சஞ்சயும் மீராவும் இரயில் நிலையத்தில் உள்ள காவல் அலுவலகத்துக்கு சென்றனர். இரவில் இருந்த காவலர் இல்லாமல் வேறு நபர்கள்தான் இருந்தனர். ஆனால் இவர்களை பற்றி அவர் ‘தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் இளம் காதல் ஜோடி’ என சொல்லியிருக்க, இன்னொரு முறை என்ன ஏது என சுவாரஷ்யத்துடன் விசாரித்தனர்.
நண்பர்கள் என்றுதான் இருவரும் சொன்னார்கள். அதை நம்பவில்லை என்பது போல பார்த்தனர் காவலர்கள். புது கைப்பேசி, இனிதான் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்ற தகவல்கள் அப்படித்தான் அவர்களை நினைக்க வைத்தது.
சஞ்சய் அலட்டிக் கொள்ளவில்லை. யாராக இருந்தாலும் இப்படித்தானே சந்தேகம் கொள்வார்கள், என்னவும் நினைத்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டான். மீராவுக்குத்தான் சங்கடமாக இருந்தது.
புகாரின் நகலை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டனர். சஞ்சயின் நண்பன் ரித்தேஷின் மாமா பையன் கொல்கத்தாவில் பெரிய நிறுவனம் ஒன்றில் மனித வள துறையில் பெரிய பதவியில் இருக்கிறான். அவன் மூலமாகத்தான் சஞ்சய்க்கு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான்.
அறைக்கு திரும்பியதும் ரித்தேஷ்க்கு அழைத்து பேசினான்.
“என்கிட்ட சொல்லாம எதுக்குடா கொல்கத்தா வரைக்கும் போன? நான் என் மாமா பையன்கிட்ட பேசிட்டேன், ரெடி பண்ணி தருவான்னுதானே சொன்னேன்? அவனுக்கு டைம் கொடுக்க வேணாமா?” என கடிந்து கொண்டான் ரித்தேஷ்.
சஞ்சய் சோர்ந்து போய் விடவில்லை. “அதனால என்ன, உன் கஸின் வேணுங்கிற அளவுக்கு டைம் எடுத்துகிட்டு எனக்கு ஜாப்’க்கு அரேஞ் பண்ணி தரட்டும். அப்படியே எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு ஏதாவது ஹாஸ்பிடல்ல நர்ஸ் வேலை வாங்கி கொடுக்க சொல்லு, ஆனா இதுக்கு டைம் கிடையாது, ரொம்ப அர்ஜன்ட்” என்றான்.
“எல்லாம் விளையாட்டா போச்சா உனக்கு? நீ கொல்கத்தா போறதே இதானே ஃபர்ஸ்ட் டைம், அதுக்குள்ளே எந்த பொண்ண நீ மீட் பண்ணின?” என கோவப்பட்டான் ரித்தேஷ்.
மீராவை பற்றி மேலோட்டமாக சொன்ன சஞ்சய், “நம்ம ஸ்டேட் பொண்ணுடா. கஷ்டம்னு நிக்கையில சும்மா வேடிக்கை பார்ப்பியா? எனக்கு ஜாப் கிடைக்காட்டா கூட பரவாயில்லை, இந்த பொண்ணுக்கு கண்டிப்பா செய்து கொடுத்திடு” என கண்டிப்போடு சொன்னான்.
“நீ வீட்டை விட்டு போனது பத்தாதுன்னு என்னையும் என் வீட்லேருந்து துரத்தி விட பிளான் போடுற, அதானே?”
“ஏய் என்னடா இப்போ, முடியுமா முடியாதா?” கறாராக சஞ்சய் கேட்க, ரித்தேஷும் பார்க்கிறேன் என சொல்லி அழைப்பை துண்டித்தான்.
ராஜசேகரனின் ஆட்களுக்கு மீராவின் இருப்பிடம் தெரிந்து விட்டதை கணவனுக்கு தெரிவித்திருந்தாள் நீரஜா. அவசர விடுப்பு எடுத்துக் கொண்ட கார்த்திகேயன் உடனே வீடு வந்து சேர்ந்தார். தான் இல்லாத நேரத்தில் தன் மனைவியிடம் அப்படி அராஜகம் செய்தவர்களை நினைத்து அவருக்கு கட்டுக்கடங்காத கோவம்.
இதை சும்மா விடக்கூடாது என நினைத்தவர் மனைவியை அழைத்துக் கொண்டு காவல்நிலையல் சென்று விட்டார். ஆனால் அவரது புகாரை பெற்றுக் கொள்ளாமல் ‘இனி யாரும் அப்படி வர மாட்டார்கள், அதற்கு நாங்கள் உத்தரவாதம், இதை இத்தோடு விட்டு விடுங்கள்’ என சமரசம் செய்து அனுப்பி வைத்து விட்டனர்.
உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் எடுக்காமல் போனால் என்ன, நான் மேலதிகாரியை பார்க்கிறேன் என நின்றார் கார்த்திகேயன். தன் மகனது முகத்துக்கு நேராக தலையணை வைத்து மிரட்டினான் ஒரு அடியாள் என்பதை அத்தனை எளிதாக அவரால் விட முடியவில்லை.
“இல்லங்க, இப்போ இதை விட்ருவோம். இதுக்கு மேல நம்மகிட்ட வர மாட்டாங்கன்னுதான் தோணுது. அப்படி ஏதும் பிரச்சனை ஆனா அப்போ பார்த்துக்கலாம். இப்போ மீராவை வேற எங்கேயாவது அனுப்பி வைக்க முடியுமான்னு பாருங்க” என்றாள் நீரஜா.
“மீராவை எத்தனை ஊருக்கு அனுப்பிட்டே இருக்கிறது நீரஜா? கொல்கத்தால போயி இவனுங்களால என்ன செய்ய முடியும்? மீரா கொல்கத்தால இருக்கிறது தெரியுமே தவிர என்ன இடம்னு தெரியாதுதானே?” என்றார் கார்த்திகேயன்.
“இவனுங்க சாதாரண ஆளுங்க போல இல்லைங்க, எதுக்கு ரிஸ்க் எடுத்துக்கிட்டு, பாவம் அந்த பொண்ணு. அதான் கூட சஞ்சய் இருக்கானே” என நீரஜா சொல்லவும் என்ன செய்வது என கார்த்திகேயனுக்கு பெரும் குழப்பம்.
சற்று தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு யோசித்தார். மனைவியின் கூற்றில் அர்த்தம் இருப்பதாக படவும் உடனே சஞ்சய்க்கு அழைத்து பேசினார்.
“அவனுங்கள சும்மாவா விட்டீங்க ஸார்? போலீஸ்கிட்ட போனா கம்ப்ளைண்ட் எடுக்காம கட்ட பஞ்சாயத்து செய்வானுங்களா? விடக்கூடாது ஸார் எவனையும். எவன் வேணா வரட்டும் ஸார் கொல்கத்தாக்கு, என்ன பண்றாங்கன்னு பார்க்கிறேன் நான்? ஓடி ஒளிஞ்சிட்டே இருக்க முடியுமா?” என உணர்ச்சி வசப் பட்டு பேசினான் சஞ்சய்.
“டேய் டேய்… என்கிட்ட சொல்லாம ஏதாச்சும் பண்ணி சிக்கல்ல மாட்டிக்காத. இவனுங்களுக்காக ஓடிட்டே இருக்கணுமான்னு எனக்கும் கோவம்தான் வந்துச்சு. ஆனா அவனுங்க கைல மீரா மாட்டினா, அவ நிலைமை ரொம்ப மோசமாகிடும்” என எடுத்துச் சொன்னார் கார்த்திகேயன்.
“ம்ம்… சரி நீங்களே சொல்லுங்க, எங்க அனுப்பட்டும் மீராவை?” என சஞ்சய் கேட்க, அவரிடம் உடனடி பதில் இல்லை.
“யோசிச்சுதான் சொல்லணும்டா, உன் ஃபிரெண்ட்ஸ் யாரும் வேற ஸ்டேட்ல இருக்காங்களா பாரேன்” என்றார்.
“எல்லாரும் சென்னை, பெங்களூரு அப்படித்தான் இருக்காங்க ஸார்”
“ம்ம்… இப்போ ஸேஃபா இருக்கீங்கதானே? அப்படியே இருங்க. உடனே மீராகிட்ட இதை சொல்ல வேணாம், இன்னும் பயந்து போயிடும் அந்த பொண்ணு. இவனுங்க அவ்ளோ சீக்கிரம் ஒன்னும் உங்களை ரீச் பண்ணிட முடியாது, அப்படியே வந்தாலும் உங்களை எப்படி தேடி கண்டுபிடிப்பானுங்க? வேற எங்க மீராவை அனுப்பலாம்னு நான் என் சைட்லேருந்து பார்த்து ட்ரை பண்றேன், நீயும் பாரு, ஜாக்கிரதைடா” என சொல்லி பேச்சை முடித்தார் கார்த்திகேயன்.
திருவண்ணாமலை பக்கத்தில் உள்ளூரில் ரௌடித்தனம் செய்யும் கும்பலால் கொல்கத்தா வரை வந்து மீராவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட முடியுமா என கார்த்திகேயன் போலவேதான் சஞ்சய்க்கும் எண்ணம். ஆதலால் ராஜசேகரன் மீது கோவம் ஏற்பட்ட போதும் அவரை குறைவாக எடை போட்டு அலட்சிய படுத்தி விட்டான்.
ஆனால் ராஜசேகரனிடம் மற்றவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி பணம் குவிந்து கிடந்தது. அவர் பினாமியாக இருக்கும் அரசியல் புள்ளி கண்டறிய முடியாதபடி தில்லுமுல்லு செய்து சேர்த்த பணம். என்ன பிரயோஜனம்? கட்டி ஆள மகனுக்குத்தான் ஆயுள் இருக்க போவதில்லை, அவனது வாரிசாவது வந்து இதை ஆள வேண்டாமா?
மீராவை விட்டால் வேறு எந்த நல்ல பெண்ணும் சிக்கல் இல்லாமல் அவருக்கு கிடைக்க மாட்டாளே.
தன் திட்டத்தை வேறு கேசவ்விடம் சொல்லி விட்டார். மீராவை மணமுடிக்க ஆவலாக இருக்கிறான் மகன், அவனது ஆசையை நிறைவேற்றி வைக்காவிட்டால் அவனுக்கு தகப்பனாக நான் இருந்து என்ன பிரயோஜனம்?
கொல்கத்தா என்ன வேறு கண்டத்திலா இருக்கிறது? இங்கு நான் இருப்பது போல அங்கேயும் யாரும் குறுக்கு வழியில் நடப்பவர்கள் இருப்பார்கள்தானே?
ராஜசேகரனின் குறுக்கு புத்தி வேகமாக வேலை செய்தது.
சஞ்சய், மீரா இருவரும் அறைக்கு திரும்பிய பிறகு வேறெங்கும் வெளியில் செல்லவில்லை. உணவு நேரம் மட்டும் ஒன்றாக சாப்பிட்டனர். மற்றபடி ஓய்வுதான்.