Advertisement

ஆயுள் கைதி 19

அன்று திடீரென ஹோட்டலுக்கு விஜயமாகி இருந்த விசாலாட்சியை பார்த்ததும் ஈஸ்வரனுக்குள் யோசனையே! கூடவே பாக்யவதியும். சற்று நேரத்தில் சதாசிவமும் வர ஏதோ முடிவோடு தான் வந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பில் வரவேற்று அமர சொன்னதோடு அவர்களே ஆரம்பிக்கட்டும் என அமைதி காத்தான்.

ஆனால் அதுவரை கூட பொறுக்க முடியாதவராய் விசாலாட்சியே பேச ஆரம்பித்திருந்தார். அந்நாள் வரை எதிர்பாராத திருமணம் அதையும் தாண்டி வீட்டில் அதையே பேசுவது போன்ற ஒவ்வாத செயல்களால் தான் வீட்டை விட்டு வெளியேறி தனியாய் தங்கி தொழிலை கவனித்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தவருக்கு முதல்நாள் சஞ்சனா சொன்ன விஷயம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

பார்வதி வரை சாகித்தியாவிடம் இணைக்கமாய் பேசும் சூழ்நிலை அமைந்திருக்கிறது என்றால் ஈஸ்வர் எந்த அளவிற்கு அவளிடம் நெருங்கி இருப்பான் என்பதே உவப்பாய் இருக்கவில்லை அவருக்கு. இதுநாள் வரை ஒன்றுக்கும் உதவாத பாக்கியவதி குடும்பத்தை கரையேத்த, அதோடு சஞ்சனாவும் தன் தாயை போல இல்லாமல் பார்க்க தெளிவாய் ,தன் தாயை விட புத்தியுடையவளாய் இருந்ததால் அவளையே ஈஸ்வருக்கு மணமுடித்து மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் திடீரென்று பொய்க்க போவதை தாங்க முடியாமல் அவர் ஏகத்திற்கும் படபடவென பொரிய, விஷ்வேஸ்வரன் அப்பொழுதும் அமைதியாகவே இருந்தான்.

அந்த அனுபவசாலிக்கு அவன் அமைதி, ஒருவேளை அவன் சாகித்தியாவோடு சேர்ந்து வாழ்கிறானோ என்று தன்னுள் தோன்றிய சந்தேகத்திற்கு தூபம் போட, மேலும் கோபமுற்றார். அதில் வார்த்தைகள் ஏகமாய் சிதறின. அவன் அதற்கும் அசராமல்,

“இப்போ எதுக்காக வந்தீங்க, அதை சொல்லுங்க, இது ஆபிஸ், இங்க வீட்டு விஷயம் பேசுறதுக்கு ஒரு வரம்பு இருக்கு, எதுவானாலும் சீக்கிரமா சொல்லுங்க…” என்றான் ஈஸ்வரனாகவே…

“இது உடனே பேசி முடிக்கிற விஷயம் இல்லை, அதோட இன்னைக்கே பேசி முடிக்க வேண்டிய விஷயமும் கூட, உனக்கு இங்க பேசிறதுல விருப்பம் இல்லனா, உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ, பேசி முடிச்சிறலாம்…” என்று அவனது பாட்டி என நிரூபித்தார்.

அவனுக்குமே எதுவாயினும் சரி இன்றோடு முடிக்க வேண்டும் என தோன்ற, சாகித்தியாவிடம் இதை சொல்லுமாறு கார்த்திக்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பி விட்டு இவர்களை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.

அங்கே அந்த மதில் கேட்டிற்கு பின் அவன் இத்தனை கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்தில் ஒரு ராஜா மாதிரி இருப்பதை கண்டு சதாசிவத்திற்கு உள்ளுக்குள் எரிந்தது. இதுதான் அந்த குடும்பத்தின் தலையாய பிரச்சனையே! ஒரே வீட்டாருக்குள் இருக்கும் இந்த வேறுபாடு. அதை எல்லாம் பற்றி விசாலாட்சி யோசித்ததாக தெரியவில்லை. அவருக்கு அவருடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதே முக்கியமாய் பட்டது. வீட்டிற்குள் அழைத்து சென்றதும் அந்த பெரிய ஒற்றை சோபாவில் அமர்ந்தவன்,

நிமிர்ந்து, “இப்போ சொல்லுங்க, என்ன பேசி முடிக்கணும்…” என்றான்.அவனது தோரணையே அவரை யோசிக்க வைத்தது. அதோடு வந்ததில் இருந்து அவன் தன்னை பாட்டி என்று
விழிக்காததும் புரிபட, தான் எதெல்லாம் நடக்க கூடாது என நினைத்து எல்லாம் நடந்தே விட்டது என்று விளங்க, அவனை பதம் பார்க்கும் வகையில் வார்த்தையை விட ஆரம்பித்தார்.

“நல்லா இருக்குப்பா நீ பண்றது… நீ நம்ம குடும்பத்தை மொத்தமா தாங்குவனு தான் என் புருஷன் உன் பெயரில முக்கியமான சொத்தை எல்லாம் எழுதி வைச்சு உன்கிட்ட தலைமை பொறுப்பை கொடுத்து இருக்காரு. ஆனா நீ உன் வாழ்க்கையை பார்த்துகிட்டு இப்படி எங்களை எல்லாம் அம்போன்னு விட்டுட்டு வந்துட்ட, இதுக்குதான் நான் அப்பவே உன்கிட்ட சொன்னேன், அவ அவளோட ஆத்தாக்காரி மாதிரியேதான்! நம்ம குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டானு…” என்று அவர் ஆவேசமாக பேச,

“அவ அம்மான்னு நீங்க திட்றது, உங்க பொண்ணு! பெத்த பொண்ணு மேல ஏன் இவ்வளவு வஞ்சம் பாட்டி…” என்றான் கொஞ்சம் இறங்கிய குரலிலேயே…

“பார்த்தீங்களா அம்மா, அவ்வளவு தான்…எப்படி பேசுறான் பார்த்தீங்களா.. மொத்தமா இவன் மனச கலைச்சிட்டாளே பாவி…” என பாக்கியவதி சத்தமிட, எரிச்சலுடன் பார்த்தான் விஷ்வேஸ்வரன், விசாலாட்சி பாக்கியவதியை சட்டென்று அடக்கினார். அவருக்கு வந்த காரியம் ஆக வேண்டியிருந்தது. இந்த பேச்சு போய் கொண்டிருக்கையிலேயே சாகித்தியா உள்ளே நுழைய, விசாலாட்சியின் அடக்குமுறை எல்லாம் மறந்தே விட்டது பாக்கியவதிக்கு,

“எங்கடி வந்த…”என்று கத்த,

“என் வீட்டுக்கு….”என்று தெளிவாய் சொன்னவள், அமைதியாய் டீபாயில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

இந்த பதில் விசாலாட்சிக்கே கோபத்தை வரவழைத்தது. அதோடு அவரது சந்தேகமும் உண்மையாகி படாரென்று மூஞ்சியில் அறைந்ததை ஏற்க முடியாமல்,

“உன் அம்மா மாதிரியே பழக்கமா உனக்கும், என் பேரனை மயக்கி முடிஞ்சி வச்சிருக்க…” என்று பேசத் தொடங்க,

“பாட்டி…” என்று கிட்டத்தட்ட கர்ஜித்தான் ஈஸ்வரன்.

அவ்வளவுக்கு போய்விட்டதா என்று தோன்ற, ஆவேசத்தை கைவிட்டு விட்டு சாகித்தியாவை பார்த்து,

“நீ இந்த வீட்டை விட்டு என் பேரனை விட்டு போயிடு, நீ எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்ட…உங்க குடும்பத்துக்கு என் குடும்பத்தோட நிம்மதியை கெடுக்கிறதே வேலையா போச்சு, போயிடு….”என்றார் சாகித்தியாவை பார்த்து,

ஈஸ்வர் எழுந்து அவரருகில் வந்து,
“நீங்க பேசுறது எல்லாம் ரொம்ப தப்பு பாட்டி, இது அவளோட வீடு , இங்க இருக்கிறது எல்லாமே அவளுக்குத் தான் சொந்தம், நான் உள்பட! அவ என்னைய கல்யாணம் பண்ணி வந்தவ, அவளுக்கு தான் எல்லாமே! ” என்றான் அழுத்தமாய்…

“அதைதான் ஈஸ்வரா நானும் சொல்றேன், இந்த சொத்து , இதுக்காகதான் அவ உன்கூட இருக்கா, அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்ற…” என்றார் அவர்

“நீங்க தப்பான புரிதலோட பேசறீங்க பாட்டி, அவ அப்படி இல்ல, அதோட அவ என்னை நம்பி வந்த பொண்ணு, இதுதான் அவ வீடு….அவ எங்கேயும் போகமாட்டா…” என்று முடித்திருந்தான் ஈஸ்வரன்.

“நீ கொடுத்திருக்கிற இடம்தான் இது. வந்தோன கூட சொன்னாலே இது என் வீடுன்னு… அவ தெளிவாதான் இருக்கா, உனக்கு தான் இந்த மயக்கிற குடும்பத்தோட எண்ணம் புரியல, இப்போ அவ உன்கூட இருக்கிறதெல்லாம் என் புருஷன் அவளுக்கு எழுதிவைச்சு உனக்கு எழுதி வச்சு இருக்கிற சொத்துக்காக தான், இவ்வளவு பேசுறியே நீ. உனக்கே பணம் இல்லனா, இவ உன்னைய நம்பி கூட இருக்க வந்திருப்பாளா? ஏன் உன்னோட அந்தஸ்த்தே உன்னோட பூர்வீக சொத்துனால வந்தது தான… அது இல்லனா இவ உன்னைய திரும்பி கூட பார்க்க மாட்டா,ஏன் இப்போ கூட உன்னைய விட பணக்காரன் கிடைச்சா அவ அம்மா இவள உன்னைய விட்டுட்டு வர சொல்லுவா, இவளும்….”

“போதும்…”என்று கத்தியிருந்தாள் சாகித்தியா, அவளது சத்தத்தில் விசாலாட்சியின் குரல் அதன்பின் ஒலிக்கவில்லை. ஆனால் சாகித்தியா மடமடவென மேலே சென்று அத்தியாவசிய பொருட்களை ஒரு பெட்டியில் அடுக்கிக்கொண்டு கீழே விரைந்திருந்தாள்.

கலங்கிய கண்களோடு ஈஸ்வரை பார்த்தபடி வந்தவளை,
“சகி…” என அவன் பதட்டத்தோடு கைபிடிக்க, சுற்றியிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு கடைசியாய் ஒரு விவரிக்க இயலா பாவனையுடன் ஈஸ்வரை பார்த்தவள், தன் கையை அவன் கைகளில் இருந்து உருவி கொண்டு கிளம்பிவிட்டாள், அவன் மோதிரத்தோடு சேர்த்து!

Advertisement