“ஐஸக் அங்கிளை காண்ட்டாக்ட் பண்ண வேற நம்பர் கிடைக்குமா?” என எரிச்சல் குறையாமல் கேட்டான் சஞ்சய்.

சுனிதாவின் கைப்பேசி எண்ணை அவர் பகிரவும் அவசரமாக அழைப்பு விடுத்தான் சஞ்சய்.

ஒரு வழியாக ஐஸக்கை தொடர்பு கொண்டு இவன் பேச ஆரம்பிக்க புரோகிதர் வந்து விட்டார்.

சஞ்சய் இங்குள்ள நிலைமையை சுருக்கமாக சொல்ல, பதறிப் போன ஐஸக்கிற்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.

“என்ன அங்கிள் அமைதியா இருக்கீங்க? நான் தாதாகிட்ட ஃபோன் தர்றேன், அவர்கிட்ட எங்க நிலையை எக்ஸ்பிளைன் பண்ணுங்க” என்றான் சஞ்சய்.

“இப்படி கடைசி நொடியில எப்படி சொல்றது சஞ்சய்? நமக்கே எதிரா போச்சுதுன்னா என்ன ஆகிறது? நான் திரும்ப கொல்கத்தால கால் வைக்க முடியாது” என பயத்துடன் சொன்னார் அவர்.

“அதுக்காக எங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்களா அங்கிள்?” என சஞ்சயும் கோவப் பட்டான்.

தாதாவிடம் பேசப் பயந்த ஐஸக் வேறு யாரிடமாவது கைப்பேசியை தர சொன்னார். தன்னை கடந்து சென்ற அரிந்தனிடம் ஐஸக்கை பேச வைத்தான் சஞ்சய்.

அரிந்தன் வாயிலாக சௌரப்வுடன் தாதாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஈகோ பிரச்சனையை தெரிந்து கொண்ட ஐஸக், சஞ்சய் சொல்ல சொன்னதை அவனிடம் சொல்லவே இல்லை.

இந்த திருமணத்தை நிறுத்துவது என்பது நம் கை மீறி போய் விட்டதாக சஞ்சய்க்குத்தான் எடுத்துச் சொன்னார்.

“என்ன விளையாடுறீங்களா அங்கிள்?” என கோவப் பட்டான் சஞ்சய்.

“சரி கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிடு. அடுத்து என்ன செய்யறதா இருக்க தம்பி நீ?” எனக் கேட்டார் ஐஸக்.

“என்ன செய்யணும்?”

“உனக்கு அந்த ஊர் புதுசு. அங்கேருந்து மீரா பொண்ணை பாதுகாப்பா எங்க எப்படி அழைச்சிட்டு போவ?” எனக் கேட்டார்.

“அத நான் பார்த்துக்கிறேன்” என்றான் சஞ்சய்.

“நீ உன் ஊர்ல எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இங்க போரோ பாபு உதவி இல்லாம மீராவை உன்னால காப்பாத்தவே முடியாதுங்கிறதுதான் நிதர்சனம். இந்த காலத்து பசங்கதானே நீங்க? நம்ம ஊர் முறைப்படி தாலி கட்டுறதெல்லாம் இல்லை அங்க. அவங்க சொல்ற சடங்க செஞ்சு மீராவை உன் வீட்ல பாதுகாப்பா வச்சுக்க. அந்த பொண்ணு வெளிநாடு போனதும் நீயும் உன் ஊரை பார்க்க போ. இல்லைனா எல்லாருக்குமே சிக்கல்தான்” என ஐஸக் சொல்ல, கோபத்துடன் அழைப்பை துண்டித்து விட்டான் சஞ்சய்.

“என்ன சஞ்சய், அங்கிள் என்ன சொல்றார்?” என கலக்கத்துடன் கேட்டாள் மீரா.

ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து விட்டான் சஞ்சய். ஏதேதோ யோசனைகள் சஞ்சயிடம். ரயிலில் மீராவை சந்தித்ததும் கொல்கத்தா வந்ததும் இப்போது தனக்கே தெரியாமல் திருமணம் வரை வந்து நிற்பதும் என அதி வேகமாக அவனது மனதில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தன.

‘உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டான்’ என தன் அப்பா சொன்னதையும் அந்த பேச்சிலிருந்து இன்னுமே வெளி வந்திருக்காத தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதையும் எண்ணி வியப்பாக இருந்தது அவனுக்கு.

மீராவை பார்த்தான். என்ன செய்வது என்ற தவிப்புடன் நின்றிருந்தாள் அவள்.

அவனது பார்வையில் மீரா ஒரு அருமையான பெண், இப்போது இக்கட்டில் இருப்பவள். ஐஸக் சொன்னது போல திருமண நாடகம் போடுவதை எல்லாம் சஞ்சயால் எளிதாக ஏற்க முடியவில்லை.

பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் அருமையான திருமண வாழ்க்கை வாழ்வதை நேரில் கண்டவன் அவன். அந்த விளையாட்டு பிள்ளைக்கு திருமண பந்தத்தின் உன்னதம் தெரியுமோ என்னவோ? ஆனால் திருமணம் விளையாட்டு அல்ல என்பது விளங்கித்தான் இருந்தது.

அப்பா அன்று கேட்ட கேள்விகள் இப்போது அவனை தூண்டி விட்டது. என் பின்புலம் என்னவென தெரியாத ஒரு பெண், என்னை நம்பி என்னை மணந்து கொண்டாள் என அப்பாவிடம் வீராப்பாக போய் சொல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

என் முடிவுகளை என்னையே எடுக்க சொன்னார்தானே? இப்போது நானே ஒரு முடிவு எடுக்கிறேன், எப்படி எங்களுக்கு அறிவிக்காமல் திருமணம் செய்து கொண்டாய் என அவரால் கேள்வி கேட்க முடியுமா? என தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

இவர்கள் இருவரையும் உள்ளே அழைப்பதாக வந்து சொன்னான் அரிந்தன்.

எழுந்து கொண்ட சஞ்சய் மீராவை பார்த்து, “ஒரு மாசமா என்னை… அதாவது என் கேரக்டரை உனக்கு தெரியும். இவனை நம்பலாம் வச்சு ஒழுங்கா பார்த்துப்பான்னு நம்பிக்கை இருந்தா சொல்லு, உள்ள போலாம். இல்லைனா வேற யோசிக்கலாம்” என்றான்.

என்ன சொல்கிறான் இவன் என அதிர்ந்து போய் பார்த்தாள் மீரா.

“சீக்கிரம் சொல்லு மீரா, டைம் இல்லை நமக்கு” என்றான் சஞ்சய்.

“இது…” என நடுங்கும் குரலில் ஆரம்பித்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “இதெல்லாம் சரியா வருமா சஞ்சய்? உங்க வீட்ல எப்படி ஒத்துப்பாங்க? என்னால உங்களுக்கு பிரச்சனை வேணாம்” என்றாள்.

“தாராதாரி பிதோரே ஆஷுன்!” என்றான் அரிந்தன். உள்ளே அழைக்கிறான் என புரியவும், ‘நீ போ வருகிறோம்’ என சைகையில் சொன்னான் சஞ்சய்.

தாதாவின் வீடு, சஞ்சய் என மாறி மாறிப் பார்த்தாள் மீரா.

“எனக்கு உன்னையும் உன் பிரச்சனையும் தெரியும் மீரா. எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண ரெடியா இருக்கேன். என் வீட்டை பத்தியெல்லாம் யோசிக்காத. இல்லை ‘இவனை கட்டி கஷ்ட பட முடியாது, என்னை பார்த்துக்கலாம் இவன் லாயக்கு இல்லை’னு தோணினா அதையும் தைரியமா சொல்லு” என்றான் சஞ்சய்.

“ஹையோ சஞ்சய்! உங்களை பத்தி அப்படிலாம் நினைப்பேனா நான்? உங்களுக்கு தொந்தரவு தர மனசில்லை எனக்கு. இந்த லைஃப்ல இன்னும் என்ன கஷ்டம் பார்க்க போறேனோ…”

“ஷ்ஷ்ஷ் மீரா! என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா இல்லையா? அதை மட்டும் சொல்லு” எனக் கேட்டான் அவன்.

திருமணம் பற்றி ஒரு நாள் ஒரு பொழுது கூட யோசித்தது இல்லை அவள். ஆனால் தற்போதைய அவளின் நிலை மிக மிக மோசமாக அவளை அச்சப் படுத்தியது. அம்மா நினைவுக்கு வந்தார். தன் நலனை தவிர வேறெதுவும் அவருக்கு முக்கியமில்லை என்பது அவளுக்கு தெரியும்.

அதற்காக அம்மாவுக்கு தெரியாமல் திருமணம் என்ற பெரிய முடிவை எடுப்பதா என கேட்டுக் கொண்டவளுக்கு மலைப்பாக இருந்தது. தன் நெஞ்சத்தின் திக் திக் சத்தம் அவளுக்கு நன்றாக கேட்டது.

பதற்றத்தில் ஏற்பட்ட வியர்வையால் பிசு பிசுத்த உள்ளங்கைகளை பிசைந்தாள்.

இமை அசைக்காமல் அவளையே பார்த்து நின்றான் சஞ்சய்.

உதவ ஆளே இல்லாத தனிக் காட்டில் பெருங்குழியில் விழுந்து கிடப்பது போலத்தான் இப்போது மீராவின் நிலையும். தப்பிக்க எந்த வழியும் இல்லாத நிலையில் நல்லவன் ஒருவன் கை நீட்டும் போது அதைப் பற்றிக்கொள்வதை தவிர மீராவிடம் வேறு தீர்வு இருக்கவில்லை.

தன்னால் அவளின் தலை சம்மதமாக ஆடியது.

கால் மணி நேரத்தில் பைரவ்வின் மனைவி சிவப்பு நிறப் புடவையை மீராவுக்கு அணிவித்து, அவளின் கைகளில் வெண்ணிற சங்கு வளையல்கள் மற்றும் சிகப்பு நிற பவள வளையல்களையும் பூட்டி அழைத்து வந்தாள்.

திருமண சடங்குகள் அரங்கேறத் தொடங்கியது.

இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளும் படி ஆங்கிலத்தில் சொல்லி பூமாலைகளை அவர்களின் கைகளில் தந்தார் புரோகிதர்.

சஞ்சயும் மீராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே மாலை அணிவித்தவன் தனக்கும் அணிவிக்கும் படி பார்வையால் சொன்னான். அவளும் அப்படியே செய்தாள்.

ஹோமத்தின் முன்பு அமர வைக்கப்பட்டனர் இருவரும். மீராவின் கையை பிடித்து சஞ்சயின் கையில் தந்தார் பைரவ். அவளின் கையை இறுகப் பற்றிக்கொண்டான் சஞ்சய்.

பிரம்பால் செய்யப் பட்ட சிறிய கூடை போன்ற கொங்கே எனும் பொருளில் குங்குமம் நிறைந்திருந்தது. அதை சஞ்சயிடம் தந்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்கு சொன்னார் புரோகிதர்.

கொங்கே’யில் இருந்த அவ்வளவு குங்குமத்தையும் மீராவின் நெற்றி வகிட்டில் இட்டான் சஞ்சய்.

அக்னியை ஏழு முறை வலம் வந்தனர்.

சஞ்சய், மீரா இருவரும் வங்காள முறைப்படி  கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்து விட்டனர்.

திருமணத்துக்கு தயாராகாத நிலையில் திடீர் தம்பதியராகிப் போன இருவரும் வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்துச் செல்வார்களா என்பதும் தங்களின் பிரச்சனைகளை சமாளிப்பார்களா என்பதும் இனிதானே தெரிய வரும்?