பைரவ் மஜும்தார் வீட்டில் இல்லை. அவரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவில் நடக்கவிருக்கும் திருமணத்தில் பங்கு பெற இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியூர் சென்றிருக்க, பைரவ்வும் சற்று முன்பு இங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா எனக் கேட்டாள் மீரா.
“பிரயோஜனம் இருக்கும்னு தோணலம்மா. பாபுவால ஏற்கனவே ஒன்னும் செய்ய முடியாம போயிடுச்சே. வேற வழி இல்ல மீரா, சஞ்சயோட அப்பாக்கு சொல்லிடலாம்” என்றார் ஐஸக்.
“விஷயம் தெரிய வரும் போது உங்க கல்யாணத்தை ஏத்துப்பாங்களா சொல்ல முடியாது. வசதியான குடும்பம்னாலும் அவரு இங்க வந்துதான் மந்திரியை சமாதானம் பண்ண முடியுமா என்ன? பேசாம லாயர் யாரையும் பார்த்து மெனக்கெடுவோமா?” எனக் கேட்டார்.
“நாம இங்க என்ன முயற்சி பண்ணனுமோ பண்ணுவோம் அங்கிள். ஆனா அவர் வீட்டுக்கு சொல்லிடலாம். ஏதாவது பண்ணுவாங்க, சஞ்சய்க்கு எதுவும் ஆக கூடாது” என சோர்வாக சொல்லிக் கொண்டே கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“என் போன் இன்னும் லொட லொடப்பாதான் இருக்கு. நம்பர் சொல்றேன், உன் போன்ல போட்டு கொடும்மா” என்றார் ஐஸக்.
மீராவும் அப்படியே செய்தாள். நேரம் அப்போதே பத்தாகியிருந்தது. பைரவ் வீடிருந்த தெருவிலேயே ஒரு கடையின் வாசலில் வைத்துதான் பேசினார் ஐஸக்.
சஞ்சயின் தற்போதைய பிரச்சனையை மட்டுமே சொல்லலாம் என நினைத்துதான் பேசினார். மகன் காவல்நிலையத்தில் இருக்கிறான் என்பது வீரராகவனுக்கு அதிர்ச்சிதான் என்ற போதும் தீர விசாரித்து, ஐஸக் மூலமாகவே மகனின் திடீர் திருமணம் வரை தெரிந்து கொண்டு விட்டார்.
மீராவின் ஊர், அவளின் பிரச்சனை என அனைத்தையும் ஐஸக் சொல்லிக் கொண்டிருக்க, உள்ளத்தில் ஆர்ப்பரிக்கும் கொடிய இரைச்சல் சத்தம் வெளியில் கேட்காத படி அமைதியாக இருந்தாள் மீரா.
நேற்று மாலில் நடந்த பிரச்சனை பற்றியும் விளக்கமாக சொன்னார் ஐஸக்.
தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் வீரராகவன்.
“என்னம்மா இது குறுக்கு விசாரணை போட்டு எல்லா விஷயத்தையும் வாங்கினார், புள்ள ஸ்டேஷன்ல இருக்கான், சும்மா இல்லை… மந்திரி வீட்டு புள்ளைய அடிச்சிட்டு உள்ள இருக்கான், எதுக்கும் பதறல அவரு. எதுவும் செய்வாரா, இல்லை மகனை கை விட்டுட்டாரான்னு தெரியலையே” என புலம்பலாக சொன்னார் ஐஸக்.
வீட்டில் உள்ளவர்களின் குண நலன்கள் பற்றித்தான் அதிகமாக பேசியிருக்கிறான் சஞ்சய். குடும்பத்திற்கு சொந்தமாக நிதி நிறுவனம் இருப்பதாக சொல்லியிருக்கிறான். சகோதரிகள் வீட்டிலும் அவர்களின் குடும்பத் தொழில்கள்தான். அது கூட மேலோட்டமாக அவன் சொன்னது. அதையே இப்போது சொன்னாள் மீரா.
“ஸ்டேஷன் போலாம் அங்கிள். எனக்கு சஞ்சயை பார்க்கணும்” என்றாள் மீரா.
அவளின் தவிப்பை பார்க்க அவருக்கு பாவமாக இருக்க, மறுக்காமல் அழைத்துச் சென்றார்.
அவர்கள் சென்ற நேரம் சௌரப் கோஷ் ஸ்டேஷனில் இல்லை. சில காவல்காரர்கள் பைரவ்வுக்கு விசுவாசிகள் என்பதால் சஞ்சயை பார்க்க மீராவை அனுமதித்தனர்.
இரவில் சஞ்சயை துன்பறுத்த வாய்ப்பு இருப்பதாக கான்ஸ்டபிள் ஒருவர் ரகசியமாக ஐஸக்கிடம் சொல்லி சென்றார்.
மீராவை கண்டதும், “நீ ஏன் வந்த மீரா?” என கடிந்து கொண்டான் சஞ்சய்.
ஓய்ந்து போன தோற்றத்தில் இருந்தவனை கண்டு அவளுக்கு பேச்சே வரவில்லை. தனக்கு ஏதும் என்றால் சமாளித்துக் கொள்வான் சஞ்சய், அந்த இன்ஸ்பெக்டர் மீராவின் பெயரை சொல்லி அல்லவா பயமுறுத்தி சென்றிருந்தான்.
தான் உடனில்லாத போது மீராவுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்ற பயமும் நேற்று நடந்த விஷயமே அவளை பாதித்திருக்க, இப்போது தன்னுடைய நிலை அவளை எப்படி உணர வைக்கும்? என்ற பரிதவிப்பும் அவனை ஆட்டிப் படைத்திருந்தது.
இதை எப்படி தாங்கி தனியாக இருப்பாள் என முழுக்க முழுக்க மீரா பற்றிய சிந்தனைதான் அவனுள். இந்த நேரத்தில் மீராவை இங்கு அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. அவளின் விழிகளில் தெரியும் உணர்வுகளை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.
கிடைக்கும் நேரத்தில் அழுது சஞ்சயை இன்னும் பலவீன படுத்தி விடக்கூடாது என்பதால் உதடுகள் கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டாள் மீரா.
மீராவுக்காக தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என யோசித்தான்.
“பயப்படாத மீரா. என் மொபைலை வாங்கி வச்சிட்டாங்க. என் அண்ணன் நம்பர் சொல்றேன், நீ அவர்கிட்ட விஷயத்தை சொல்லு. உன்னை என் ஃபிரெண்ட்னு சொல்லு போதும். நான் காலைல வீட்டுக்கு வந்திடுவேன்” என்றான்.
“உங்கப்பாகிட்ட சொல்லியாச்சு சஞ்சய்” என்றாள் மீரா.
“என்ன! யார் சொன்னா? அவர் நம்பர் எப்படி தெரியும்?” அதிர்ச்சியும் பதற்றமுமாக கேட்டான்.
அவனது அதிர்வில் இவளும் குழப்பத்துடன் ஐஸக்தான் சொன்னார் என்பதையும் அவரிடம் இவன் தந்தை முன்பே சொல்லி வைத்திருந்ததையும் பகிர்ந்தாள்.
“அப்படிலாம் செய்ய முடியாது மீரா, போன்னு சொன்னா போ!” என சற்று கடினமாக சொன்னான்.
கான்ஸ்டபிளும் அவளை கிளம்ப சொல்ல, சஞ்சயை கவலையாக பார்த்துக் கொண்டே வெளியேறினாள் மீரா. தள்ளி நின்றிருந்த ஐஸக்கும் சஞ்சய்க்கு தைரியம் சொல்லும் விதமாக கையால் சைகையாக சொன்னார்.
அவரை தன்னிடம் அழைத்தவன், “மீரா எவ்ளோ கேட்ருந்தாலும் இந்த டைம் அவளை இங்க அழைச்சிட்டு வந்திருக்க வேணாம் நீங்க” என்றான்.
“நீங்க டென்ஷன் ஆனா மீரா எப்படி தைரியமா இருப்பா? அதான் அப்பாக்கு ஸ்பை வேலை பார்த்திட்டு இருக்கீங்களே. எவனும் என்னை எதுவும் செய்ய முடியாது. மீராவை வீட்ல விட்டுட்டு நீங்களும் அவளுக்கு துணையா வீட்ல இருங்க. அப்பா வரை விஷயம் போச்சுதுன்னா காலைல இல்லை கொஞ்ச நேரத்துலேயே நான் வந்திடுவேன்”
சற்று நேரத்தில் காவல் நிலையம் பர பரப்பாகி விட்டது. அந்த நேரம் சிட்டி கமிஷ்னர் அங்கே வந்தால் பரபரப்பாகும்தானே? சௌரப் கோஷ் மது போதை தெளிந்தும் தெளியாமலும் காவல் நிலையம் வந்து சேர்ந்திருந்தான்.
மீராவும் ஐஸக்கும் வீட்டுக்கு சென்றிருக்கவில்லை. எதிரில் உள்ள தேநீர் கடை பூட்டிக் கிடக்க, அதன் வெளியில்தான் அமர்ந்திருந்தனர். ஐஸக் எவ்வளவோ சொல்லி விட்டார், சஞ்சய்க்கு ஆபத்து நான் நகர மாட்டேன் என்பவளை தனியே விட்டுச் செல்ல மனமின்றி அவரும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது.
“என்ன அங்கிள் யார் யாரோ வர்றாங்களே? இன்ஸ்பெக்டர் கூட போயிருக்கார்” பீதியுடன் கேட்டாள் மீரா.
“என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியலையே மா” என்ற ஐஸக்கின் குரலிலும் கவலை அப்பிக் கிடந்தது.
“நாம உள்ள போய் பார்ப்போமா அங்கிள்?” காவல் நிலையத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“சஞ்சய் தம்பி தைரியமா இருக்குமா. அது சொல்றதுதான் ஒன்னும் விளங்கல எனக்கு. இரு இரு என்னாகுதுன்னு பார்ப்போம்” என அவளை சமாதானம் செய்தார்.
சஞ்சய் வெளி வருவது தெரிந்தது. கமிஷ்னர் ஏதோ பேசிக் கொண்டே வந்தார். அவனது தோளில் தட்டிக் கொடுத்து விடை கொடுப்பது போல கை கொடுத்தார். மீராவும் ஐஸக்கும் அங்கே சென்றனர்.
“இன்னுமா இங்க இருக்கீங்க?” என வியப்பாக கேட்டான் சஞ்சய்.
கமிஷ்னர் யார் இவர்கள் என்பது போல பார்த்தார்.
“என் வைஃப் ஸார், அவர் எங்க ஃபிரெண்ட்” என இருவரையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து வைத்தான் சஞ்சய்.
“இந்த பெண்ணிடம்தான் தவறாக நடந்து கொண்டானா அவன்?” என விசாரித்தார் கமிஷ்னர்.
சஞ்சய் ஆம் என சொல்ல, “உன் ஃபிரெண்ட்னுதானே சொன்னாங்க, நீ வைஃப்னு சொல்றியே” என்றார்.
சஞ்சய் பதில் தராமல் சங்கடமாக அவரை பார்த்தான். மீராவும் குழப்பமும் அச்சமுமாக பார்த்திருந்தாள்.
நேரத்தை பார்த்த கமிஷ்னர் பின்னர் பேசிக் கொள்ளலாம் என சொல்லி அவர்களை போலீஸ் வாகனத்திலேயே அனுப்பி வைத்தார். வழியிலேயே ஐஸக் இறங்கிக் கொண்டார்.
வீடு வந்து சேர்ந்தனர் சஞ்சயும் மீராவும்.
மீராவை அணைத்துக் கொள்ள போனான் சஞ்சய். பின்னால் தள்ளி சென்றாள் மீரா. பல கேள்விகள் உள்ளே குடைந்தாலும் எதையும் கேட்க முடியாமல் நின்றிருந்தாள்.
“ஜஸ்ட் ஸ்டே மீரா, லெட் யுவர் ஹக் ஃபிக்ஸ் எவரிதிங் இன்சைட் மீ(உன் அணைப்பு என் மனதில் உள்ள அனைத்தையும் சரி செய்யட்டும் )” என்றான்.
வேகமாக சென்று அவனை கட்டியணைத்துக் கொண்டாள் மீரா. அந்த அணைப்பு அவனுக்கு மட்டுமா தேவையாக இருந்தது, அவளுக்கும்தானே?