ஆனால், அவளின் நிம்மதியை கெடுக்கவென்றே அடுத்தநாள் விடிந்தும் விடியாத வேளையில் அவளின் உறக்கம் கலைக்கப்பட்டது. அவள் விழிகளை மலர்த்தி பார்க்க, அங்கே பொம்மி அவளுக்கான உடைகள் மற்றும் நகைகளுடன் தயாராக நின்றிருந்தார்.
தூக்கம் முழுதாக தொலைந்துவிட, அலர் ஒரு இனம்புரியாத பயத்துடனே ஏறிட்டாள் அவரை. பொம்மி அவள் பார்வையை உணராமல் “எழுந்து குளி அலர்… நேரமாச்சு.. கோவிலுக்கு போகணும்..” என்றவர் அடுத்த வேலையை பார்க்க, அதிர்ச்சி விலகாமல் அமர்ந்து இருந்தாள் அலர்.
தேன்மொழிக்கு அவளின் நிலை புரிய, “அம்மா.. அப்பா உங்களை கூப்பிட்டு விட்டாங்களாம்.. பார்தி சொன்னான்..” என்று அன்னையை அறையிலிருந்து வெளியேற்றினாள். அவர் வெளியேறிய நிமிடம் கதவை அடைத்தவள் “அருள் அண்ணா வந்துட்டாங்க அலர்.. இந்த கல்யாணம் தானே நிற்க ஒரு காரணமும் இல்ல..” என்றாள் அமைதியாக.
அலரின் முகம் அந்த வினாடியில் மொத்தமாக கசங்கிவிட, சோர்ந்து போனாள் அவள். தேன்மொழியே அவளின் வாட்டத்தில் “எதுக்குடி இத்தனை இடும்பு உனக்கு.. எதுக்கு இப்படி ஒரு கல்யாணம்.. பிடிக்கல ன்னு வெளியே சொல்லிடேன் அலர்…” என்றாள் மன்றாடலாக
“நான் சொன்னேனா உன்கிட்ட… போய் கிளம்பு தேனு..” எனது அதட்டியவள் எழுந்து குளிக்க செல்ல, அவளை வழி மறித்து நின்றாள் தேன்மொழி.
“என்கிட்டே பொய் சொல்லாத அலர்… நேத்து அருள் அண்ணா வரல ன்னு சொன்னதும் உன் முகத்துல அப்படி ஒரு நிம்மதி.. அதே இப்போ உன்னை தயாராக சொன்னப்போ, அப்படி ஒரு கலக்கம் உன் கண்ல.. இதுக்கு என்ன அர்த்தம் அலர்.. ஏண்டி இப்படி பண்ற..??” என்று அழுதாள் அவள்.
“ஹேய் தேனு… சும்மா உளறாத… கல்யாணம் ன்னா எல்லாருக்குமே கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்.. ஏன் நீ எல்லாம் பயப்பட மாட்டியா…” என்றாள் அலர்…
“உன் கண்ல நான் பார்த்தது பயம் இல்ல.. பொய் சொல்லாத..”என்று தேன்மொழி இறுக்க
“ஆமா.. பயம் இல்ல.. என்ன செய்ய போற இப்போ.. “என்று அலர் சற்று அழுத்திக் கேட்க
“நான் மாமாகிட்ட சொல்றேன்..அலருக்கு இதுல விருப்பம் இல்லன்னு சொல்றேன்… கல்யாணத்தை நிறுத்திடுவோம் அலர்.. வேண்டாம்டா..” என்று அலரின் கன்னத்தை பிடித்துக் கொண்டு அவள் கெஞ்ச
“கல்யாணத்தை நிறுத்திட்டு, என் மகளை அவங்ககிட்ட தூக்கி கொடுக்க சொல்றியா…” என்று அலர் கண்ணீர்விட
“அப்போ இதை சொல்லி மிரட்டி தான் உன்னை சரிக்கட்டினாங்களா… பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு.. குழந்தைக்காக யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா அலர்..” என்று தேன்மொழி கலங்கி போக
“என்னை யாரும் மிரட்டல தேனு.. அதோட என்னை மிரட்ட முடியுமா.. பயப்படற ஆளா நான்..?? எனக்கும் இது தான் சரின்னு தோணுச்சு.. அதான் சம்மதிச்சேன்..” என்றுவிட்டு “இப்போ கொஞ்சம் பயமா இருக்கு.. ஆனா, சரியாகிடும்.. நீ இவ்ளோ யோசிக்காத..” என்று தேன்மொழியை தேற்றினாள் அலர்.
தேன்மொழி அவள் பேச்சை கேட்காமல், “நான் மாமாகிட்ட பேசுறேன் அலர்.. நீ ஏன் அருளை கட்டிக்கணும்… பார்த்தியை கட்டிக்கோ.. எங்க வீட்டுக்கு வந்திடு.. குழந்தையை நாம பார்த்துப்போம்..எல்லாமே சரியாகிடும் இல்ல..” என்று அவள் வழி கண்டுபிடிக்க
அலர் சிரித்துக் கொண்டே “உன் அண்ணன் லவ் பண்ணானே, அவளை என்ன பண்றது..” என்று கேட்க
“எனக்கு உன்னைவிட, வேற யாரும் முக்கியமா தெரியல.. பார்த்தி புரிஞ்சிக்குவான் அலர்.. பேசுவோம்..” என்று தேன்மொழி நிற்க
“ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாகிடும் தேனு… அதுவும் பார்த்தி.. நான் யோசிச்சது கூட இல்ல… என் வாழ்க்கை அருளோட தான் போல.. நடக்கிறது நடக்கட்டும்…நீ இதை பத்தி இனி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது…” என்று முடித்துவிட, அப்போதும் ஏதோ பேசவந்தாள் தேன்மொழி.
அலர் கைக்கொண்டு அவள் வாயை மூடியவள் “இதுல இதுக்குமேல பேச எதுவும் இல்ல தேனு.. நீயும் பேசாத… இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்… என்மேல சத்தியம்..” என்றவள் வேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் குளித்து வருவதற்குள் பொம்மியும், அழகு நிலைய பெண்களும் அந்த அறைக்கு வந்துவிட, எதுவுமே பேச முடியாமல் நின்றாள் தேன்மொழி. அவர்கள் அலரிசைக்கு சேலை கட்ட உதவி அவளை அழகாக அலங்கரிக்க, பொம்மை போலவே அவர்கள் சொல்வது அத்தனையும் செய்து கொண்டிருந்தாள் அலர்.
நல்ல நேரத்தில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டவர்கள் கோவிலை அடைய,அங்கே ஏற்கனவே காத்திருந்தனர் ஆவுடையும் அவர் உறவுகளும். அலர் குனிந்த தலை நிமிராமல் நிற்க, அவளின் முகம் முழுதாக மறைந்து இருந்தது..
சௌந்தரி என்றும் இல்லாத திருநாளாக வாஞ்சையாக அவள் கன்னம் தடவியவர் தேன்மொழியின் கையில் இருந்த தன்யாவை தன் கையில் வாங்கி கொள்ள, அப்போதே மனது அடித்துக் கொண்டது அலருக்கு…சௌந்தரி குழந்தையை ஒரு கையில் தாங்கி கொண்டவர் அலரை ஒரு கையில் பிடித்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைய, இது அத்தனையும் பார்வையில் படும் இடத்தில தான் நின்றிருந்தான் அருள்மொழி.
நடந்தது எதுவும் அவன் பார்வையில் இருந்து தப்பவே இல்லை. அலரின் குனிந்த தலை வெட்கம் என்றெல்லாம் நூறில் ஒருமுறை கூட நினைக்கவில்லை அவன். அமைதியாக நடப்பதை அவன் வேடிக்கை பார்க்க, அதியன் அவன் அருகில் வந்திருந்தான் இதற்குள்.
அருளின் தோளில் கையைப் போட்டு கொண்டு அவன் நடக்க, கோவிலுக்குள் நுழைந்தனர் இருவரும். அருள்மொழியின் குலதெய்வ கோவில் அது. திருமணமே வேண்டாம் என்று அவன் நின்ற நேரம் மகன் திருமணத்தை இதே சன்னிதானத்தில் நடத்துவதாக வேண்டி கொண்டிருந்தார் சௌந்தரி. அதன் பொருட்டே அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்திருந்தது.
மணமக்கள் இருவரும் தனித்தனியே அழைக்கப்பட்டு புது உடைகள் வழங்கப்பட, கோவிலின் பின்புறம் இருந்த அறைகளில் இருவரும் உடைமாற்றி வர, சடங்குகள் தொடங்கியது. முறைப்படி அத்தனை சடங்குகளும் பின்பற்றப்பட, எதுவுமே மனதில் பதியவில்லை அலருக்கு.
உடைகள் உரசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக அருகில் அமர்ந்திருந்தவனை தான் வட்டமிட்டது மனது. அவனை யோசித்தாலே ஏனென்று தெரியாமல் ஒருவித அச்சம் அவளை ஆட்கொள்ள, இப்போதும் குறையவில்லை அது. அந்த யோசனையிலேயே அவள் இருக்க, இதற்கிடையே ஐயர் அழைத்தது அவள் கவனத்தில் பதியவே இல்லை.
அருள்மொழி அவள் முகத்தை வைத்தே எதையோ யோசிக்கிறாள் என்று புரிந்தவனாக, “அலர்..” என்று அவள் காதருகில் அதட்டலாக அழைக்க, பதட்டத்துடன் அவனை பார்த்து வைத்தாள் அலர். அவளின் அந்த முகமும், அதில் தென்பட்ட பதட்டமும் அருள்மொழிக்கு அத்தனை பிடித்தமான இருந்தது…
இதுவரை பார்த்திருந்தாலும், பெரிதாக மனதில் பதிந்ததில்லை அவளின் முகம். அது வசதியாக இருக்க, இந்த பதட்டத்தை அவளின் அடையாளமாக குறித்துக் கொண்டு அதையே பதிந்து கொண்டான் மனதில். அவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தவன் விழியால் ஐயரை கண்காட்ட, வேகமாக அவரை திரும்பி பார்த்தாள் அலர்.
அவர் எதுவோ கூறவும், மலங்க மலங்க அவள் விழிக்க, அவள் கையை பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டவன் அடுத்து வந்த சடங்குகள் அத்தனையும் தானே அவள் உதவியோடு செய்து முடித்தான். அலர் அவனை தடுக்க தோன்றாமல், மௌனமாக இறுதியாக அனைவரின் ஆசீர்வாதம் சுமந்த பொன்மஞ்சள் தாலி கைக்கு வரவும், திரும்பி அவள் முகம் பார்த்தான் அருள்மொழி.
அலர் மொத்தமாக உடைந்து விழ தயாராக இருந்தாலும், அவள் பார்வை சௌந்தரியின் கையில் இருந்த தன் மகளின் மீது பதிய, தன் முகத்தை நிச்சலனமாக காட்டிக் கொண்டு அருகில் இருந்தவனை நோக்கி திரும்பினாள் பெண். அருள் அவளின் எண்ணம் புரிந்தவனாக சிறு புன்னகையுடன் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னுடைமையாக்கி கொண்டான். கூடவே அவளின் செல்ல மகளையும்…
தேடி அலைந்து, திரிந்து பின் தெளிந்து அவன் தேடாமலே அவன் கையில் அடங்கி இருந்தது சொர்க்கம்… நிச்சயம் அன்னையும், அவள் பெறாத அவளின் மகளும் சொர்க்கத்திற்கு இணையான பொக்கிஷங்கள் தான்…
சொர்க்கம் கையில் கிடைத்தால் போதுமா??? வைத்து வாழ தெரிய வேண்டுமே..??? தெரிந்தாலும், சுற்றம் அவனை வாழ விட வேண்டுமே….