நள்ளிரவு நேரம் சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த அந்த மருத்துவமனையின் காஷுவாலிடி பகுதிக்கு இரவுப் பணிக்காக வந்து சேர்ந்தாள் நர்ஸ் மீரா. வழக்கமாக வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருந்தாள்.
நூறு படுக்கைகள் கொண்ட சின்ன மருத்துவமனைதான். அருகிலேயே செவிலியர்களுக்கு என வீடு ஒன்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். சில செவிலியர்கள் அவர்களது வீட்டிலிருந்தும் பணிக்கு வந்து போகிறார்கள்.
இப்படி வெளியூரில் வேலை செய்யவெல்லாம் மீராவின் வீட்டில் அனுமதிக்கவே இல்லை. திருவண்ணாமலை அருகில் உள்ள சின்ன ஊர் அவளுடையது. வீட்டில் போராடி, தெரிந்த ஒருவரின் சிபாரிசு மூலமாகத்தான் இங்கு வந்திருக்கிறாள்.
பி எஸ் சி நர்சிங் முடித்திருக்கும் மீரா கனடா செல்வதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள். நன்றாக சம்பாதித்து அம்மாவை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுடைய ஆசை.
“தேங்க்ஸ் மீரா, ஊருக்கு போகணும் பெர்மிஸன் வேணும்னு சொல்லவும் யாராவது உன் டியூட்டி பார்த்தா சரின்னு சொல்லிட்டாரா சூப்பர்வைசர், ஒருத்தரும் ஒத்துக்க மாட்டாங்களேன்னு கவலை ஆகிடுச்சு” என்றாள் மீராவுடன் பணி புரியும் இன்னொரு நர்ஸ் பெண்.
“ஏன் க்கா என்னை மறந்து போயிட்டீங்களா?” எனக் கேட்டாள் மீரா.
“நீ சரின்னு சொல்வேன்னு தெரியும், அதுக்காக எத்தன தடவ உன்னையவே எக்ஸ்ட்ரா டியூட்டி பார்க்க சொல்றது?” எனக் கேட்டவள் அதிக நேரம் அங்கே நிற்கவில்லை. பேருந்துக்கு நேரமாகி விட்டது என சொல்லி கிளம்பி விட்டாள்.
இப்படி யாரேனும் உதவி கேட்டால் செய்து விடுவாள் மீரா. சரியான ஏமாளி என்று கூட அவளுக்கு பின்னால் பேசுவார்கள். சிறு வயதில் தந்தையை இழந்து நின்ற போது அவளது அம்மா நிறைய பேரிடம் உதவி கேட்டிருக்கிறார். சிலர் உதவினார்கள், சிலர் செய்யாமல் விட்டதோடு வசவு பாடவும் செய்திருக்கிறார்கள்.
அதனாலோ என்னவோ தன்னால் முடிந்த உதவி என்றால் மீரா மறுப்பதே இல்லை.
பொதுவாக இரவில் அத்தனை பிஸியாக இருப்பதில்லை அந்த மருத்துவமனை. அத்தி பூத்தாற் போல என்றாவது அதீதமாக பிஸியாகி விடும். இன்றும் அப்படியான ஒரு இரவுதான்.
செவிலியர்கள் போதவில்லை என இரண்டு செவிலியர்களை அவசர அழைப்பு கொடுத்து வரவழைத்திருந்தனர்.
நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் பதற்றத்தோடு மருத்துவமனையை வந்தடைந்தான் சஞ்சய். உடன் அவனது தோழன் ஹரிஷ்குமார்.
காஷுவாலிடியில் இரண்டு அவசர கேஸ்கள், பணியாளர்கள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். அந்த நோயாளிகளையே பார்த்து முடிக்கவில்லை, அதற்குள் ஐ சி யூ’விலிருந்து பணி மருத்துவருக்கு அழைப்பு வந்து விட்டது.
“டேய் வலி தாங்க முடிலடா!” அனத்தினான் ஹரிஷ்குமார்.
இருவரும் பைக்கில் வருகையில் நாய் ஒன்று குறுக்கே வந்து விபத்தாகி விட்டது. பைக் ஓட்டிய சஞ்சய்க்கு சின்ன சிராய்ப்பு கூட இல்லை, பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ்க்குதான் இடது கையில் நல்ல அடி, நன்றாக வீங்கவும் ஆரம்பித்திருந்தது. அருகில் இந்த மருத்துவமனை இருப்பதாக கூகுள் தகவல் தர இங்கேயே வந்து விட்டான் சஞ்சய்.
“மீரா இந்த கேஸ் கொஞ்சம் பாரேன், நான் இந்த பேஷன்ட்டை வார்டுல ஷிப்ட் பண்ணிட்டு வந்திடுறேன்” என ஹரிஷை சுட்டிக் காண்பித்து சொன்னாள் ஒரு செவிலியர்.
‘தன் நண்பனை கவனிக்காமல் என்ன பெரிய வேலை இவளுக்கு?’ என மனதில் கடுப்படித்துக் கொண்டே அந்த மீரா என்பவளை பார்த்தான் சஞ்சய்.
எந்தக் கவலையும் இல்லாமல் மனதிற்கு பிடித்ததை செய்வதும் தோழர்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்து வீட்டில் வசவுகள் வாங்கிக் கொண்டு, அதை துடைத்தெறிந்து விட்டு தன் இஷ்டம் போல வாழும் வாலிபன் சஞ்சய்.
சஞ்சய்க்கு ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள் என மூன்று உடன்பிறப்புகள். மூன்றாவது பிறந்த அக்காவுக்கும் இவனுக்குமே பத்து வயது வித்தியாசம். அவனது பெற்றோர் எதிர்பாராத நேரத்தில் கருவாகி பிறந்தவன். அப்பாவை தவிர மற்ற அனைவரிடமும் அதீத செல்லம்.
‘சம்பாதிக்க இத்தனை பேர் இருக்க செலவழிக்க யாராவது வேண்டுமே, அதற்குதான் நான்’ எனும் கொள்கையோடு இருப்பவன். அடுத்தவரிடம் கைகட்டி வேலை பார்க்க பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்தவரிடம் வேலை வாங்கும் பொறுப்பையாவது எடுத்துக் கொள் என்றால் அதற்கும் முடியாது என உல்லாச பேர்வழியாக சுற்றி வருபவன்.
அமைதியாக ஹரிஷை பரிசோதித்து விட்டு டியூட்டி மருத்துவருக்கு அழைத்து விவரம் சொன்னாள் மீரா. பின்னர் ஹரிஷ்க்கு வலிக்கு ஊசி போட்டு விட்டு காத்திருக்கும் படி சொல்லி விட்டு இன்னொரு நோயாளியை கவனிக்க சென்று விட்டாள்.
பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், மருத்துவர் வராமல் போகவும் சஞ்சய்க்கு கோவம் வந்து விட்டது. வார்டுக்கு போயிருந்த நர்ஸ் திரும்பி வரவும் அவளிடம் “என்ன ஹாஸ்பிடல் வச்சு நடத்துறீங்க? வந்து அரை மணி நேரம் ஆகிடுச்சு இன்னும் டாக்டர் வரலை” என சிடு சிடுத்தான் சஞ்சய்.
“கோவ படாதீங்க ஸார், ஒரு எமர்ஜென்சின்னு ஐ சி யூ போயிருக்கார் டாக்டர், பேஷன்ட் பார்த்திட்டு வந்திடுவார்” என பொறுமையாக சொன்னாள் அந்த நர்ஸ்.
“அப்போ என் ஃபிரெண்ட்க்கு எமர்ஜென்சி இல்லியா? பாருங்க கை புஸ்ஸுன்னு வீங்கி போயிடுச்சு, வலில துடிக்கிறான்” என இன்னும் கோவம் தணியாமல்தான் பேசினான் சஞ்சய்.
வலிக்கு ஊசி போட்டாகிற்று, இனி எக்ஸ்ரே எடுக்க சொல்வாராக இருக்கும், மருத்துவர் வரட்டும் என அந்த நர்ஸ் சொன்னதை ஏற்பதாக இல்லை சஞ்சய்.
மீண்டும் மருத்துவருக்கு அழைத்து பேசிய நர்ஸ், ஹரிஷை எக்ஸ்ரே எடுக்க போக சொன்னாள்.
“நாங்களா கேட்டு கேட்டுத்தான் ட்ரீட்மென்ட் வாங்கிக்கணும் என்ன?” எனக் கேட்டான் சஞ்சய்.
“டாக்டர் வந்து பார்த்துதானே எக்ஸ்ரேவா சி டியா எல்லாம் முடிவு பண்ணி அனுப்புவார்? நீங்க தொந்தரவு செய்யவும்தான் பார்க்காமலே போக சொல்லிட்டார். நாங்க எங்க வேலைய பார்த்திட்டுதான் இருக்கோம், பிரையாரிடி படிதானே ஸார் பார்க்க முடியும்?” எனக் கேட்டாள் அந்த நர்ஸ்.
சஞ்சய் ஏதோ பதில் சொல்வதற்கு முன், “டேய் வாடா…” என கெஞ்சினான் ஹரிஷ். அந்த நர்ஸை முறைத்துக் கொண்டேதான் நண்பனுடன் சென்றான் சஞ்சய்.
எக்ஸ்ரே எடுத்த பிறகும் கூட மருத்துவர் வரவில்லை.
“என்னடா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்த நீ? உன்னைய நம்பி வெளில வந்த என்னை சொல்லணும்” என புலம்பினான் ஹரிஷ்.
“பைக்குக்கு ஏதும் ஆகலியேடா?” கவலையாக கேட்டான் ஹரிஷ்.
“இனிதான் செக் பண்ணனும். காலைல கிஷோரை என் கார் எடுத்திட்டு வர சொல்றேன், அவனே பைக்குக்கு என்னாச்சுன்னு பார்ப்பான்”
“சாதாரணமா சொல்லு, எங்கப்பாக்கு தெரிஞ்சா கட்டி வச்சு அடிப்பார் என்னை”
“ஓ பைக் மேட்டர் தெரிஞ்சா மட்டும்தான் அடிப்பாரா? நேத்து ஸார் கைல கத்தி வச்சிட்டு பழைய சினிமா டயலாக்லாம் பேசி சுத்தி உள்ளவங்கள டென்ஷன் பண்ணினது தெரிஞ்சா கொஞ்சுவாரா?”
“ஆ வலிக்குதே, அடி பட்டவனை கவனிக்காம எடக்கு மொடக்கா கேள்வி கேட்குறானே!” முனகினான் ஹரிஷ்.
சஞ்சய் நேரே நர்ஸிடம் போய் நின்று சத்தம் போட ஆரம்பித்து விட்டான். அந்த பெண்ணும் அமைதியாக பதில் தர முயன்றாள். தன்னால் நண்பனுக்கு அடி பட்டு விட்டதே என்ற குற்ற உணர்ச்சியோடு அவனுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கவில்லை என்ற கோவமும் சேர்ந்து கொள்ள, “உங்களுக்கெல்லாம் என்ன அவ்ளோ அலட்சியம்?” என காட்டமாக கேட்டான்.
வாய்த் துடுக்கான அந்த நர்ஸ் பெண்ணும் பதிலுக்கு கோவமாக, “என்ன அலட்சியம் பண்ணினோம்? எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க?” என குரல் உயர்த்தினாள்.
எட்டிப் பார்த்த மீரா அவ்விடம் சென்று இருவருக்கும் சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கையிலேயே மருத்துவர் வந்து விட்டார். உடனே தணிந்து போனவனாக தள்ளி நின்று கொண்டான் சஞ்சய். அவனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நர்ஸ் மீராவை பார்க்க, அவள் கண்களால் சமாதானம் சொல்லி அகன்றாள்.
மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அட்மிட் ஆகி விடுங்கள் என சொல்லி அவரது ஓய்வு அறைக்கு சென்று விட்டார்.
ஹரிஷ் தன் நண்பனை முறைத்து வைத்தான். “நாய் குறுக்க வந்ததுக்கு நான் என்னடா செய்ய? என்ன இப்போ சின்ன ஆபரேஷன்தான், செஞ்சிட்டு அடுத்த நாளே அனுப்பி வச்சிடுவாங்க” என்றான் சஞ்சய்.