கைப்பேசி எடுத்துக் கொண்டு பிரவீண் தனியாக செல்ல, “பிரவீண்…” என கண்டிப்போடு அழைத்தார்.
‘ஐயோ ஏதோ சந்தேகம் வந்து விட்டதோ!’ என்ற ஐயத்துடன் அப்பாவை பார்த்து நின்றான் அவன்.
“உன் பாசத்தை காட்டுறேன்னு அவனுக்கு பணம் அனுப்பி தப்பு செய்யாத. அவனோட சின்ன வயசிலேருந்து நீங்க எல்லாரும் சேர்ந்துதான் அவனை கெடுத்து வச்சீங்க, இப்போ எங்க வந்து நிக்குது பார்த்தியா? இனியாவது அவனுக்கு நல்லது செய்”
“அவனை காண்டாக்ட் பண்ணாம இரு, அதுவே அவனுக்கு செய்ற நல்லதுதான்” என கண்டிப்புடன் சொல்லி விட்டார்.
மகளுக்கு நல்லவன் ஒருவனுடன் திருமணம் நடக்க வேண்டும் என சுபா வேண்டாத தெய்வம் இல்லை. சஞ்சய் நல்லவன் என்பதை கண் கூடாக பார்த்து விட்டாலும் வேறு எந்த வகையிலும் பிரச்சனை இல்லாமல் மகளின் வாழ்க்கை சுமூகமாக போக வேண்டும் என அடுத்த வேண்டுதலை மனதில் சுமந்து கொண்டு புறப்பட்டார் சுபா.
விமான நிலையம் வரை வருவதாக சொன்னான் சஞ்சய். வீண் அலைச்சல், வேண்டாம் என சொல்லி விட்டார் கார்த்திகேயன்.
மாலை இருள் பரவ ஆரம்பிக்கும் நேரத்தில்தான் சஞ்சய்க்கும் மீராவுக்கும் தனிமை கிடைத்தது.
சோஃபாவில் ஒருவர் மற்றவர் அரவணைப்பில் அடங்கிப் போய் விட்டார்கள்.
இருவருக்குமே மனம் ஓய்ந்து கிடந்தது. மீரா தன்னுடன் இருக்கிறாள் என்பதை அனுபவிக்க முடியாமல் அம்மாவின் அழுகை முகம் அவனை இம்சை படுத்தியது. தான் இவன் வாழ்வில் வந்ததால் இன்று இவனது குடும்பத்தை விட்டு பிரிந்து நிற்கிறான் என்ற நினைவு மீராவையும் அலைக்கழித்தது.
சஞ்சயின் கண்கள் மூடியிருக்க, கை விரல்கள் மட்டும் தன் மீதிருந்தவளின் தோளை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தன. மீராவோ அவனது டி ஷர்டின் காலரிலிருந்து பிரிந்து வந்திருந்த நூலை விரலில் சுற்றுவதும் பிரிப்பதுமாக இருந்தாள்.
பசித்த வயிறுதான் இருவரின் மூளைகளையும் செயல் பட வைத்தது.
“சாப்பிட்டு படுக்கலாமா சஞ்சய்?” எனக் கேட்டாள். அவன் ம் மட்டும் போட எழுந்து சென்றாள். கோதுமை ரவை உப்புமா செய்தாள். இருவரும் சாப்பிட்ட பிறகு அடுத்த நாளுக்கு தயார் செய்தாள் மீரா.
சமையலறை வேலையை முடித்த பிறகு மீரா ஹால் வர, “இந்த ரூம் போ மீரா” என தன் அறையை காண்பித்து கூறினான் சஞ்சய்.
ஏதும் சொல்லாமல் அவள் பார்க்க, “இனிமே ஒரே ரூம்லதான் நாம தூங்குறோம். அதுக்கு மேல நம்ம விஷயங்களை வெளில சொல்லாத” என்றான்.
“ஸாரி சஞ்சய், நான்…”
“விடு மீரா. எனக்கு புரியுது. நீ போ, நான் வர்றேன்” என்றான்.
“ரொம்ப லேட் பண்ணாதீங்க” என சொல்லி அவனது அறைக்கு சென்றாள். அறையை ஒதுங்க வைத்து, படுக்கை விரிப்பையும் மாற்றிப் போட்டிருந்தான். அவள் படுத்துக் கொண்ட சில நிமிடங்களில் எல்லாம் அவனும் வந்து விட்டான்.
மேற்சட்டை களைந்து, “தூங்கிடலையே நீ?” எனக் கேட்டவனை விழி விரியப் பார்த்தாள்.
மிகவும் சோகமாக தெரிந்தான். ஆறுதலாக என்ன சொல்லலாம் என அவள் யோசிக்க, நானே உன்னிடம் ஆறுதல் தேடிக் கொள்வேன் என்பது போல படுத்தவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். அவனது பாதி உடல் அவள் மீதிருந்தது.
ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி அவனை அணைவாக பிடித்துக்கொண்டாள்.
“அம்மா அழுதாங்க மீரா” என்ற சஞ்சயின் குரல் அவளின் காதில் புலம்பலாக ஒலித்தது.
மனதில் உள்ளதை அவன் இறக்கி வைக்க, அவனை ஆதரவாக தாங்கிக் கொண்டாள்.
“உன்கிட்ட அம்மா பழகினது இல்லை. பழகியிருந்தா உன்னை அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு அவங்க சொல்லியிருக்க மாட்டாங்க, ப்ளீஸ் என் அம்மாவை தப்பா நினைக்காத மீரா. இன்னிக்கு அப்பாக்கு பதில் அம்மா வந்திருந்தா கண்டிப்பா இப்படி நம்மளை விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க தெரியுமா?” எனக் கேட்டான்.
“இப்படி ஒரு மகனை பெத்து வளர்த்த அத்தையை நான் ஏன் தப்பா நினைக்க போறேன்? நான் யாரையுமே தப்பா எடுக்கல. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க” என்றாள்.
இன்னும் அம்மாவை பற்றியே சொல்லிக் கொண்டிருந்தான். முகத்தை மட்டும் நிமிர்த்தவே இல்லை.
கழுத்து வளைவு பிசு பிசுக்கவும்தான் அவன் அழுகிறான் என்றே அவளுக்கு புரிந்தது. இப்படி எந்த ஆணின் அழுகையையும் அவள் கண்டதில்லை, இன்றுதான் முதன் முதலாக உணர்கிறாள்.
“சஞ்சய்…” என கலங்கிய குரலில் அழைத்தாள்.
“ம்ம்ம்… ஒன் செக்” என கர கரப்பான குரலில் சொன்னான்.
அவள் தவித்துப் போனவளாக நொடிகளை நகர்த்த, அவளது தோளிலேயே கண்களை துடைத்துக் கொண்டு தலை உயர்த்தி அவளை பார்த்தான்.
“ரொம்ப எமோஷனல் ஆகி உன்னை பயமுறுத்திட்டேனா?” எனக் கேட்டான்.
முன் நெற்றி சிகை ஏனோ தானோ என களைந்து, இமை முடிகள் கண்ணீரின் ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தன. அவள் மென்மையாக அவனது கண்ணிமைகளை தடவிக் கொடுத்தாள்.
“நான் ஒன்னும் அவங்கள வேணாம்னு சொல்லலையே, அவங்கதான் அப்படி சொல்லிட்டாங்க. அப்போ நான் ஃபீல் பண்றதுல அர்த்தமே இல்லை மீரா” என சொல்லி அவளை விட்டு நகர்ந்து நேராக படுத்துக் கொண்டான்.
“ரொம்ப புலம்புறேன்ல?” எனக் கேட்டான்.
“ஆமாம்” என்றாள்.
“என் வயசுல உள்ள பசங்க எல்லாரும் லவ் ஃபெயிலியர்ல புலம்புவாங்க, என்னை பார்த்தியா?”
“பார்த்திட்டுதானே இருக்கேன்?”
“ஒரு வேளை நீ என்னை விட்டுட்டு போயிருந்தன்னு வையி… அப்பவும் புலம்பிட்டு இருந்திருப்பேன்”
“என்னன்னு?”
“மனசே இல்லாத ராட்சசி… ஈவு இரக்கம் இல்லாம என்னை ஏமாத்திட்டு போயிட்டா. நான் வேணாம்னு போனால்ல… போகட்டும்…” என்றவன் அவளின் துளைக்கும் பார்வையில் புலம்பலை நிறுத்தி விட்டான்.
“ம்ம்… ஏன் நிறுத்திட்டீங்க? கண்டினியூ பண்ணுங்க”
“வேணாம் வேணாம் கண்டிப்பா மோசமா திட்டுவேன், உன் ஹார்ட் பிரேக் ஆகிடும்”
“இதெல்லாம் எவ்ளோ நாளைக்கு இருந்திருக்கும்? சீக்கிரத்துல இன்னொரு கேர்ள் ஃபிரெண்ட் கிடைப்பா. அப்புறம் மீராங்கிற பேர் கூட உங்க நினைப்புல இருந்திருக்காது”
“அப்போ உனக்கும் அப்படிதானா? ஒரு வேளை நாம பிரிஞ்சி போயிருந்தா இந்த சஞ்சய் எவ்ளோ நாளைக்கு உன் நெனப்புல இருந்திருப்பான்?” என அவன் கேட்க, சிரித்தாள்.
“சிரிச்சு சமாளிக்காத. சொல்லு… எவ்ளோ நாளைக்கு, அட்லீஸ்ட் ஆறு மாசமாச்சும் உனக்குள்ள இருந்திருப்பேனா?”
“ஆறு மாசம்தான் கடவுள் எனக்கு வாழ டைம் கொடுத்திருக்கிறார்னா… நீங்க சொல்றது சரிதான்” என்றாள்.
“செத்து போனா என்ன நினைவிருக்கும்? போங்க… கிண்டல் பண்றீங்கதானே என்னை? நீங்க சொல்லுங்களேன் எவ்ளோ நாள்ல மூவ் ஆன் ஆகியிருப்பீங்க?”
“எனக்கு உன்னோட இருந்த மெமரீஸ் நினைக்கும் போது எந்த ஃபீலும் வரக்கூடாது, அப்பதான் அடுத்த கட்டம்லாம் போயிருப்பேன்”
“அப்படி எந்த மெமரீஸும் நாம கிரியேட் பண்ணியிருக்கோமா?”
“ம்ம்… கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. ஆனா போதாது மீரா. எதை பார்த்தாலும் எதை செய்தாலும் நமக்கு நம்ம நினைப்பு வர்றது மாதிரி வித விதமா என்ஜாய் பண்ணி வாழணும்”
இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து அவனை நெருங்கி ஒருக்கலித்து படுத்துக் கொண்ட மீரா, ம் போட்டாள்.
சின்னக் குழந்தை ஆசை டெடியை அணைத்துக் கொள்வது போல அவளை அணைத்துக் கொண்டவன், “பிராப்பரான ஃபர்ஸ்ட் நைட் இதுதான்ல நமக்கு?” என்றான்.
“என்ன?” அவனது மார்பில் உதடுகள் உரச கேட்டாள்.
“இந்த நைட்லதானே அஃபிஸியலா சேர்ந்து ஒரு பெட்ல இருக்கோம்?”
“அஃபிஸியலாவா? உளறாம தூங்குங்க சஞ்சய்”
“தேங்க்ஸ் மீரா” மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்வுப் பூர்வமாக சொன்னான்.
“எதுக்கு?”
“இந்த சஞ்சயை குழில புதைய விடாம காப்பாத்தினதுக்கு”
“நீங்களே இருன்னு சொல்லியும் விட்டுட்டு போனா என்னை விட பெரிய முட்டாள் உலகத்திலேயே இருக்க முடியாது சஞ்சய், பேசாம தூங்குங்க” என கொஞ்சமாக அதட்டித்தான் அவனை அமைதி படுத்தி உறங்கச் செய்தாள் மீரா.
இவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என கணவன் நினைப்பது வேறு, மீராவும் அப்படியே இவனை குறையில்லாமல் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மனதில் சங்கல்பம் செய்து கொண்டாள். நடைமுறைச் சிக்கல்கள் அவளுக்கு தெரியவில்லை.