ஞாயிறு அன்று ஏதோ விஷேஷம் என  ஐஸக் கூட வரவில்லை. வீட்டில் யாரிடமும் பேசினால் உடைந்து போய் விடுவோமோ என்ற பயத்தில் அவர்களிடம் வெறும் ‘சாட்’  மட்டுமே செய்தான். சஞ்சய்க்கு என்னடா வாழ்க்கை இது என்பது போலாகி விட்டது.

மீரா வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. நாளை மறுநாள் அவளுக்கு வார விடுமுறை. இரவு அவளிடம் பேசிய போது தெரிந்து கொண்ட சஞ்சய் “நாளன்னிக்கு ஈவ்னிங் ரெடியா இரு, உன்னை கூப்பிட நான் வர்றேன்” என்றான்.

“ஏன் சஞ்சய், என்ன வேலை?” என கேள்வி கேட்டாள் மீரா.

“ஏன்னா… என்ன கேள்வி இது? உனக்கு நாளைக்கு ஆஃப்தானே? வெளிலலாம் போக மாட்டியா?” என எதிர் கேள்வி கேட்டான் அவன்.

“இல்லை, ஏதாவது வாங்கணும்னாதான் போவேன், இப்போ வாங்குறதுக்கு ஒன்னும் இல்லை” என்றாள் அவள்.

“ப்ச் அதில்ல மீரா. வீக் ஃபுல்லா வேலை செய்ற, உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க வெளில போக மாட்டியா?”

“நல்லா படுத்து தூங்கினாலே நான் ரிலாக்ஸ் ஆகிடுவேன்”

“நல்ல பொண்ணு நீ! எனக்கு ஜாப் கிடைச்சதுக்கு உனக்கு ட்ரீட் தரணும், கண்டிப்பா வர்ற நீ” என அடமாக சொன்னான்.

இப்படி அந்நிய ஆடவர்களுடன் வெளியில் சென்றெல்லாம் அவளுக்கு பழக்கமில்லை. ஆனால் அவனது அழைப்பை அவளால் நிராகரிக்க முடியவில்லை.

உயர்தர இரு சக்கர வாகனத்துடன் வந்து நின்றவனை அதிசயமாக பார்த்தாள்.

“என்ன மீரா, ஏன் இவ்ளோ ஷாக்?” என  ஒன்றும் புரியாமல் கேட்டான் சஞ்சய்.

“இல்லை பைக்… உங்களோடதா?” எனக் கேட்டாள்.

“ஆமாம், நாலு நாள் முன்னாடிதான் எடுத்தேன், எப்படி இருக்கு?” என அவன் கேட்டதற்கு சற்று மிரட்சியுடனே, நன்றாக இருப்பதாக தலையை ஆட்டினாள்.

அவளின் முக பாவத்தை எல்லாம் கவனித்துக் கொண்டவன், “சரி வா போலாம்” என்றான்.

“பைக்லயா?” என அவள் அதிர, அவனோ இதற்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி என்பது போல அவளை பார்த்தான்.

சின்ன ஊரில் தகப்பன் இல்லாமல் வளர்ந்த பெண். அண்ணனுடன் கூட பைக்கில் சென்ற அனுபவம் அவளுக்கு இல்லை.

“சரியா போச்சு, நீ கனடா வரை எப்படி போவ? நாம ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸ், ஜெண்டர்லாம் பார்க்காத. வா வா” என அவன் சொல்லவும், மறுவார்த்தை சொல்லாமல் ஏறிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அவளது வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் சிறகடித்து விட்டு ஓய்ந்து போயின.

மால் ஒன்றுக்கு சென்றனர்.

“என் ஃபிரெண்ட்ஸ் ரொம்ப மிஸ் பண்றேன் மீரா. ஆஃபிஸ் ரொம்ப கடியா போகுது. அப்பா பேசினது நினைச்சு நினைச்சுதான் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு போய்ட்டு இருக்கேன். எவ்ளோ நாள் தாக்கு பிடிப்பேன்னு எனக்கே தெரியலை” என்றான்.

“அவசர பட்டு வேலைய விட்றாதீங்க, போக போக பழகிடும்” என அறிவுரை சொன்னாள்.

“இப்போதைக்கு விடுறதா இல்லை. செலவையெல்லாம் சமாளிக்கணுமே. வீட்டுக்கு ரெண்ட், பைக்குக்கு பெட்ரோல், என் ஃபூட் இதுக்கே சேலரி சரியா போயிடும்” என்றான்.

“இதுல எனக்கு ட்ரீட்னு சொல்லி இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க”

“ஹேய்… என் சேலரிதான் சரியா போகும். ஒரு மெசேஜ் தட்டி விட்டா எவ்ளோ வேணா மனி அனுப்ப நமக்கு ஆள் இருக்காங்க. இந்த பைக் என் அண்ணா அனுப்பின பைசால வாங்கினதுதான். பணத்துக்கு எப்பவும் எனக்கு கஷ்டம் இருந்தது இல்லை” என்றான்.

உண்மைதானே, இல்லையென்றால் குறைவான சம்பளத்திலும் இத்தனை ஆடம்பரமாக அவனால் வாழ முடியுமா? இன்னுமே நினைத்ததை வாங்குகிறான், ரூபாய் நோட்டை எண்ணி பார்க்க வேண்டிய அவசியம் இல்லாத நிலைதான்.

“ஆனாலும் கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க” என அவள் சொன்னதற்கு, சின்ன சத்தத்தில் ம் மட்டும் போட்டுக் கொண்டான்.

பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிக்கவே ஒரு மணி நேரமாகி விட்டது.

நேரத்தை பார்த்தவள், “நான் கிளம்பட்டுமா?” எனக் கேட்டாள்.

“அதுக்குள்ளவா?”

“ஹையோ நாம இங்க வந்து ஒன் ஹவர் ஆகிப் போச்சு”

“அப்படியா? அவ்ளோ நேரம் ஆகிடுச்சா என்ன?” எனக் கேட்டவன் நேரத்தை கணக்கிட்டு உண்மைதான் என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான்.

கனடாவுக்கு செல்ல சில தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில நடைமுறைகளும் இருந்தன. அனைத்தையும் செய்யவே மாத கணக்கில் ஆகும். மீரா சென்னையில் இருந்த போதே அங்குள்ள சென்டர் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தாள். சுயவாழ்க்கையில் ஏற்பட்ட எதிர் பாராத நிகழ்வால் அது பாதியிலேயே தடை பட்டு விட்டது.

இப்போது அவளுடன் பணி புரியும் பெண்கள் இருவர்  கனடா செல்லத்தான் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்திற்கு படிக்க செல்கின்றனர். இன்று மீராவையும் வர சொல்லியிருக்கின்றனர்.

“அப்படியா நீ என்கிட்ட சொல்லவே இல்லை” என குறைபட்டான் சஞ்சய்.

“நேத்துதான் அவங்கள்ட்ட பேசினேன். இன்னிக்கு கூட ஜஸ்ட் என்கொயர் பண்ணத்தான் போறேன். அங்க சேரணும்னா ஃபீஸ் பே பண்ணணும்ல? இப்போதைக்கு அவங்கள்ட்ட இருக்க மெட்டீரியல்ஸ் வச்சே பிரிப்பேர் ஆகலாம்னு இருக்கேன். பணம் ரெடி பண்ணிட்டுதான் சென்டர்ல ஜாயின் பண்ணணும்”

“எவ்ளோ பே பண்ணணும் மீரா?”

“எதுக்கு கேட்குறீங்கன்னு தெரியுது, இதெல்லாம் நானே பார்த்துப்பேன். ப்ளீஸ் என்னை ஃபோர்ஸ் பண்ணக்கூடாது” என அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொன்னாள்.

“என்ன நீ இப்படி இருக்க? நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி யாருமே வேணாம்னு சொன்னது கிடையாது. சொல்ல போனா யாருக்கும் ஏதும் வேணும்னா கூட என்னைத்தான் அப்ரோச் பண்ணுவாங்க, நீ வித்தியாசமா இருக்க” என அவன் சொன்னதற்கு வெறுமனே சிரிக்க மட்டும் செய்தாள்.

“ஓகே, நான் மட்டும் இங்க தனியா இருந்து என்ன செய்ய? நானே உன்னை ட்ராப் பண்றேன்”

“ஏன் பெங்காலி பேசுற பொண்ணை தேடி கண்டுபிடிக்கிற ஐடியா இல்லியா?” என கிண்டலாக கேட்டாள்.

“ம்ம்… ஆஃபிஸ்லேயே ஒருத்தி சிக்கியிருக்கா. மாலினி சென், எனக்கு அவதான் சீனியர், கொஞ்சம் சிரிச்சு பேசினா பதிலுக்கு அவ சிரிக்க வேணாம்… கடுப்படிக்காம இருக்கலாம்ல? நான் பார்த்து வச்சிருக்க வேலைல தப்பு கண்டுபிடிக்கிறா. எந்நேரமும் ரஃ ப்பாவே இருக்கா, ஆனா பார்க்க கண்ணுக்கு இதமா இருக்கா, இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச சிங்கிலா இருக்க பெங்காலி பொண்ணு அவ மட்டும்தான், ப்ச் எப்படி கரெக்ட் பண்றதுன்னுதான் தெரியலை”

“வேலைல தப்பு இருந்தாதானே கண்டுபிடிச்சி திட்டுறாங்க, அப்போ தப்பே இல்லாத மாதிரி வேலை செய்யுங்க”

“ச்சே, வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா கொடு மீரா, இது எனக்கு ரொம்ப கஷ்டம்”

“அச்சோ! ஒழுங்கா வேலைய பாருங்க, அப்போதானே சீக்கிரம் நல்ல ஹைட்டுக்கு போக முடியும்?”

“எனக்கு ஹைட்னா பயம்” என நக்கலாக சொன்னவன் அவளின் கண்டன பார்வையில், “ப்ச்! இன்ட்ரெஸ்ட் இல்லியே நான் என்ன செய்ய? வேலை பார்த்துதான் வாழணும்னுங்கிற கட்டாயம் எனக்கில்லை மீரா. இது எங்கப்பாக்காக. சீக்கிரம் அவரே என்னை தேடி வந்து, ‘மகனே இப்படி கஷ்ட படாத, உன்னை பிரிஞ்சு இருக்க முடியல, வீட்டுக்கு வாடா’ன்னு என்கிட்ட சரண்டர் ஆவார். கொஞ்சம் முறைச்சு வீம்பு பண்ணிகிட்டே அவரோட போயிடுவேன்” என்றான்.

அவனது கருத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லாத போதும் அளவுக்கு மீறி அறிவுரை சொல்வது அதீதமாக தெரிய, அவனது பேச்சை கேட்டுக் கொள்வதாக தலையாட்டிக் கொண்டாள்.

பின் அவனே அந்த ட்ரைனிங் சென்டர் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றான். உடன் வேலை செய்பவர்களிடம் தன் பிரச்சனைகள் பற்றியெல்லாம் ஏதும் அவள் சொல்லியிருக்கவில்லை.

சஞ்சய் என்றொரு நண்பர் கொல்கத்தாவில் இருக்கிறார் என இவனை பற்றி கூறியிருக்க, அவனுடன் பைக்கில் வந்திறங்கியதை அவளது தோழிகள் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர்.

மீரா சென்டரில் பயிற்சி பற்றி விவரங்களை கேட்டுக் கொள்ள அரை மணி நேரமானது. அதுவரை பொழுதை போக்க நினைத்த சஞ்சய், கைப்பேசியில் புதிய கேம் ஒன்று பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அவள் வரவும், கைப்பேசியிலிருந்து தலை உயர்த்தாமல், “டென் மினிட்ஸ் மீரா, கேம் பாதில விட்டா தோத்து போயிடுவேன்” என்றான்.

அவள் பொறுமையாக காத்திருந்தாள். வெற்றி பெற்று அந்த குதூகலத்துடன், “செம இன்ட்ரெஸ்டிங் கேம்” என சொல்லி அதைப் பற்றி விளக்கினான்.

அவளிடம் அத்தனை சுவாரஷ்யம் தென்படாமல் போகவும், “என்ன மீரா, உனக்கு மொபைல் கேம்ஸ் பிடிக்காதா?” எனக் கேட்டான்.

“நான் அதெல்லாம் விளையாடினது இல்லை, ரொம்ப தெரியாது” என்றாள்.