பைரவ் மஜூம்தார் ஏதோ அவசர வேலையாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் மற்றும் மீராவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார் ஐஸக்.
சஞ்சய் கைகள் குவித்து ஆங்கிலத்தில் நன்றி உரைத்தான். அவனது தோளில் தட்டிக் கொடுத்து மீராவை காண்பித்து பெங்காலியில் ஏதோ பேசினார் பைரவ். சஞ்சய்க்கு ஒன்றும் புரியாமல் ஐஸக்கை பார்த்தான். ஐஸக் மொழி பெயர்த்து சொல்வதற்குள் புறப்பட்டு விட்டார் பைரவ்.
வீட்டில் வேலை செய்பவர்களில் ஒருவன் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தான். ஐஸக் ஏதோ பேய் அடித்தது போலவே காணப் பட்டார்.
“என்ன அங்கிள் ஏன் என்னவோ போல ஆகிட்டீங்க? தாதா சிரிச்சிட்டேதானே ஏதோ சொல்லிட்டு போனார்? ஆமாம் என்ன சொன்னார் அவர்?” எனக் கேட்டான் சஞ்சய். மீராவும் அவரின் பதிலுக்காக ஆவலாக பார்த்தாள்.
“ஹஹான் வந்து… ஜாக்கிரதையா இருங்க, என்ன உதவின்னாலும் கேளுங்கன்னு சொன்னார்” என்றார் ஐஸக்.
“அதுக்கு ஏன் நீங்க டல் ஆகிட்டீங்க?” என்றான் சஞ்சய்.
“காலையிலேருந்து அலைஞ்சிட்டே இருக்கேன். உன்னை மாதிரி சின்ன பையனா நான்? சோர்ந்து போக மாட்டேனா?” எனக் கேட்டார் ஐஸக்.
அவரின் கைகளை பிடித்துக்கொண்ட சஞ்சய், “உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். இன்னிக்கு ரெஸ்ட் எடுங்க, ஈவினிங் வேலை பார்த்துக்கலாம்” என்றான்.
அவருக்கும் வேலை செய்யும் மனநிலை எல்லாம் இல்லை. “நீ எப்போ ஊருக்கு கிளம்புற?” எனக் கேட்டார்.
“இந்த வீக்ல போயிடுவேன். நாளைக்கு ஆஃபிஸ் போய் ஃபார்மாலிடீஸ் என்னன்னு கேட்டு முடிக்கணும். இப்போ வீட்டுக்கு போய் நல்லா தூங்கணும்” என்றான் சஞ்சய்.
ஐஸக் அங்கிருந்த படியே அவரது வீட்டுக்கு சென்று விட்டார். தானே சென்று கொள்வேன் என மீரா எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவளை விடுதியில் விட்ட பிறகே தன் இருப்பிடத்துக்கு திரும்பினான் சஞ்சய்.
மீராவுக்கு மதிய ஷிப்ட் செல்வதற்கான நேரமும் கடந்திருக்க, அவளும் அன்று விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
சஞ்சய்க்கு அடித்து போட்டது போல நல்ல உறக்கம். மாலையில் அவனது அப்பா அழைத்துப் பேசினார். சற்று நேரத்தில் விமான பயணம் மூலமாக சென்னையிலிருந்து கொல்கத்தா புறப்பட போகிறாராம். வந்து சேர நடு இரவாகி விடும், மறக்காமல் வீட்டின் லொகேஷன் அனுப்பி வைத்து விடு என சொன்னார்.
“என்னப்பா திடீர்னு?” என விசாரித்தான் சஞ்சய்.
“உன் அம்மா படுத்தி வைக்கிறா. அவ கைகுழந்தைய அவகிட்ட கொண்டு வந்து சேர்க்கனுமாம். நான் நேர்ல வர்றேன் பேசிக்கலாம்” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார் அவர்.
அப்பாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என குழம்பிப் கொண்டிருந்த சஞ்சய்க்கு தன்னை கூப்பிட அவரே வரப் போகிறார் என்பதில் ஒரே ஆனந்தம். சீட்டி அடித்துக் கொண்டே வீட்டுக்கு வெளியில் வந்தான். அவன் எதிர்பார்த்த படி ஐஸக் வெளியில் இல்லை. என்னவானதோ என அவருக்கு அழைத்தான். இன்னுமே அவரது கைப்பேசி சரியாகியிருக்கவில்லை போலும். அழைப்பு செல்லவில்லை.
அவருக்கு இன்னுமே சோர்வு குறையவில்லை போலும் என எண்ணிக் கொண்டே தனியாக சற்று நேரம் நடந்து விட்டு சாப்பிட சென்று விட்டான்.
வீரராகவன் கொல்கத்தாவில் அவரது மகன் வீட்டை வந்தடைந்த போது இரவு இரண்டு மணி. அப்பா தங்கவென இன்னொரு அறையை தயாராகவே வைத்திருந்தான் சஞ்சய்.
சில நாள் பிரிவுக்கு பின்னரான சந்திப்பு. மகனை வாஞ்சையுடன் பார்த்தார் வீரராகவன். அப்பாவின் மீதுள்ள கோவத்தை எல்லாம் மறந்து விட்டு அவரின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டான் சஞ்சய். தன் மகன் குடும்பத்தினரை எவ்வளவு மிஸ் செய்கிறான் என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவனே அப்பாவுக்கு பால் கலந்து வந்து கொடுத்தான்.
“கிச்சன் வேலையெல்லாம் தெரியுதா உனக்கு?” என ஆச்சர்யமாக கேட்டார்.
“ப்பா! இது உங்களுக்காக. இல்லைனா அந்த பக்கமே போக மாட்டேன்” என்றான்.
இவனை அழைத்து வரச் சொல்லி வீட்டினர் தன்னை படுத்தி வைத்ததை நகைச்சுவை போல சொல்லிக் கொண்டே பாலை பருகினார்.
“ஏன் லீவ் எடுக்க ஏதும் பிளானா?” எனக் கேட்ட தந்தையை குழப்பமாக பார்த்தான்.
கணவர் மகனை வந்தடைந்து விட்டாரா எனக் கேட்டு தேவகியிடமிருந்து அழைப்பு வரவும், “தூங்குன்னு எவ்ளோ சொன்னேன், சொல் பேச்சு கேட்க மாட்டியா நீ?” என மனைவியிடம் கடிந்து கொண்டார் அவர்.
“ம்ம்… பால் எல்லாம் கலந்து தர்றான் உன் பையன். இப்போதான் தனியா அவனை அவனே பார்த்துக்கிறான், நீ கெடுக்க பார்க்கிற” என்றார் வீரராகவன். அதற்கு என்ன பதில் வந்ததோ, “சரி சரி, இவ்ளோ தூரம் அதுக்குத்தானே வந்திருக்கேன்” என சமாதானமாக சொன்னார்.
சில நிமிடங்களில் மகனின் கையில் கைப்பேசியை தந்து விட்டார்.
தாயும் மகனும் அவர்களுக்குள்ளாக உரையாடிக் கொண்டனர்.
“அப்பா அவ்ளோ தூரம் உனக்காக வந்திருக்காங்க. அவர் கோவ பட்டாலும் எதித்து பேசக்கூடாது, சீக்கிரம் வந்து சேரு” என சொல்லி பேச்சை முடித்தார் தேவகி.
அப்பாவும் உறங்க தயாரானதை கண்டவன் அதற்கு பின் வேறெதுவும் பேசாமல் இரவு வணக்கம் சொல்லி தனதறைக்கு சென்று விட்டான்.
இரவில் தாமதமாக படுத்த போதும் அன்றாட வழக்கம் போலவே காலையில் ஆறு மணிக்கெல்லாம் வீரராகவனுக்கு விழிப்பு வந்து விட்டது. சஞ்சய் இன்னும் உறக்கத்தில் இருந்தான். அவனுக்கு உறக்கம் கெட்டதால் உறங்குகிறான் போல, இல்லையென்றாலும் அலுவலகம் அருகில்தான் இருக்குமாக இருக்கும் சற்று தாமதமாக எழுந்தாலே நேரத்துக்கு செல்வானோ என்னவோ என நினைத்துக் கொண்டார்.
குளிர் சாதன பெட்டியில் பால் இருக்கவும் பல வருடங்களுக்கு பிறகு தேநீர் போடவென சமையலறை சென்றார் அவர். மகனுக்கும் போட்டு ஃபிளாஸ்க்கில் ஊற்றி வைத்தவர் தேநீர் கோப்பையோடு வெளியில் வந்தார்.
ஐஸக் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தார். சஞ்சயின் வீட்டில் புது மனிதரை பார்க்கவும் அவனது அப்பாதான் என கணித்து, தானே அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நலம் விசாரித்தார்.
வீர ராகவனும் தமிழரா எனக் கேட்டு யார் என்ன எப்படி வந்தீர்கள் என மேலோட்டமாக விசாரித்தார். ஐஸக்கும் பதில் தந்து பின் பொதுவாக பேசிக் கொண்டனர்.
“தம்பி சொல்லுச்சு ஊருக்கு போக போறதா. இன்னிக்கே கிளம்புறீங்களா? ரொம்ப நாள் இந்த வீடு பூட்டித்தான் கிடந்துச்சு, சஞ்சய் வரவும் எனக்கு நேரம் நல்லா போச்சு. இனி திரும்ப பூட்டின வீட்ட பார்த்துகிட்டே இஸ்திரி போட வேண்டியதுதான்” என்றார் ஐஸக்.
தன் மீது கோவத்திலிருக்கும் மகனை சமாதானம் செய்து, சென்னைக்கு வா என அழைக்கத்தான் வந்திருக்கிறார் வீரராகவன். ஆனால் அலுவலகத்தில் உடனே வேலையை விட்டு வர முடியாது என்பது அவருக்கு தெரியும். இதே போல ஒரு பணியை சென்னையில் வேறொரு நிறுவனத்தில் மகனை தொடர வைப்பதுதான் அவரது திட்டம். அதற்கு இங்கு என்ன நடைமுறை என விசாரித்து பணம் செலுத்த வேண்டியிருந்தாலும் அதை கொடுத்து மகனை முறையாக வேலையிலிருந்து விடுபட வைக்க எண்ணியிருந்தார்தான். ஆனால் மகனே வேலையை விட நினைத்தான் என்பதை அவரால் எளிதாக எடுக்க முடியவில்லை.
யோசனையுடனே வீட்டின் உள் பக்கம் பார்த்தார் வீரராகவன்.
“இன்னும் எந்திரிக்கலையா சஞ்சய்? விளையாட்டு பிள்ளை. நானும் சொல்லிட்டே இருப்பேன்… டைத்துக்கு கிளம்புப்பான்னு, ம்ஹூம்… கடைசி நேரத்துல அவதி அவதியாதான் கிளம்பி ஓடும். ஒரு நாள் ரொம்ப அசந்து தூங்கிடுச்சு, காணோமே உடம்புக்கு முடியலையோ என்னவோன்னு நான் பார்க்க போயிதான் எந்திரிச்சது. அன்னிக்கு தம்பி பைக்ல போன வேகத்தை கண்டு மிரண்டு போயிட்டேன். நீங்க போய் எழுப்புங்க, இல்லைனா சாமான்யமா எந்திரிக்காது” என்ற ஐஸக் தன் வேலையை தொடர ஆரம்பித்து விட்டார்.
வீரராகவனுக்கு மகனை நினைத்து உள்ளுக்குள் பயங்கர எரிச்சல். பத்து நிமிடங்கள் அறைக்குள்ளேயே நடை போட்டவர் அதற்கு மேல் பொறுமை காக்க இயலாமல் மகனை தட்டி எழுப்பி விட்டார்.
“குட் மார்னிங் ப்பா” என சொல்லிக் கொண்டே எழுந்தான் சஞ்சய்.
பதில் வணக்கம் சொல்லாமல், “சீக்கிரம் ரெடியாகி வா, பேசணும் உன்கிட்ட” என சொல்லி ஹாலுக்கு போய் விட்டார் அவர்.
சஞ்சயின் மனதில் அப்போதே ஏதோ அலாரம் அடித்தது. என்னவென புரியாமலே குளியலறை சென்றான்.
அரை மணி நேரத்தில் முழுதாக தயாராகி வந்த மகனை அலசி ஆராய்வது போல பார்த்தார் வீரராகவன்.
“சாப்பாடு வாங்கிட்டு வந்து வீட்ல சாப்பிடலாமா, இல்லை ஓட்டல் போலாமாப்பா?” எனக் கேட்டான் சஞ்சய்.
அலுவலக நேரத்தை கேட்டறிந்து கொண்டவர், “உனக்கு ரொம்ப டைம் இருக்கே, டீ இருக்கு, போ போய் எடுத்திட்டு வா” என்றார்.
சஞ்சயிடம் சொல்லத் தெரியாத கலவரம். வெளிக் காண்பித்துக் கொள்ளாமல் தேநீரோடு அப்பாவின் எதிரில் அமர்ந்து கொண்டான். சூடான தேநீரின் சுவை அவனுக்கு உரைக்கவே இல்லை. அவனது அப்பாவின் பார்வை அவனை இயல்பாக இருக்க விடாமல் படுத்தி வைத்தது.
வீரராகவன் எதுவும் பேசவில்லை. தேநீர் பருகி முடித்த சஞ்சயே பேச்சை ஆரம்பித்தான்.
அலுவலகத்தில் பிரச்சனை, இனி அங்கு வேலை செய்ய விருப்பமில்லை, வேலையை விடுவது தொடர்பாக பேசத்தான் இன்று அலுவலகம் போகிறேன் என உள்ளதை சொல்லி விட்டான்.
அதிக அதிர்ச்சியை அப்பாவிடம் எதிர் பார்த்திருந்த சஞ்சய் அவரின் சலனமில்லாத முக பாவத்தில் துணுக்குற்றான்.
எந்த கேள்வியும் கேளாமல் மகனை துளைக்கும் பார்வை பார்த்திருந்தார் மனிதர். சஞ்சய்யால் அப்பாவை நிமிர்ந்து நோக்க முடியவில்லை.
வேலையில் நடந்த தவறையும், அதற்காக மாலினி தன்னை திட்டியதையும் சொன்னான். அப்படி சொன்னாலாவது தன் பக்கமுள்ள நியாயம் அவருக்கு புரியும் என நினைத்தே சொன்னான்.
அவன் எண்ணியதற்கு மாறாக, “அந்த பொண்ணு அவ்ளோ கேவலமா எப்படி பேசலாம்? நீ கம்ப்ளைண்ட் பண்ணலையா?” எனக் கேட்டார்.
இல்லை என்பதாக தலையை மட்டும் மறுப்பாக ஆட்டினான்.
“ஹ்ம்ம்…” என அவர் உறுமியது ‘மேலே சொல்’ என்பது போலவே இருந்தது.
தான் மாலினியை காபி சாப்பிட வெளியில் அழைத்த விவரத்தையும் சொல்லி விட்டான் சஞ்சய்.
இளக்காரமாக சிரித்தவர், “ப்ரவுட் ஆஃப் யூ சஞ்சய்!” என்றார்.
“ப்பா…” என கெஞ்சலாக அழைத்தான் சஞ்சய்.
“உனக்கெல்லாம் என்ன நடந்தா உருப்படறதுக்கு எண்ணம் வரும்?” என அவர் கேட்க, சஞ்சய்க்கு கோவம் வந்தது.
“உன் அண்ணன் கொடுத்த காசுல வீடு பைக் எல்லாம் கிடைச்சாச்சு. வீட்ல நீ சம்பாதிச்சுதான் யாருக்கும் ஏதும் செய்யணுங்கிற கமிட்மெண்ட்ஸ் கிடையாது. அப்பன் காசுல நல்லா உடம்ப வளர்த்து வச்சிருக்க. கொஞ்சமாச்சும் உழைக்கணும்னு சொன்னா உடம்பு நோகுது, ஹ்ம்ம்?” என சாந்தமான குரலில் கேட்டு அவனது ஈகோவை ஏகத்துக்கும் சீண்டி விட்டார்.
முகம் ஜிவு ஜிவு என ஆக அப்பாவை கூர்மையாக பார்த்தான் சஞ்சய்.
“கோடிஸ்வரன் வீட்டு பிள்ளையா பொறந்தா வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும்னு நினைக்கிறதுல தப்பில்ல சஞ்சய். என்ஜாய் மட்டுமே பண்ண நினைச்சா… ரொம்ப தப்பு. குந்தி தின்றால் குன்றும் கரையும் சஞ்சய்”
“ப்பா போதும். நான் சென்னைக்கு வந்திடுறேன், நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன், ரொம்ப ஹர்ட் பண்றீங்க நீங்க”
“ம்ம்… நானும் பையன் பொறுப்பா வேலை பார்க்கிறான், சென்னைக்கு அழைச்சிட்டு போய் உருப்பட வைக்கலாம்னு நினைச்சுதான் வந்தேன். ம்ஹூம்… அதுக்கான அறிகுறி எதுவும் தென்படல உன்கிட்ட. நான் கூப்பிட வருவேன்னு உனக்கு தெரியறதுக்கு முன்னாடியே வேலையை விட முடிவு பண்ணிட்ட. வேலைக்கு சேர்ந்து ஒன் மன்த் கூட ஆகல, வேலையை கத்துக்கிற ஆர்வம் இல்லைங்கிறத கூட விடு. சீனியர் கிட்ட ஃப்ளர்ட் பண்ணிருக்க. அந்த பொண்ணு உன்னை அப்படி கேட்டதுல என்னடா தப்பு?”
“அப்பா!” என சத்தமிட்டான் சஞ்சய்.
“சென்னைக்கு கூட்டிட்டு போய் உன் அம்மாகிட்ட விடுறேன். படிக்க வச்சாச்சு, வேலைக்கு போற வயசாகியும் வீட்ல காசு வாங்கி ஜாலி பண்ணின. அடுத்து என்ன… உன் அம்மா உனக்கு ஒரு பொண்ணு பார்த்து கட்டி வைப்பா. கல்யாணம் கூட முழுக்க முழுக்க என் பணத்துலதான் நடக்கும். உன் வைஃப்க்கு ஒரு கிஃப்ட் வாங்கணும்னா கூட அப்பன் தயவோ அண்ணன் தயவோ தேவைப்படும் உனக்கு. அப்படியொரு லைஃப் அசிங்கம் இல்லையாடா உனக்கு?” என இரக்கமே இல்லாமல் கேட்டார் வீரராகவன்.
சஞ்சயின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. மாலினி அவமான படுத்தியதில் துவண்டு போன சஞ்சய் அதை விட பல மடங்கு வீரியமாக அவமானப் பட்டு அதனால் மார்புப் பக்கம் விரவும் உணர்வை தாள முடியாமல் கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டான்.
“கல்யாணம் பண்ணி வச்சிட்டா அடுத்து என்ன, குழந்தை பெத்துக்கிறதுதானே? நாட்டுல நிறைய ஆம்பளைங்க சாதனையா நினைக்கிறதும் அதைத்தான். அட்லாஸ்ட் என் மகனும் சாதனை படைச்சிடுவான்” என நிஷ்டூரமாக சொன்னார் வீரராகவன்.
உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கிப் போய் விட்டான் சஞ்சய்.
“கூலி வேலை செய்றவன் கூட அவன் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு அவன் உழைப்புல சாப்பாடு போடுவான். ஸார் எப்படி? அட ஒன்னு மறந்திட்டேன் பார்! என் வீட்டு பையன்னு சொன்னாதான் எவனும் உனக்கு பொண்ணு கூட தருவான், இல்லைனா உன்னை நம்பி கல்யாணம் பண்ண எந்த பொண்ணு முன்வரும் சொல்லு?” என் அவர் கேட்க, வேகமாக எழுந்து வெளியேறி விட்டான் சஞ்சய்.