்லாத்தையும் வாந்தி எடுக்கறா…” என முகத்தைச் சுளித்தார் பத்மாவதி. அதைக் கேட்ட விக்ரமின் முகத்தில் மீண்டும் குழப்பமும், கோபமும் சூழ்ந்தது.
தேவியை எப்படியாவது டாக்டரிடம் அழைத்துச் சென்றே ஆக வேண்டுமென்று மனதில் தீர்மானித்துக் கொண்டான்.