சென்னைக்கு திரும்பும் மனநிலைக்கு வந்து, அதற்கு பின் போக முடியாமல் கொல்கத்தாவிலேயே இருக்கும் நிலை ஏற்படவும் சஞ்சய்க்கு நேரம் கொடுமையாகவே நகர்ந்தது.
மகனை அழைத்து வரவில்லை என வீரராகவனிடம் தேவகி கோவித்துக் கொண்டார்தான். ‘வேலையை உடனே விட முடியாது என்கிறான், அவனே அங்கே இருப்பதாக சொல்லும் போது நான் கட்டித் தூக்கிக் கொண்டா வர முடியும்?’ எனக் கேட்டு மனைவியின் வாயை அடைத்து விட்டார் வீரராகவன்.
அதற்கு தகுந்தது போலவே மகனிடம் தேவகி பேசிய போதும் ‘இங்கு இருப்பது என் விருப்பம்’ என்றே சொல்லியிருந்தான் சஞ்சய்.
அலுவலகத்தில் மாலினியை எதிர்கொள்வது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அன்று கோவத்தில் பேசி விட்ட மாலினிக்கும் தன் தவறு புரிந்து விட்டது. சஞ்சயுடன் சமாதானமாகவும் நினைக்கிறாள். ஆனால் அலுவலை தவிர வேறு எதையும் தன்னுடன் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் கடினமாகவே இருந்தான் சஞ்சய்.
ஐஸக்கும் வேலைக்கு வராத காரணத்தால் வீட்டிலும் வெறுமையாக உணர்ந்தான். அவரது கைப்பேசிக்கு அழைப்பு செல்லாத காரணத்தால் அவர் இருக்கும் ஏரியாவுக்கு சென்று விசாரித்துப் பார்த்தான்.
விசாரித்தவர்கள் ‘ஐஸக்கின் உறவினர் சீரியஸ், வெளியூர் சென்றிருக்கிறார் எப்போது வருவார் என தெரியாது’ என சொன்னார்கள். ஏமாற்றத்தோடு வீடு திரும்பி விட்டான் சஞ்சய்.
தினமும் மீராவுடன் மட்டும் பேசி விடுவான். ‘அப்பாவுடன் சண்டை, இப்போதைக்கு இங்குதான்’ என மேலோட்டமாக மட்டும் அவளிடம் சொல்லி வைத்திருந்தான்.
சஞ்சய் நினைத்தது நடக்கவில்லையே என கவலை கொள்வதா, அல்லது தனக்கு துணையாக இதே ஊரில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதா என்று அவளுக்கு ஒரே குழப்பம். சஞ்சயின் இருப்பு அவளையும் மீறி அவளுள் நிம்மதியை பரப்பத்தான் செய்தது. தான் இத்தனை சுயநலமாக நினைக்கிறோமே என உள்ளுக்குள் வெட்கிப் போனாள்.
இப்படியே அந்த வாரம் முடிந்திருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்பதால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் சஞ்சய்.
பைரவ் தாதாவின் ஆள் வந்து எழுப்பி விட்டு விட்டான். அவன் என்ன சொல்கிறான் என்றே சஞ்சய்க்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வழியாக தாதா அவனை அழைத்து வரச் சொன்னதை புரிந்து கொண்டான்.
எதற்கு என இவனிடம் கேட்டு நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை சஞ்சய். “நான் கிளம்பி வரேன் நீங்க போங்க” என சஞ்சய் சொன்னாலும் அவன் நகர்வதாக தெரியவில்லை.
பைரவ் மஜூம்தார் பற்றி ஏற்கனவே ஐஸக் வாயிலாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் சஞ்சய். இப்போது தனக்கும் உதவி, மீரா விஷயத்திலும் அவளுக்கு கெடுதல் செய்யாமல் போனதில் அவர் பற்றி அவனுக்கு நல்ல அபிப்ராயம் மட்டுமே இருந்தது.
ஆகவே இப்போது அவர் அழைக்கவும் எதற்காக என்ற கேள்வி எழுந்தாலும் பயமோ பதட்டமோ அவனிடம் இல்லை.
குளித்து வந்த சஞ்சயை சீக்கிரம் வரச் சொல்லி அவசரப் படுத்தினான் பைரவ்வின் ஆள். சஞ்சய்க்கு நல்ல பசி. சைகையில் சொல்லவும் செய்தான். ‘சாப்பாடா முக்கியம்?’ என்பது போல கோவப்பட்டான் அந்த ஆள்.
இடுப்பில் கை வைத்து முறைத்த சஞ்சய், சாப்பாடு இல்லை என்றால் என்பதை சைகையில் சொல்லி கண்களை மூடி நாக்கை வெளியில் நீட்டி இறந்து விடுவேன் என்றான். மூர்க்கமாக சஞ்சயின் கையை பிடித்து இழுத்தான் அவன்.
தன் கையை உதறி விட்ட சஞ்சய், “சரியான காட்டானா இருக்கியே, போ போ வர்றேன்” என்றான். மொழி புரியா விட்டாலும் வருகிறேன் என்கிறான் என புரிந்து முன்னே நடந்தான் அந்த ஆள்.
பைரவ்வின் வீட்டில் மீராவை எதிர்பார்த்திருக்கவில்லை அவன், அதுவும் கலவர முகத்துடன். வேகமாக அவளிடம் போனவன், “நீ ஏன் இங்க இருக்க? என்ன பிரச்சனை?” எனக் கேட்டான்.
சஞ்சயின் கைகளை பிடித்துக்கொண்டவள், அழ ஆரம்பித்தாள். அவளின் நடுக்கத்தை உணர்ந்தவனுக்கு ஏதோ தீவிரமான பிரச்சனை என்பதும் புரிந்தது. சுற்றிலும் பார்வையிட்டான். மற்றவர்கள் வேடிக்கை போலத்தான் இவர்களை பார்த்திருந்தனர். பைரவ்வை காணவில்லை.
“காம் மீரா, காம்! அழாம சொல்லு” என்றான் சஞ்சய்.
அவள் பேச நினைத்தாலும் தேம்பல் நிற்கவில்லை. தண்ணீர் எங்கேனும் இருக்கிறதா என பார்த்தவன் இல்லாமல் போகவும் தன்னை இங்கு அழைத்து வந்த ஆளை பார்த்து சைகையில் தண்ணீர் கேட்டான்.
சற்று நேரத்தில் இருவருக்கும் தண்ணீர், தேநீர், சாண்ட்விச் எல்லாம் வந்து சேர்ந்தது. மீராவை அமர வைத்து சஞ்சயும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
தண்ணீர் மட்டும் பருகிய மீரா வேறெதுவும் வேண்டாம் என்றாள்.
“பிரேக் ஃபாஸ்ட் ஆச்சா?” எனக் கேட்டவனுக்கு இல்லை என தலையாட்டினாள். அழுததில் முகம், இமையெல்லாம் வீங்கி பார்க்க பரிதாபமாக தெரிந்தாள்.
“டைம் என்னாகுது பாரு? நான்தான் வந்திட்டேன்ல, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம்” என்றவனை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.
மெலிதாக புன்னகைத்தவன், “அதுக்கு எனர்ஜி வேணுமா இல்லையா? எனக்கும் நல்ல பசி, ப்ளீஸ் எடுத்துக்க” என சொல்லி தேநீர் கோப்பையை அவளின் கையில் திணித்தான்.
அவளுக்கு துளியும் பசி உணர்வே இல்லை. இருந்த நிலையில் எது சாப்பிட்டாலும் உடனே வெளி வந்து விடும் போலத்தான் இருந்தது. தன்னைப் பார்த்து சஞ்சயும் பசியோடு இருப்பான் என்பதால் மல்லுகட்டி பாதி சாண்ட்விச் சாப்பிட்டு தேநீரையும் பருகினாள். அவளைப் பார்த்துக் கொண்டே சஞ்சயும் தன் வயிற்றின் பசியை போக்கிக் கொண்டான்.
பின் என்ன நடந்தது என அவளிடம் விசாரித்தான்.
காலையில் வழக்கம் போல மருத்துவமனை செல்ல தயாராகியிருக்கிறாள் மீரா. அதற்குள் வார்டன் வந்து நேற்று தான் வங்கியிலிருந்து எடுத்து வந்த பணத்தை காணவில்லை என சொல்லி தேடியிருக்கிறார். அது எப்படி மீராவின் டிராலிக்கு வந்தது என அவளுக்கு தெரியவே இல்லை.
அவளிடம் விளக்கம் ஏதும் கேட்கப்படவில்லை. உடனிருந்தவர்கள் மீராவுக்கு ஆதரவாக பேசியதை கூட காதில் வாங்காமல் சத்தம் போட்டிருக்கிறார் வார்டன். சஞ்சய்க்கு அழைக்கலாம் என அவள் நினைக்கையில் அதற்கெல்லாம் அவகாசம் வழங்கப் படாமல் வேக வேகமாக காவல் நிலையத்துக்கே அழைத்து வரப் பட்டு விட்டாள்.
மீராவின் நல்ல நேரமோ என்னமோ, பைரவ்வின் ஆள் ஒருவனும் ஏதோ பிரச்சனையில் சிக்கி காவல் நிலையம் அழைத்து வரப் பட்டிருந்தான். அவனுக்கு மீராவை தெரிந்தது. உடனே பைரவ்க்கு தகவல் சொல்லியிருக்கிறான்.
நான்கு தினங்களுக்கு முன்னர்தான் ராஜசேகரனின் முழு வரலாறும் பைரவ்க்கு தெரிந்து போயிருந்தது. உடல்நிலை சரியில்லாத மகனுக்கு மீராவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறான் என்பது வரை பைரவ்க்கு தெரிய வந்திருந்தது. ராஜசேகரன் யாரின் மூலமாக தன்னை அணுகினானோ அவனுக்கு அழைத்து இப்படியொரு பாவத்துக்கு என்னை துணை சேர்த்தாயா என கடுமையாக திட்டியிருந்தார் பைரவ். அத்தோடு இனி மீராவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து விட்டார்.