Advertisement

ஆயுள் கைதி 20

அங்கிருந்து கிளம்பி நியூஸ் பேப்பரில் பார்த்து கிடைத்த வேலைக்கு இங்கு வந்தபின் பல இரவுகளில் அவளுக்குள் உதிக்கும் ஒரு கேள்வி! எப்பொழுதுமே தன்னை பார்த்தே தன்னுள் இருப்பதை அறிந்து கொள்பவனிற்கு அந்நாள் அவள் பார்வை சொன்ன செய்தி புரிந்திருக்குமா என்று… அவளுக்கு அவனைத்தவிர அங்கு எதுவும் வேண்டாம் என்று அவள் வந்ததை அவன் உணர்ந்து அவளுக்காக வருவானா என்ற கேள்வி உள்ளுக்குள் உதித்து கலக்கத்தை ஏற்படுத்தும் . அப்பொழுதெல்லாம் இந்த மோதிரமொன்றே அவளுக்கு துணை! எப்போதும் நம்பிக்கையோடு அதை வருடுபவள் இன்று நெஞ்சுநிறைய நிம்மதியும், காதலுமாய் அதை வருடி முத்தமிட்டாள்.

சொன்னதை போலவே ஒவ்வொரு நாளையும் அங்கே ரசித்து வாழ்ந்தான் ஈஸ்வரன். அதேநேரம் தீவிரமாக தான் வந்த வேலையிலும் கவனம் செலுத்தி கொண்டிருந்தான். அன்று காலையில் மாணிக்கவேல் வீட்டில் வேலை சம்மந்தமாய் அவன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சாகித்தியா வர, இயல்பாய் அவளை வரவேற்றவன், தான் அமர்ந்திருந்த சோபாவில் அவனருகில் பார்க்க, கண்களை சுருக்கி அவனை பார்த்து விட்டு அவன் எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டாள் அவள்.
அதன்பின் அவன் எப்படியெல்லாம் வேலையை ஆரம்பிக்கலாம் , என்னென்ன செய்யலாம் என கூற, இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குடோன் சாவி வாங்க வந்த குமரனும் தேனீர் தரவும் அமர்ந்து கொண்டான். வேலை விஷயம் பேச்சு அப்படியே சென்று முடியும் தருவாயில் மஞ்சரி வரவே,

“என்னமா வெளியில கிளம்பிட்ட போல இருக்கு, நம்ம எஸ்டேட்க்கும் அப்படியே போய்ட்டு வாம்மா, நீ போறதே இல்லையே…” என்றார் மாணிக்கவேல்

“போங்கப்பா… அங்க போய் நான் என்ன பண்ண, நான் குன்னூர்க்கு போய்ட்டு வரேன், உங்க கார் எடுத்துட்டு போறேன்…” என்றாள்.

“ அங்க போய் என்ன பண்ண போற மா…” என்று அவர் கேட்க,

“என்னப்பா இப்படி கேட்கறீங்க, ஷாப்பிங் போவேன், படத்துக்கு போவேன், அப்புறம் அங்கேயே டின்னர் முடுச்சிட்டு நைட் வரேன்…” என்றவள் கிளம்ப தயாராக,

“தனியாவாமா…” என்றார் யோசனையுடன்,

“ஆமாப்பா,ஆனா இப்போதான் எனக்கு தோணுது…” என்றவாறே யோசித்தவள் , ஈஸ்வரிடம் திரும்பி,

“சார் உங்களுக்கும் இந்த இடம் தெரியாதுல, என்கூட வாங்களேன்…” என இயல்பாய் அழைக்க,

“என்ன நாள்பூராவா…! எனக்கு என் வொய்ப் கூட வெளியே போகவே நேரம் இல்லங்க, இதுவரை வேலை வேலைன்னு அவளை வெளியில கூட்டிட்டு போனதே இல்லை, இப்போ உங்ககூட வந்தா…நான் அவ்வளவு தான்…” என்று சிரித்தபடியே ரசனையுடன் சொல்லி முடித்தான்.

அதுவரை இயல்பாய் இவள் இவ்வளவு பேசுவாளா…என்ற பாவணையுடன் மஞ்சரியை பார்த்து கொண்டிருந்த சாகித்தியாவிற்கு அவளது திடீர் கேள்விக்கு அவனது வேகமான பதிலில் தானாய் புன்னகை அரும்பியது.

தொழில் தொடர்பு எனும்போது விசாரித்து வைத்திருப்பார் போலும், மாணிக்கவேல் புன்னகையுடன் பார்த்திருக்க, குமரன் யோசனையுடன் பார்த்தான்.இதில் அதிர்ச்சி என்னவோ மஞ்சரிக்கு தான் போலும்,

“என்ன சார் சொல்றீங்க கல்யாணம் ஆகிடுச்சா…! பார்த்தா அப்படி தெரியவே இல்லையே…” என்றாள்.

லேசாய் முறுவலித்தவன், சரியென்று எழுந்து கிளம்புவதாய் சொல்லிக்கொண்டு வேலையை பார்க்க கிளம்பி விட்டான்.

அடுத்து வந்த நாட்களில் மும்முரமாக அவன் வேலையில் மூழ்கிய தீவிரத்தை பார்த்து சாகித்தியாவிற்கு தான் லேசாய் எரிச்சல் தலை தூக்கியது. வேலைநேரத்தில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தால் ஒழிய மற்றநேரத்தில் எல்லாம் வேலையே கண்ணாக இருந்தவனை கண்டு
“உண்மையிலேயே வேலையை மட்டும் தான் பார்க்க வந்தானோ..கண்டுக்கவே இல்லையே…” என்று உச்சகட்ட கடுப்பில் இருந்தாள்.

அன்று மாலைநேரமாக வீட்டிற்கு வண்டியை செலுத்தி கொண்டிருந்தவள் கண்ணில் ஓரமாக நின்றிருந்த ஈஸ்வரன் பட, வண்டியை அவனருகில் நிறுத்தி விட்டு என்னவென பார்க்க,

“வேலையா வந்தேன்…”என்றான் அவனாகவே,

“எப்படி போக போறீங்க…” என்றவளின் கேள்விக்கு,

“கார்த்திக்கை கூப்பிடனும்,அவன் வேலையா இருக்கான்…” என்று இழுத்தவன்,

“என்னைய கெஸ்ட் கௌஸ்ல விட்டுட்டு போறீயா…” என்றான் இயல்பாகவே!

அவள் சரியென்றதும் வண்டியில் ஏறியவன் வேலை சம்பந்தமாய் போனில் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்தான். சாகித்தியாவிற்கு இப்படி ஈஸ்வரை பின்னால் ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் செல்வது ஜில்லென்ற அனுபவமாக இருந்தது. புன்னகையுடன் அதை ரசித்தவாறே வந்தவள் கவனியாமல் ஒரு வேகத்தடையில் வேகமாய் வண்டியை விட்டு விட்டாள்!

அடுத்த நொடி ஈஸ்வரின் கை அவளின் இடையை பிடித்துக்கொண்டது! மூச்சடைத்தது சாகித்தியாவிற்கு! ஆனால் அவனோ அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை அவன் பாட்டிற்கு போனில் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான். அவனின் கை இடையில் இருக்கையில் வண்டி ஓட்டுவது அவளுக்கு தான் குதிரை கொம்பாய் இருந்தது. அதுவும் ஒவ்வொரு வேகத்தடையையும் கடக்கையில் முற்றிலும் சிவந்து போனாள். ஒருவழியாக ஓட்டிவந்து கெஸ்ட்கவுஸை அடைந்து அவனை பார்க்க, போனை வைத்து விட்டு இறங்கியவன்,

“தேங்க்ஸ்….” என்றான் முறுவலுடன்,

“ம்…”என்று அவனை பார்த்தவள், அவனது பதில் பார்வையில்,

“சரி கிளம்பறேன்….” என்று முணுமுணுத்து விட்டு கிளம்பிவிட்டாள். அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு முகம் முழுக்க புன்னகையில் விரிய, குறும்பு சிரிப்புடன் தலைகோதி கொண்டு உள்ளே சென்றான்.

ஒரு முற்பகல் வேலை! எல்லோரும் எஸ்டேட்டில் வேலைக்கு சென்றிருக்க, குயில், கிளிகளின் சப்தம் மட்டுமே அந்த இடத்தை நிறைத்து இருந்தது. இளம்வெயில் ஜன்னல்வழியே வந்து கொண்டிருக்க, அவ்விடத்திற்கு தோதாய் இளம்பச்சை நிற ஷிபான் சேலையில் முகத்தில் உறைந்த புன்னகையுடன் அலுவல் அறையில் வேலையில் ஆழ்ந்திருந்த சாகித்தியா சட்டென்று கேட்ட சன்னமான சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க,

“என்ன வேலையா…” என்றபடி வந்தமர்ந்தான் ஈஸ்வரன். வந்த ஓரிரு நாட்கள் தன்னை காண வந்ததோடு சரி, அதன்பின் வேலையே முக்கியமென தன்னை கவனியாதது அவளுக்குள் ஊடலை உண்டு பண்ணியிருக்க, முகத்தில் எதையும் காட்டாமல்,

ம்….என்று விட்டு மீண்டும் வேலையை பார்த்தாள். அவனுக்கு எதுவுமே வேலை இல்லை போல! எதிரில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் ரசனையுடன்! கொஞ்சநேரம் கழிந்திருக்கும் அதற்குமேல் அவளால் முடியவில்லை.

“ப்ச்….” என்று கணக்குநோட்டை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தவள்,

“ப்ளாக் காபி குடிக்கிறீங்களா…” என்றாள்.

“ஓ யெஸ்…” என்றான்  சாவகாசமாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, எழுந்து சென்றவள் அங்கு இருந்த ‘இன்டக்க்ஷன்’ அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க,

“எஸ்டேட் சுற்றி டீ விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கப்போ இங்க நீ காபி போட்டு குடிக்கிற விஷயம் உங்க அங்கிளுக்கு தெரியுமா…” என்றான் சிரிப்புடன்,

இதழ்களில் சிரிப்பு உதிக்க, அவனை பார்த்தாள். அவனும் சிரிப்புடன் அவளை பார்த்து கேள்வியாய் ஒற்றை புருவத்தை உயர்த்த,

“அதுக்காக காபி குடிக்க கூடாதுனு சட்டமா என்ன…” என்றாள்.

“ம்….இல்லை தான்…” என்றான் உடனே,

அவனையே பார்த்திருந்தவள், கொதிக்கும் காபி சத்தத்தில் அடுப்பை அணைத்துவிட்டு இருக்கப்புகளில் ஊற்றி அவனுக்கு கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

காபியை முடித்து விட்டு அங்குமிங்கும் சுற்றி திரிந்த ஒரு பட்டாம்பூச்சியை பார்த்தபடியே நின்றிருந்தாள்.

“அக்கா காய் பறிக்க கூடை பத்தலையாம், உங்ககிட்ட கூடை வாங்கிட்டு வர சொன்னாங்க எங்க அம்மா…” என்றபடி வந்தான் பாலன், எஸ்டேட்டில் வேலை பார்ப்பவரின் மகன்.

“ம்..எடுத்து தரேன், ஏன்டா இன்னைக்கு ஸ்கூல் போகலையா…” என்றவள் கேட்க,

“ம்ஹூம் இன்னைக்கு பெரியம்மா வீட்டுல சாயந்திரம் பங்க்ஷன், அதுக்கு போறோம் அதான் லீவ் போட்டுட்டேன்…” என்றான் அவன்.

“ம்…சரி இரு, எடுத்து தரேன்…” என்று சாகித்தியா உள்ளே செல்ல திரும்ப,

“எடுத்து வைங்கக்கா, அம்மா மோட்டர் போடுற முருகன் மாமாவை பார்த்து மோட்டர் போட சொன்னாங்க, நான் போய் சொல்லிட்டு வந்து வாங்கிக்கிறேன்…” என்று விட்டு ஓடிப்போனான்.

சரியென வந்தவள் மேலே பரணில் இருக்கும் கூடையை எப்படி எடுக்கவென யோசித்து நின்றாள். இவன் இல்லையென்றால் குதித்து எடுத்து விடுவாள். அதுதான் வழக்கமும் கூட!
யோசித்தபடி லேசாய் காலை எத்தி எடுக்க முயற்சித்தாள். பரணை தொடத்தான் முடிந்தது, கூடையை எடுக்கமுடியவில்லை. மூச்சை பிடித்து மேலும் எத்த,

“எடுக்கணுமா…” என்றபடி அருகில் வந்தான் ஈஸ்வர்.

“நான் ஹெல்ப் பண்ணட்டுமா…” என்றதும்,

ஒன்று எடுத்துதருவான் இல்லை அதிகபட்சமாக தன்னை தூக்குவான் என்ற எண்ணத்தில் அவள் சரியென்க,

இன்னும் அவளருகில் வந்தவன், அவள் தோளில் கைவைத்து வெகு பொறுமையாய் கூடையை எடுத்தான். ஓரிரு நொடிகள் தாங்கியவளால் அதற்குமேல் முடியவில்லை!

“ப்ச்… விஷ்வா…” என்று முணுமுணுக்க, அடுத்த நொடி தன் மொத்த பாரத்தையும் அவள்மேல் சாய்த்திருந்தான் விஷ்வேஸ்வரன். மற்றதெல்லாம் மறந்து அவள் விழிவிரித்து பார்க்க,

“சொல்லு…” என்றான்.

கனவில் இருந்து விழித்தவள் போல முழித்து
“என்ன….” என்றாள் குழப்பத்துடன்,

“விஷ்வா சொல்லு…” என்றான் புன்னகையுடன்,

“ப்ச் …..யாராவது வரபோறாங்க…” என்றபடி அவனை நெஞ்சில் கைவைத்து தள்ளியிருந்தாள் அவள்.

சரியாய் பாலன் வந்து குரல் கொடுக்க, அவனிடம் சென்று கூடையை கொடுத்து விட்டு வெளியிலேயே நின்றாள். உள்ளே செல்ல முடியாமல் இதயம் தடதடத்தது. வெளியிலும் மழை மேகங்கள் முற்றுகையிட்டு லேசாய் வெயிலை மறைத்திருக்க,

“வா நான் வீட்டுல விட்டுறேன்…” என்றவனின் குரல் பின்னிலிருந்து கேட்க, திரும்பி பார்த்தாள்.

“இங்க மழை பிடிச்சா விடாது தானே, ஈவ்னிங் வேற, வா சீக்கிரமா வீட்டுக்கு போயிடலாம்…” என்றதும்,

“நீங்க எதுல வந்தீங்க…” என்று பதில் கேள்வி கேட்டாள்.

“ஜீப்ல…” என்று விட்டு அவன் வெளியே நடக்க, அவளும் பூட்டிக்கொண்டு அவன் பின் நடந்தாள். வீட்டை அடையும் முன் இருள் நன்றாய் சூழ்ந்து சட சடவென மழை பிடித்திருந்தது. ஜீப் என்பதால் வேகமாய் பொழிந்த மழையில் பாதி நனைந்திருந்தார்கள். வண்டி நின்றதும் வேகமாய் கேட்டை திறந்து உள்ளே ஓடியவள்,

“வாங்க…” என்றவனை அழைக்க, அவனும் வரவும் கதவை திறந்து உள்ளே சென்றாள், அவனுக்கு துண்டை எடுத்து கொடுத்து விட்டு உள்ளறைக்கு சென்றாள்.

கட்டியிருந்த சேலையில் ஈரம் சொட்டவே வேறு சேலைக்கு மாறிக்கொண்டு தலை துவட்டியவாறே முன் அறைக்கு வந்தாள். அங்கே ஈஸ்வரன் சட்டையை கழட்டி விட்டு தலையை துவட்டி கொண்டிருக்க, சட்டென்று வந்தவளால் பின்னால் திரும்பி செல்லவும் முடியவில்லை. பார்வையை தாழ்த்தி கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னலருகே சென்றாள். வெளியே படபடவென மழை அடித்து கொண்டிருக்க கைகால் எல்லாம் சில்லிட்டு இருந்தது. வெகு நிதானமாக அவளருகில் வந்தவன்,

“நல்லா இருக்குல்ல கிளைமேட்…” என்றான்.

“ம்….” என்ற பதில் மட்டுமே அவளிடம்,
“ இங்க இப்படி அடிக்கடி பெய்யுமோ…” என்ற கேள்விக்கும் ம் தான் வந்தது.

“மழை பிடிச்சிருச்சினா ரொம்ப கஷ்டம் போலேயே… சட்டுனு நிமிஷத்துல இவ்ளோ மழை…” என்று அவன் பாட்டிற்கு பேச, அதுக்கும் ம் தான் பதிலாக வந்தது.

அப்பொழுது தான் அதையே அவன் கவனித்தான். அவள் சன்னல் பக்கமாய் பதித்திருந்த பார்வையும், அவள் பதிலும் ஏனென்று புரிய,

புன்னகையுடன் அவளை கடந்து பின்னால் வந்தவன்,

“சகி……” என்று கொஞ்சலுடன் அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான். மொத்தமாய் மூச்சடைத்தது அவளுக்கு!

“ம்….” என்றாள் காற்றான குரலில்,

“சகி….” என்று உருகி கரைந்தான் ஈஸ்வரன்.

Advertisement