அறியாமல் தொலைந்தேனே – 3

அத்தியாயம் -3

மீரா கொல்கத்தா சென்று கொண்டிருந்த ரயில் இன்னும் சென்னையை தாண்டியிருக்கவில்லை. ஒரு ஸ்டேஷனில் சில நிமிடங்கள் நின்றது. கண்கள் மூடி அமர்ந்திருந்த மீரா  விழிகளை திறந்து பார்த்தாள். பயணிகள் சிலர் ஏறிக் கொண்டிருக்க, கைப்பையை இறுக பிடித்துக்கொண்டு மீண்டும் இமைகளை அடைத்துக் கொண்டாள்.

ரயில் மீண்டும் புறப்பட்டது.

“ம்மா… சும்மா சும்மா உன் ஹப்பிக்கு சப்போர்ட் பண்ணாத. என்னெல்லாம் பேசிட்டார்? நீ ஃபீல் பண்ணக்கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் வீட்ல இருந்தேன். அவர் ஷாக் ஆகுற அளவுக்கு வளந்து அவர் முன்னாடி வந்து நிக்கிறேனா இல்லையா பார்!” என ஆடவன் ஒருவன் பேசிக் கொண்டிருப்பது அவளின் காதில் விழுந்தது.

 மீரா கண்கள் திறந்த போது அவளின் எதிரில் அமர்ந்திருந்தான் சஞ்சய்.

எதிர் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்து கால்கள் இரண்டையும் இவளின் இருக்கையில் வைத்துக்கொண்டு ஹெட் செட் மாட்டிக் கொண்டு அம்மாவுடன் மல்லு கட்டிக் கொண்டிருந்தவனும் இவளை பார்த்தான்.

சஞ்சயை அடையாளம் கண்டு கொண்ட மீரா திடுக்கிட, அவனுக்கும் இவளது நினைவு வந்து விட்டது போல. ஒரு கை உயர்த்தி ஹாய் என்பது போல சொல்லி ‘ஒன் செக்’ என வாயசைத்து விட்டு மீண்டும் அம்மாவுடன் பேசினான்.

அந்த கூபேவை ஆராய்ச்சியாக பார்த்தாள் மீரா. அவளைத் தவிர மற்றவர்கள் ஆடவர்களாக இருந்தனர். நாளை இரவுக்குத்தான் கொல்கத்தா சென்றடைய முடியும். பக்கவாட்டு இருக்கையில் நடுத்தர வயதுடைய ஒரு பயணி பார்க்க முரட்டுத் தனமாக இருந்தான். இவளையே வெறித்துப் பார்ப்பது போலிருக்கவும், பார்வையை தழைத்துக் கொண்டவளுக்கு இன்னுமே பயமானது. ஆனால் வெளியில் இயல்பாக இருப்பது போலவே தன்னை காட்டிக் கொண்டாள்.

“ஹலோ… என்ன தனியா டிராவல் பண்றீங்களா? கொல்கத்தா வரைக்குமா இல்ல இடையில வேற எங்கேயுமா? ஏதும் ஃபங்ஷன் அட்டென்ட் பண்ண போறீங்களா? இல்லை அங்க நியூ ஜாப்’பா?” ஹலோ என்ற வார்த்தையின் திசையில்  இவள் திரும்புவதற்குள் இத்தனை கேள்விக் கணைகளை தொடுத்திருந்தான் சஞ்சய்.

அவனுக்கு பதில் தர மீராவுக்கு விருப்பமில்லை. அசௌகர்யமாக புன்னகைத்தவள், கைப்பேசி பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

“ஹ்ஹப்பா! ரொம்பத்தான்” என சின்னக் குரலில் சஞ்சய் சலித்துக் கொள்வது அவளுக்கு கேட்டது. ஆனால் தலை உயர்த்தவில்லை.

கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான் சஞ்சய்.  வாங்கி வந்திருந்த உணவு பார்சலை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள் மீரா. இட்லிதான் கேட்டாள், ஆனால் பொங்கல்தான் இருக்கிறது என அந்த கடையில் சொல்லப்பட அதையே வாங்கியிருந்தாள். அவளது வாய்க்கு பிடிக்கவே இல்லை. கொஞ்சம் போல மல்லுகட்டி சாப்பிட்டவள் அதற்கு மேல் முடியாமல் மூடி வைத்து விட்டாள்.

அம்மாவுடன் எல்லாம் இப்போதைக்கு பேச வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார் கார்த்திகேயன். கணவனை பறி கொடுத்த சுபா நிறைய கஷ்ட பட்டு விட்டார். பாஸ்கர் வளர்ந்து ஆளாகி விட்டால் தன் கஷ்டமெல்லாம் தீரும் என கனவு கண்டார். ஆனால் அவனை நினைத்து நினைத்தே நிம்மதி முழுவதும் பறி போகும் நிலையாகி விட்டது.

அண்ணன்தான் உதவாக்கரை ஆகி விட்டான் என்றால் இப்படி என்னையும் வாழ விடாமல் அம்மாவை இன்னும் துன்ப படுத்துகிறானே என எண்ணியவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

இப்போது அம்மாவின் மனநிலை என்னவாக இருக்கும் என நினைக்கும் போதே மீராவுக்கு அழுகை வந்தது. மற்றவர்களுக்கு வேடிக்கை பொருளாவதா என தன்னைத் தானே கடிந்து கொண்டவள் தண்ணீர் குடித்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.

உடலும் மனமும் சோர்வாக இருக்க படுக்க நினைத்தாள். சஞ்சயின் கால்கள் இன்னும் இவளது இருக்கையில்தான் நீண்டிருந்தன. மனதிற்குள் அவனை வசை பாடிக் கொண்டே, “எக்ஸ்கியூஸ் மீ” என்றாள்.

விளையாடிக் கொண்டே, “எஸ் சொல்லுங்க” என்றான். இவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“காலை எடுக்குறீங்களா?” என அவள் கேட்க, உடனே கால்களை அகற்றிக் கொண்டான்.

உடனே ஸ்கீரனை இழுத்து விட்டு இவளும் படுத்து விட்டாள். மற்றவர்களும் படுத்து விட்டனர். சஞ்சய் மட்டும் இன்னும் கைப்பேசியில்தான் ஆழ்ந்திருந்தான். உறக்கம் வரா விட்டாலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் மீரா.

மௌனமாக அழுது ஓரளவு மன பாரத்தை குறைத்தாள்.

பகலில் பணியிலிருந்து விடுபடுவதற்கான நடைமுறைகள், உடைமைகளை பேக் செய்வது என மீராவுக்கு நிறைய வேலைகள். சரியாக சாப்பிட முடியவில்லை. இப்போதும் சரியாக சாப்பிடவில்லை, சாப்பிட்ட கொஞ்சமும் அவளுக்கு சேரவில்லை. உமட்டுவது போலவும் தலை கிறு கிறுப்பது போலவும் ஏதோ செய்தது.

தனியாக செல்கிறாய், ஒழுங்காக உன்னை கவனி என மூளை எடுத்து சொன்னது.  செயற்கை குளிர்பானம் கையிலிருக்க அதை பருகலாம் என எழுந்தாள். ஆனால் குளிர்பானம் கிடைக்கவில்லை. நினைவு படுத்தி பார்க்கவும் ஸ்டேஷனில் ஏறும் முன்பே எங்கேயோ தவற விட்டதாக மங்கலாக நினைவு வந்தது.

மனக் குழப்பதிலும் பதற்றத்திலும் தான் வெகுவாக கவனம் பிசகி நடக்கிறோம், தனியாக செல்லும் நான் இப்படி இருக்கக்கூடாது என தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள். தண்ணீரை குடித்து விட்டு படுக்க போக, திடீரென ஓங்கரித்துக் கொண்டு  வந்தது.

அவசரமாக ஓடிச் சென்றவள் சஞ்சயின் கவனத்தை ஈர்த்தாள். என்னவோ என நினைத்து அவனும் எழுந்து சென்றான்.

மீராவுக்கு குடலை புரட்டி போட்டுக் கொண்டு எல்லாம் வெளியில் வர, கண்களும் லேசாக மங்கியது.

“ஹேய்… ஈஸி ஈஸி” என சொல்லி மீராவின் தோளை பற்றினான் சஞ்சய்.

அவனது உதவியை மறுக்கும் நிலையில் அவளில்லை. வாந்தி இல்லாமல் சீரான மூச்சுகளுடன் அவள் அவனை பார்க்க, “நிக்க முடியுமா? இங்கேயே இருங்க, தண்ணி எடுத்திட்டு வர்றேன்” என்றான்.

“என் ஹேண்ட் பேக்லேயே இருக்கு” என மெலிதான குரலில் சொன்னாள்.

அவளது தோளில் மாட்டியிருந்த பையை அவளின் அனுமதி இல்லாமலே கழட்டி, பாட்டிலை எடுத்து மூடியை திறந்து கொடுத்தான். வாயை கொப்புளித்து தண்ணீர் பருகியவள் முதல் வேளையாக அவனிடமிருந்த தன் கைப்பையை வாங்கி தன் தோளில் மாட்டிக் கொண்டாள்.

முதலில் முறைத்து பின் சிரித்தவன், “என்னை பத்தி நல்ல எண்ணம்தான்” என்றான்.

அவனை நம்பலாமா வேண்டாமா என அவளுக்கு சந்தேகமாக இருந்தது. பழைய கைப்பேசியில்தான் வங்கியின் செயலிகள் எல்லாம் வைத்திருந்தாள். புதிய கைப்பேசிக்கு இன்னும் எதையும் மாற்றவில்லை. அதற்கான அவகாசம் அவளிடம் இல்லை. இவளின் அம்மா கொடுத்த பணத்தை ரொக்கமாக எடுத்து வைத்திருந்தாள்.

வங்கியின் சேமிப்பு அட்டையை கூட உபயோகிக்க கூடாது என அறிவுறுத்தியிருந்தார் கார்த்திகேயன்.

“தப்பா நினைக்கல… அது ஸாரி…” என தடுமாற்றமாக சொன்னாள்.

“இட்ஸ் ஓகே” என்றவன் அவள் போக வழி விட்டு நின்றான்.

தன்னுடைய இருக்கைக்கு எப்படி நடந்து செல்வோம் எனும் அளவில் இருந்தது அவளுடைய உடலின் சக்தி.

அவள் நடந்து செல்லும் தோரணை வைத்தே அவளுக்கு முடியவில்லை என்பதை கணித்தான் சஞ்சய். இருக்கையை அடைந்தவள் படுத்து விட்டாள். மீண்டும் தலை உயர்த்த முடியாத படி ஆகி விட்டது அவளின் நிலை.