மாலினியுடன் பிரச்சனை வருவதற்கு முன்பே அவளைப் பற்றி ‘அழகான பெண், எப்படி கரெக்ட் செய்வது எனத் தெரியவில்லை’ என்றெல்லாம் மீராவிடம் சொல்லியிருக்கிறான்.
அதெல்லாம் மீராவுக்கு நன்றாகவே நினைவிருந்தது.
“ஹேய் என்ன உன் மூஞ்சு வத்திப் போய் தெரியுது, என்ன மீரா?” எனக் கேட்டான்.
“வார்டுல நல்ல வேலைன்னு சொன்னேனே” என்றாள்.
“மதியமே வீடு வந்திருப்பியே, ரெஸ்ட் எடுக்கலையா நீ?”
“ம்ம்… டீ போடவா?”
“மாலினி கோல்ட் காபி வாங்கி குடுத்தா. அதனால இப்போ ஒன்னும் வேணாம். கொஞ்ச நேரம் போகட்டும் டின்னர் சாப்பிட்ரலாம்”
“நேத்து மாதிரி இன்னிக்கும் டெரஸ் போவோமா?” என அவள் கேட்க, கைகளை உயர்த்தி சோம்பலாக முறித்தவன், “இன்னிக்கு வேணாம், நாளைக்கு பார்க்கலாம்” என்றான்.
நிஜமாகவே சஞ்சய் சோர்வாகத்தான் இருந்தான். மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் பேசி விட்டாள் என்ற நினைவில் மாடிக்கு செல்லும் மனநிலையும் இல்லை.
ஆடை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வருவான் என இவள் நினைக்க, அவனோ அறையில் படுத்துக் கொண்டே கைப்பேசி பார்க்க ஆரம்பித்திருந்தான்.
உரிமையாக அவனிடம் பேச அவளுக்கு வரவில்லை. முகத்தை தொங்க போட்டுக் கொண்டே சமையலறை சென்றாள்.
மனம் சரியில்லாமல் சமையல் செய்தால் எப்படி சரியாக வரும்? நேரமெடுத்தாலும் பரவாயில்லை என்றுதான் சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் செய்தாள். சப்பாத்தி கடினமாகி விட, கிரேவி கூட சுவையாக அமையவில்லை. அவள் சுவைத்துப் பார்க்காத காரணத்தால் அவளுக்கு தெரியவும் இல்லை.
இன்னும் அறையில்தான் இருந்தான் சஞ்சய். நாளை மீராவுக்கு மதிய ஷிப்ட் என்பதால், அடுத்த நாள் சமையலுக்கு என எந்த முன் வேலை செய்யவும் அவளுக்கு அவசியம் இருக்கவில்லை.
சீருடையை இஸ்திரி செய்து எடுத்து வைத்தவள் அவனே சாப்பிட அழைக்கட்டும் என நினைத்து படுத்து விட்டாள்.
அவன் வருவதாக தெரியவில்லை எனவும் எழுந்து அவனது அறை வாயிலில் போய் நின்றாள்.
“என்ன மீரா?” கைப்பேசியை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“சாப்பிட வாங்க” என அழைத்தாள்.
“பசிக்குதா?” என அவன் கேட்ட விதமே அவனுக்கு பசியில்லை என்பது போல அவளுக்கு உணர்த்தியது.
“இல்லை… சாப்பிட தோன்றப்போ கூப்பிடுங்க” என சொல்லி திரும்ப போனாள்.
கைப்பேசியை விலக்கி விட்டு அவளை பார்த்தவன், “வா இங்க” என்றான்.
அவனைப் பார்க்க திரும்பினாலும் உள்ளே செல்லாமல் வாயிலிலேயே நின்றிருந்தாள்.
“ஏன் உள்ள வர மாட்டியா?” எனக் கேட்டான்.
“நீங்க நார்மலா இல்லை சஞ்சய்” அவள் பேசிக் கொண்டிருக்க, “அப்படியா? ஆனாலும் அப்நார்மலா உன்னை ஏதும் செய்திட மாட்டேன்” என்றான்.
“எப்படியோ என்ன நடக்கிறாங்க? நீ நைட் ஷிப்ட்லாம் போவேன்னு எனக்கு தெரியாதா? நீதான் என்னை எப்படியோ நினைச்சு பேசின”
“எப்படியும் நினைக்கல. நேத்தெல்லாம் நல்லாத்தான் இருந்தீங்க. அந்த மாலினி கூட அவுட்டிங் போய்ட்டு வந்ததும் மாறிப் போயிருக்கீங்க. அவ எவ்ளோ மோசமா உங்களை பேசினா? அவ கூட ஈஸியா பேட்ச் அப் ஆகிட்டீங்க. நான் சொல்ல வர்றதை கூட கேட்காம என்னை ப்ளேம் பண்ணி பேசுறீங்க” என பொரிந்து விட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
படுக்கையில் சுவரை பார்க்க அவள் படுத்திருக்க, அரவம் உணர்ந்து திரும்பினாள். சஞ்சய் அவளின் கால் மாட்டில் அமர்ந்திருந்தான்.
அவள் உர் என பார்க்க, “மதியம் என்ன சொல்ல வந்த, இப்போ சொல்லு” என்றான்.
பானுவை பற்றி சொன்னவள், “ஸ்டார்ட்டிங்லேயே நமக்குள்ள புரிதல் வரணும்னு நினைச்சுதான் சொன்னேன்” என்றாள்.
“இல்லை உனக்கு என்னை பத்தி தப்பா அபிப்ராயம், நானும் பானு ஹஸ்பண்ட் போல…” என அவன் சொல்ல, பதறிப் போய் எழுந்தவள் அவனை பேச விடாமல் தன் கை கொண்டு அவனது வாயை மூடினாள்.
“எந்த நேரத்துல எனக்கு நீங்க எப்படி ஹெல்ப் பண்ணுனீங்கன்றதை சாவளவும் மறந்திட மாட்டேன் நான். உங்களை அப்படி மோசமாலாம் எப்பவும் நினைக்க மாட்டேன்” என சொல்லி அவன் வாயிலிருந்து தன் கையை விலக்கிக் கொண்டாள்.
“ஹ்ம்ம்… அவ்ளோ மோசமா நினைக்க மாட்ட, ஏதோ கொஞ்சம் மோசம்னு நினைப்ப என்ன?”
“நீங்க பெரிய பணக்கார வீட்டு பிள்ளைன்னு தெரியும். முழு மனசோட என்னை கல்யாணம் பண்ணியிருக்கீங்க. இந்த கல்யாணத்தால எனக்குத்தான் பாதுகாப்பு, நான்தான் பெனிஃபிசியர். நமக்குள்ள எந்த விதத்திலும் பிரச்சனை வரக்கூடாது என்னால உங்க நிம்மதி போயிட கூடாது… இப்படித்தான் நான் யோசிப்பேனே தவிர, நீங்க சொல்ற மாதிரிலாம் இல்லை” என்றாள்.
“ம்ம்ம்… என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் சொல்ல சொல்றதும், கிளம்பறது ரீச் ஆகுறதையெல்லாம் மெசேஜ் பண்ண சொல்றதும் உன் ஸேஃப்டியை உறுதி படுத்ததானே தவிர உன்னை சந்தேக பட்டு இல்லை” என்றான்.
அவனது கையை பிடித்துக்கொண்டவள், “ஊர்ல ஏதும் பிராப்லமா சஞ்சய்? அம்மா நல்லாருக்காங்கதானே?” எனக் கேட்டாள்.
“நீ அதிகமா யோசிக்கிற மீரா. ராஜசேகரனை யோசிச்சு இப்படி சொல்லலை. ஜெனரலா லேடிஸ்க்கு ஸேஃப்டி குறைவா இருக்கிறதால சொன்னேன்” என அவன் சொல்லவும் அவளும் ஏற்றுக் கொண்டாள்.
“நீங்க வர லேட் ஆகவும் எம்மேல கோவமோன்னு எல்லாம் யோசிச்சிட்டேன்”
“கோவமாதான் இருந்தேன்”
“என்கிட்ட சண்டை போடாதீங்க சஞ்சய். அம்மாவுக்கு அப்புறம் எனக்குன்னு நீங்க மட்டும்தான் இருக்கீங்க. என் உலகமே ரொம்ப சின்னதாதான் இருக்கு. நீங்களும் பேசலைனா எப்படி?”
“ஹேய் கோவமா இருந்தாலும் சஞ்சய் பேசுறத மட்டும் யாராலேயும் ஸ்டாப் பண்ண முடியாது. அதுக்குன்னு எல்லாத்திலேயும் என்னை ஈஸியா எடுக்காத மீரா. எப்போ வேணா நான் சென்சிடிவ் ஆகிடுவேன்” என அவன் பயமுறுத்தவும் மாலினி பற்றி விளக்கமாக கேட்க இருந்தவள் அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை.
சஞ்சயின் கைப்பேசி சத்தமிட எழுந்து சென்றான். கார்த்திகேயன்தான் அழைத்தார். பரபரப்புடன் அழைப்பை ஏற்று பேசினான்.
பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின், “மீரா இங்கதான் இருக்கா, பேசுறீங்களா ஸார்?” எனக் கேட்டான் சஞ்சய்.
இந்த நேரம் ஏன் அவள் உன்னுடன் இருக்கிறாள் என குழப்பமும் சந்தேகமுமாக விசாரித்தார் கார்த்திகேயன்.
இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி விட்டான் சஞ்சய். பதறிப் போய் விட்டார் அவர்.
“டேய் நிஜமா கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என இரண்டு மூன்று முறை கேட்டு விட்டார்.
“பிராமிஸ் ஸார். எங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சு. ஒரே வீட்லதான் இருக்கோம்” என்றான் சஞ்சய்.
அந்த இக்கட்டான சூழல் அவருக்கும் புரிந்ததுதான். ஆனாலும் இந்த திருமணத்தால் வேறு பிரச்சனைகள் வருமோ என பயந்தார். சஞ்சயின் குடும்பத்தை அவருக்கு நன்றாகவே தெரியும். மீரா நல்ல பெண் என்றாலும் இரு குடும்பங்களுக்கும் மலையளவு அந்தஸ்து பேதம் இருக்கிறதே.
சஞ்சயின் குடும்பத்தில் காதல் திருமணங்கள் நடந்தேறியிருந்த போதும் குடும்பத்தினர் அந்த காதலை மறுப்பதற்கான காரணங்களே இல்லை. சஞ்சய் எதையுமே அவசர பட்டு விளையாட்டுத் தனமாக செய்து விடுபவன் எனதான் அவனது அப்பா நினைப்பார். இந்த திருமணத்தை எப்படி ஏற்பார்? என அவருள் கலக்கம்.
“எப்படிடா சமாளிப்ப?” என தவிப்பாக கேட்டார் கார்த்திகேயன்.
“இப்போதைக்கு வீட்ல சொல்ல போறதில்ல ஸார்” என்றவனை திட்டினார்.
உண்மையை மறைப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என எடுத்து சொன்னார். தான் நினைக்கும் காரணங்களை அடுக்கி தகுந்த நேரம் பார்த்து நானே வீட்டில் சொல்லிக் கொள்கிறேன், உங்கள் பெயரெல்லாம் இழுத்து விடமாட்டேன் என அவரிடம் சொல்லி விட்டான் அவன்.
“எனக்கு பிரச்சனை வருமோன்னு நினைக்கல சஞ்சய், உன்னை உன் வீட்ல சும்மா விடுவாங்களான்னுதான் யோசனையா இருக்கு” என்றார்.
“என் வீட்ல என்னை என்ன சொல்ல போறாங்க ஸார்? சமாளிச்சுக்குவேன்” என உறுதியாக சொல்பவனிடம் அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
அதிர்ச்சியும் தான் ஒன்று நினைக்க இப்படி ஆகி விட்டதே என்ற கவலையும் அவரை தளரச் செய்து விட்டது.
மீரா இனி என் பொறுப்பு, நான் பார்த்துக் கொள்வேன் என அவருக்கு சமாதானம் போல சொல்லி மீராவின் அம்மாவுக்கும் தெரிய படுத்த போவதாக சொன்னான்.
மீரா அருகில் இருக்கிறாளா என்பதை கேட்டுக் கொண்டவர் அவனை தள்ளி வரச் சொன்னார்.
கார்த்திகேயனிடம் சஞ்சயே வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் முன்புதான் சமையலறை சென்று பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்திருந்தாள் மீரா. ஆனாலும் ஹாலில் சஞ்சய் பேசுவதையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
சஞ்சயின் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனதான் ஸார் சொல்கிறார் என புரிந்து கொண்டவளுக்கு கலக்கமாகத்தான் இருந்தது.
சஞ்சய் மெதுவாக வீட்டுக்கு வெளியில் வந்து விட்டான். திடீரென சஞ்சயின் குரல் கேட்காமல் போகவும் கை வேலையை விட்டு விட்டு மீராவும் வெளியில் வந்து பார்த்தாள்.
சஞ்சய் கேட்டிற்கும் வெளியில் சாலையில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தான். யோசனையுடனே உள்ளே சென்று விட்டாள் மீரா.