Advertisement

ஆயுள் கைதி 16

சந்தேகமே இல்லை அவளுக்கு! அவளின் ஒவ்வொரு அணுவும்தான் அவனை அணுஅணுவாய் நினைவு வைத்திருந்ததே! வந்துவிட்டான் என்ற ஆசுவாசத்தில் உடம்பெல்லாம் வியர்த்து கண்ணை இருட்டியது. வராண்டாவை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த காலடி சத்தத்தில் முயன்று இயல்பாகி கொண்டு திரும்பி நின்றாள்.இன்னும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“வாங்க ஈஸ்வர் உட்காருங்க, முருகா எல்லோருக்கும் டீ கொண்டு வா…” என்று மாணிக்கவேலின் குரலுக்கு பிறகு,

“ இப்போ எதுவும் வேண்டாம் சார்…” என்று அவனின் குரலும் கேட்டது.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டு கொண்டு நிமிர்ந்தாள்.

“இது என் பொண்ணு மஞ்சரி, வெளியூர்ல படிச்சிட்டு இப்போதான் வந்திருக்கா, இது சாகித்தியா இந்த எஸ்டேட் கணக்கு எல்லாம் பார்த்துக்கிறா… இவளும் என் பொண்ணு மாதிரி தான். திறமை ஜாஸ்தி, உங்களுக்கு இந்த வேலையில உதவி செய்யுற பொறுப்பை இப்ப இவகிட்ட தான் கொடுத்திருக்கேன் சார்…” எதுவும் இருவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.

ஈஸ்வரின் கண்கள் இமைக்காமல் சாகித்தியாவை நோக்க, அவளோ அவன் கையில் போட்டிருந்த எலாஸ்டிக் பேண்டேஜை கலக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

மாணிக்கவேல் இருதரம் அழுத்தி கூப்பிடவும் நிமிர்ந்தவள்,

“என்ன அங்கிள்…” என்றாள் தடுமாற்றத்துடன்,

“என்னமா முகம் ஒருமாதிரி இருக்கு, உடம்பு எதுவும் சரியில்லையா…” என்றார் அவர் அக்கறையுடன்,

“இல்ல அங்கிள், அதெல்லாம் ஒன்னுமில்லை…” என்றாள் தன்னை சமாளித்து கொண்டு,

அவளிடம் இருந்த குடோன் சாவியை வாங்கி இன்னொரு சூப்ரவைசரிடம் கொடுத்தவர், அனைவரையும் வேலைக்கு செல்ல பணித்துவிட்டு இவள் பக்கம் திரும்பி,

“வாம்மா இங்க வந்து உட்காரு, நான் முன்னாடியே சொன்ன மாதிரி இனி நீ இந்த வேலையை மட்டும் பார்த்தா போதும்…” என்றழைக்க,

வந்து அந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டாள். சுற்றி பொதுவாய் பேச்சு சுற்றிக்கொண்டிருந்தது. சாகித்தியா அனைத்தையும் கேட்கும் தோரணையில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். கிளம்பிவிடலாம் தான். ஆனால் அவளுக்கு அவனது கைகட்டு பற்றி தெரிய வேண்டியிருந்தது. ஆனால் சற்று நேரம் தான்.மன உளைச்சலோடு சேர்த்து பசியும் படுத்த அந்த குளிரிலும் வியர்த்தது. துவண்டு விடுவோம் என்ற பயத்தில் கிளம்பிவிடலாம் என்று நிமிர்கையில்,
“சார் டயர்ட்டா இருக்கு, டீ வேண்டாம், ஜீஸ் மாதிரி ஏதாவது கொண்டு வர சொல்றீங்களா, எல்லோருக்கும்…” என்று ஈஸ்வரின் குரல் கேட்டது.

இவன் தன்னை முழுதாய் உடைக்காமல் விடமாட்டான் என்று தோன்ற,
“ அப்போ நான் கிளம்புறேன் அங்கிள், கொஞ்சம் தலைவலியாய் இருக்கு, நாளைக்கு வரேன்…” என்றபடி எழுந்தாள்.

“ இரும்மா களைப்பாய் தெரியுற, ஏதாவது சாப்பிட்டு அப்புறம் போகலாம்…” என்று அவர் சொல்ல அதை பலமாய் மறுக்க தெம்பில்லை அவளுக்கு.

பழச்சாறு, நொறுக்குத்தீனி என கொறித்து கொண்டிருக்கையில்,

“என்னாச்சு சார் கையில…” மாணிக்கவேலின் கேள்விக்கு,

“ அது கொஞ்சம் மாசம் முன்னாடி ஒரு சின்ன விபத்து அதுல அடிப்பட்டது. இப்போ சரியாகிடுச்சி, இந்த மாதிரி ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணும் போது ஸ்ட்ரெயின் பண்ணாம இருக்க இப்படி போட்டுப்பேன், வேற ஒன்னும் பெருசா இல்ல…” இந்த நீண்ட விளக்கம் மாணிக்கவேலுக்கு தேவையில்லை தான். ஆனால் அந்த இடத்திற்கு தேவையாய் இருந்தது. பழச்சாறு உள்ளே போனதில் தெம்பாய் உணர்ந்தவள், நிமிர்ந்து அமர்ந்து அவனை நேராய் பார்த்தாள். அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தும் ஒவ்வொரு அங்குலமாய் அவனை ஆராய்ந்து வேறு காயம் இல்லாததை உறுதி படுத்திக் கொண்டு மாணிக்கவேலிடம் திரும்பி,

“அப்போ நான் கிளம்பட்டுமா அங்கிள்…” என்றாள். அவர் சரியென்றதும் ஈஸ்வரை ஒருமுறை பார்த்து விட்டு வெளியே நடந்தாள். அங்கே இவளை முறைத்தபடி நின்றிருந்தவனை பார்த்ததும்

விடுவிடுவென அவனிடம் சென்றவள், அவன் பேச ஆரம்பிக்கும் முன்னே,

“அறிவிருக்கா உனக்கு, நான் என்ன ஏழுக்கடல் ஏழுமலைத் தாண்டியா இருந்தேன். என்னைய கண்டுபிடிக்க என்ன இரண்டு நாள் ஆகி இருக்குமா உனக்கு. இப்படி அடிபட்டது கூட சொல்லாம இருந்திருக்க…” என படபடவென பொரிய,

சுற்றி முற்றி பார்த்துவிட்டு,
“அப்படியே போட்டேன்னு வை, எல்லா பல்லும் கொட்டிக்கும்… இப்ப பேசுற இந்த பேச்சு, புருஷனும் பொண்டாட்டியும் ஒரு பைத்தியகாரத்தனமான காரணத்தை வச்சுக்கிட்டு பிரிஞ்சு இருந்துப்பீங்க, நீங்க எல்லாத்தையும் விட்டுட்டு ஏதோ வனவாசம் மாதிரி வாழ்வீங்க, அவரு என்னைய தேடாத சொல்லிட்டு அவருமட்டும் நீங்க இருக்குற இடத்துலேயே ஒன்னும் தெரியாத மாதிரி பிசினஸ் பண்ண வருவாரு. நடுவில நான் முழிச்சிட்டு இருக்கேன். இதுல உன்னைய தேடி கண்டுபிடிக்கணுமா… எனக்கு வர்ற கோபத்துக்கு….” என மூச்சு விடாமல் பேசுபவனை பாவமாய் பார்த்தாள் சாகித்தியா. ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போலிருக்கு. ஆனால் அதையும் தாண்டி அவளுக்கு விஷயம் தெரிய வேண்டி இருந்ததால்,

“ சரி அதைவிடு கார்த்திக்… எப்படி ஆச்சு ஆக்சிடெண்ட்…என்ன பிரச்சனை, என்னாச்சு…இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே…,” என்றவளின் கலக்கமான குரலில் கோபம் சற்று இறங்க,

“ லேசான அடிதான், இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு, அதான் பார்க்கிறியே… உனக்காக ஏழுமலை தாண்டி ஏழு கடல் தாண்டி வந்திருக்கான்…” என்று புன்னகையுடன் கூற சாகித்தியாவின் முகத்திலும் புன்னகையின் சாயல்!

அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அவளவனை பார்த்த தாக்கம் முழுதாய் இருக்க,

“சரி எனக்கு டயர்ட்டா இருக்கு, என்னால இங்க இருக்க முடியும் தோனலை, நான் கிளம்புறேன்…” என்றுவிட்டு கிளம்பி இருந்தாள்.

தலையசைத்து விட்டு அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றவனின் அருகில் வந்தவன்,

“போதும் மொத்த கோபத்தையும் ஒண்ணா காட்டிடுவ போல…” என்ற குரல் கேட்டு சட்டென்று திரும்பி முறைத்தான். உடனே முகபாவனை மாற,

“இன்னும் என்ன ஈஸ்வர்…” என்றான் சலிப்புடன்,

“ இன்னும் எதுவும் அபிஷியல் ஆகலையே கார்த்திக்! அதோட….” என்று முறுவலுடன் இழுக்க,

“அதோட…”என்றான் கார்த்திக் கேள்வியாய்,

“குன்னூர் ஹனிமூன் வெகேஷன் பிளான் எல்லாம் எதிர்காலத்தில இருக்குமோ என்னவோ…” என்று கண்ணடிக்க…

“நீ எப்போடா இப்படி மாறின…” என்றுதான் மோவாயில் கைவைத்து பார்த்திருந்தான் கார்த்திக்.

Advertisement