ஓய்வறைகள் இருக்கும் மூலையில் இருக்கை ஒன்றில் மேசையில் முகம் கவிழ்த்த படி அமர்ந்திருந்தாள் மீரா.

என்ன சொல்ல போகிறாளோ என நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. அவளிடம் ஓடிச் சென்று அவளின் தோளில் கை வைத்து “மீரா…” என்றான்.

நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கலங்கி சிவந்து போயிருந்தன. அவன் என்னவென கேட்கும் முன், சுதாரித்து எழுந்தவள், “நல்ல தலைவலி சஞ்சய், வீட்டுக்கு போலாம்” என்றாள்.

அவள் கையோடு தன் கையை கோர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், “ம்ம்… உட்கார்” என்றான். வேறு பேசும் நிலையில் இல்லை அவள். உடனே அமர்ந்து விட்டாள்.

அவளை ஆசுவாசம் செய்ய நினைத்து சுற்றிலும் பார்த்தான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவள், “எதுவும் வேணாம் சஞ்சய், எனக்கு ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணணும், இங்க வேணாம் வீட்டுக்கு போகணும், ப்ளீஸ்” என்றாள்.

தன்னைப் பாராமல் பேசியவளின் தலையை கோதி விட்டான்.  அந்த அக்கறையில் வெளிப்பட்ட கண்ணீரை அவனறியாமல் துடைக்க முயன்று தோற்றாள்.

அவளின் கண்ணீரை மென்மையாக துடைத்து, பருக தண்ணீர் கொடுத்தான். அவனிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாள், வார்த்தைகள் வர மறுத்து, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்ற சுய இரக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.

“வீடு ரொம்ப தூரம் மீரா. இங்கேயே ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வா, முகமெல்லாம் எப்படியோ இருக்கு பாரு, ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்றான்.

ஓய்வறைகள் இருக்கும் பக்கம் பார்த்தவள், அவன் முகத்தை பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.

சற்று முன் சிரித்துக்கொண்டே இங்கிருந்து வெளியேறிவனின் முகம் சஞ்சய்க்கு நினைவு வர, அவனது தாடை இறுகியது.

“நான் இங்கதான் இருக்கேன், போய்ட்டு வா” என சொல்லி அவளை அனுப்பினான்.

என்ன நடந்தது என சஞ்சய்க்கு தெரியாது, ஆனால் விரும்பத் தகாத ஏதோ ஒன்று என புரிந்தது. என்னவென விசாரித்து அவளை சங்கட படுத்த அவன் விரும்பவில்லை.

சற்று முன்பு எத்தனை உரிமையாக கோவம் கொண்டாள். எப்படி ரசித்தேன் நான், அவளை இப்படி மாற்றி வைத்திருக்கிறானே… அவனை… சஞ்சயின் பற்கள் நெறி பட்டன. தன் வெறி தீரும் மட்டும் அவனை போட்டு புரட்டி எடுக்கும் அளவுக்கு ஆத்திரம் மிகுந்த போதும், மீராவை தனியாக விடக்கூடாது என்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்களில் முகமெல்லாம் கழுவிக் கொண்டு வந்தாள் மீரா. ஆனாலும் கலக்கமாகவே தெரிந்தாள்.

அவனும் ஓய்வறை சென்று வந்தான். தேநீர் பருகலாம் என கேட்டுப் பார்த்தான். கெஞ்சலாக பார்த்தாள் அவள். தாமதம் செய்யாமல் வீட்டுக்கே போய் விடலாம் என முடிவு செய்தான் சஞ்சய்.

பைக் எடுக்க பேஸ்மென்ட் செல்ல வேண்டும். லிஃப்ட்டில் செல்லலாம் என காத்திருந்தான். திறந்த லிஃப்ட்டில் மீராவிடம் சேட்டை செய்தவன் இருந்தான். மீரா அருவறுப்பும் பயமுமாக தன்னிரு கைகள் கொண்டு சஞ்சயின் கையை சுற்றிப் பிடித்துக் கொண்டாள்.

உள்ளே இருந்தவனோ அலட்சியத்துடன் அவர்களை பார்த்து, புருவங்களை உயர்த்தி இளக்காரமாக வேறு சிரித்து வைத்தான். சஞ்சய்க்கு அவனை பார்க்க விகாரமாக இருந்தது.

மீராவை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சஞ்சய். லிஃப்ட் மூடிக் கொண்டது.

பேஸ்மெண்டில் லிஃப்ட் திறக்க, மீராவுடன் வெளியேறினான் சஞ்சய். உள்ளே உடலில் ஊமைக் காயங்களும் வாயில் குத்து பட்டதால் ஏற்பட்ட ரத்தக் கசிவோடும் கிடந்தான் அவன்.

தனியாக இருந்திருந்தால் இன்னும் கூட கைவரிசையை காட்டியிருப்பான் சஞ்சய். மீரா உடனிருக்க, அவளை பத்திரமாக வீட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவனை அத்தோடு விட்டு வேகமாக வெளியேறுவதில் கவனம் வைத்தான்.

சஞ்சயும் மீராவும் அந்த மாலின் வெளியே வந்து விட்டனர். அடிப்பட்டவனும் அவனது சகாக்களும் கூட காரில் வெளியேறினார்கள். சஞ்சய் இடித்த பெண்ணும் அவளது நெருங்கிய ஆண் நண்பனும் இல்லை. மற்றவர்கள் காருக்குள்தான் இருந்தனர்.

சஞ்சயின் பைக்கை காரில் துரத்தினார்கள். தனியனாக இருந்திருந்தால் பைக்கில் நகரத்தின் இண்டு இடுக்கெல்லாம் சுற்றி அவர்களின் காரில் பெட்ரோல் தீரும் வரை ஊர்கோலம் போகச் செய்யலாம் என நினைத்திருப்பான்.

தன்னுடன் மீரா இருப்பதில் சற்றே பொறுப்பாக யோசித்தான். அவர்கள் எண்ணிக்கையில் அதிகம், மீரா வயதுப் பெண் என்பதில் அவனது மூளை அவனுக்கு அலாரம் கொடுத்திருந்தது. ஆகவே அவர்களை விட்டு தூர போகும் முடிவை எடுத்து செயல்படுத்தினான்.

ஏற்கனவே பயந்து போயிருந்தாள் மீரா. சஞ்சயின் பைக் சென்ற வேகத்தில் அவளுக்கு தலை சுற்றியது. மதியம் அவனுடன் பயணித்த போதே வேகம் என்றாள், அந்த வேகமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல இப்போது ஓட்டிக் கொண்டிருந்தான்.

கண்களை இறுக மூடி அவன் முதுகில் முகம் பதித்து, அவனது வயிற்றை சுற்றி கைகளை கோர்த்து அணைத்திருந்தவளின் உதடுகள் கடவுளே கடவுளே என சொல்வதை மட்டும் நிறுத்தியிருக்கவில்லை.

புறநகர் பகுதி என்பதால் அந்த நேரம் அதிக போக்குவரத்து இல்லை. வெளிநாட்டு காரின் வேகமும் அதிகமாகத்தான் இருந்தது. ஆயினும் கால் மணி நேரத்தில் வெகு சாமர்த்தியமாக காரின் துரத்தலுக்கு சிக்காமல் முக்கிய சாலையின் போக்குவரத்தில் கலந்திருந்தான் சஞ்சய்.

அப்போதும் பைக்கின் வேகத்தை குறைத்து விடாமலேயே ஓட்டி வீட்டை வந்தடைந்திருந்தான். பைக்கிலிருந்து இறங்கிய மீராவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“வந்தாச்சு மீரா, பயப்படாத, வா” என சொல்லி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

விழிகளை சுழற்றி பார்த்து பாதுகாப்பாக வந்து விட்டோம் எனப் புரிந்து கொண்டாள். அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையும் வெளிப் பட்டது.

அவளை சமாதான படுத்தவென அவளின் கன்னங்களை பற்றிக்கொண்டு, “ஷ்ஷ்ஷ்… அழாத மீரா” என்றான்.

அவனை அணைத்துக் கொண்டு விம்மினாள் மீரா. அவனும் ஆதரவாக அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

“நான் அங்க…மால்’ல உங்களை விட்டுட்டு தனியா போயிருக்க கூடாது” என சொல்லி தேம்பினாள்.

“எப்பவும் என் பின்னாடியேவா நீ சுத்திட்டு இருக்க முடியும்? உம்மேல எந்த தப்பும் இல்லை” என்றான்.

“ரெஸ்ட்ரூம் போகலாம்னு போனேன். லேடிஸ்க்கு எங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போது அவன் வந்திட்டான். அங்க யாருமே இல்லை. நான் வெளிய வர நினைச்சு திரும்பி நடந்தேன். அவன் அவன்…” என்றவளின் அழுகை அதிகமாகியது.