அமுதன் வழக்கமாக நாலு மணிக்கு எழுந்தாலும் தன் உடற்பயிற்சி எல்லாம் முடித்துக் கீழே வர ஆறு மணியாகும் என்பதால் மரகதம் முதற்கொண்டு அந்த வீடே ஐந்தரைக்கு மேல்தான் விழித்துக் கொள்ளும்.
அதுவும் முதல் நாள் கல்யாண வேலைகள் பார்த்த அலுப்பு அனைவருக்கும் இருக்க விடிகாலை நான்கு மணிக்கு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களை அமுதனின் சத்தம் அடித்துப் பிடித்து எழ வைத்தது.
தாழ்வாரத்தில் படுத்திருந்த கண்ணாயிரம்தான் முதலில் எழுந்து கொண்டான். தன் செவிகளில் விழுந்த சத்தத்தில் பதறிப் போனவன் விழுந்தடித்துக் கொண்டு சென்று மரகதத்தை எழுப்பினான்.
அவரும் வந்து படிகளின் துவக்கத்தில் நின்று செவிகளைக் கூர்தீட்டிக் கொண்டு கேட்க அமுதன் காச் மூச்சென்று கத்துவதும் அதைத் தொடர்ந்து வேதவல்லியின் விசும்பல்களும் மெலிதாக என்றாலும் திறந்திருந்த கதவின் வழியாகத் தெளிவாகவே கேட்டன.
“பொட்டச்சிக்கு என்னா கொழுப்பு? கால நாலு மணிக்கு இழுத்துப் போர்த்திகிட்டுத் தூங்குத.புருஷனுக்கு முன்னமே எழுந்துக்கிடணும்,அவன் காலத் தொட்டுக் கும்பிடணும், குளிச்சு முழுகிக் காப்பியோட வந்து அவனை எழுப்பணும்னு கரிசனை கொஞ்சமாச்சும் இருக்குதான்னு கேக்கேன்.வாயப் பொளந்துகிட்டுத் தூங்குதே! சேச்சே! நல்ல குடும்பத்துப் பொம்பளை இப்படிச் செய்வாளா?” என ஆரம்பித்து அவன் அர்ச்சனை தொடர்ந்து கொண்டே போக, செவிகளில் விழுந்த எதையும் சீரணிக்கும் சக்தியற்றவராகத் திகைத்துப் போய் நின்றிருந்தார் மரகதம்.
சில நிமிடங்களில் அவன் அறை வாசலில் தொப்பென்று எதுவோ விழும் ஒலியும் அறைக் கதவைத் அறைந்து சாற்றும் ஒலியும் கேட்கப் பதறியவராக மேலே செல்ல முற்பட அதற்குள் அவனிடமிருந்து தப்பிப்பதில் அவசரம் காட்டியவளாக வேதவல்லி படிகளின் ஆரம்பத்துக்கு வந்திருந்தாள்.
உருண்டு வராத குறையாகக் கீழே வந்து சேர்ந்தவள் மரகதத்தைக் கட்டிக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்தாள். அவளை அணைத்து ஆறுதல் கூறித் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர் கொஞ்சம் தூக்கலாக இனிப்பிட்டுக் காஃபியோ தேநீரோ கொண்டு வரும்படிக் கண்ணாயிரத்திடம் சொல்லி விட்டு அவளருகே அமர்ந்தார்.
அவள் நெஞ்சை நீவி, முதுகை வருடி, தலையைத் தடவி எனப் பலவிதமாக ஆறுதல் கூறிக் கொண்டே அவள் முகத்தை உற்றுப் பார்த்தவருக்கு மனது மிகவும் சங்கடப்பட்டுப் போனது.
கன்னங்களில் அழுத்தமான கைத்தடம் கன்றிச் சிவந்திருக்க, இதழ்களின் ஓரத்தில் லேசான குருதிக் கசிவு தென்பட, முதுகிலும் தோளிலும் கூட அடி வாங்கியதற்கான தடங்கள் தெரிய, பல ஆண்டுகளுக்கு முன் தன் பிம்பத்தைக் கண்ணாடியில் காண்பது போலிருக்க, அவருக்கு அமுதன் மீது ஆத்திரம் அணை கடந்தது.
அப்போதே சென்று அமுதனைப் பிடித்து உலுக்க வேண்டும் போலிருக்க, முதலில் வேதவல்லிக்குத்தான் தனது கவனம் தேவை என உணர்ந்தவராக வந்திருந்த காப்பியை அவளை அருந்தச் செய்து பின் வேலையாட்களை அகற்றி விட்டு அவளிடம் விவரம் கேட்டார்.
“ராத்திரி நான் உள்ள போனதும் நீங்க சொன்னது போல அவங்க காலைத் தொட்டு கும்பிட்டேன் அத்தை.ஆனா அவங்க எதுவும் பேசல.கொஞ்ச நேரத்துல படுத்துத் தூங்கிட்டாங்க.நானும் படுத்துட்டேன்.காலைல நேரமே எழுப்பி இருப்பாங்களோ என்னவோ.எனக்கு நேத்துக் கல்யாணத்துல பயங்கர அசதி.நான் எந்திரிக்கலை போல. இடுப்பில ஓங்கி மிதிச்சுட்டாங்க அத்தை.படுக்கைல இருந்து கீழ விழுந்துதான் கண்ணையே முழிச்சேன். ஒன்னும் புரியாம நான் முழிக்கிறதுக்குள்ள நிறைய அடிச்சுட்டாங்க”
தெளிவாகவே ஆரம்பித்தாலும் விக்கி விசும்பி அவள் சொல்லி முடிக்க, “சரித்தா! நீ கொஞ்சம் படுத்திரு.நான் இந்தா வாரேன்” என்று விட்டு மகனைத் தேடிச் செல்ல மாடிப் படியில் காலை வைக்க, கண்ணாயிரம் வந்து “ஐயா இப்பத்தான் வெளிய கிளம்பினாகம்மா” என்று சொல்லவும் ‘வரட்டும் பேசிக்கிறேன்’ என்று கறுவிக் கொண்டவர் மறுபடி மருமகளை நாடிச் சென்றார்.
அவள் கண்களை மூடிப் படுத்திருக்க அவளைத் தொல்லை செய்ய விரும்பாமல் மகனின் வரவுக்குக் காத்திருக்க அவனோ மதியமும் வராமல் இரவு பத்து மணிக்குத்தான் வந்து சேர்ந்தான். அதற்காகவே காத்திருந்தவர் அவனிடம் பேசப் போக, உள்ளே நுழையும் போதே அலைபேசியில் ஏதோ பேசிக் கொண்டே மாடியேறிச் சென்று விட்டான்.
‘விட்டேனா பார்’ என அவரும் பின்னோடு சென்று, பேசி முடித்துச் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தவனிடம்,
“யய்யா மாறா!”
“ம்ம்ம்.சொல்லுங்க”
அவரை தூர விலக்கி நிறுத்திப் பேசுகையில் மட்டுமே மரியாதை கொடுத்துப் பேசுவான் அமுதன் என்பது தெரிந்திருந்தாலும் இப்போது அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினார்.
“என்னைய்யா இது, அந்தப் புள்ளையப் போட்டு இந்த அடி அடிச்சுருக்கே”
அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் குரலில் எள்ளலோடு,
“ஏன் இந்த வீட்டுக்கு அது புதுசா என்ன? வழக்கமானதுதான… நீங்க வாங்காத அடியவா அவ வாங்கிட்டா?”
“மொதல்ல அவ எங்க? புருஷன் வந்ததும் காப்பி குடிக்கிறீயளா, குளிச்சு முழுகுறீயளா, உங்குறீயளா, ஒறங்குறீயளான்னு கேட்டு, துண்டு எடுத்துக் குடுத்து, சாப்பாடு எடுத்து வச்சுன்னு செய்யாம ஓய்வெடுக்குறாகளோ மகாராணி? ஒங்களை யாரு செரமப்பட்டு மேல ஏறி வரச் சொன்னது? போங்க! போய் அவளை வரச் சொல்லுங்க”
அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே வேலையாட்கள் அவன் வருகையை வேதவல்லிக்குச் சொல்லியிருக்க மேலே ஏறி வந்தவள் மிரண்ட மானாக மருட்சி கொண்ட பார்வையுடன் மரகதத்தின் பின் மறைந்து நின்றாள்.
முத்தீஸ்வரர் பேசும் அதே வார்த்தைகள்.சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளையாய் என்றோ கேட்டதை இன்று அப்படியே ஒப்பிப்பவனைக் கண்டவர் செயல் மறந்து நின்றார். சிறு வயதாக இருந்தால் கம்பை எடுத்து வெளுக்கலாம். தோளுக்கு மேல் வளர்ந்தவனை என்ன செய்வது?
“க்கும், வெத ஒன்னு போட்டா சொரை ஒன்னா மொளைக்கும்?” என்றவன் குரலை இன்னும் கடுமையாக்கி “இப்ப நீங்க எதுக்கு அவளைக் காபந்து பண்ணிகிட்டு இருக்கீக? எம் பொண்டாட்டிதான அவ? அவளை நான் அடிப்பேன், மிதிப்பேன், என்ன வேணாப் பண்ணுவேன்.நீங்க போய் உங்க சோலியப் பாருங்க.இங்கன வந்து பஞ்சாயத்துப் பண்ற வேலைல்லாம் வேணாம்”
கேலியாக அவளுடன் சரிக்கு சரி வாயாடுபவன் ஒரு நாளும் அவளை வசைபாடியதில்லை.இன்றோ அன்னை என்ற மரியாதை கூட இல்லாமல் ‘வேலையப் பாரு’ என்றல்லவா சொல்லி விட்டான் என அவருக்கு மனது இடிந்தே போனது.இதற்கு மேல் அவனிடம் பேசி என்ன பயன் என யோசித்தவருக்கு மருமகளை விட்டு விட்டுக் கீழே போகவும் மனதில்லை.
“இன்னிக்கு ஒரு நாக் கீழ என் கூடத் தங்கிகிடட்டும். அவளுக்கு மேலுக்குச் சொகமில்ல”
தயங்கித் தயங்கி அவர் கீழே வந்து சிறிது நேரத்திலேயே அமுதனின் ஆங்காரச் சத்தமும் வேதவல்லியின் விசும்பல்களும் கேட்க ஆரம்பிக்க, கூடத்தில் இருந்த தூணில் தலைசாய்த்து அமர்ந்தவர் கண்களில் கண்ணீர் நிற்கவேயில்லை.
மறுவீட்டுக்கென அழைக்க வந்த பெண் வீட்டாரையும் மரியாதை இல்லாமல் பேசி அனுப்பி விட்டான் அமுதன்.
அவர்களும் பெண் வீட்டுக்காரர்களின் இயலாமையோடு ஊரின் பெருந்தனக்காரனாகிய அவனை எதிர்த்துப் பேச முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு சென்று விட இன்னொரு மரகதம் அந்த வீட்டில் உருவாகியது தவிர்க்க முடியாததாகி இருந்தது.
யார் விட்ட சாபமோ, என்ன பிழையோ என நினைத்தவர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வரத் திட்டமிட, முடியவே முடியாதென மறுத்து விட்டான் அமுதன்.
இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க அன்று காலை, மேலே அமுதனின் அறையிலிருந்து பொருட்கள் உடைபடும் சத்தமும், கண்ணாடி நொறுங்கும் சத்தமும் கேட்க விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடினார் மரகதம். அங்கே ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் அமுதன்.
“மாறா! என்னாச்சுது? ஏன் இப்பிடி எல்லாத்தையும் போட்டு ஒடைக்குதே?”
அவன் பதில் பேசாதிருக்க காலை முதல் மருமகளைப் பார்க்கவில்லை ஆதலால் “வேதா எங்க போனா? கீழயும் காணோமே! அவளை ஏதாவது பண்ணிட்டியா?” என்று அலற, நெருப்புத் துண்டமென ஜொலித்துச் சிவந்த விழிகளால் வெறித்துக் கொண்டிருந்த அமுதனிடம் பதிலேயில்லை.
மரகதத்துக்கு பயம் பிடித்துக் கொண்டது.
அவன் பனியனைப் பிடித்து இழுத்து “டேய் நாசமாப் போறவனே! சொல்லுடா! எம்மருமவளை என்ன செய்ஞ்சே? கொன்னே புட்டியா அந்தப் புள்ளைய?” என உலுக்கு உலுக்கென உலுக்கி அவன் பனியன் கிழிந்து தொங்கவும் அங்கேயே அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கலானார்.
கீழே கூடத்தில் அத்தனை வேலையாட்களும் கூடி நின்று மாடியில் நடப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தவர் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு வெளியே வந்து கீழே இருந்த கூட்டத்தில் கண்ணாயிரத்தைப் பார்த்து,
பெற்ற தாய் சொல்வதைக் கேட்டு மகனுக்கு எதிராகப் போலீசைக் கூப்பிடுவதா என முடிவெடுக்க முடியாமல் மலங்க மலங்கக் கண்ணாயிரம் விழிக்க “லேய்! என்ன முழிக்கே? ஒனக்கு போன் போடத் தெரியாதா இல்ல போனு எப்பிடி இருக்கும்னே தெரியாதா?” என அவர் கத்திக் கொண்டிருக்க, அனைவரின் பார்வையும் மரகதத்தைத் தாண்டிப் பின்னால் போக, அவரும் என்னவெனப் பார்க்க அங்கே அமுதன் நின்றிருந்தான்.
கண்களில் சிவப்பும் அத்துடன் எதையோ பறிகொடுத்த துக்கமுமாக நின்றிருந்தவன் அன்னையைப் பார்த்து,
“உம்மருமவளை நான் ஒன்னுஞ் செஞ்சுபுடல.அவதான் கடுதாசி எழுதி வச்சுட்டு ஓடிப் போயிட்டா” எனவும் அந்த வீட்டில் குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அமைதி.
இப்போது ஆவேசம் கொண்டவராக மரகதம், “என்னலே சொல்லுதே? கோட்டிப்பய கணக்கா ஒளராதல.நல்ல புள்ள மேல அபாண்டமாப் பழியப் போட்டியானா ஒன் நாக்கு வெந்து பொசுங்கிப் போகும்”
“இந்தா! வேணா நீயே பார்த்துகிடு. அவ எழுதி வச்சுட்டுப் போன கடுதாசி.” என அந்தக் கடிதத்தை மரகதத்தின் முன் விசிறியடித்தவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
தளர்ந்த தோள்களும் நிதானமற்ற நடையுமாகச் சென்றவனைப் பார்த்து வாய்மொழி மறந்தவராகக் குனிந்து அவன் வீசிச் சென்ற காகிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
அமுதன் அவர்களுக்கு,
உங்களை மாமா என்றோ கணவன் என்றோ அழைக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை.அந்த அளவுக்கு நீங்கள் என் உடலையும் மனதையும் வருத்தி விட்டீர்கள்.போதும் இந்த நரகம்.அத்தை அந்தக் காலப் பெண். அடித்தாலும் பிடித்தாலும் கணவனின் காலடியில் கிடந்தார்கள். எனக்கு அப்படி வாழ வேண்டிய அவசியம் இல்லை.அப்படி வாழும் எண்ணமும் இல்லை.நான் போகிறேன்.இனியொரு பெண்ணைக் கல்யாணம் என்ற பெயரில் கைபிடித்துக் கொடுமைப்படுத்தாதீர்கள்.
வேதவல்லி
விஷயம் தெரிந்து வேதவல்லியின் உறவினர்கள் வந்து பேசி அது அமுதனுடன் கைகலப்பில் முடிந்து கடைசியில் போலீசில் புகார் கொடுத்தால் அவர்கள் குடும்ப மானமும் போகும் என்று சொல்லி விட்டுக் காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள்.
அதன் பின் ஊருக்குள் என்னென்னவோ வதந்திகள் பரவலாயின. விடிகாலை நேரத்தில் வேதவல்லி யாரோ ஒரு இளம் வாலிபனுடன் பேருந்தில் ஏறியதைப் பார்த்ததாக சிலர், அவர்களுக்குள் முன்பே தொடர்பு இருந்தாக சிலர், அதை அமுதன் கண்டித்ததால்தான் ப்ரச்சனையே என்று சிலர், வேதவல்லி இப்போது உயிருடனே இல்லை, அவளை அமுதன் அடித்துக் கொன்று புதைத்து விட்டான் என்று சிலர், இப்படிக் கண் காது மூக்கு வைத்துப் பல விஷயங்கள் ஊருக்குள் பேசப்பட்டன.
மரகதம் இதையெல்லாம் கேட்கப் பொறுக்காமல் மகனிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அவன் வீட்டில் இல்லாத சமயம் கிளம்பி மாமனார் தனக்குக் கொடுத்த வீட்டுக்கு வந்து விட்டார். கூப்பிட வந்த அமுதனையும் வாய்க்கு வந்தபடித் திட்டி அனுப்பி விட்டார்.
நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகியது. இடையில் மரகதத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அதற்காக வந்தவன் அதன் பிறகு பத்துப் பதினைந்து நாட்களுக்கொரு முறை தலையைக் காட்டி விட்டுப் போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாய்ச் சொல்லி முடித்த மரகதம்,
“அவன் அப்பாரு யார் மேலயோ ஆசைப்பட்டு அது நெறவேறாமப் போனனால அந்த ஆத்திரத்தை எல்லாம் எம்மேல காட்டுனாரு. அதுனாலயே அவனுக்கு வயசுப் பருவம் வந்ததும் யாரையும் காதலிச்சு அதுல ஏதும் ப்ரச்சனை வந்துட்டுன்னான்னு பயந்து ஒரு கன்னாலத்தைக் கட்டி வச்சாக் கட்டிகிட்டவளக் காதலிப்பான்னு கணக்குப் போட்டேன். ஆனா நான் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி எம்புள்ள தனிமரமாத் தவிக்கணும்னு விதியிருக்குதப்போ யாரு என்ன செய்ஞ்சுட முடியும்?”
அவர் கடைசியில் பேசியது கூடப் பெரிதாகக் காதுகளில் விழாதவாறு கல்லாய்ச் சமைந்து போயிருந்தாள் குமுதா.
அமுதன் சொன்ன போது கூட ஏதோ மிகைப்படுத்திச் சொல்லுகிறான் என்றே எண்ணியிருந்தவளுக்கு அதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லையென்பதும் உள்ளதை உள்ளபடித்தான் சொல்லியிருக்கிறான் என்பதும் தெற்றெனப் புரிய அமுதன் மீது அவள் வைத்திருந்த விருப்பம் மொத்தமும் வெறுப்பாக மாறியது.
அவன் தயவில் தான் இருக்கிறோமே என்ற எண்ணத்தில் சட்டென உடலே கூசிப் போனது அவளுக்கு.ஆனால் யோசித்துப் பார்த்தவளுக்கு மரகதத்தின் வார்த்தைகளில் இருந்து அவருக்கெனத் தனித் தொழிலும் உழைப்பும் வருமானமும் இருப்பது நினைவு வர நல்லவேளை தனது செலவுகளை அவன் நேரடியாகச் செய்யவில்லை என்பது ஒருவித நிம்மதியைக் கொடுத்தது.
இனி அவனைக் கண்ணால் பார்க்கக் கூடக் கூடாது என மனதுள் முடிவு கட்டிக் கொண்டாள். கட்டிய பெண்டாட்டியை மட்டுமல்லாது பெற்ற தாயையும் என்ன மாதிரி வருத்தியிருக்கிறான்! இவனெல்லாம் மனிதனா? இதில் மற்ற நியாயம் மட்டும் பேசத் தெரிகிறது என மனதுள் அவனைக் கடிந்து கொண்டவள் “சரியத்த! நான் படிக்கப் போறேன்” என்று சென்று விட்டாள்.
அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தவருக்கு அவள் எண்ணவோட்டமும் புரிந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல மகன் கெட்டவனாக, மனைவியை மதியாதவனாக, கொடுமைப்படுத்துபவனாக இருந்தாலும் குமுதாவைப் பார்த்ததும், அதிலும் அவள் தன் ஒன்று விட்ட அண்ணன் மகள், ஆதரவில்லாமல் தங்கள் தயவில் வாழ வந்திருக்கிறாள் என்பதும் அவர் மனதில் சில ஆசைகளை விதைத்திருந்தது.
ஆனால் மகனைப் பற்றி முழுதாகத் தெரிந்து கொள்ளாமல், அவன் மனதில் என்றோ புதைந்து போய், சமயம் கிடைத்ததும் வெளிப்படக் காத்திருந்த விகாரங்களைப் புரிந்து கொள்ளாமல் ஏற்கனவே ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்ததும் அல்லாமல் இப்போதுதான் மொட்டு விட்டிருக்கும் இன்னொரு பெண்ணின் வாழ்வையும் பலி கொடுக்க அந்தத் தாய்க்கு மனம் ஒப்பவில்லை.
அதனால்தான் நடந்த அனைத்து விஷயங்களையும் மறையாமல் வெளிப்படையாக அவளிடம் கூறி விட்டார். அதைக் கேட்டதும் குமுதாவின் முகம் மாறிய தினுசிலேயே இனி தன் மகனுக்குத் திருமண வாழ்க்கை அமைய வாய்ப்பில்லை என்பது புரிந்து போனது அவருக்கு.
இந்த விஷயங்களைச் சொன்னதற்கே குமுதாவின் மனம் மாறி விட்டது. இதில் இன்னொரு விஷயத்தையும் சொன்னால்… வேண்டாம்! அதைத் தேவை ஏற்பட்டால் சொல்லிக் கொள்ளலாம்.இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்து கொண்டவர் தானும் எழுந்து இரவுக்கான உணவு வேலையைப் பார்க்கச் சென்றார்.
அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிற காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ.. ஆறுமுடிச்சு அவமானம்