நேற்று தாதாவுக்கு நன்றி தெரிவிக்க போன சமயத்தில் ‘அந்தப் பெண் உன்னை நம்பி வந்து விட்டாள், அவள் தனியாக இருப்பது அவளுக்கு பாதுகாப்பு அல்ல, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்கிற சாராம்சத்தில்தான் சஞ்சயிடம் பேசியிருந்தார் பைரவ்.
சட்டென என்ன சொல்லவென தெரியாமல் ஐஸக்கே அதிர்ந்து போய் விட்டார். தாதாவும் நிற்க நேரமில்லாமல் கிளம்பி விட்டார்.
அதை சஞ்சயிடமும் மீராவிடமும் சொல்லவே பயந்தார் ஐஸக். ‘உங்களால்தான் இப்படி’ என இவரைத்தானே குற்றம் சொல்வார்கள்.
உண்மையை அவர்களிடம் சொன்னால் தாதாவிடம் தாங்கள் காதலர்கள் இல்லை என சொல்லி விடுவார்கள், தாதா தன்னை கோவித்துக் கொள்வார் என்ற நினைவில் அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டவர், நேராக வீட்டுக்கு வந்து சுருண்டு விட்டார்.
சில விஷயங்கள் எளிமையாக முடிந்து விடக்கூடியதாக இருக்கும். ஆனால் சிலர் அந்த நேரக் குழப்பதிலும் பயத்திலும் இதுதான் நடக்கும் என்ற சுய கற்பனையிலும் பெரும் சிக்கலாக்கி விடுவார்கள். ஐஸக்கின் நிலையும் அதுதான்.
இரவெல்லாம் உறங்கியும் உறங்காமலும் மனக் குழப்பத்திலேயே கழித்தார் ஐஸக். காலையில் கண் விழிக்கவும் ‘சஞ்சய் ஊருக்கு போகட்டும், அந்தப் பையன் வீட்டில் அவனது காதலுக்கு சம்மதிக்கவில்லை என சொல்லிக் கொள்ளலாம். ராஜசேகரன் கெட்டவன் என நிச்சயமாக தாதாவுக்கு தெரிந்து விட்டால் மீராவுக்கும் ஆபத்தில்லை. தானும் சஞ்சய்க்கும் நல்லவனாக இருக்கலாம் தாதாவின் பார்வையிலும் நல்லவனாக இருக்கலாம்’ என நினைத்துக் கொண்டுதான் தன் பணியை பார்க்க கிளம்பினார்.
ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக சஞ்சய் இங்கேயே இருக்கப் போகிறான் என்றால் என்னென்ன குளறுபடிகள் நடக்கும் என்று அவரால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அவருக்கு இப்போது கூட நேரமிருந்தது. வீரராகவனிடம் இப்படி என கோடு காட்டியிருந்தால் போதுமானது. குறைந்த பட்சம் சஞ்சயிடமாவது பைரவ் மஜும்தாரின் மனவோட்டத்தை பகிர்ந்திருக்கலாம். இரண்டையுமே அவர் செய்யத் தவறி விட்டார்.
தன்னால் எதிர்கொள்ள முடியாத விஷயத்தை தள்ளி வைத்து விடுவதுதான் அவரின் வழக்கம். சஞ்சய் மீரா விஷயத்திலும் பிரச்சனை ஆகும் போது பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து கொண்டார்.
மாலினி சென் அன்று அலுவலகத்துக்கு வராத காரணத்தால் சஞ்சய்க்கு மேற்கொண்டு சங்கடங்கள் ஏதும் இல்லை. அலுவலக நேரத்தில் அதிகம் அலட்டல் இல்லாமல் ஓரளவு தன்னைத் தானே சமாளித்துக் கொண்டான்.
மீராவுக்கு அன்று காலை ஷிப்ட், அவளுக்குமே மனம் சரியில்லை. இவ்வளவு தூரம் தான் இருக்குமிடம் வரை கயவர்களுக்கு தெரிந்து விட்டதே என உள்ளுக்குள் உதறல்.
அந்தந்த வார்டு செவிலியர்கள் ஆடை மாற்றிக் கொள்ள என தனி அறை இருக்கும். பத்து மணிக்கு கிடைக்கும் பிரேக் நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட தேநீருடன் அந்த தனியறைக்கு வந்தாள் மீரா. தேநீரை வேகமாக பருகி முடித்தவள் கார்த்திகேயனுக்கு அழைத்தாள். கைப்பேசியை மறந்து வீட்டிலேயே விட்டு சென்றிருந்தார் அவர். ஆகவே நீரஜாதான் எடுத்து பேசினாள்.
அவளிடம் பிரச்சனையை சொல்லத் தயங்கி சாதாரணமாக நலம் விசாரித்தாள் மீரா. அவளை எச்சரிக்கை செய்கிறேன் பேர்வழி என, ராஜசேகரனின் ஆட்கள் தன் வீடு வரை வந்து மிரட்டியதையும் காவலர்கள் கூட புகாரை எடுக்கவில்லை என்பதையும் சொல்லி விட்டாள் நீரஜா.
“உனக்கு சொல்ல வேணாம்னு இவர் நினைக்கிறார். அதெப்படி சரியா வரும், உனக்கு தெரிஞ்சாதானே நீ கவனமா இருப்ப? இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி அவர்கிட்ட நீ காட்டிக்க வேணாம். சஞ்சய் உன் கூட இருக்க வரை உன்னை பார்த்துப்பான், கவலை படாத, ஆனா ஜாக்கிரதையா இரு” என்றாள் நீரஜா.
மீராவுக்கு தலை சுற்றாத குறை. தன்னை முன்னிட்டு கார்த்திகேயன் குடும்பத்துக்கு பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை. ஆகவே பைரவ் தாதா பற்றி எதுவும் பகிராமல் நடப்பது நடக்கட்டும், அந்த நேரம் தோன்றுவதை செய்து கொள்கிறேன் என நினைத்து கைப்பேசியை வைத்து விட்டாள்.
சஞ்சயின் நினைவு வந்தது. இந்த தெரியாத ஊரில் அவளுக்கென இருக்கும் ஒரே ஆறுதல் அவன்தான். விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களில் அவனும் தன் பார்வைக்கு கிட்ட மாட்டான் என்பது அவளின் தைரியத்தை அசைத்துப் பார்த்தது.
“டீ பிரேக் டென் மினிட்ஸ்தான், உனக்கு மட்டும் எவ்ளோ நேரம்?” அந்த வார்டின் இன்சார்ஜ் கடிந்து கொண்டாள். அதன் பின் அவளுடைய பணிகள் அவளை வேறெதுவும் சிந்திக்க விடவில்லை.
பணி முடித்து மதியம் விடுதிக்கு திரும்பிய மீரா, ‘எல்லாம் ஓகேவா?’ எனக் கேட்டு சஞ்சய்க்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே பார்த்து விட்டாலும் வெகு நேரம் கழித்து தம்ப்ஸ் அப் போட்டு விட்டிருந்தான் சஞ்சய்.
உடனே அவனுக்கு அழைத்து விட்டாள். அவன் ஏற்கவும், “எப்பவும் டைப் பண்ணித்தான் மெசேஜ் போடுவீங்க, எதுவும் சரியில்லையோன்னு தோணவும் கால் பண்ணிட்டேன். டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” எனக் கேட்டாள்.
அப்பாவுடன் நடந்ததை பகிரும் மன நிலையில் அவன் இல்லை. அதே வேளை அவனுக்கு ஆறுதல் மொழியும் தேவைப்பட்டது.
“நான் நினைக்கிற படி எதுவும் நடக்க மாட்டேங்குது, எல்லாம் சொதப்பலா போகுது மீரா” என்றான்.
வேலையை உடனே விடுவதில் ஏதும் சிக்கலாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டவள், “உடனே அப்படி நினைக்காதீங்க, பொறுமையா யோசிச்சு செய்யுங்க” என்றாள்.
வேதனையாக புன்னகைத்துக் கொண்டவன், “நீ என்ன ரூம் வந்திட்டியா?” என விசாரித்தான்.
“ம்ம்… சாப்பிட்டீங்களா?”
பசித்த வயிறை தடவிக் கொண்டே, “இல்லை மீரா” என்றான்.
“பட்டினி கிடக்குறதால எதையும் மாத்த முடியும்னா தாராளமா சாப்பிடாம இருக்கலாம்”
“சாப்பிடுறதால எதுவும் சரியாகும்னா சாப்பிடலாம்”
“பிரச்சனை சரியாகுதோ இல்லையோ உடம்பு கெட்டு போகும். அப்பவும் நீங்கதான் அவஸ்தை படனும். சாப்பிட்டு தெம்பா யோசிங்க, ரிலீவ் ஆகுற வேலையெல்லாம் சட்டு சட்டுனு முடியும்” என அவள் சொன்னதற்கு ம் போட்டுக் கொண்டான்.
“சாப்பிட்டு மெசேஜ் போடுங்க” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள். அப்போதும் இருக்கையை விட்டு எழவில்லை அவன்.
அரை மணி நேரத்தில் என்ன சாப்பிட்டாய் எனக் கேட்டு அடுத்த குறுஞ்செய்தி வந்து விழுந்தது. இரணப் பட்ட மனதிற்கு அந்த அக்கறை ஆறுதல் தர, சாப்பிட சென்றான். மறக்காமல் தன் உணவு பிளேட்டை புகைப்படம் எடுத்து மீராவுக்கு அனுப்பி வைத்தான்.
‘சமத்து பிள்ளை’ என அவளும் பதிலுக்கு அனுப்பி, அவனிடம் தற்காலிகமாக குறுநகை ஒன்றை உதயமாகச் செய்தாள்.
காலையில் வேலை முடித்து வீட்டுக்கு சென்ற ஐஸக் மாலையில் கைப்பேசியோடு வந்தார். இவரின் வரவுக்குத்தான் காத்திருந்த வீரராகவன், “ஃபோன் ஓகேவா இப்போ?” எனக் கேட்டார்.
“அடிக்கடி பிரச்சனை பண்ணுது. இப்போதைக்கு ஏதோ சரி பண்ணி கொடுத்திருக்கான். எவ்ளோ நாள் ஓடுமோ ஓடட்டும்” என்றார் ஐஸக்.
“நான் பணம் தரேன் புதுசு வாங்கிக்கோங்க” என்ற வீரராகவன் கையோடு பணமும் கொடுத்தார். இதையெல்லாம் ஐஸக் எதிர்பார்க்கவில்லை. திகைப்பும் மருகலுமாக அவரை பார்த்தார்.
“சஞ்சய் மேல ஒரு கண்ணு வைங்க. வீட்ல யாரும் ஏதும் அவனை சொல்றது இல்லை. நான்தான் திட்டுறது, அதனால என்கிட்ட மட்டும் ரோஷம் காட்டுவான். அவனே அவனை பார்த்துப்பான், பார்த்துக்கட்டும் அதான் அவனுக்கு நல்லது. ஆனாலும் கை மீறி போற மாதிரி ஏதாச்சும்னா எனக்கு நீங்க சொல்லணும்” என்றார் வீரராகவன்.