Advertisement

                                             அத்யாயம் — 9
     இரண்டு  நாட்களுக்கு  பிறகு.. ‘மாமா.. “  என்றழைத்தபடி   உள்ளே  வந்தான்  ராஜா.        
     ‘வாய்யா..  ராஜா..” என்று  சோபாவில்  அமர்ந்து  ராஜாவையும்   உக்கார  சொன்னார்.
     ‘சுகுனா  இல்லையா  மாமா..?”
     ‘உள்ளதான்ப்பா  இருக்கா..  சுகுனா..  ராஜா  கூப்பிடறான்..  வா..”
     வெளியே  வந்த  சுகுனாவைப்  பார்த்த  ராஜா..  சட்டென்று  எழுந்தான்.  சுகுனாவின்   கண்கள்  அழுது அழுது ..  வீங்கியிருந்தது.   முகம்  கோவைப்   பழமாய்  சிவந்திருந்தது.  ராஜாவே  சற்று  தடுமாறித்தான்  போனான்.  ‘என்ன  சுகுனா..  இப்படி..?” என்று  கேட்டவனுக்கு   அதற்கு  மேல்  வார்;த்தை  வரவில்லை.   சற்று  நேரம்  மௌனம்  காத்தான்.  பிறகு..  ‘ரகு..  உனக்கு  ஆசை  காட்டிட்டு  ஏமாத்திட்டானா..?”  என்றான்  கோபமாக.
     ‘இல்லை..   நான்தான்   அவர்  மேல  ஆசைப்பட்டு  ஏமாந்து  போய்ட்டேன்..” என்று  அழுதாள்.
    ‘நீ  ஏமாந்து  போற  அளவுக்கு ரகு  ஒன்னும்  பெரிய  ஆள்  இல்ல..  நீ  கல்யாணம்  பண்ணிக்கப்போறவன்   இந்நேரம்  எந்த  நாட்டில  இருக்கானோ..?  நீயெல்லாம்  இந்த  ஊருல  இருக்கிற  ஆளே  இல்ல  தெரியுமா..?  பாரின்ல  இருக்கவேண்டியவ… “ என்றான்.
    ‘எந்த  நாட்லையும்   நான்  இருக்க  விரும்பலை..  பேசாம  செத்து  போய்டலாம்னுதான்  பார்த்தேன்.  உங்க  மாமாதான்  என்னையும்  கூட்டிட்டுப்  போன்னு  என்னை  உயிரேட  சாகடிக்கிறார்.”  என்றாள்.
    ‘இப்படி  பேசினின்னா  நானே  உன்னை  சாகடிச்சிடுவேன்.  நீ  விரும்பின  வாழ்க்கை  கிடைக்கலைன்னு  வருத்தப்படறமாதிரியே..   உன்னை  விரும்பினவனும்  இதே  மாதிரிதான்  வருத்தப்பட்டுட்டு  இருக்கான்..  அப்ப..  அவனையும்  சாக  சொல்லலாமா..?” என்றான்.
    சுகுனாவோடு  சேர்ந்து   தம்பிதுரையும்  அதிர்ந்தார்.  ‘ஆமாம்  மாமா..  நம்ம  நந்தினி  அக்காவோட  ஊர்ல..  விவேக்ன்னு  ஒருத்தன்..    பார்க்கறதுக்கு   ஆள்  சூப்பரா  இருப்பான்.  அக்காவீட்டு   கிரகப்பிரவேசத்தில   அவன்  சுகுனாவையேத்தான்   பார்த்திட்டு  இருந்தான்.    முன்னாடி  கொஞ்சம்  வசதி  கம்மின்னாலும்   இவன்  நல்லா  படிச்சி..  இப்ப  அமெரிக்காவில   வேலைல  இருக்கான்.    மாசத்துக்கு  லடச்சத்தில  சம்பளம்  வாங்கறான்.  இது  எல்லாத்துக்கும்  மேல  நம்ம  சுகுனாவை  அவனுக்கு   ரொம்ப  பிடிச்சிருக்கு.” என்றவன்..  சுகுனாவைப்  பார்த்து..  ‘விவேக்கோட  காதல்  உண்மைன்னா..   உனக்கும்  ரகுவிற்கும்  நிச்சயம்  ஆன  விசயம்  தெரிஞ்சி  உன்னைப்   பார்க்க  ஓடோடி  வருவான்.   அப்படி  வரலைன்னா  நீ  அவனை  கல்யாணம்  பண்ணிக்க  வேண்டாம்.   ஒருவேளை  வந்திட்டான்னா..  நீ  அவனைத்தான்  கல்யாணம்  பண்ணிக்கனும்..‚” என்றான்  மிரட்டும்  தோரணையில்.
     ‘நான்  யாரையும்   கல்யாணம்  பண்ணிக்க  மாட்டேன்..” என்றாள்..
      ‘ரகு  பண்ணின  மாதிரியே  நானும்  எதாவது  பண்ணிடுவேன்னு   நினைச்சி  அப்பா  எனக்கு  சீக்கிரமாவே   கல்யாணம்  பண்ணி  வைக்க  முடிவு  பண்ணியிருக்கார்.  எனக்கும்  மீனாவை  பிடிச்சிருக்கு.  ஆனா  உன்னோட  கல்யாணம்  முடியாம  என்னோட  கல்யாணம்  கண்டிப்பா  நடக்காதுன்னு  சொல்லிட்டேன்.   என்னைக்கூட  விடு.  இத்தனை  பேரை   எதிர்த்து   கல்யாணம்  பண்ணியும்..  நீ  மனவருத்தத்தில  இப்பங்கிற  ஒரு  காரணத்துக்காகவே   அண்ணியை  அவங்க  வீட்லயே  விட்டு  வச்சிருக்கான்  ரகு.  மனைவிங்கற  ஸ்தானத்திலதான்   ரகுவால  உன்னை  வச்சிப்  பார்க்க  முடியலையே  தவிர  ரகுக்கு  உன்மேல  நிறைய  அன்பும்  பாசமும்  இருக்கு  சுகுனா.. “  என்று   அவள்   மனதை  மாற்ற  முடிந்த  வரை  போராடிக்கொண்டிருந்தான்  ராஜா.
      ‘யாரைப்  பத்தியும்  கவலைப்படாம  அவசர அவசரமா  கல்யாணம்  பண்ணினவங்க  எல்லாம்..  எனக்காக  பொண்டாட்டியை  பிரிஞ்சி  இருக்கேன்னு  சொல்லக்கூடாது..” என்று  ஆத்திரம்  பொங்க  சொன்னாள்.
    ‘நீ  சொல்றது  கரெக்ட்தான்.   யாரைப்  பத்தியுமே  கவலைப்படாதவனுக்காக  நீ  ஏன்  உன்னை  வருத்திக்கிற..?  ரகுக்காக  நீ  கல்யாணம்  பண்ணாம  இருந்தினா..  அப்ப  நீயும்  யாரைப்பத்தியுமே  கவலைப்படலன்னுதான  அர்த்தம்..‚  உங்க  அப்பாம்மாவை  நினைச்சிப்  பாரு  சுகுனா..  அவங்க  கவலைக்கு  முன்னாடி  உன்  வருத்தமெல்லாம்  ஒரு  விசயமே  இல்ல..” என்று  ராஜா  சொல்லும்போது..  தம்பிதுரை  கண்ணீர்   விட்டார்.
     துரை  கண்களில்  கண்ணீரைப்  பார்த்ததும் ‘அப்பா..” என்று  துரையை  கட்டிக்கொண்டாள்  சுகுனா. துரை  சுகுனாவைத்  தட்டிக்கொடுத்து  ‘அழாதடா..   போய்..  ராஜாக்கும்  எனக்கும்  டீ  போட்டுட்டு  வா..” என்றார்.
    சுகுனா  டீயோடு  வந்தாள்.  அந்த  நேரம்  விவேக்கும்  உள்ளே  வந்தான்.  விவேக்கின்  முகம்  வாடியிருந்தது.   துரை  ராஜாவைப்  பார்க்கவும்  ‘மாமா  இவன்  விவேக்..” என்றான் ராஜா.
     சுகுனா   உள்ளே  போக  எத்தனிக்க..  ‘ஒரு  நிமிசம்  இரு  சுகுனா..” என்றான்  விவேக். மீண்டும்  அவள்  உள்ளே  போக  முயற்ச்சிக்கவும்..  ராஜா  சுகுனாவின்  கையை  பிடித்து  உக்கார  வைத்தான்.  ‘அந்த  ரகு  வேற  ஒரு  பொண்ணை  விரும்பறான்னு  தெரிஞ்சும்..  அவனோட  நிச்சயத்துக்கு  சம்மதிச்சிருக்கியே..‚  அப்படி  எந்த  விதத்தில  ரகுவை  விட  நான்  குறைஞ்சி  போய்ட்டேன்..?” என்றான்  அடக்கப்பட்ட  கோபத்துடன்.
     சுகுனா  மீண்டும்  அமைதியாக  இருக்கவும்..  ‘கேவலம்  சொத்துக்காகவா..?” என்றான்.
     விவேக்  அப்படி  சொன்னதும்..  ராஜாவிற்கு  கோபம்  வந்து..  ‘விவேக்…” என்று  கத்தியபடி  அவன்  சட்டையை  பிடிக்கப்  போனான்  ராஜா.
     ‘என்னை  எப்படி  புரிஞ்சி  வச்சிருக்கான்னு  பார்த்திங்களா   ராஜாமாமா…  இதுக்காகத்தான்  இவனைப்  பத்தி  நீங்க  சொல்லும்போது   இவனை  கல்யாணம்  பண்ணிக்க  மாட்டேன்னு  நான்  சொன்னேன்..‚” என்றாள்.
     தன்னை  கல்யாணம்  செய்துகொள்ள  சுகுனாவிடம்  சொன்னாயா..?  என்பது  போல்  அதிசயமாக  ராஜாவை  விவேக்  பார்க்க.. விவேக்கின்   சர்ட்டில்  இருந்த  தன்  கையை  விலக்கினான்  ராஜா. பிறகு..  ‘சுகுனா   நீ  சொன்னதுதான்  ரொம்ப  சரி..  காதலிக்கிற  பொண்ணோட   மனசை  புரிஞ்சிக்காதவன்  காதலெல்லாம்  ஒரு  காதலா..?  இவன்  உனக்கு  சரிபட்டு  வரமாட்டான்.  நான் உனக்கு வேற  மாப்பிள்ளையே  பார்க்கிறேன்.. “ என்று   சுகுனாவிடம்  சொல்லி  விவேக்கை  பார்த்து  கண்ணடித்தான்.
        தம்பிதுரை ‘தம்பி..  எதுவாயிருந்தாலும்  உங்களோட  அப்பாம்மாவையும்  கூட்டிட்டு  வாங்க.  அப்புறம்  பேசிக்கலாம்.  இப்ப  இங்கயிருந்து  கிளம்புங்க..” என்றார்.
     ‘அப்ப  எங்கப்பாம்மாவை   கூட்டிட்டு  வரட்டுமா..? என்று  சுகுனாவைப்  பார்த்து  கேட்டவன் அவள்  அமைதியாக  இருக்கவும்..  ‘நான்  சொன்னா  என்  பொண்ணு  கேப்பா..  நீங்க  போங்க..” என்றார்  துரை.
     விவேக்  சந்தோசத்துடன்  வெளியே  போவதைப்  பார்த்திருந்த  சுகுனா..  இனம்  புரியாத  தவிப்பில்  இருந்தாள்.  ‘விவேக்  ரொம்ப  நல்லவன்   சுகுனா..” என்றான்  ராஜா.
     ‘உண்மையாவே  என்னால  ரகுமாமாவை  மறக்க  முடியாது.” என்று  கண்ணீர் விட்டாள்.
    ‘உன்னை  யார்  மறக்க  சொன்னா..?  கல்யாணம்  பண்ணிகிட்டாத்தான்  அவன்  உனக்கு  மாமனா..?  நீ  யாரை  கல்யாணம்   பண்ணிக்கிட்டாலும்  என்னைக்குமே  அவன்  உனக்கு   ரகு மாமாத்தான்.  அன்பு.. பாசம்ங்கிறது  வேற  கல்யாணம்ங்கிறது  வேற  சுகுனா.   எனக்கு  கூடத்தான்    நிறைய  முறைப்பொண்ணுங்க  இருக்காங்க.  அவங்களை  எல்லாரையுமா   என்னால  கல்யாணம்  பண்ணிக்க  முடியும்..?  எனக்கு  பிடிச்ச  மீனாவைத்தான்  பண்ணிக்க  முடியும்.  அதுக்காக  உன்னையோ  இல்ல  மத்த  அத்தை   பொண்ணுங்களையோ  எனக்கு  பிடிக்கலைன்னு  ஆய்டுமா..?”  என்றான்.
    சுகுனா  அமைதியா  இருக்கவும்..  ‘வளர்ந்திருக்கிறியே  ஒழிய  ஒரு  மண்ணும்  தெரியலை  உன்னை  கட்டிக்கிட்டு..  விவேக்  என்ன  பாடுபட  போறானோ..?” என்றான்.
     ‘ராஜா  என்ன  ஏதுன்னு  விசாரிக்காம  முடிவா  அப்படி  சொல்லாத..” என்றார்  தம்பிதுரை.
     ‘மாமா..  விவேக்  விசயத்தை   கண்டுபிடிச்சது  மட்டும்தான்  நான்.  மத்தபடி  அவனைப்  பத்தின  எல்லா  விபரங்களையும்  விசாரிச்சதெல்லாம்  உங்க  உயிர்  மாப்பிள்ளை  ரகு..  இன்னைக்கு  காலைலதான்  நான்  சொன்னேன்.  அடுத்த  ஒரு  மணிநேரத்துக்குள்ள  விவேக்கைப்  பத்தின  எல்லா  விபரங்களையும்  சொல்லிட்டான்..” என்றான்  பெருமையாக.
      ‘ரகு  சொன்னா  சரியாத்தான்  இருக்கும்.  என்னைக்கு  அந்த  தம்பி  வீட்ல  இருந்து  வரேன்னு  சொல்றாங்களோ  அன்னைக்கு  நான்  நம்ம  வீட்டுக்கு   சொல்றதுக்கு  வரேன். எல்லாருமா  சேர்ந்து  சுகுனாக்கு  ஒரு  நல்லது  பண்ணிடலாம்..” என்றார்.
      ‘நாங்க  இல்லாம  நம்ம  சுகுனாவை  எவனாவது  கல்யாணம்  பண்ணிகிட்டு  போய்டுவானா..?” என்று தனது   காலரை  தூக்கியபடி  சொல்லி  சந்தோசமாய்  கிளம்பினான்.     
                                               அத்யாயம்  — 10
      வீட்டிற்கு  வந்த  ராஜாவின்  கண்கள்  முதலில்  ரகுவைத்தான்  தேடியது.  ரகு  இல்லை  என்றதும்  தன்  அம்மாவிடம்  கேட்டான்.   ‘காலையில்  போனவன்  இன்னும்  வரலை..” என்று  சொன்னார்.  உடனே  ரகுவிற்கு  போன்  செய்தான்.
   ‘என்னடா..?  சுகுனாவை  ஒரே  நாள்ல  காம்ப்ரமைஸ்  பண்ணிட்டியாட்டங்குது.. “ என்றான்  ரகு.
   ‘மாமா  சொன்னாரா..?” என்றான்   ராஜா.
   ‘விவேக்கே  சொன்னான்..”
   ‘அப்படின்னா..  நீ  கொடுத்த  தைரியத்திலதான்   விவேக்  அங்க  வந்தானா..?”
   ‘காதல்  கொடுத்த  தைரியம்டா  அது..” என்றவன்..    ‘நான்  கொஞ்சம்  பிசியா  இருக்கேன்..  வர  நைட்  ஆகும்.  அதுவரைக்கும்   போன்  பண்ணி  தொல்லை  பண்ணாத.” என்று  வைத்துவிட்டான்.   சுகுனா   மனம்  மாறியது  ரகுவிற்கு   அப்படியொரு  மனநிம்மதியை  கொடுத்தது.    ரகு தான்  வழக்கமாக  பார்வதியை  சந்திக்கும்  பங்ளாவில்  இருந்து  சந்தோசமாக  பார்வதிக்கு  கால்  பண்ணினான்.   நான்கைந்து  முறை  கால்  பண்ணியும்  பார்வதியிடமிருந்து  பதிலில்லை  என்றதும்..   ‘ஒழுங்கா  கால்  பண்ணு..  இல்லன்னா  இன்னும்   பத்தே நிமிசத்தில  நான்  உன்  பக்கத்தில  இருப்பேன்..” என்று  ஒரு  குறுஞ்செய்தி   அனுப்பினான்.   அடுத்த  நொடி..  பார்வதியிடமிருந்து  ரகுவிற்கு  அழைப்பு  வந்தது.
      முகத்தில்  புன்னகையை  தவிழ  விட்டவன்..  ‘ஏண்டி  போன்  பண்ணினா   அட்டென்  பண்ண  மாட்டியா..?  இப்படி  சின்ன  சின்ன  விசயத்துக்கெல்லாம்  எதுக்குடி  என்னை  வில்லனாக்குற..?” என்றான்.
     ரகு  அவளை  எப்பொழுதாவதுதான்  டி  போட்டு  பேசுவான்.  அவன்  அப்படி  பேசிவிட்டான்  என்றால்  உடனே  அவளை  பார்த்தே  ஆக  வேண்டும்  என்பான்.  இப்பொழுது  அவன்  ஏண்டி  என்று  பேசவும்..  பார்வதி  சற்று  பதட்டமானாள். 
        பதட்டத்தில்  அவள்  அமைதியாக  இருக்கவும்..  ‘நீ  சரிபட்டு  வரமாட்ட..  ஒரு  பத்து  நிமிசம்  இரு..  நானே  உங்க  வீட்டுக்கு  வந்திடறேன்..“  என்று  சொன்னதுதான்..  ‘இல்லையில்ல..”  என்று   அவசரமாக  மறுத்தாள்.
     ‘இன்னும்  கொஞ்ச  நேரத்தில நாம  வழக்கமா  மீட்  பண்ற  இடத்துக்கு  நீ  வந்தே  ஆகனும்..‚”
     ‘அப்பா  வீட்ல  இருக்கார்  ரொம்ப  டிஸ்டர்பா  வேற  இருக்கார்.  இப்ப  நான்  என்னன்னு   அவர்கிட்ட  சொல்லிட்டு  வரட்டும்..?  அதுவுமில்லாம  எனக்கும்  ரொம்ப  டையர்டா  இருக்கு..” என்றாள்.
    ‘ஆகமொத்தம்  நீ  இப்ப  வர  ஐடியாவில  இல்ல..  அப்படித்தான..?”
    ‘சொன்னா  புரிஞ்சிக்கோங்க..  ப்ளீஸ்;..” என்று   சொல்லும்போது  வீராச்சாமி  உள்ளே  வந்தார்.
    ‘விடு..  பார்த்துக்கலாம்..” என்று  கட்  பண்ணிவிட்டான்.
     மகளின்  முகசலிப்பைப்  பார்த்து..  ‘என்னம்மா..?  அபிசியல்  காலா..” என்றார்  வீராச்சாமி.  
    ‘ம்ம்..   ஆமாம்ப்பா.. கொஞ்சம்  வெளில  போற  வேலையிருக்கு..  போய்ட்டு   சீக்கிரம்  வந்திடறேன்..” என்றாள்  தயக்கத்துடன்.
    ‘சரிம்மா பார்த்துப்போ.  ரொம்ப  லேட்  ஆகும்னா  எனக்கு  கால்  பண்ணு..” என்றனுப்பினார்.
     ரகுவிற்கு  கால்  செய்து  ‘நான்  வரேன்..  அதுக்குள்ள  எதாவது  ப்ளான்  போட்டு  தொலைச்சிடாதிங்க..”  என்று  கடுப்பாக  சொல்லி  தன்  ஸ்கூட்டியை  ஸ்டார்ட்  செய்தாள்.
     கல்யாணத்துக்கு  முன்னாடி  கூட  பரவாயில்லை..   இப்ப  என்னடான்னா..  மனுசனோட  அவஸ்தை  புரியாம  அநியாயத்துக்கு   இப்படி  அவாய்ட்  பண்றாளே..   வரட்டும்  பேசிக்கலாம்..  என்று  நினைத்தவனுக்கு  அவள்  வரும்வரை  நேரமே  போகவில்லை.
     பார்வதி  தன்  ஸ்கூட்டியில்   இருந்து  இறங்கினாள்.  என்றும்  இல்லாத  பழக்கமாய்   கழுத்தை   சுற்றி  துப்பட்டாவேறு  போட்டிருந்தாள்.   பார்வதி  மாடானாக  உடை  உடுத்துபவள்.  ஆனால்  பார்ப்பவர்களுக்கு  அநாகரீகமாக  தோன்றாதவாறுதான்   உடுத்துவாள்.  அவள்  உடல்  அமைப்பிற்கு  அவள்  உடுத்தும்  உடையே  தனி  அழகை  கொடுக்கும்.   
     உள்ளே  வந்ததும்..  ‘உங்களுக்கு   கொஞ்சமாவது  அறிவிருக்கா..?” என்றாள்.
    ‘நீதான்  என்கிட்ட  என்னென்ன  இருக்குன்னு  பார்த்து  சொல்லேன்..” என்றான் கூலாக.  ரகுவை  தனிமையில்  பார்த்ததும்..  அவனோடு  வாழ  வேண்டாம்  என்ற  நினைவு  காணாமல்  போய்  அவன்  மார்பில்  தஞ்சமடையத்  துடித்தது..  எனினும்   அதை  மறைத்தவளாய்.. 
     ‘ப்ச்ச்.. எங்கப்பாகிட்ட  நம்ம  காதலுக்காக   நிறையமுறை  நான்  பொய்  சொல்லியிருக்கேன்தான்.   எங்கம்மா  இருக்கும்போது   அது  எனக்கு   பெரிய  விசயமா  தெரியலை.   ஆனா இப்ப  அவர்கிட்ட   பொய்  சொல்ல  எனக்கு    கஷ்டமா  இருக்கு.   டியூட்டிக்கு   போயிருந்தார்னா  கூட   தெரிவிச்சிக்காது.  இப்ப  வீட்ல  இருக்கும்போது   நானும்  இல்லாம  இருந்தா..  அவர்  லோன்லியா   பீல்  பண்ணுவார்.” என்று  புலம்பினாள்.
      ‘நான்  இப்படி  பண்றதுக்கு  நீதான்  காரணம்.  சும்மா  பார்க்கலாம்னு  வீட்டுபக்கம்  வந்தா..   பேசலைன்னா  கூட  பரவாயில்ல.  எதுக்குடி  என்கூட  அப்படி   மல்லுக்கு  நிக்கிற…?”
      ‘எப்பப்பாரு..  எந்த  விசயமா  இருந்தாலும்  அவசர அவசரமாவே  பண்ணினா..  மல்லுக்கு   நிக்காம  கொஞ்சுவாங்களா..?” என்றாள்.
      ‘அப்ப..  நிறுத்தி  நிதானமா  எதாவது   பண்ணலாமா..?” என்று   பார்வதியை  பின்னாலிருந்து   அணைத்து   ஆளுயர  கண்ணாடி  முன்  நிறுத்தி..   தயாராய்  வைத்திருந்த   குங்குமத்தை   எடுத்து    பார்வதியின்  வகிட்டில்   வைத்துவிட்டான்.   பிறகு  அவள்  துப்பட்டாவை  விலக்கினான்.  தான்  கட்டிய  தாலி  அவள்  உடைக்குள்   இருப்பதை  பார்த்தவன்  அதை  எடுத்து  வெளியே  விட்டு..  ‘இப்ப  எப்படியிருக்கிறன்னு   பாரு..” என்றான்.   கண்ணாடியில்  ரகுவின்  பார்வையை  பார்த்த  பார்வதியின்  உடல்  சிலிர்த்தது. 
      ‘ஆ பீஸ்   வேலையா  வந்திருக்கேன்னு   அப்பா  நினைச்சிட்டு  இருக்கார்.  நான்  போகட்டுமா..?” என்று    பதட்டமாக  கேட்டாள்.
       பார்வதியின்   பதட்டம் அவள்  முகத்தில்  தெரியவும்  ‘டாக்டர்  நீ  ரொம்ப  வீக்கா  இருக்கேன்னு  சொல்லியிருக்காங்க.  அதனால  நான்  உன்னை  எதுவும்  பண்ணமாட்டேன் பயந்துக்காத.  நம்ம  வாரிசு  உன்  வயித்துக்குள்ள  இருக்கு.   அதை  மட்டும்   கொஞ்சமா  செலிபிரேட்  பண்ணிக்கலாம்.   இந்த  மாதிரி  தருணங்கள்  நம்  வாழ்க்கையில   மறுபடி  வராது.”  என்று  அவள்  முன்  மண்டியிட்டு  பார்வதியை  அணைத்தபடி  அவளின்   வயிற்றில்   முத்தம்  கொடுத்தவன்  அவளை  அள்ளி  அருகில்  இருந்த  சோபாவில்   அமர  வைத்து..  ‘பார்வதி..” என்று  அவளின்  இதழ்களில்  நீண்ட  நேரம்  இளைப்பாறி..  பிறகு  விடுவித்தான்.
     ரகுராம்  மீதான  பார்வதியின்  காதல்  அடிமனத்திலிருந்து  மீண்டும்   உயிர்த்தெழ..  தன்  சிவந்த  முகத்தை  மறைத்து..  அவனை  பாராமல்  ‘ப்ளீஸ்   போலாம்…”  என்றாள்.
     ‘ஒரு  அரைமணிநேரம்  மட்டும்  பேசிட்டு  அப்புறம்  போய்டலாம்.” என்றான்  சமாதானமாக.
     ‘எதாவது   முக்கியமான  விசயமா..?” என்றாள்.
     ‘ம்ஹ_ம்..”  என்று  சிரித்தவன்   ‘சந்தோசமான  விசயம்..  நம்ம  சுகுனா  மனசை  ராஜா  மாத்திட்டான். “ என்றான்.   
     ‘அப்ப  மீனா..?” எனறு  அதிர்ச்சியாய்  கேட்டாள்.
      வாய்விட்டு   சிரித்தவன்  ‘லூசு..  சுகுனாவிற்க்கு   என்மீதிருந்தது  காதல்  இல்லை.   மாமன்  மகன்ங்கிற   பாசம்தான்..  அப்படின்னு  சொல்லி  புரியவச்சிட்டான்னு   சொன்னேன்.‚“ என்றான்.
     ‘உண்மையாவா..? “ என்று  ஆச்சரியப்பட்டாள்.
     ஆமாம்  என்று  தலையசைத்தவன்  ‘அதுமட்டுமில்ல..   விவேக்குன்னு   ஒருத்தன்  அவளை  காதலிச்சிருக்கான்.  அவனை  தேடி  கண்டுபிடிச்சி..  எங்க  மாமாகிட்ட   சொல்லி  கிட்டதட்ட  முடிவே பண்ண   வச்சிட்டான் ..” என்றான்.
    ‘சுகுனா  சம்மதிச்சிட்டாளா..?”
    ‘சம்மதிக்கவெல்லாம்  இல்லை..  ஆனா  ராஜா   சம்மதிக்க  வச்சிருவான்.” என்றான்.
    ‘அதான..  அண்ணனும்   தம்பியும்  லேசுபட்ட   ஆளுங்களா..?” என்றாள். 
     நியாபகம்   வந்தவனாக..  ‘நீ  மயக்கம்  போட்டுட்டேன்னு    தெரிஞ்சதும்..   உன்னை  எவ்ளோ  அக்கறையா  காலைல  பார்க்க  வந்தான்  தெரியுமா..?  என்மேல  இருக்கிற  கோவத்தை  எதுக்குடி  அவன்மேல  காட்டின..?” என்றான்  கடுப்புடன்.
     ‘பின்ன..?  அம்மா  இறந்தது  இப்படி  திடீர்  கல்யாணம்னு..   நாங்களே  எவ்ளோ  சங்கடத்தில  இருக்கோம்.  இதுல  சட்டமா  உள்ள  வந்து  உக்கார்ந்துகிட்டு  டீ  வேணுமாமில்ல.. டீ..   அப்படி  கேக்கிறவங்களை  கொஞ்சுவாங்களா..?” என்றாள்.
    ‘நீ  யாரையும்  கொஞ்ச  வேணாம்..  தயவுசெய்து   உன்னை  கொஞ்சம்  கவனமா  பார்த்துக்கோ..  ஒரு  மாசத்திலயே   இப்படி  இளைச்சிப்போயிருக்க..‚    கல்யாணத்திற்கு   முன்னாடியெல்லாம்  வாரத்தில  ஒரு  நாள்  உன்னை  பார்த்து  பேசினேன்னா..   அதுவே  எனக்கு   அவ்வளவு  சந்தோசத்தை  கொடுக்கும்.   ஆனா..  இப்ப  அப்படியில்ல..   இந்த  தாலிக்கு  இருக்கிற  மகிமையை…   நான்   அனுபவச்சி  உணர்றேன்.  இதை  உன்  கழுத்தில   கட்டினதுக்கப்புறம்   என்னால   உன்னைவிட்டு   ஒரு  நாள்  கூட  இருக்க  முடியலை..   ரொம்ப  வேதனையோடதான்   உன்னை  விட்டு  பிரிஞ்சிருக்கேன்..  அதனால   உன்  ஹெல்த்தை   காரணம்  காட்டி  அடிக்கடி   நான்  உன்னை   பார்க்கிற  மாதிரி  பண்ணாத..   என்னோட  கஷ்டத்தை  புரிஞ்சாவது  உன்னை  நீ  பார்த்துக்கோ..”  என்றான்.
      பார்வதிக்கு   ரகுவின்  நிலை  புரியவும்  மனம்   தாளாமல்  தானே  அவனை  அணைத்தாள்.    
      ரகுவும்  சற்று  நேரம்  அவளின்  அணைப்பில்  அடங்கி..  ‘நான்  நிம்மதியா  இருக்கனும்னு   உனக்கு  தோணுச்சினா..  அடுத்தமுறை   டாக்டர்கிட்ட  போகும்போது..   நீயும்..  நம்ம  பேபியும்  ஹெல்தியா  இருக்கிங்கன்னு   டாக்டர்  சொல்ற  மாதிரி  பார்த்துக்க..” என்று   பார்வதியை  அணைப்பில்   இருந்து   விலகினான்.
      ‘பயந்தாங்கோலி….” என்று   ரகுவை   கிண்டல்  செய்து  தன்  துப்பட்டாவை  எடுத்தாள். 
      ‘ஒழுங்கா  ஓடிப்  போய்டு..” என்று  மிரட்டும்  பாவனையில்  சொன்னாலும்..   பார்வதிக்கு  முன்  ரகுதான்  முதலில்   வெளியே  வந்தான்.

Advertisement