Advertisement

9 ஆயிற்று அன்றோடு பாவனாவை வைத்தியசாலையில் சேர்த்து நான்காவது நாள்..பாவனாவின் தற்கொலை முயற்சி நடந்த மறுநாளே கவின் குடும்பத்தினரிடம் கருண் பாவனாவின் விடயத்தை பற்றி பேசி அனுமதி வாங்கிவிட்டான்.அன்றிலிருந்து லக்ஷ்மி சுமதி என்று அனைவரும் வைத்தியசாலையிலேயே பெரும்பகுதியை செலவளித்தனர்.

கருணோ ஒருபடி மேலே போய் பாவனாவின் பக்கத்திலேயே தவம் கிடந்தான்.கவினும் கூட அடிக்கடி வந்து பாவனாவின் நலம் விசாரித்து சென்றான்..இவ்வளவு நடந்தும் பாவனாவின் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பு இருக்கவில்லை.அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஆதிராவின் ஒதுக்கம் தான்..அன்று கதறி அழுதபின்னர் ஆதிராவிடம் இயல்பாக இருக்aகும் கடினத்தன்மை அதிகரித்து தோன்றியது.

ஸ்ரீயை தவிர அவளது உலகத்திற்குள் யாரும் நெருங்க முடியவில்லை.பாவனாக்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் ஒரு தாதியின் கடமையாக இயந்திர தனமாகவே அனைத்தும் இருக்கும்..

பாவனா பேச முயலும் போதெல்லாம் ஒரு அக்கினிப்பார்வையுடன் ஒதுங்கி கொள்வாள்.அவளின் இந்த ஒதுக்கம் பாவனாவை தவிர கவனத்தில் கொள்ளப்பட்டது கவினால்.

அங்கு வரும் போதெல்லாம் சிரிப்பை மறந்த முகத்துடன் விறைப்பாக திரிபவளை பார்க்கும் போதெல்லாம்

சும்மாவே இவளுக்கு சிரிக்க இலேசுல வராது..இதுல இப்போ ரோபோ போல சுத்தி திரியுறா..சகிக்கல” என்று மனதுக்குள்ளாகவே கமண்ட் அடித்து தான் அடித்த கமண்டுக்கு தனக்கு தானே சிரித்து கொள்வான்.

அன்று பாவனாவை டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தது.அதற்கு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த ஆதிராவின் முதுகையே வெறித்து கொண்டிருந்த பாவனாவின் விழிகள் ஏக்கத்தையே சுமந்து இருந்தது. அண்ணிஎன்று அவள் அழைத்த குரல் கேட்டாலும் திரும்பாமல் பொருட்களை எடுத்து வைப்பதிலேயே கவனமாக இருந்தாள்.

பாவனாவின் தற்கொலை முயற்சிக்கு பொலிஸ் அது இது என்று வந்த பிரச்சனைகள் அனைத்தையும் கவினே முறியடித்திருந்தான்.அது விடயமாக சில கையெழுத்து வாங்கவேண்டி இருந்ததால் பாவனாவை டிஸ்சர்ஜ் செய்யும் முன்னமே வைத்தியசாலைக்கு வந்திருந்த கவினும் கருணும் நடந்ததை கண்டு கொண்டனர். பாவனா ஏக்கமாக அழைப்பதையும் ஆதி அமைதியாக இருப்பதையும் பார்த்து குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவர்களின் இருவரின் பிரச்சனைக்குள் செல்வதா வேண்டாமா என்று கவின் தயங்கி நிற்க,பாவனாவின் ஏக்கமான பார்வையே கருணை உள்ளே அழைத்து சென்றது.யாரோ உள்ளே வரும் அரவம் கேட்டு வாயிலை பார்த்த ஆதிரா கருணை பார்த்து புன்னகைத்துவிட்டு வரவேற்கும் விதமாக தலை அசைத்தாள்.பின்னர் அங்கிருந்த ஃப்ளாஸ்க்கை எடுத்து விறுவிறுவென கன்டீனை நோக்கி நடந்தவளின் பின்னே கவின் செல்ல கட்டிலில் சோர்வாக சாய்ந்தவளின் அருகே கருண் சென்றான்.

விழி மூடி சாய்ந்திருந்தவளின் தலை கோத அவளின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் மடமடவென இறங்கியது.

ஹேய் என்னடா?இப்போ என்ன ஆகிடுச்சு?”

“…”

பச்..அழறத நிறுத்து பாவனாஎன்று அழுத்தி கூறியவுடன் மலங்க விழித்தவளை எட்டி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன்

எதுக்குடா அழுதுக்கிட்டே இருக்க? என்ன தான் நடந்தது?சொன்னா தானே தெரியும்?”

அண்ணி...அண்ணி

என்ன திட்டுனாங்களா?”

ஹூஹூம்

அப்புறம்?”

என்கூட பேசவே மாட்டேங்குறாங்க

என்ன?”

ஆமா.. நான் கண்ணு முழிச்சதில இருந்தே பேசல

இதை எப்போ கவனிக்காம விட்டோம்என்று எண்ணியவன் அதை விடுத்து

விடுமா எல்லாம் போக போக அவங்க கோவம் போய்டும்என்று ஆறுதல் படுத்தியவனை அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே நிமிர்ந்து நோக்கியவள்

இல்லை கருண்..உங்களுக்கு அண்ணிய பற்றி தெரியாது

அது என்னவோ உண்மை தான் மா.ஆனா எப்பிடியும் கல்யாணம் முடிஞ்சு என் கூட அவங்கள விட்டு வரும் போது கதைக்க தானே வேணும்?”

என்று அவன் கூறியவுடன் அவனிடம் இருந்து விலகி கண்களை அழுந்த துடைத்தவள்

நாம கல்யாணம் பண்ணிக்க வேணாம் கருண்என்று கூறி முடிக்கவும் அவள் கன்னத்தை பதம் பார்த்தது ஆதிராவின் கரம்.

காபி வாங்க சென்ற ஆதிராவின் பின்னால் சென்ற கவின் அங்கு அவள் கவுன்டரில் காபியை வாங்கி திரும்பவும் அவளெதிரில் நின்று முறைத்தான்.மறித்தவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவள் கடந்து செல்லவும் அவளின் கையை பற்றி தடுத்து நிறுத்தினான்..அவன் கையை பற்றியதும் விடுவிக்க முயன்றுகொண்டிருந்தவளை நெருங்கி தானே கையை விடுவித்தவன் தன்னை உக்கிரமாக நிமிர்ந்து முறைத்தவளை பார்த்து புருவம் தூக்கி

இதுக்கு நான் மறிச்சப்போவே நின்று இருக்கலாம் ?” என்று நக்கலாக வினவினான்.. அவனின் கேள்வியால் இனும் கடுப்பானவள்

இப்போ உனக்கு என்ன வேணும்?”

உனக்கா?? அதுசரி உன்ன போல ஒருத்திக்கிட்ட மரியாதை எதிர் பார்க்கிறது கஷ்டம் தான்..ஆனா கொஞ்நாளா நானும் பார்க்கிறேன்..உம் என்று கொண்டே திரியுற? பாவனா கூடவும் முறைச்சு கொண்டு திரியுற? என்ன விஷயம்?”

இங்க பாருங்க மிஸ்டர்.இது என்னோட முகம்..நான் எப்படி வேணா வைச்சிருப்பேன்..இது என்னோட வாய்..நான் விரும்பிறவங்க கிட்ட தான் பேசுவேன்..ஒருத்தங்கட சுதந்திரம் மத்தவங்கட மூக்கு நுனிமட்டும் இருக்கலாம் என்றுவாங்க.. பட் என் நிழலை தாண்டியே உங்க சுதந்திரம் இருக்கட்டும்என்று பட படவென பொரிந்துவிட்டு விறுவிறுவென சென்ற ஆதிராவை பார்த்து சிரித்தவன் அவளை சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்..வந்த வேகத்தில் ஆதிராவின் காதில் பாவனாவின் வார்த்தைகள் படவும் ஏற்கனவே தாறுமாறாக ஏறியிருந்த கோவம் கரையை கடக்கவுமே பாவனாவை அறைந்தாள்..

அறைந்ததும் அறைக்குள்

அண்ணீ

சிஸ்டர்

ஹேய் லூஸுஎன்று மூன்று குரல்கள் ஒருமித்து கேட்டாலும் ஆதிராவின் பார்வை என்னவோ கன்னத்தை கைகளால் பிடித்தபடி விழித்துக்கொண்டிருந்த பாவனாவை நோக்கியே இருந்தது..

என்னடி அண்ணி

“…”

உன்னையும் என் பொண்ணு போல தானே பார்த்தேன்..வளர்ந்திட்டேன் என்று காட்டுறியா? அன்றைக்கு கையை அறுத்துக்கிட்டு கிடந்தியே அந்த நிலைமையில உன்னை பார்க்கவாடி இவ்வளவு நாள் இத்தனை கஷ்டம் பட்டேன்..?? ஏன் டி??ஏன் அப்படி ஒரு முடிவெடுத்த? இந்த அண்ணியில இருந்த நம்பிக்கை எல்லாம் பொய்யாகிடுச்சுல?? நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேனா இல்லையா?” என்று தன் தோள் பற்றி உலுக்கிய ஆதிராவின் இடையை கட்டிக்கொண்ட பாவனா

அய்யோ அண்ணி..கருணை நான் லவ் பண்ணுறது உண்மை தான்..ஆனா அதுக்கு அப்புறம் திருமணம்..அதில ஆயிரம் கேள்விகள்..அதெல்லாம் என்னால தானே அண்ணி வரும்..நான் இருந்தா உங்களுக்கு எப்போவுமே கஷ்டம் தான் என்று நினைச்சேன்..அதோட இவரை விட்டு என்னால விலகி இருக்க முடியும் நு தோனல அண்ணி..அதெல்லாம் தப்பா பட்டிச்சு..அதான்..ஆனா சத்தியமா ஒரு செக்கன் தான் அப்படி யோசிச்சேன்..கையை அறுத்துக்கிட்ட பிறகு தான் அண்ணி என் மடத்தனம் எல்லாம் விளங்கிச்சு..ஆனா அது விளங்குறப்போ என்னால கத்த கூட முடியலஎன்று விசித்தவாறே அன்றைய மனநிலையை பகிர்ந்தவளை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்தவள்

ஏன்டி..அப்படி என்னால பிரச்சனைகளை எதிர் கொள்ள துணிவில்லாம இருந்திருந்தா மூன்று வருஷத்துக்கு முதலே நான் செத்திருக்கனும்..நான் சொல்றதை கேளு பாவனா..அண்ணி உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்..சீக்கிரமே கருணோட உனக்கு திருமணம் நடக்கும்என்று ஆதிரா அழுத்தி கூறவும்

அவளை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்

இல்லை அண்ணி..என்னை விட உங்களுக்கு மூன்று வயது தானே அதிகம்..உங்க வாழ்க்கை இப்படி இருக்கிற நேரம் என் வாழ்கையை பத்தி சுயநலமா என்னால முடிவெடுக்க முடியாது

என்றூ கூறவும் பழைய நினைவுகளின் தாக்கம் எல்லம் மொத்தமாக சேர்ந்து ஆதிராவை தாக்க தடுமாறியவள் சோர்ந்த நடையுடன் வெளியில் செல்ல தொடங்கினாள்..

ஆதிரா வெளியேறியதும் மீண்டும் அழதொடங்கிய பாவனாவை கருண் சமாதானம் செய்ய தொடங்கவும் புருவம் சுழித்தபடி சிந்தனையுடன் நின்றது கவின் தான்..பாவனா ஆதிராவின் கலந்துரையாடலில் இருந்து எதையும் இனம்பிரிக்க முடியவில்லை ஆயினும்  கூட அவனுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று தான்..அதாவது ஆதிராவின் வாழ்க்கை சீரானால் அன்றி கருண்பாவனா திருமணம் நடக்க சாத்தியமே இல்லை. சிறிது நேரம் தன் மனதிற்குள்ளாகவே கணக்கு போட்டவன்  மறுபடியும் ஆதிராவை தேடி சென்றான்..

வைத்தியசாலையில் அமைந்திருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த சீமென்ட் பெஞ்சில் அமர்ந்தபடி முன்னே பரந்திருந்த புற்றரையையே வெறித்திருந்த ஆதிராவின் தோற்றத்தை பார்க்கவே மனதினுள் ஏதோ செய்தது கவினுக்கு..அவள் அமர்ந்திருந்த பெஞ்சிலேயே சற்று தள்ளி அமர்ந்தவன் தொண்டையை செறுமவும் திடுக்கிட்டு திரும்பிய ஆதிராவின் கண்களில்

ஐயோ இன்னும் என்ன?” என்ற அலுப்பே நிறைந்து இருந்தது

நான் இப்போ உன்ன சீண்டவோ.. இல்லை உன் கூட வார்த்தையாடவோ வரல..பொண்ணு வீட்டவங்க சார்பில பேச தான் வந்திருக்கேன்..பேசலாமா?”என்று கறாராக கேட்கவும் தயக்கமாக தலை அசைத்தாள்..

இப்போ பாவனா பேசினதில இருந்து என்ன முடிவு எடுத்திருக்கிங்க?”அவனின் மரியாதையான பேச்சு கலக்கத்தை தந்தாலும்

எனக்கு..எனக்கு..என்ன முடிவு எடுக்கிறது என்றே தெரியல

இங்க பாருங்க ஆதிரா..இதுல உங்க குடும்பம் மட்டும் இல்ல..எங்க குடும்பத்தோட மரியாதை நிம்மதியும் அடங்கி இருக்கு..அதைவிட கருண் உடைஞ்சு போனா எங்க குடும்பமே சோர்ந்து போய்டும்..என்னால அத அலவ் பண்ண முடியாது..உங்க அனுமதியில தான் என் குடும்பத்தோட நான் கதைச்சது..இப்போ உங்க சைட்ல தான் ப்ரொப்ளம்..ஸோ இதை நீங்க தான் சமாளிக்கனும்..ரைட்?”

என்று கறாராக பேசவும் விழிகளை இறுக மூடி ஆழமூச்செடுத்தவள்

நிச்சயமா சார்..என்னால பாவனாவை சம்மதிக்க வைக்க முடியும்.. எனக்கு ஒரு வாரம் டைம் தாங்கஎன்று கேட்கவும்

ரைட்என்று கூறி எழுந்தவன் ஒரு பக்கா பிஸ்னஸ்மானாகவே ஆதிராவின் கண்களுக்கு தெரிந்தான்..

கவின் வாயிலை நோக்கி நடக்கவும் கருண் வெளியே வருவது தெரிந்தது..கவினின் அருகில் வந்த கருண்

போகலாம் கவின்என்று கூறி காரை நோக்கி நடக்கவும் கவினும் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.

அருகில் இருந்த சீட்டில் சோர்ந்து சாய்ந்த கருணை திரும்பி பார்த்த கவின் காரை ஸ்டார்ட் செய்தவாறே

ஹேய்..நீ வொர்ரி பண்ணாத..ஆதிரா கிட்ட பேசியாச்சு..பாவனாவை எப்பிடியும் கன்வின்ஸ் பண்ணிடுவாஎன்று கூடவும் தலையை மறுப்பாக அசைத்தவன் கவினை நிமிர்ந்து பார்த்து

பாவனாவே ஓகே சொன்னாலும் ஆதிராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் நான் திருமணம் செய்ய போறதில்லை கவின்என்று கூறவும் கார் கிறீச்சென்ற சத்தத்துடன் நின்றது..

அதிலிருந்தே கவினின் அதிர்ச்சியை புரிந்து கொண்ட கருண்  கேள்வியாக பார்க்கவும்

புரிஞ்சு தான் பேசுறியா?”என்று கேட்கவும் உறுதியான குரலில்

எல்லாம் தெரிஞ்சு புரிஞ்சதனால தான் பேசுறேன்என்று உறுதியாக உரைத்தவனை முறைக்கத்தான் முடிந்தது கவினால்.

சாய்வுநாற்காலியில் சாய்ந்து அசைந்து ஆடியபடியே தன் நெஞ்சில் துயில் கொண்டிருந்த ஸ்ரீயின் தலையை வருடியபடியே சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் ஆதிரா.எதிரே இருந்த கட்டிலில் அழுகையின் மிகுதியாக விசித்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள் பாவனா.

 

ஆதிராவின் நினைவடுக்குகளில் ஆறு நாட்களாக பாவனாவுடன் மல்லுக்கட்டிய சந்தர்ப்பங்களே வந்து வந்து சென்றன. பாவனாவை வீட்டிற்கு அழைத்து வந்து ஆறு நாட்களாகி விட்டன. இந்த ஆறு நாட்களாக குழந்தைக்கு சொல்வது போல எவ்வளவு அன்பாக கண்டிப்பாக கெஞ்சலாக கருணை திருமணம் செய்யும் படி எடுத்து கூறினாலும் அவள் படிக்கும் ஒரே புராணம்

அண்ணி உங்கள விட்டு விட்டு நான் போக மாட்டேன்

அப்போ நீங்க ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ங்கஎன்பது தான்..

 

ஏன்?ஏன் அவளிற்கு புரிய மாட்டேன் என்கிறது?? அவளால் திருமணம் என்ற ஒன்றை எப்படி நினைத்து பார்க்க முடியும்??ஸ்ரீயின் கதி என்னவாகும் அதன் பின்பு?? அய்யோ என் குழந்தையின் மனது என் செயலால் துன்புறுவதா? ஹூஹூம்..ஆனால் பாவனாவின் வாழ்க்கை?? நாளை கவினுக்கு வேறு பதில் சொல்லி ஆக வேண்டும்..

 

பாவனா கருணை வேண்டாம் என்று சொன்னால் அவனை விட ஆயிரம் பேரை அவனை விட சிறந்தவர்களாகவே பாவனாவின் முன் வரிசை கட்ட வைத்திருப்பாள். ஆனால் கருணை வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொரு கணமும் அவள் கண்ணில் தெரியும் அந்த வெறுமை..அதை கருணன்றி யாரால் தீர்க்க முடியும்..அண்ணியாக அம்மாவாக இருந்தால் கூட அவளால் முடியாதே?

 

இவ்வாறு ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில் தோன்றவும் அதற்கான விடையை தேடியபடி அப்படியே கண்ணயர்ந்தவள் சூரியஒளி அறை ஜன்னலை தாண்டி முகத்தில் விழவும் தான் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள்.எழவும் நெஞ்சில் தெரிந்த பாரத்தில் தான் தன் நெஞ்சில் துயில் கொண்ட பிஞ்சு முகம் நியாபகம் வர புன்னகையுடனேயே ஸ்ரீயை அணைத்து தூக்கியவாறு சற்று விறைத்த கால்களுடன் தடுமாறியபடி  எழுந்தவள் அமர்ந்திருந்த கதிரையை பற்றி தன்னை நிலைப்படுத்தினாள்..

அந்த சிறு குலுங்கலிலேயே சிணுங்கிய மகளை தட்டிக்கொடுத்தவள் பாவனாவின் கட்டிலின் அருகே சென்று அவள் அருகிலேயே ஸ்ரீயை கிடத்தினாள்..

அவர்கள் இருவரையும் ஒரு சேர நோக்கியவளின் காதுகளில்

ஆதி..ஸ்ரீ,பாவனா இருவருமே இனி உன் பொறுப்பு..ஸ்ரீக்கு மட்டுமல்ல பாவனாக்கும் நீ இனி தாய் தான்என்ற குரல் ஒலிக்கவும் பற்களை கடித்தவாறு தன்னுள் எழுந்த சோக அலையினுள் மூழ்காமல் தப்பித்தவள் மனதினுள்ளே

உங்க இருவரின் சந்தோஷம் நிம்மதிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்என்று கூறி கொண்டவள் அடுத்த நிமிடத்தில் இருந்து பம்பரமாக சுழல தொடங்கினாள்.

அலுவலகத்தில் சுழல் கதிரையில் சாய்ந்து சுழன்றவாறே விழிமூடி அமர்ந்து இருந்த கவினின் சிந்தனை முழுவதும் தந்தையின் வார்த்தைகளே நிறைந்து இருந்தன..

அன்று வைத்தியசாலையில் ஆதிராவிற்கு வாழ்க்கை அமைந்த பின்னர் தான் நான் பாவனாவை திருமணம் செய்வேன் என கூறிய கருண் அதிலிருந்து இயல்பாக மாறிவிட்டான்..இல்லை..இல்லை..இயல்பாக இருப்பது போல நடித்துக்கொண்டு இருக்கிறான்.அதை இனங்காண ஆளாளப்பட்ட கவினுக்கே இரு நாட்கள் எடுத்தது..

ஏனோ தானோ என்று உணவு உண்பதும்..எங்கோ வெறித்துக்கொண்டிருப்பதும்..ஃபோனில் பாவனாவின் புகைப்படங்களை வருடிக்கொண்டிருப்பதும் ஏதோ பசலை நோயால் வாடும் சங்க கால தலைவி போல இருக்கிறாயே என்று சிந்து கூட கேலி செய்து பார்த்தாள்..உதடுகளை வலிய இழுத்து சிரித்தானே தவிர புன்னகை கண்களை எட்டவே இல்லை.

 

கவின் இதெல்லாம் தன் கண்ணில் தான் பட்டிருக்கிறது என்று பார்த்தால் குடும்பமே அழைத்து அன்று காலையில் பேசவும் தான் அவர்களையும் கருணின் நடவடிக்கை பாதித்திருப்பதை அறிந்து கொண்டான்.

Advertisement