“ரெண்டு நாள் டைம் இருக்குல்லடா, பார்த்துக்கலாம்” என சமாதானம் சொன்னான் சஞ்சய். 

சஞ்சய், ஹரிஷ் இரண்டு ஆண்களும் மேல் தட்டு வர்க்கத்தினரின் சாயலில் தெரிந்தார்கள். அவர்கள் பேச்சும் மீராவுக்கு கேட்கத்தான் செய்தது. 

அதிலும் சஞ்சயின் தலை கொள்ளாத முடி,  ட்ரிம் செய்த தாடி, முறுக்கிய மீசை, ஜிம்’மின் உபயோகத்தால் வளர்த்து வைத்திருக்கும் உடல் என பார்க்க அவளுக்கு பயமாக இருந்தது. அவனது அதட்டல் தொனிக்கும் பேச்சும் இவன் சரியான அடாவடி பேர்வழியேதான் என்ற பிம்பத்தை அவளுள் ஏற்படுத்தியது. 

சஞ்சயிடம் வந்து காகிதம் ஏதோ கொடுத்து, “அட்மிஷன் போட்டுட்டு வாங்க, இவர் இங்கேயே இருக்கட்டும்” என்றாள் மீரா. 

உறக்கமின்மையாலும் தான் போட்டு வைத்திருந்த திட்டம் பாழாகி போனதாலும் எரிச்சலில் இருந்த சஞ்சய், “சும்மா அலைய விடாதீங்க, ஃபர்ஸ்ட் எங்களை ரூம்க்கு அனுப்புங்க, காலைல மத்த ப்ரொசீஜர் பார்த்துக்கலாம்” என்றான். 

“அப்படிலாம் செய்ய முடியாதுங்க ஸார்” என்றாள் மீரா. 

“தூக்கம் கண்ண கட்டுதுங்க. நான் ஒன்னும் ஏமாத்திட்டு போயிட மாட்டேன். இவன் யாருன்னு தெரிஞ்சா இப்படிலாம் ரூல்ஸ் போட மாட்டீங்க” என்றான் சஞ்சய். 

“யாரா இருந்தாலும் இதாங்க ப்ரொசீஜர். அட்மிஷன் போடாம வார்டுல இருக்க முடியாது” என சற்று கராறாக சொன்னாள் மீரா.

 நண்பனின் சட்டையை பிடித்திழுத்த ஹரிஷ், “நம்ம வரலாற நீயே சொல்லி கொடுக்காதடா, இப்போதைக்கு நாம இங்க இருக்கிறதுதான் நமக்கு ஸேஃப்” என்றான்.

‘என்ன தப்பு பண்ணிட்டு வந்து இங்க ஒளிய பார்க்கிறானுங்க. வேற யாரையும் ஆக்சிடெண்ட் பண்ணிட்டானுங்களோ!’ மீராவுக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் ஏதும் சொல்லாமல் ஹரிஷ்க்கு கையில் ஸ்லிங் போட்டு விட்டாள். 

மீராவை முறைத்துக் கொண்டே அட்மிஷனுக்கான நடைமுறைகள் முடித்து, ஹரிஷுடன் வார்டுக்கு சென்றான் சஞ்சய். 

சஞ்சய் உறங்கி நாற்பத்தெட்டு மணி நேரமாகியிருந்தது. காதல் தோல்வி என சொல்லி முந்தாநாள் இரவில் நண்பனின் அறையில் ஹரிஷ் தற்கொலைக்கு முயல, அப்போது அங்கு சென்றவன். இன்னும் வீட்டு பக்கம் எட்டி பார்த்திருக்கவில்லை. நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்று விட்டதாக அம்மாவுக்கு செய்தி அனுப்பியிருந்தான். 

இன்னும் வலிக்கிறது என ஹரிஷ் சொல்ல, அவன் உறங்க இன்னொரு ஊசி போட்டு விட்டனர். அதன் பின் நண்பர்கள் இருவரும் படுத்ததுதான் அவர்களின் நினைவில் இருக்கிறது. 

காலையில் அவர்கள் இருந்த அறையை தட்டி பார்த்து விட்டு, கதவு திறக்கப் படாமல் போகவும் மருத்துவமனையே பதட்டமடைந்து விட்டதை பாவம் அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. 

மருத்துவமனையில் சஞ்சய் கொடுத்திருந்த கைப்பேசி எண்ணுக்கு அழைத்தால் அது அணைத்து வைக்க பட்டிருப்பதாக செய்தி சொன்னது. 

பணி மருத்துவர், மீராவுடன் சேர்ந்து இன்னும் சில செவிலியர்கள், அக்கம் பக்கமிருந்த நோயாளிகளின் அட்டென்ட்டர்கள் என சின்ன கூட்டம் அவர்களின் அறைக்கு வெளியே கூடியிருந்தது. 

“இந்த ஆளுங்க ரெண்டு பேரும் சரியே இல்ல ஸார், நைட் என்கிட்ட கூட எகிறி எகிறித்தான் பேசினான் கூட இருந்த பையன்” சஞ்சய் வாக்குவாதம் செய்த நர்ஸ் மருத்துவரிடம் சொன்னாள். 

நண்பர்கள் பேசிக் கொண்டதை சொன்ன மீரா, “ஏதோ வில்லங்கம் போல ஸார்” என்றாள். 

“நைட்டே ஏன் சொல்லலை?” என மீராவை அதட்டிய மருத்துவர், வார்டில் பணியில் இருந்த நர்ஸை கடிந்து கொள்ள, அந்த நர்ஸ் அழ ஆரம்பித்து விட்டாள்.

ஏசி அறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எந்த சத்தமும் எட்டவே இல்லை. இன்னும் சில நிமிடங்கள் முயன்றிருந்தால் விழித்துக் கொண்டிருப்பார்களோ என்னவோ, அக்கம் பக்கத்தில் உள்ள நோயாளிகளுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்பதாலும் நேரம் கடத்தி அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தாலும் கதவின் தாழ்ப்பாளை உடைக்க சொல்லி விட்டார் பணி மருத்துவர். 

 கதவின் லாக்கை உடைத்து கதவை திறந்தான் செக்யூரிட்டி. 

நோயாளியின் படுக்கையிலேயே ஹரிஷ் சுவர் ஓரமாக படுத்திருக்க, அவனது கால் மாட்டில் தலை வைத்து, அவனது மார்பில் கால்களை போட்டுக் கொண்டு படுத்திருந்தான் சஞ்சய். 

“ஹப்பா! மூச்சு விடுறாங்க” ஒரு நர்ஸ் முணு முணுத்தாள். 

சஞ்சயை எழுப்பி விட்டான் செக்யூரிடி. “டிஸ்டர்ப் பண்ணாம போங்க” என சொல்லி புரண்டு படுத்துக் கொண்டான் சஞ்சய். எரிச்சலுடன் இடவலமாக தலையசைத்துக் கொண்டார் மருத்துவர். 

ஹரிஷை எழுப்பி விடவும் சஞ்சய் போல மற்றவர்களை சோதனை செய்யாமல் உடனே விழித்துக் கொண்டான். 

சுற்றியிருந்த கூட்டத்தை பார்த்து திகைத்துப் போனவன், “டேய் சஞ்சய்… எந்திரிடா” என நண்பனின் காலில் சற்று வேகமாக தட்டினான். 

எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை சஞ்சய். 

“இப்படியா தூங்குவீங்க?” என கடிந்து கொண்டார் மருத்துவர். 

மன்னிப்பு கேட்ட ஹரிஷ், “பாவம் ரெண்டு நாளா தூங்கலை ஸார் இவன், அதான் எந்திரிக்க மாட்டேங்குறான்” என்றான். 

“என்ன பிரச்சனை உங்களுக்கு, சும்மா ரைட் போனோம் நாய் வந்துச்சுன்னு நைட் கதை சொன்னீங்க, உண்மை இல்ல போலயே” என்றார் மருத்துவர். 

“மதர் பிராமிஸ் அதான் ஸார் உண்மை!” என்றான் ஹரிஷ். 

“ஏதோ லவ் மேட்டர்னு கேள்வி பட்டேன்” என போட்டு வாங்கினார் மருத்துவர்.

“ஸார்… ஜோசியம் ஏதும் தெரியுமா உங்களுக்கு?” பொய்யாக அதிர்ந்தான் ஹரிஷ். 

“ஹ்ம்ம்… நல்ல வாய்தான் ரெண்டு பேருக்கும். உங்க பிரெண்ட் கூட நைட் எங்க சிஸ்டர்கிட்ட சண்டை போட்டதா கேள்வி பட்டேன். ஹாஸ்பிடல் சின்னதா இருந்தாலும் எதுக்கும் வளைஞ்சு கொடுக்காதவர் எங்க எம் டி. ஒழுங்கா ட்ரீட்மெண்ட் பார்த்திட்டு போங்க” என மருத்துவர் சொல்ல, நன்றாக தலையை ஆட்டிக் கொண்டான் ஹரிஷ். 

ஹரிஷின் கையை பரிசோதனை செய்து விட்டு கதவை உள் தாழ்ப்பாள் போடக் கூடாது என அறிவுறுத்தி விட்டே சென்றார் மருத்துவர். 

‘நல்ல மனுஷனுங்க!’ என மனதில் திட்டிக் கொண்டே மீராவும் சென்று விட்டாள். 

அன்று இரவு மீண்டும்  வேலைக்கு திரும்பினாள் மீரா. அவளுக்கு காஸுவாலிடியில்தான் அன்றும் பணி. ஹரிஷ்க்கு பகலிலேயே அறுவை சிகிச்சை ஆகி விட்டதை தெரிந்து கொண்டாள். 

ஹரிஷின் அறையில் நண்பர்கள் பட்டாளம் ஒரே சேட்டை, மருத்துவர் வந்து சத்தமிட்டு விட்டு சென்றார் என்றெல்லாம் சக செவிலியர் சொல்லவும் மீராவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. 

பணத்தின் செழிப்பில் பொறுப்பற்று திரியும் சேட்டை பசங்கள் என அவர்களுக்கு முத்திரை குத்தி விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். இரண்டு நாட்கள் ஹரிஷ் மருத்துவமனையில்தான் இருந்தான். 

விடிந்தால் அவனது டிஸ்சார்ஜ், அதற்குள் நடு இரவில் சஞ்சய் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதை பார்த்தாள் மீரா. ஏதோ மனதில் நெருட, அவனை பின் தொடர்ந்து வாயில் வரை சென்றாள். சஞ்சய்க்கும் அவளின் பார்வை உறுத்தியதோ என்னவோ, ஒரு நொடி நின்று திரும்பி அவளை பார்த்தான்.

இந்த நேரம் எங்கே போகிறான் என்பது போல அவள் பார்க்க, என்ன என தலையசைத்து சைகையாக கேட்டான் அவன். 

‘எங்கேயோ போகட்டும், நமக்கென்ன?’ என நினைத்த மீரா, ஒன்றுமில்லை என்பதாக தலையாட்டி விட்டு மீண்டும் அவளின் இருக்கைக்கு வந்து விட்டாள். 

விடியற்காலை மூன்று மணியளவில் ஒரு இளம் பெண்ணுடன் திரும்பி வந்தான் சஞ்சய். நவ நாகரீக மங்கையாக காட்சி அளித்தவள் பயத்திலும் பதட்டத்திலும் இருக்கிறாள் என்பதை அவளின் முக பாவங்கள் காண்பித்து கொடுத்தன. 

அவள் ஏதோ சந்தேகமாக கேட்பதும் பதிலுக்கு இவன் கோவமாக பேசுவது போலவும் இருந்தது. மீராவுக்கு எதுவும் சரியாக படவில்லை. 

சட்டென திரும்பி மீராவின் பக்கம் பார்த்தவன், “என்ன, வச்ச கண் வாங்காம என்னை இப்படி பார்க்குறீங்க, சொல்லுங்க எவ்ளோ மார்க் போடலாம் எனக்கு?” என சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான். 

வாய் திறந்து பதில் ஏதும் தராத மீரா மனதுக்குள் கண்டபடி அவனை திட்ட, அவனுடன் இருந்த பெண் அவனது முதுகில் அடித்து, “நேரங்காலம் இல்லையா உனக்கு சைட் அடிக்க?” என திட்டினாள். 

“இந்த ஹாஸ்பிடல்ல இந்த நர்ஸ்தான் டாப், வாய் வார்த்தை தேவையே இல்லாம கண்ணே தனிக் கதை பேசும். எம்மேல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கும் போல. நான் அவளை கிராஸ் பண்ணினாலே என் பக்கம் தானா திரும்புது அவ பார்வை, இதே வேற டைமா இருந்திருந்தா ஹாய் ஹலோன்னு பேச ஆரம்பிச்சு ஒரு மாசத்துல பீச் சினிமான்னு எங்கேயோ போயிருப்பேன். ப்ச்… என் சேர்க்கை சரியில்லை” கிண்டலாக பேசிக் கொண்டே அந்த பெண்ணுடன் நடந்து சென்று விட்டான் சஞ்சய். 

“சினிமா பீச்னு போவானாம்ல… சரியான குரங்கு!” என வாய் விட்டே திட்டினாள் மீரா. 

நேரம் காலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் சஞ்சயின் உபயத்தால் மீண்டும் மருத்துவமனை பரபரப்பாகி விட்டது. டிஸ்சார்ஜ் செய்யப் படாமலே ஹரிஷை அழைத்துக் கொண்டு வெளியேற முற்பட்டிருந்தான். 

யார் எடுத்து சொன்னதற்கும் செவி சாய்க்கவில்லை. தர்க்கம் செய்த நிர்வாகி ஒருவரின் காதில் ஏதோ சொன்னான், கைப்பேசியில் ஏதோ காண்பித்தான், அந்த நிர்வாகி அவன் சொன்ன தகவலில் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டார். 

தன்னுடன் இருந்த மற்ற இரண்டு நண்பர்களை அங்கேயே நிறுத்தி, மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மிச்சத்தை எல்லாம் செட்டில் செய்ய சொன்ன சஞ்சய், ஹரிஷ் மற்றும் அவனது காதலி காவ்யாவுடன் காரில் புறப்பட்டு விட்டான்.

கார் சென்ற வேகத்துக்கு மீண்டும் விபத்தில் சிக்கிக் கொள்வானோ என மற்றவர்களுக்கு தோன்றாமல் இல்லை. 

‘இன்னும் என்னென்ன பிரச்சனைகளை இழுத்து வைக்க போறானோ?’ என நினைத்துக் கொண்டாள் மீரா.