அத்தியாயம் 4

புது இடம் அவள் உறங்க நேரம் ஆகலாம். காலையிலும் தாமதமாகக் கிளம்பினால்… என யோசித்துக் கண்ணாயிரத்தைக் கொஞ்சம் முன்னதாகவே அமுதன் அனுப்பி இருக்க அவளோ காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தன் வேலைகளை முடித்துத் தயாராக இருந்ததினால் கண்ணாயிரம் வந்ததும் மரகதத்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

இப்போதோ இத்தனை சீக்கிரமாக ஏன் வந்தோம் எனத் தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தாள்.அமுதனுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் அத்தனை அவஸ்தையாக இருந்தது அவளுக்கு.

சுடிதாரின் துப்பட்டாவின் நுனியைத் திருகித் திருகி அது சுருண்டே போய் விட இப்போது அதைத் தொடையில் வைத்து சுருக்கத்தை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்தப் பக்கமாகக் கையில் மணி அடிக்கும் கோலுடன் வந்த ஏவலாளைப் பார்த்து “மணி என்னாச்சுண்ணா?” எனக் கேட்க அவன் கொஞ்சம் முறைத்து விட்டு “எட்டே முக்கால் ஆகுது” என்று கடுப்பாகச் சொல்லி விட்டுப் பள்ளியின் முதல் மணியை அடித்து விட்டுப் போனான்.

அவனும்தான் என்ன செய்வான்? காலையில் அங்கே வந்து அமர்ந்ததில் இருந்து இதோடு நூறு முறை மணி கேட்டால்.

மணி அடிக்கவும் ஆங்காங்கு நின்று பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவியர் அவரவர் வகுப்பறைகளுக்குச் செல்ல ஆரம்பிக்க சிறிது நேரத்தில் வகுப்பறைகளில் இருந்து கடவுள் வாழ்த்துப் பாடி ஆசிரியருக்கு வணக்கம் வைக்கும் சத்தமும் கேட்டது.

அத்தோடு அவள் எதிர்பார்த்த புல்லட் ஒலியும் கேட்க ஆவலாக வாயிலைப் பார்த்தாள் குமுதா.

பள்ளியின் பெரிய வாயிலுக்கு வெளியே வண்டியை நிறுத்தியவனின் அருகே சென்ற கண்ணாயிரம் ஏதோ சொல்வதையும் அமுதன் தலையசைத்து விட்டுக் கீழே இறங்கி வண்டியைத் தாங்கியிட்டு நிறுத்தி விட்டு உள்ளே நுழைவதையும் கண்டவள் தானும் எழுந்து நின்றாள்.

முதல் நாள் சிவப்பு நிறச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தவன் இன்று முழு வெண்மையில் வந்திருந்தான். அரைக்கைச் சட்டை கஞ்சியின் விறைப்பில் கத்தியைப் போல் நிற்க வேட்டியின் ஒரு பக்க நுனியை லாவகமாகப் பிடித்தபடி வேகநடையுடன் வந்தவனைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் அறியாத புது உணர்வு பொங்கியது.

முதல் நாள் கண்ணில் பதியாத அவன் தோற்றம் இன்று கண்ணை மட்டுமல்லாது கருத்தையும் கட்டி இழுக்க, மொட்டாக இருந்த மனம் கட்டவிழ்க்க அந்த உணர்வை என்னவென இனம் பிரிக்கத் தெரியாமல் என்ன நடக்கிறது என்றும் புரியாமல் சட்டென அவள் விழிகள் நீரால் நிறைந்தன.

இதற்குள் அமுதன் அருகே வந்திருக்க அவன் கண்டுவிடாத வண்ணம் படக்கெனக் குனிந்தவள் அந்த பெஞ்சில் வைத்திருந்த தன் சான்றிதழ்கள் அடங்கிய பையை எடுப்பது போல் துப்பட்டா நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டு விட்டாள்.

அவள் நிமிர்ந்த நேரம் அவள் எதிரில் நின்றவன்,

“நான் எச்எம்ட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுக் கூப்பிடுதேன். உள்ள வா” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.

நல்லவேளை அவன் எதுவும் கண்டுகொள்ளவில்லை என ஆசுவாசம் அடைந்தவள் அவன் சொன்னது போலவே சில நிமிடங்களில் அழைக்கப்பட, உள்ளே சென்றாள்.

“இந்தப் புள்ளதான் சார்.நல்லாப் படிக்குத புள்ள.கண்டிப்பா உங்க பள்ளிக் கூடத்துக்கு, பன்னண்டாப்புல பேர் வாங்கிக் குடுக்கும். அந்த மார்க் ஷீட்டைக் காட்டுத்தா”

அவளும் எடுத்து நீட்ட அதைப் பார்வையிட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அவள் முகம் பார்த்து “வெரிகுட்!” என்று விட்டு “ஒன்னும் ப்ரச்சனை இல்ல சார்.நீங்க நேர்ல வந்துருக்கணும்னு அவசியம் கூட இல்ல.அதான் ஃபோன்ல விவரம் சொல்லிட்டீங்கள்ல. அட்மிஷன் போட்டுடலாம். தேவையான டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கு.இன்னிக்கே சேர்த்துடலாம்”

“நல்லது சார்.ஒருவகைல நமக்கு ஒறவுக்காரப் புள்ளதான்.எங்கம்மை கூடத்தான் தங்கியிருக்குது. அதுனால இது சம்பந்தமா என்ன வெவரம்னாலும் எனக்குத் தாக்கல் (தகவல்) சொல்லி விடுங்க”

“நிச்சயமா சார்”

“அப்போ நான் கெளம்புதேன்”

அவரும் எழுந்து கைகுவித்தார்.

அவன் வெளியேற “நீயும் வெளிய வெயிட் பண்ணும்மா.நான் அட்மிஷன்க்கு ரெடி பண்ணச் சொல்லிட்டுக் கூப்பிடுறேன்”

“சரிங்க சார்!” என்று விட்டு அவளும் அவனைப் பின்தொடர இருவரும் வெளியே வந்தனர்.

முன்னால் சென்று கொண்டிருந்தவன் சட்டெனத் திரும்பி “அங்கன வா! கொஞ்சம் பேசணும்.” என்று கொஞ்சம் மறைவாக இருந்த ஒரு மரத்தடியைக் கைகாட்டி விட்டு முன்னே செல்ல அவளும் தொடர்ந்தாள்.

அங்கு சென்று மரநிழலில் நின்றவன் அவளையே கூர்ந்து பார்க்க அவளோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகவிழ்ந்தாள்.

“ம்ம்ம். இப்பச் சொல்லு. என்னத்துக்கு அழுகை?”

விழிகள் வியப்பில் வெண்ணிலவாக விரிய நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“அதான் உன் ஆசைப்படிப் பள்ளிக்கூடத்துல சேரப் போறேன்னு தெரியும். இருக்கக் கவுரதியா எடமும் கெடச்சாச்சு. பொறவு கண்ணு ஏன் கலங்குது?”

“அது வந்து…”

குமுதாவுக்கு இப்படி எல்லாம் தயங்கி நின்று பழக்கமே இருந்ததில்லை. படபடப் பட்டாசாய்ப் பொரிபவள் அவள்.பள்ளியில் தோழிகள் கூட “கொஞ்சம் மூச்சு விட்டுத்தான் பேசேண்டி” என்று சொல்லும் அளவு மனதில் நினைத்ததைத் தயங்காமல் பேசி விடுவாள். அவளாக விஷயத்தை வெளியிடக் கூடாது என்று அமைதியாக இருந்தால் மட்டுமே உண்டு. இன்றோ தனக்கே புரியாத விஷயத்தைத் தான் எப்படி விளக்குவது என அவள் தடுமாற

“காசு பணம் இல்லையேன்னு யோசிக்குதியா?”

ஒரு பதில் கிடைத்து விட்டாற் போல் அவள் வேகமாகத் தலையசைக்க அவள் தலையசைப்பிற்குத் தாளம் தட்டுவது போல் இரு செவி ஜிமிக்கிகளும் இசைந்தாட அவன் பார்வை அதில் பதிந்தது.

அவன் அன்னையின் ஜிமிக்கிகள் அவை.தங்கத்தில் முத்தும் பவளமும் மரகதமும் பதித்துப் பலவண்ணத்தில் இருந்த அந்த ஜிமிக்கிகளை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அவன் ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருக்கையில் திருவிழாவுக்குச் செல்கையில் மரகதம் அவற்றை அணிவதுண்டு.அவர் இடுப்பிலோ மடியிலோ இருக்கையில் அந்த ஜிமிக்கிகளைச் சுண்டி விட்டு அவை ஆடும் அழகைக் கண்டு கைதட்டிச் சிரிப்பானவன்.

இப்போதும் அப்படிச் சுண்டி விடக் கை துறுதுறுக்க அதைக் கட்டுப்படுத்தியபடி விழிகளால் அவள் முகத்தை வலம் வந்தான்.

கற்றைக் கார்குழலை இரண்டாகப் பிரித்து ஜடையிட்டிருந்தாள். கருமேகத் திரைக்கு இடையே ஒளிவீசும் பிறை நிலவென நெற்றி, மாரன் கைவில்லென வளைந்த புருவங்கள், அவற்றின் கீழே கருவண்டெனச் சுற்றிச் சுழலும் கண்கள், கூரான நாசி, கொழு கொழுக் கன்னங்கள், கொவ்வை இதழ்கள், அழகாகத்தான் இருக்கிறாள்.

விஷமத்துடன் இதழ்கள் வளைய,

“காசு பணத்துக்கென்ன? கொட்டிக் கெடக்குது எங்கிட்ட.நான் தாரேன்.நீ வேலை செய்ஞ்சு கடனக் கழிச்சுரு”

அவளும் மகிழ்ச்சியுடன் தலையசைசைக்க

“என்ன வேலைன்னு கேக்காம மண்டையை மண்டையை ஆட்டுத”

அவள் புரியாமல் பார்க்கவும் “பகல் முச்சூடும் அங்கன அம்ம வீட்ல பாக்குதத பாரு. ராவுக்கு என் வீட்டுக்கு வந்துரு. சீக்கிரமே கடனக் கழிச்சுறலாம்”

முதலில் அவன் சொன்னது விளங்காமல் மலங்க மலங்க விழித்தவள் பின் அவன் சொன்ன வார்த்தைகள் துளித் துளியாய் அவளுள் இறங்கி அதன் பொருளும் படிப்படியாய் விளங்க அவள் முகம் மாறியது.

அதைக் கண்டு அமுதனின் முகமும் மாறியது. குறும்புப் புன்னகை மாறி கொஞ்சம் கடினப்பட்ட அவன் முகமே என்னவென்றறியாத ஒரு ஆறுதலை அவளுக்குத் தர அவனோ,

“இப்பிடி ஒருத்தன் உன்னைப் பார்த்துக் கேக்குதப்போ செருப்பால அடிப்பேன்னு பதில் சொல்லக் கூடக் கத்துக் குடுக்காத படிப்பு என்ன படிப்பு? அதை எதுக்குப் படிக்கணும்ங்கேன்?”

மீண்டும் அவள் முகம் புரியாத பாவனைக்குப் போக “வெளங்கிரும்” என வாய்க்குள் முணுமுணுத்தவன் “சரியாத்தா! நான் கெளம்புதேன்” எனத் திரும்பவும், ஓடி வந்து அவன் முன் நின்றாள்.

என்ன என்பது போல் புருவம் உயர்த்தி அவன் பார்க்க “நீங்க என்னென்னவோ சொன்னியளே?”

“என்ன சொன்னேன்?”

“அது…அதான்… வேலை உங்க வீட்லன்னு… ஏதோ”

அப்படி எல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லி விடேன் என்பது போன்ற இறைஞ்சுதலை அவள் முகத்தில் கண்டவன், பாவனையைக் கைவிட்டு,

“வெசனமாக் கெடக்கியேன்னு கொஞ்சம் வம்பிழுத்தேன்…”

அவன் பதிலில் அவள் முகம் பளிச்சென மலர்ந்தது.

“வம்பிழுத்தியளா?”

அவள் புன்னகை அவனுக்கும் தொற்றிக் கொள்ள “பின்ன நெசமாச் சொன்னா சும்மா விட்டுருவியா என்ன?

“ஆங்… அதெப்படி விடுவாக?”

“எங்க ஒன்னையும் பண்ணக் காணோமே! நெசமாத்தான் கேக்குதேன். இப்பிடி ஒருத்தன் ஒன்னைப் பார்த்துப் பேசினா இப்பிடிக் கேட்டுகிட்டுத்தான் நிப்பியோ? காலுல கெடக்குததைக் கழட்டி விளாசுவன்னு பார்த்தா…

“மத்தவகன்னா மொகரையிலயே ரெண்டு வச்சுருப்பேன்”

அவள் சொன்ன தொனியில் அவன் குபீரெனச் சிரித்து விட்டான்.

வெள்ளைப் பற்கள் வரிசையாக மின்ன ரசிக்க வைத்த அவன் சிரிப்பைக் கண்டவள் அப்படியே அசந்து போய் நின்று விட்டாள்.

அவள் பார்ப்பதைக் கண்டவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

“மத்தவகளை மொகரையில வப்பே! என்ன என்ன செய்றதா உத்தேசம்?”

அதற்குள் சுதாரித்திருந்தவள் “நீங்களேதான் வழி சொல்லிக் குடுத்திருக்கியளே! எங்கிட்ட வம்பு பண்ணுதாருன்னு போலீசுல புடுச்சுக் குடுத்துருவேன்”

அவனுக்கு இன்னுமே சிரிப்பு வந்தது.

“ஏன் உன் சிவா மாமனுக்கு மட்டும்தான் போலீசுல ஆளு இருக்குமோ? இந்த மாமனுக்கும் போலீசுல பெரிய ஆளையெல்லாம் தெரியும்”

சிவாவின் பெயரைக் கேட்டதும் முகம் சுணங்க “அவன் ஒன்னும் என் சிவா மாமனில்ல” என்றவள் “இந்தூருப் பஞ்சாயத்துல சொல்லுவேன்” என்றாள் அவனுக்கு பதிலாக…

“பஞ்சாயத்துத் தலைவரே நாந்தான்.எங்கிட்ட வந்து என்னப் பத்தியே ப்ராது கொடுப்பியோ!”

“அதெல்லாம் நீங்க நல்லவக. ப்ராதை வாங்கித் தப்புப் பண்ணினவகளுக்கு தண்டனை கொடுப்பீக”

“யாரு நானு! நல்லவன்! ஊருக்குள்ள போய் என்னைப் பத்திக் கேட்டு பாராத்தா. ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்லுவாக.சரி விஷயத்துக்கு வாரேன்.காசு பணத்தைப் பத்தியெல்லாம் கவலைப்படாத. நல்லாப் படிச்சு டாக்டராகி சம்பாதிச்சு இப்பக் குடுக்கிறதை எல்லாம் வட்டியும் மொதலுமாத் திருப்பிரு. சர்தானே? பொறவு இன்னொரு விசயமில்ல. எவனாவது உங்கிட்ட வாலாட்டினா செருப்ப எடுத்து வெளாசி விட்டுரு. என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிடுதேன்.சரியா?”

அவள் மகிழ்ச்சியாகத் தலையை ஆட்ட மீண்டும் ஆடும் ஜிமிக்கிகளை நோக்கிப் பார்வை போக “வாயத் தொறந்து சரின்னு சொன்னா என்னவாம்? மண்டைய மண்டய ஆட்டுதா” என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டவன்,

“சரி நான் கெளம்புதேன்” எனவும் அவள் அதற்கும் தலையை ஆட்ட “வெளங்கிரும்” என்று விட்டுத் திரும்பி நடந்தவன் மீண்டும் அவள் ஜிமிக்கிகள் ஆடும் அழகைப் பார்க்க ஆசைப்பட்டோ என்னவோ தலையை மட்டும் திருப்பி “நல்லாப் படிக்கணும். என்ன?” எனவும் அவள் முன்னை விட வேகமாகத் தலையை ஆட்ட திருப்தியாகப் பள்ளி வாயிலை நோக்கி நடந்தான்.

………………………………………………………………………………………………………….

வண்டியில் சென்று கொண்டிருந்தவன், மனதை என்னவோ அந்தப் பள்ளியிலேயே விட்டு வந்திருந்தான்.

குமுதாவுடன் நடந்த உரையாடல்களை மனதுள் அசை போட்டுக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான் அமுதன்.

என்னதான் சீண்டல் என்றாலும், திருமணத்துக்குத் தயாரான பெண்தானே எனத் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டாலும் சிறுபெண்ணிடம் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோம் என்றே தோன்றியது அவனுக்கு.

அவன் இப்படிப் பெண்களுடன் வாயாடுபவன் அல்ல. பொதுவாக வயதுப் பெண்களைக் கண்டதும் விலகிச் சென்று விடுவான்.அதுவும் கடந்த பல மாதங்களாகப் பெண் என்ற நினைவையே அறவே வெறுத்திருந்தான்.

அவனும் எல்லா இளைஞர்களையும் போல் காதல், கல்யாணம், மனைவி, குழந்தைகள் என்று கற்பனையில் இருந்தவன்தான். ஆனால் அனைத்துமே கானல் நீராக மாறிய பின் குடும்பம் குறித்துக் கனவு காண்பதையே விட்டு விட்டான்.

தொழில் ஒன்றே இப்போதைக்கு அவன் உயிர்மூச்சாய் இருந்தது. யாருக்காகச் சம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்த்து வைக்கிறான் என்பதையெல்லாம் தாண்டித் தன்னை மறக்கவென உழைத்தான்.

பாலை வாழ்வின் இடையில் பசும் மழையெனத் திடுமெனக் குமுதாவின் வரவு. மனம் ஏனோ கொஞ்சம் சலனமடைவதைப் போல் தோன்ற ‘சேச்சே! சிறு பெண், அதுவும் மணம் முடிக்கும் முறையில் உள்ளவள் என்பதால் கொஞ்சம் விளையாடிப் பார்க்கத் தோன்றி விட்டது வேறு எதுவும் இல்லை. அவள் நிலைமை என்ன அவன் நிலைமை என்ன? அவள் இன்னும் மலராத மொட்டு.அவனோ…’

மறக்க முடியாத மறக்க விரும்பாத நிகழ்வுகள் அவன் வாழ்வில் நடந்திருக்க அவற்றை மறக்கும் வழியோ மாற்றும் வகையோ தெரியாமல் அல்ல, அதற்கு முயலாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறானவன்.

நடந்தது என்னவாக இருந்தாலும் அவன் நடவடிக்கைகளால் ஒரு சிறு பெண்ணின் வாழ்வு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என முடிவு செய்து கொண்டவன் தன் பணிகளைப் பார்க்கலானான்.

………………………………………………………………………………………………………….

அங்கே பள்ளியில் குமுதா அன்றே சேர்த்துக் கொள்ளப்பட்டாள். வகுப்பிற்குச் சென்றவள் தன் சுபாவத்தால் மற்றவர்களுடன் சட்டென ஒட்டிக் கொண்டாள்.

அன்று வெள்ளிக் கிழமையாய் இருக்க அடுத்த இரு நாட்கள் விடுமுறை என்பதால் சீருடை, புத்தகங்கள், நோட்டுக்கள் என வாங்க வேண்டியவற்றைப் பட்டியல் போட்டுக் கொண்டு மாலையில் பள்ளியை விட்டு அவள் வெளியே வர அவளுக்காக வாசலில் கண்ணாயிரம் காத்திருப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

“நீங்க எதுக்கு அண்ணாச்சி வந்திய? நானே வந்துருப்பனே!”

“ஐயாதான் தாயி இன்னிக்கு மொதோ நாளு, வீட்டுக்கு வழி தெரியுதோ என்னவோ, நீ போய் இருந்து கூட்டிக் கொண்டு போய் விடு. நாளைல இருந்து தனியாப் போய் வந்துகிடுவாகன்னு சொன்னாவம்மா”

அவளுக்கு முகமெல்லாம் புன்னகையாகப் பூத்தது.

நினைவு அறிந்த நாளாக அவள்தான் மற்றவர்களுக்கு என்ன தேவை எனப் பார்த்துப் பார்த்துச் செய்வாள்.மாமன் வீட்டில் கூடத் தன்னை உடன் வைத்து உணவிட்டு காப்பாற்றுகிறார்களே என்ற நன்றியறிதலைத் தெரிவிக்கும் பொருட்டு ஓடி ஓடி ஏதாவது செய்து கொண்டே இருப்பாள்.

அத்தைக்குச் சமையலில் உதவி, மாமனுக்கு வயலுக்கு உணவு எடுத்துச் செல்வது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவது எனத் தேனியின் சுறுசுறுப்புடன் ரீங்காரம் இட்டுக் கொண்டே திரிபவள் தன் தேவைகளையும் தானே பார்த்துக் கொள்வாளே தவிர அவள் மீது ஒருவர் அக்கறை காட்டிச் செயல்படுவது என்பது இதுவே முதல் முறை என்பதால் இறக்கை கட்டாத குறையாக அவள் மனம் வட்டமிட்டு வானில் பறந்தது.

கண்ணாயிரத்துடன் வீட்டுக்கு வந்தவளுக்குக் காஃபி கொடுத்து விட்டுப் பின் அவள் கையில் ஐயாயிரத்தை வைத்து அழுத்தினார் மரகதம்.

“பள்ளிக்கூடத்துக்கு வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு வந்துடு தாயி” என்றவர் “தொணைக்கு இவளைக் கூப்பிட்டுகிடு” என்று அன்று காலை கோலமிட்ட பெண்ணைக் காட்ட குமுதாவோ அவர் காலிலேயே விழுந்து விட்டாள்.

குமுதாவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. அவள் தந்தையின் சிறிய அளவிலான நிலமும் தாயின் சொற்ப நகைகளும் மாமா அத்தையிடம் இருந்தது தெரிந்தாலும் இத்தனை வருடங்கள் ஒரு பெண் பிள்ளைக்கு உணவிட்டு உடைகள் வாங்கிக் கொடுத்து எனக் காப்பாற்றிய அவர்களின் உதவிக்கு அது எந்த மூலைக்கு என்பது மனதில் இருந்ததால் நிலத்தையும் நகையையும் அவள் தன்னதாக நினைத்ததே இல்லை.

விசேஷ நாட்களில் அவள் காலில் விழுகையில் மாமனும் அத்தையும் ஆசீர்வாதம் செய்து ஐம்பது நூறைக் கொடுப்பார்கள். அதை எந்தச் செலவும் செய்யாமல் சேமித்து வைத்திருந்தாள் குமுதா. உடைகள் வாங்கவும் மற்ற பொருட்கள் வாங்கவும் அந்த பணம் போதுமோ என்னவோ என மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தவள் ஒரேடியாக ஐயாயிரத்தை மரகதம் கொடுக்கவும் ஆடிப் போய் விட்டாள்

காலையில் ‘காசு பணம் குறித்துக் கவலைப்படாதே’ என அமுதன் சொன்னதும் நினைவு வரவும் தனயன் வாக்களித்ததைத் தாய் நிறைவேற்றுகிறார் போல என எண்ணிக் கொண்டவள் அதை வாய் விட்டுக் கேட்கவும் செய்தாள்.

“மாமா சொன்னாகளா அத்தை?”

“யாரு மாறனையா கேக்கே?”

“ம்ம்ம் அவகளைத்தான்.”

“அவன் என்ன சொன்னான்? ஒன்னும் சொல்லிக்கிடலையே”

“இல்ல உடுப்பு வாங்கப் பணம் தந்தியளே!”

“ஆமா ரெண்டு உடுப்பை வச்சு எத்தனை நாளு ஒப்பேத்துவே? இன்னும் பள்ளிக்கோட உடுப்பு வேற எடுக்கணும்” குரலைத் தணித்தவர் “உள்ள போடுததை நேத்து ராவு துவைச்சுப் போட்டுக் காலம்பற போட்டுகிட்ட. இப்படித் தெனக்கும் முடியுமா? அதான் கடைக்குப் போய் வரச் சொன்னேன். எம்மவன் சொல்லிச் செய்யணுமின்னு இல்லத்தா. நானும் பொம்பளைதானே! வயசுப் பிள்ளைக்கு வேண்டியது என்னன்னு எனக்குத் தெரியாதா?” எனவும் அவரைக் கட்டிக் கொண்டாள் குமுதா.

சொன்னது போலவே மறுநாள் தேவையான, அந்த ஊரில் கிடைக்கக் கூடிய பொருட்களைத் தேடி வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். சீருடையும் தைக்கக் கொடுத்தாகி விட்டது.

அன்றிரவு எட்டு மணியாகவும் புத்தகங்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தவளை மரகதம் உணவுண்ண அழைத்தார்.

“ஏட்டி சீக்கிரம் உங்க வா! நேரம் ஒம்பதாகவும் ஒறங்கிட்டே நேத்து. ஒன்னை ஒக்கார வச்சுச் சாப்பிட வைக்கக்குள்ள வம்பாடு (கஷ்டம்) பட்டுப் போனேன் நான்”

குமுதா அப்படித்தான்.காலை நான்கு மணிக்கு விழித்து விடுபவள் நாள் முழுவதும் துறுதுறுவென்று இருப்பாள்.ஆனால் இரவு ஒன்பதானதும் சாமியாட ஆரம்பித்து விடுவாள்.யாராலும் அவளை உறங்காமல் பிடித்து வைக்க முடியாது.

மரகதத்துடன் உணவுண்டு முடித்தவள் அவளுக்கெனக் கொடுக்கப்பட்டிருந்த அறையில் சென்று படுத்தாள்.

அன்று காலை நடந்த நிகழ்வுகளை மனம் திருப்பிப் பார்க்க அமுதன் பேசியது, சிரித்தது, விளையாட்டாக மிரட்டியது என அவனின் பல பிம்பங்கள் மனதில் ஊர்வலம் போக “என்னைப் பத்தி ஊருக்குள்ள கேட்டுப் பாரு.ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க” என அவன் நக்கலாகச் சொன்னது நினைவு வர ‘ஏன் அப்படிச் சொன்னான்? விளையாட்டாகச் சொன்னானா அல்லது வினையாகச் சொன்னானா? பணக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தாயும் மகனும் தனித்தனியாக இருப்பது ஏன்?’ என்றெல்லாம் பலவாறு சிந்தனை செய்த வண்ணம் உறங்கிப் போனாள்.

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம்
கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்

நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத்தாரேன்… ஹோய்

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு