“ச்சே…!” என்றாள் அர்ச்சனா. கையில் அன்றைய தினசரி இடம் பிடித்திருக்க அழகான, பெரிய கண்களில் ஏகப்பட்ட வெறுப்பு. லாப்டாப்பில் மும்முரமாய் இருந்த அஜய் அதிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டான்.
“என்ன அச்சு, எதுக்கு ச்சே…?”
“என்னங்க இது…? பேப்பரைத் திறந்தாலே, கொலை, கற்பழிப்பு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்னு தினம் இதே செய்தியாதான் போடறான்… படிக்கவே ஒரே கடுப்பா இருக்கு…”
“க்கும், இந்த பாகிஸ்தான் எப்பவும் இப்படி நம்மளை சீண்டிகிட்டே இருக்கே, நம்ம நாடு தான் டிஸைன், டிஸைனா அணுகுண்டு கண்டு பிடிச்சு வச்சிருக்கே, அதைப் போட்டு அவங்க அட்டூழியத்தை நிறுத்த முடியாதா…”
“அதெல்லாம் போட மாட்டாங்க…”
“ஏன்…? ஒருவேளை, ரெண்டு நாட்டுக்கும் போர் வந்துட்டா…?”
“போர் வந்தாத் தானே…? வராது…!”
“எப்படி சொல்லறீங்க…? ரெண்டு நாடும் தினசரி, காஷ்மீர் எனக்குன்னு அடிச்சுட்டு தானே கிடக்கறாங்க…?” அவள் அதிசயமாய் கேட்க, லாப்டாப்பை மூடி எழுந்தான் அஜய்.
“அதெல்லாம் சின்ன சின்னப் பிரச்சனைகள், பெரிய யுத்தம் என்னைக்குமே வராது…!”
“அதான் ஏன்னு கேக்கறேன்…” அவள் விழிகள் கேள்வியைத் தாங்கி நிற்க முன்னில் வந்து நின்றான்.
“ஏன்னா, நம்மகிட்ட மட்டுமில்ல, அவங்ககிட்டயும் அணுகுண்டு இருக்கு… அதைப் போட்டா ஒரு நாடு மட்டும் இல்ல, ரெண்டு நாட்டுக்குமே நாசம் தான்… அதனால இந்த வாய்க்கா தகராறுக்கு வேண்டி எல்லாம் அணுகுண்டு போட்டு நாட்டை அழிக்க மாட்டாங்கன்னு சொல்லறேன்…”
“அப்படியும் இருக்குமோ…? அர்ச்சனா யோசிக்க, அவள் தலையில் செல்லமாய் முட்டிய அஜய், அழகாய் இளமையாய் இருந்தான்.
“ஆமா, நீ எதுக்கு இப்ப யுத்தம், அணுகுண்டுன்னு எல்லாம் யோசிச்சுட்டு இருக்க…” கேட்ட கணவனின் சட்டை பட்டனைத் திருகிக் கொண்டே கொஞ்சும் குரலில் கேட்டாள்.
“ஹூம், என் புருஷன் அஜய் கிரைம் பிராஞ்சுல புலின்னு பேரு வாங்கிருக்கும் போது அவர் பொண்டாட்டி நான் கொஞ்சமாச்சும் நாட்டுநடப்பை யோசிக்க மாட்டேனா…?”
“அப்புறம் சாவகாசமா யோசிக்கலாம், நான் கமிஷனர் ஆபீஸ் கிளம்பிட்டேன், டிபன் எடுத்து வைக்கறிங்களா மேடம்…?”
“இதோ, ரெண்டே நிமிஷம்… தோசை ஊத்திடறேன்…” சொன்ன அர்ச்சனா ஐந்தரை அடி உயரத்தில் அதற்கு ஏற்ற உடல்வாகுடன் அழகாய் இருந்தாள். கண்களில் அதிகக் கவர்ச்சியைத் தாங்கி நடிகை சினேகாவை நினைவு படுத்தும் அழகான புன்னகைக்கும் முகம்.
அஜய்யைக் காதலித்து, கைபிடித்து ஆறு மாதமே ஆகியிருந்தது. அஜய் சென்னை கிரைம் பிராஞ்சில் பெரிய பொறுப்பில் இருக்கும் விவேக் ஸ்ரீனிவாசனின் சிஷ்யன். அவனுடன் பல கேஸ்களில் உடன் பணிபுரிந்தவன். போலீஸ் துறைக்கே உரிய கம்பீரத்துடன் நிமிர்வாய் இருந்தான்.
கமிஷனர் ஆபீஸ்.
காலை நேர சுறுசுறுப்புடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. காக்கி சட்டை அணிந்த அலுவலர்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க பரிச்சய முகங்களின் சல்யூட்டை பெற்று, திருப்பிக் கொடுத்து கமிஷனர் அறையை அடைந்தான் அஜய்.
“ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிகிட்டதா பேப்பர்ல எழுதி வச்சிட்டு செத்துப் போனாலும் அது போலீஸ் பார்வைல கொலையா தான் தோணுது… உங்களுக்கு அந்த கேஸ் ஹிஸ்டரியை முதல்ல சொல்லிடறேன்…”
“சொல்லுங்க சார்…” என்ற அஜய் கவனமாய் கேட்டான்.
“பிரபஞ்சன், பிரபல நியூரோ சர்ஜன்… மனைவியோட தங்கை மேரேஜ் ரிசப்ஷன் நடந்துட்டு இருக்கும்போது, ரெஸ்ட் ரூம்ல தன்னைத் தானே துப்பாக்கியால சுட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிறார்… அவர் சட்டைப் பாக்கெட்டுல என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை, இந்த உலகத்தில் வாழ ஆசை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்னு ஒரு லெட்டர் இருக்கு…” என்றவர் நிறுத்தினார்.
“ஓகே சார், அவரோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல மரணம் எப்படின்னு சொல்லிருக்கா…?”
“எஸ்… அவர் உடம்புல எந்த பலவந்தமும் தெரியலை… அவரே அவரோட லைசன்ஸ்டு துப்பாக்கில, சைலன்சர் பொறுத்திட்டு தன்னைத் தானே சுட்டுட்டு இறந்து போனதா தான் சொல்லுது… பட் அப்படி ஒரு சிச்சுவேஷன்ல, ஒய்…?
“யோசிக்க வேண்டிய விஷயம் சார்…”
“எஸ்…! நெக்ஸ்ட் மிஸ்டர் சந்தோஷ்… பேமஸ் கிரிமினல் லாயர், அவரும் ரொம்ப சந்தோஷமா அடுத்தநாள் வெட்டிங் ஆனிவர்சரிக்கு மனைவிக்கு வைர நெக்லஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு ஒரு கிளையன்டை சந்திக்க ஆபீஸ் போயிருக்கார்… எந்தக் காரணமும் இல்லாம சட்டுன்னு விஷத்தைக் குடிச்சிட்டு, என் சாவுக்கு யாரும் காரணமில்லைன்னு லெட்டர் எழுதி பாக்கெட்டுல வச்சுட்டு சைலன்டா செத்துப் போயிட்டார்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல விஷம் குடிச்சு மரணம்னு மட்டும் தான் இருக்கு… யாரும் பலவந்தப் படுத்தலை, இதெல்லாம் நடக்கும்போது பார்த்த சாட்சி யாருமில்லை… பட் ஒய்…?
“புரியுது சார், அவங்க இறந்து கிடந்த ஸ்பாட்டுல பாரன்சிக் பீப்பிள்க்கு ஏதும் ஐடென்டிபை பண்ண முடியலையா…”
“ப்ச்… துப்பாக்கி, பாய்சன் பாட்டில்ல இவங்களோட கைரேகை மட்டும் தான் இருக்கு… லெட்டர்ல கூட அவங்க கையெழுத்து தான்னு ப்ரூவ் ஆகிருக்கு…” அவர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அமைதியாய் இருந்தான் அஜய்.
“மேலோட்டமாப் பார்த்தா இது தற்கொலைன்னு தோணலாம்… ஆனா, அப்படி இல்லேங்கிறது தான் உண்மை… இந்த கேஸ் பத்தி நம்ம விவேக் கிட்ட தான் முதல்ல பேசினேன்… அவர் வேறொரு கேஸ் விஷயமா வெளிநாடு போயிருக்கிறதால உங்ககிட்ட பேச சொன்னார்…” என்றவர்,
“வெல், இந்த மரணங்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க…” அவர் கேட்கவும் தெளிவாய் கூறினான்.
“கரக்ட், இதுக்குப் பின்னாடி யாரு, எதுக்கு சந்தோஷமா உள்ளவங்க சட்டுன்னு தற்கொலை பண்ணிக்கணும்… இதெல்லாம் நீங்க தான் விசாரிக்கணும்…”
“எஸ் சார்…” என்றவன் எழுந்து கொண்டான்.
“எனக்கு எப்ப உங்க பர்ஸ்ட் ரிப்போர்ட் கிடைக்கும்…”
“வித் இன் டூ டேஸ் சார்…”
“குட், நீங்க போகலாம்…”
“எஸ் சார்…” என்றவன் மீண்டும் விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்துவிட்டு வெளியே வந்தான்.
மனம் முழுதும் அந்தக் கேஸ் பற்றிய சிந்தனை ஒட்டிக் கொள்ள முதல் கொலை நடந்த பிரபஞ்சனின் ஏரியா போலீஸ் ஸ்டேஷனை நோக்கி அவனது புல்லட் படபடத்தது.
விடியற்காலை ஐந்து மணி, பெசன்ட் நகர் பீச்.
தனது ஸ்கோடாவை ரோட்டோரமாய் நிறுத்தி என்ஜினை அணைத்த பிரகாஷ் காரினின்றும் இறங்கினான். ஜாகிங் சூட் உடலைக் கவ்விப் பிடித்திருக்க, பேவ்மெண்டில் நின்று கடல்காற்றை ஆழ்ந்து சுவாசித்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.
கடலில் வெள்ளை நுரைகளோடு அலைகள் ஒன்றை ஒன்று தழுவி ஓடிக் கொண்டிருந்தன. கிழக்கு திசை வெளிச்சத்திற்காய் காத்திருந்த கடற்பறவைகள் கத்திக் கொண்டு இலக்கில்லாமல் தலைக்கு மேல் பறந்தன. அங்கங்கே இளம் வயதினர் ஓடிக் கொண்டிருக்க, முதியவர்கள் நடை பயின்றனர்.
பிரகாஷ் பேவ்மெண்ட் அதிர மெல்ல ஓடத் தொடங்கினான். தனது பிசினஸில் தினம் ஒரு புதுமையைப் புகுத்தி நாளுக்கு நாள் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இளம் தொழிலதிபன். நாற்பதை நெருங்கினாலும் ஒத்துக் கொள்ள முடியாத கட்டுக் கோப்பான உருவத்தைக் கொண்டிருந்தான். தினமும் பயிற்சி பெற்ற கால்கள் சீராய் ஓடிக் கொண்டிருக்க ஒரு இடத்தில் நின்று, வார்ம் அப் செய்வது போல் கை காலை வீசிக் கொண்டிருந்தான்.
எதிரே சற்றுத் தள்ளி ஒரு பெண் ஜம்ப் செய்து கொண்டிருக்க சில இளைஞர்கள் அவள் அருகில் நிற்பதைக் கண்டான்.
“பின்னழகைக் காட்டி சின்னப் பையன்களை வாட்டி…” பாடலைப் பாடியபடி அவளை சுற்றிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் கோபமாகி ஏதோ கத்த, பதிலுக்கு அந்தப் பையன்மார் ஏதோ சொல்ல நிலவரம், கலவரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் அவர்கள் அருகே சென்றான்.
“ஹலோ கிஷன், எவ்ளோ நேரமா உங்களுக்கு வெயிட் பண்ணறது, ஏன் லேட்… இவங்க பாருங்க, என்கிட்ட ரகளை பண்ணிட்டு இருக்காங்க…” இவனைக் கண்டதும் சட்டென்று அப்பெண் கண்ணடித்து விட்டுக் கூற புரிந்து கொண்டவன் அமைதியாய் அவளிடம் செல்ல அந்த இளைஞர்கள் ஜெர்க் அடித்து மெல்லப் பின் வாங்கினர். அவர்கள் சென்றதும் அவனிடம் திரும்பிய அந்தப் பெண் முகத்தை மாஸ்க் மறைந்திருந்தாலும் அழகாய் தெரிந்தாள்.
“தேங்க்ஸ் சார், நல்ல நேரத்துல கடவுள் போல வந்து காப்பாத்தி விட்டீங்க…”
“இட்ஸ் ஓகே, யார் அவங்க…”
”தெரியல சார்… நான் ஏரியாவுக்குப் புதுசு…”
“ஹோ… அதான், உங்களை இங்க பார்த்ததில்லையேன்னு நினைச்சேன்… பை த பை, ஐ ஆம் பிரகாஷ்…”