வாஷிங்மெஷினுக்கு உபயோகிக்கும் லிக்விட் ஒவ்வொன்றாக விலை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று உயரத்தில் இன்னொரு பிராண்ட் இருக்க, யாராவது கடை ஊழியர்கள் இருக்கிறார்களா என தேடினாள்.
“என்ன எடுக்கணும்னு சொல்லு, நான் எடுக்கிறேன்” என்றான். அவள் கை காட்ட, அவன் எம்பிக் குதித்து எடுத்தான். அதில் வரிசையாக நிறைய பொருட்கள் கீழே விழுந்தன.
சூப்பர்வைசர் வந்து பெங்காலியில் திட்ட ஆரம்பித்து விட்டான். தன் மேல் தவறு என்பதால் ஸாரி என சொல்லி கீழே விழுந்தவற்றை எடுக்க ஆரம்பித்தான் சஞ்சய்.
ஆள் இல்லை, உயரத்தில் உள்ளதை எப்படி எடுப்பது, எடுக்கும் போது மற்ற பொருள் விழுவது போல நீங்கள்தான் அலட்சியமாக அடுக்கியிருக்கிறீர்கள், என் கணவனை திட்டுவாயா என ஆங்கிலத்தில் பொரிந்தாள் மீரா.
“என்ன மீரா இது விடு” என சஞ்சய் சொல்லியும் அவள் கேட்கவில்லை.
மேலாளர் வந்து மீராவிடமும் சஞ்சயிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வாங்கியவரை போதும் என சொல்லி விட்டாள் மீரா. பில் போட்டு பணம் செலுத்தி விட்டு வெளியே வந்தனர்.
“என்னாச்சு உனக்கு? இப்படிலாம் கோவம் வருமா என்ன உனக்கு?” எனக் கேட்டான் சஞ்சய்.
“அது என்னை பேசியிருந்தா விட்ருப்பேன். உங்களை போய்…”
“என்ன… சஞ்சய் செல்வந்தர் வீட்டு செல்ல மகன், எப்படி இவனை திட்டலாம்னு பொங்கிட்டியா?”
“ப்ச்… கடை மேலதானே தப்பு, கஸ்டமரை பேசுவாங்களா? இப்போ உங்களுக்குன்னு பேச நான்தானே இருக்கேன், பேசாம அமைதியா வந்திருந்தா எனக்கு தூக்கம் கெட்டு போயிடும்”
“என்ன… என் வியாதி உனக்கும் வருதா?” எனக் கேட்டவனுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தாள்.
“ஆக… இந்த முயலுக்கு கோவம் வரணும்னா யாராவது சஞ்சய்கிட்ட வம்பு வளக்கணும்”
இலகுவான ஆடைக்கு மாறிக் கொண்டவர்கள் இரவு உணவோடு மாடிக்கு சென்றனர். சாப்பிட்டு முடித்தும் அங்கேயேதான் இருந்தனர். அவள் அமர்ந்திருக்க சிறிது நேரம் நடந்தான் அவன். உடன் பிறப்புகள், அம்மா பற்றித்தான் பேச்சு.
ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப் பட்டவன், மீராவை பார்த்து, “இப்படி அவங்க என்னோட பேசாம இருக்கிற நிலையெல்லாம் வரும்னு நான் நினைச்சதே இல்லை மீரா” என்றான்.
அவள் ஆறுதலாக ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, வேகமாக அவளிடம் வந்தவன் அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். சில நொடிகள் அமைதியாக இருந்தவன் பின் அவனாகவே தன்னை சரி செய்து கொண்டு, அவள் முகத்தை பார்க்கும் படி நேராக படுத்துக் கொண்டான்.
அவளின் கையை பிடித்துக்கொண்டவன் விரல்களின் நீள அகலத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே, “அப்பப்போ ஆஃப் ஆகிடுறேன்ல?” எனக் கேட்டான்.
“உங்களை போல அவங்களும் அவங்க தம்பியை மிஸ் பண்ணுவாங்க” என்றாள் மீரா.
“நல்லா பண்ணட்டும். சஞ்சய் ஆசை பட்டது எல்லாத்தையும் செஞ்சு கொடுத்திருக்கோம், இப்பவும் அவன் விரும்புற மீராவோட வரட்டும்னு இவங்கல்லாம் அம்மாக்கு சொல்லிருக்கலாம்ல?” எனக் கேட்டான்.
“அப்படியா எனக்கே புதுசா இருக்கே? மீராவை விரும்புறீங்களா நீங்க?” எனக் கேட்டாள்.
“தெரியலையே…” என அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“அதான் என்னை ஏத்துக்க அவங்க தயங்குறாங்க. உங்களுக்குதான் ஃபர்ஸ்ட் லவ் எல்லாம் இருக்கு, அதுக்கப்புறம் எத்தனையோ, அதனால இந்த விளையாட்டு பிள்ளை இப்பவும் அப்படின்னு நினைச்சிருப்பாங்க” என சொல்லிக் கொண்டே அவன் கன்னங்களை கிள்ளி கொஞ்சினாள்.
“அதை விடலையா நீ? சிந்தியாலாம் பப்பி லவ் மீரா, அப்படி கூட இல்லை, ஃபர்ஸ்ட் சைட் அடிச்ச பொண்ணுன்னு வச்சுக்கலாம்”
“அப்படியா? அப்போ அந்த ஃபர்ஸ்ட் கிஸ் ஸ்டோரி?”
“அதைத்தான் நீ கேட்கலையே”
“அதை காதால கேட்க வேற செய்யணுமாக்கும்?”
“நீ ஒரு இன்ட்ரெஸ்டிங்கான ஸ்டோரிய மிஸ் பண்ற. உனக்கில்லையா இப்படிலாம் ஸ்டோரி?”
“முன்ன இல்லை, இப்போ இருக்கு” என அவனை காதலாக பார்த்துக் கொண்டே சொன்னாள்.
தன்னைத்தான் என அவனுக்கும் புரிய, அவள் விரல்களில் மென்மையாக முத்தமிட்டு, “சொல்லேன் கேட்க ஆசையா இருக்கு” என்றான்.
“பெருசா சொல்ல ஒன்னுமில்ல சஞ்சய். உங்கள்ட்ட எது பிடிச்சதுனுலாம் எனக்கு தனியா சொல்ல தெரியலை. அதை வெளிப்படுத்த அவ்ளோ பயம். நேத்து நீங்க ஸார்கிட்ட பேசினப்போ…” என சொல்லி நிறுத்தினாள்.
“ம்ம்… பேசினப்போ?”
“ஓடி வந்து உங்களை கட்டிக்கனும் போல இருந்தது. ஆனா சுத்திலும் ஆளுங்க” என்றாள்.
“ஹோய்… நல்லாருக்கு நீ பேசுறது, நான் போன்னு சொன்னா போறேன்னு சொன்னவதானே நீ?”
“வேற என்ன சொல்லணும்?”
“நான் சொன்னாலும் போகக் கூடாது மீரா”
“அதெப்படி?”
“ஏன்னா அப்படிலாம் சுய நினைவோட நான் சொல்லவே மாட்டேன். அப்படி சொல்றேன்னா என மெண்டல் ஹெல்த்ல ஏதாவது இஸ்யூவா இருக்கும், அப்ப விட்டுட்டு போவியா நீ?”
“இப்பவே பாதி நீங்க அப்படித்தான்” என நமட்டு சிரிப்புடன் சொன்னாள்.
“ஹேய் கிராக்ன்னு சொல்றியா என்னை? உன்னை…” என்றவன் அவளின் விரல்களை ஒவ்வொன்றாக கடித்தான். வலியில்லை என்றாலும் அவளுக்கு கூச, கையை அவனிடமிருந்து விலக்கிக் கொள்ள முயன்றாள்.
விரல்களை விட்டவன் கையை பிடித்து வலிக்காமல் கடித்தான்.
“செய்யுன்னு சொல்லி செய்யலைனா நாளைக்கு வரலாறு என்ன பேசும் என்னை பத்தி?” என்றவன் அவள் மடியிலிருந்த தலையை உயர்த்தி அவளின் கன்னத்தை கடித்தான்.
இருவருக்குமே வெட்கம் பிறக்க, அவன் அமைதியாக அவளின் மடியிலேயே படுத்து விட்டான். அவன் மார்பில் ஒரு கை இருக்க, இன்னொரு கையால் தரையை சுரண்டிக் கொண்டிருந்தாள் மீரா.
சில நிமிட அமைதிக்குப் பின், “ஃபர்ஸ்ட் கிஸ் ஸ்டோரின்னு உன்னை வெறுப்பேத்ததான் சொன்னேன்” என்றான். உண்மையாக இருக்கும் என்றே நம்பியிருந்தவளின் விழிகளும் இதழ்களும் மலர்ந்தன.
“வயசுப் பையனா வயசு பொண்ணோட ஃபர்ஸ்ட் ஹக் உன்னோடதான் மீரா. ஃபர்ஸ்ட் கிஸ், ஃபர்ஸ்ட்…” என இழுத்தான். அவள் அவனை பார்க்க, “எல்லா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா ரகசிய ஸ்டோரீஸும் இனிதான் கிரியேட் பண்ணனும்” என்றான்.
மீண்டும் அவனிடமிருந்து பார்வையை விலக்கி, சங்கடமும் வெட்கமுமாக தவித்தாள் அவள்.
ஒரு விரல் கொண்டு அவளது கன்னத்தை தொட்டு தடவிக் கொண்டே, “ஒரு சாங்ல வரும்ல… கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையேன்னு… நான் இங்க பைட் பண்ணினேன். இவ்ளோ சீக்கிரத்துல ஈரம் காணாம போயிடுச்சு?” எனக் கேட்டான்.
“அச்சோ…” என சிணுங்கினாள்.
“ப்ச் என்னன்னு சொல்லிட்டு சிணுங்கு”
“அது அந்த பாட்டுல வர்ற சிட்சுவேஷன்னு கரெக்ட்டா இருக்கும். எப்படியெல்லாம் சந்தேகம் வருது உங்களுக்கு?”
“அந்த பாட்ட விடு. கன்னத்துல ஈரம் எவ்ளோ நேரத்துல காயுதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா?” எனக் கேட்டவன் எழுந்தமர்ந்து அவளை தன்னை நோக்கி சாய்த்தான். பட படப்புடன் அவள் இமைகளை அடைத்தாள்.
ஈரம் காய நேரமே கொடுக்காமல் மீராவின் கன்னத்தை தன் முத்தங்களால் நிறைத்துக் கொண்டே இருந்தான் சஞ்சய்.