ஏரிக்கு சற்றுத் தள்ளி மரங்களுக்கு நடுவே கொட்டிக் கிடந்த குப்பை கூளங்களுக்குள் நின்றிருந்த காரின் டிரைவிங் சீட்டில், உயிரற்ற பிரகாஷின் உடலைச் சுற்றித் தேங்கி உறைந்திருந்த குருதியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, அங்கே சில மீட்டருக்கு பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க போலீஸ் வளையம் அமைக்கப்பட்டிருந்தது. காற்றில் கலந்திருந்த துர்வாடை மூக்கை சுளிக்க வைத்தது.
“சார், இப்ப அடுத்தடுத்து சிட்டில நடக்கிற மரணத்துல இது மூணாவது… சமூகத்துல நல்ல அந்தஸ்த்துல உள்ள நபர்கள் திடீர்னு செத்துப் போயிடறாங்க… இதுக்கெல்லாம் என்ன காரணம்…? மக்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க…?”
“போலீஸ் விசாரணை போயிட்டு இருக்கு, இதுக்கான பதிலை விசாரணை முடிந்து தான் சொல்ல முடியும்…”
“என்ன சார், எப்பக் கேட்டாலும் இதே பதிலை சொல்லறீங்க…?”
சற்று எரிச்சலாய் கேட்ட சானல் ரிப்போர்ட்டரை கடுப்புடன் நோக்கிய அஜய், “உங்களுக்கு நியூஸ் கொடுக்கணும்னு தெரியாத விஷயத்தை பதிலா சொல்ல முடியாது… இப்ப தானே விசாரணை தொடங்கிருக்கு, கூடிய சீக்கிரமே விடை கிடைக்கும்… டிஸ்டர்ப் பண்ணாம எங்களை கடமையை செய்ய விடுங்க…” என்றவன் கூட்டத்தை விலக்கி தடயப் பரிசோதனையில் இருந்த பாரன்சிக் நபரை நெருங்கினான்.
“என்ன கௌசிக், எதாச்சும் கிடைச்சுதா…”
“இல்ல சார், வெல் பிளான்டு மர்டர்…! சத்தமில்லாம வேலையை முடிச்சிட்டு போயிருக்காங்க… உடம்புல அஞ்சாறு முக்கிய இடத்துல ஆழமான காயம் இருக்கு, கத்தி போல ஆயுதத்தால இல்லாம கம்பியால குத்தி ரத்தத்தை ஒழுக விட்டிருக்காங்க, அதிக ரத்தம் வெளியேறினது கூட மரண காரணமா இருக்கலாம்…”
“ம்ம்…” என்றவனின் பார்வை வாய் பிளந்து மல்லாந்து காருக்குள் உயிர் விட்டிருந்த பிரகாஷின் மீது படிந்தது.
“பாடிய அதே பொசிஷனில் போட்டோ எடுத்துட்டு உங்க வேலை முடிஞ்சு போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிடலாம்…” அவன் சொல்லவும் அடுத்த நிமிடம் பிரகாஷின் உடல் விதவிதமாய் காமிராவில் சுருண்டது.
கௌசிக் ஏதோ கெமிக்கல் பவுடரைத் தூவி கைரேகை எதுவும் கிடைக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கையில் கிளவுசுடன் காருக்குள் உன்னிப்பாய் பார்த்த அஜய் கண்கள் கார் முழுதும் அலச புழுதி படிந்திருந்த கார் கண்ணாடியில் அவசரமாய் விரலால் கிறுக்கப்பட்ட எழுத்துகள் பார்வைக்குக் கிடைத்தன. நடுவில் சில எழுத்துகள் விடுபட்டிருக்க குத்துமதிப்பாய் படித்தான்.
..A..NAKA……! என்று கிறுக்கலாய் முடிந்திருந்தது.
“இதுக்கு என்ன அர்த்தம்..? இதற்கும் இந்தக் கொலைக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ…” கண்ணை சுருக்கினான்.
மேலும் பார்வையை உன்னிப்பாக்க பெண்கள் தலையில் குத்தும் கிளிப் ஒன்று முடியோடு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டவன் கௌஷிக்கிடம் கொடுத்தான்.
“சார், நமக்குத் தேவையான டீடைல்ஸ் எடுத்தாச்சு, பாடியை போஸ்ட்மார்ட்டம்க்கு அனுப்பிடலாம்…”
“ஓகே சார்…” கௌஷிக் நகர, அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் வந்தான் அஜய்.
“இன்ஸ்பெக்டர், முதல்ல நமக்குத் தகவல் கொடுத்தவரை வர சொல்லுங்க…”
“எஸ் சார்…” என்ற இன்ஸ்பெக்டர் சிறிது நேரத்தில் நடுத்தர வயது மனிதருடன் வர தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிவிட்டு வணக்கம் கூறினார் அவர்.
“வணக்கம் சார்…”
“உங்க பேரென்ன…?”
“காசி சார்… இங்கதான் பக்கத்துல உள்ள போட் ஹவுசுல படகு ஓட்டிட்டு இருக்கேன்…”
“ஓ… இந்தப் பக்கம் எதுக்கு வந்திங்க…?”
“மத்தியானம் சாப்பிட்டது சேரல சார், வயித்தைக் கலக்குற போல இருந்துச்சு, அதான் கொஞ்சம் தள்ளி இந்த ஒதுக்குப் புறமான இடத்துக்கு வந்தேன்…”
“நீங்கதான் முதல்ல காரைப் பார்த்திங்களா…?”
“ஆமா சார்… இந்த குப்பக்கூளத்துல காரப் பாக்கவும் ஆச்சர்யமா இருந்துச்சு… சரி, காருக்குள்ள யாருனா இருக்காங்களான்னு பார்க்க பக்கத்துல போனேன்… கார் கதவு வழியா செவப்பா ரத்தம் ஒழுகி இருந்துச்சு… அதைப் பார்த்ததும் ஷாக் ஆகி கண்ணாடிக்குள்ள உன்னிப்பா பார்த்தா யாரோ படுத்துக் கிடக்கறது தெரியவும் போலீசுக்கு போன் பண்ணி விஷயத்த சொன்னேன் சார்…”
“இந்தப் பக்கம் கார் வந்ததை யாராச்சும் பார்த்திங்களா…”
“இல்ல சார், விசாரிச்சுப் பார்த்தேன், யாரும் பார்க்கல…”
“இது பிரகாஷ் வண்டின்னு எப்படி தெரிஞ்சது…?” அஜய் இன்ஸ்பெக்டரை நோக்க, “சார், புதன் கிழமை காலைல ஜாகிங் போன பிரகாஷ் வீட்டுக்குத் திரும்ப வரலேன்னு போலீசுல கம்ப்ளெயின்ட் பண்ணிருக்காங்க சார்… அவங்க சொன்ன கார் நம்பரை வச்சு தான் இது அவர்னு முடிவு பண்ணோம்…” என்றார் அவர்.
“ம்ம்… மத்த பிராசஸ் எல்லாம் முடிச்சிருங்க, நாங்க கிளம்பறோம்…” அஜய் கிருஷ்ணாவுடன் கிளம்பினான்.
அதுவரை சாப்பிடாத வயிறு கலவரம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணாவை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வண்டியை விட்டான் அஜய். கணவனைக் கண்டதும் முறைப்புடன் பார்த்தாள் அர்ச்சனா.
“காலைல ரெண்டு தோசையை உள்ளே தள்ளிட்டுப் போன மனுஷன், நைட் டின்னர் ரெடி பண்ணற நேரத்துல லஞ்சுக்கு வந்திருக்கீங்க… இப்படி இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகறது…” கேட்டுக் கொண்டே அவன் கையிலிருந்த டவலை வாங்கி துவட்டி விட்டவளை அருகில் இழுத்துக் கொண்டவன் தலையை சிலுப்ப, குளிர்ந்த தண்ணீர் அவள் முகத்தில் பட்டு சிலிர்க்க வைத்தது.
“ப்ச்… என்ன பண்ணறீங்க விடுங்க, அஜய்…” சிணுங்கியவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல, டியூட்டின்னு வந்துட்டா மட்டும் வீடு, பொண்டாட்டி எல்லாம் மறந்து போயிடும்…” செல்லமாய் முறைத்தவளின் நெற்றியில் முட்டியவன், “இதெல்லாம் தெரிஞ்சு தான என்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட, இப்ப மட்டும் என்னவாம்…? பசிக்குதுடி…” என்றதும் அடுக்களைக்கு ஓடினாள் அர்ச்சனா.
வேகமாய் சப்பாத்தியை குருமாவுடன் தட்டில் வைத்துக் கொண்டு வந்தவள் அவனுக்குப் பரிமாறிக் கொண்டே அருகில் அமர்ந்தாள்.
“இன்னைக்கு என்னங்க, புதுக் கேஸா…?”
“ம்ம்… அடுத்தடுத்து மூணு நாள்ல மூணு கொலை… ஒண்ணுக்கொண்ணு சம்மந்தம் இருக்கான்னு தெரியல… ஆனா, கொலைக்குக் காரணமான ஆளு ஒரு பொண்ணா இருக்கலாமோன்னு சந்தேகமா இருக்கு…”
“என்ன சொல்லறீங்க, ஒரு பொண்ணு மூணு கொலை பண்ணிருக்காளா…” என்றாள் அவள் அதிசயத்துடன்.
“ஏன் பண்ணக் கூடாதா, நீங்க தான் எல்லா விஷயத்திலயும் பொண்ணுக்கு சம உரிமை கிடைக்கணும்னு போராடுறவங்க ஆச்சே… கொலையை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்னு ஆம்பளைகளுக்குப் போட்டியா, கொலை பண்ண ஏதாச்சும் பொண்ணு களத்துல குதிச்சிருச்சோ என்னவோ…?”
“சும்மா கிண்டல் பண்ணாதீங்க, நாங்க ஆக்கப் பூர்வமான நல்ல விஷயங்களுக்கு தான் சம உரிமை வேணும்னு போராடுவோம், இந்த மாதிரி அழிக்கிற விஷயத்துக்கு இல்ல…” கழுத்தை நொடித்துக் கொண்டாள்.
“சரி, எப்படி இதுல ஒரு பொண்ணு சம்மந்தப் பட்டிருக்கலாம்னு முடிவுக்கு வந்திங்க…” சாப்பிட்டு முடித்து எழுந்தவனின் பின்னிலேயே விடாமல் கேட்டுக் கொண்டு சென்றாள் போலீஸ்காரனின் மனைவி.
“ஏன்னா, முதல் கேஸ்ல டாக்டருக்கு அநாமிகான்னு ஒரு பொண்ணு போன் பண்ணுறா, அடுத்து ரெண்டாவது கேஸ்ல லாயரை மீட் பண்ணனும்னு அநாமிகான்னு ஒரு பொண்ணு ஆபீசுக்கு வர்றா…” என்றவன், “அந்த ஜூனியர் வக்கீல் சுந்தர் கிட்ட ஏதோ தடுமாற்றம் இருக்கு… இயல்பா பேச டிரை பண்ணாலும், அதை என்னால பீல் பண்ண முடிஞ்சது…” என்றவனின் மனதுக்குள், “மாஸ்க் போட்டிருந்தா, எப்படி லிப்ஸ்டிக் போட்டது தெரியும்…?” என்ற கேள்வி பலமாய் சுந்தர் மேல் சந்தேகத்தை விதைத்தது.
“மூணாவது கேஸ்ல…” என்றவன் மனதுக்குள் கண்ணாடியில் கிறுக்கப்பட்டிருந்த எழுத்துகள் நினைவுக்கு வர, “மூணாவது கேஸ்ல பிரகாஷ் இறந்து கிடந்த கார் கண்ணாடில ..A..NAKA……! இப்படி எழுதி இருந்தது. அவளிடம் சொல்லிக் கொண்டே ஒரு பேப்பரில் எழுதினான். அவன் சொல்லுவதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
“எஸ், நெக்ஸ்ட் மூவ் அதே தான்… இவங்க மூணு பேருக்கும் என்ன லிங்க்? யார் அந்த அநாமிகா…? முதல் ரெண்டு கொலைகளை சிம்பிளா தற்கொலை போலப் பண்ணிட்டு மூணாவது பிரகாஷை மட்டும் ஏன் குரூரமா கொன்னிருக்கா…? இதுக்கெல்லாம் என்ன காரணம்…?”
“கொலைல ஒரு பொண்ணு சம்மந்தப்பட்டிருக்கான்னா, அவங்க மூணு பேரும் எந்த விதத்தில் ஆச்சும் அந்தப் பொண்ணுக்கு துரோகம் பண்ணி இருக்கலாமோ…?” கேட்ட மனைவியை மெச்சுதலாய் பார்த்தான்.
“அச்சு…! பேசாம நீ எனக்கு அசிஸ்டண்டா ஜாயின் பண்ணிடேன்… டக்கு டக்குனு அடுத்தடுத்த மூவ்க்கு போயிட்டே இருக்கலாம்… கடமையோட அப்படியே காதலும் பண்ணலாம் பாரு…” சொல்லிக் கொண்டே கண்ணடித்தவனை செல்லமாய் கன்னத்தில் இடித்துவிட்டு எழுந்து சென்றாள்.
அடுத்தநாள் காலையிலேயே புல்லட்டில் கிளம்பியவன் வழியில் கிருஷ்ணாவையும் பிக்கப் செய்து கொண்டான்.
“ஓகே சார்…” என்ற கிருஷ்ணா உற்சாகமாய் அவன் பின்னில் வண்டியில் ஏறிக் கொண்டார்.
ஜமுனா கண்ணில் சோகத்தைத் தேக்கி உடலில் சோர்வைக் காட்டினாள். முதலில் பொதுவான விவரங்களைக் கேட்ட அஜய், “உங்களுக்கு அநாமிகான்னு யாராச்சும் தெரியுமா…?” என்றதும் அவள் நெற்றி யோசனையில் சுருங்கியது.