அத்தியாயம் 1

“அங்காளம்மா எங்கள் செங்காளம்மா

மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா! கருமாரியம்மா!”

என்று அந்த அதிகாலை வேளையில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக எல்ஆர் ஈஸ்வரி பக்திப் பெருக்கில் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தார்.

பாடல் போட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விழித்தெழுந்து தன் படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே உள்ளங்கைகளை விரித்து சில வினாடிகள் பார்வையிட்டவன் பின் அந்தக் கைகளாலேயே முகத்தைத் துடைத்து முடிக்க அந்த நேரம் ஒலிக்க ஆரம்பித்த பாடலின் சத்தத்தில் முகம் கடுத்தான் அவன்…

அவன், அமுதன் இளமாறன், திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் உள்ள கோடனூர் கிராமத்தின் பண்ணையார் மற்றும் பெருந்தனக்காரன்.

மாநிறமும், ஆறடிக்கும் மேல் உயரமும், உயரத்திற்கேற்ற உறுதியான உடற்கட்டும், செதுக்கினாற்போல் முகவெட்டும் கொண்ட இருபத்தி இரண்டு வயது கட்டிளம் காளை.

எழுந்து ஜன்னலின் அருகே சென்று நின்று வெளியே வெறித்தான்.

அவன் வீட்டிலிருந்து கண்பார்வை படும் தூரத்தில்தான் அந்தக் கோவில் அமைந்திருந்தது.

கோடனூர் மாரியம்மன்! சக்தி வாய்ந்த அம்மனாக மக்களால் வழிபடப்படும் தெய்வம்.

அந்தக் கோவிலில்தான் ஆடி மாதத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.

அமுதனின் கட்டுப்பாட்டில் விஷயங்கள் இருந்தவரை அதிகாலை இப்படி ஒலிப்பெருக்கியை அலற விடுவதை அவன் அனுமதித்ததில்லை.அப்படியே போட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் ஒலிப்பெருக்கியை அமர்த்தி விட்டுக் கோவிலுக்குள் பாடல்களைப் போட்டுக் கொள்ளச் சொல்லி இருந்தான். உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் அவன் உத்தரவையே நடைமுறைபடுத்தி வந்தனர். ஆனால் இப்போதோ…

தினமுமே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடும் பழக்கமுள்ளவனாதலால் அந்த ஒலிப்பெருக்கிச் சத்தம் அவனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள், இன்னும் அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கமுள்ள மாணவர்களுக்கு இந்தக் காதைக் கிழிக்கும் சத்தம் தொல்லையாக இருக்குமே எனக் கருதி அவன் இந்தத் திருவிழா ஆரம்பிக்கும் முன்னமே பஞ்சாயத்துப் பெரியவர்களிடம் புகார் கூறி இருந்தான்.

“நீங்க பாட்டுப் போட்டுக்கிடுங்க.நான் வேணாங்கலை.ஒரு ஆறு மணிக்கு மேலப் பொழுது வெடியறப்பப் போட்டியன்னா ஆருக்கும் ஒபத்திரவமிருக்காது கேட்டியளா! மேலுக்குச் சொகமில்லாதவக, வயசானவக நல்ல ஒறக்கத்துக்குப் போய்க்கிடவே மூணாவும்.அவுக ஒறக்கத்தக் கெடுக்குதது நல்லதில்ல.கால நாலு மணிக்குப் பத்தாப்பு பன்னண்டாப்பு படிக்கித பிள்ளையளும் எழும்பிப் படிக்குங்க.அந்த நேரத்துல பாட்டுப் போடாட்டி என்ன முழுகிப் போவும்ங்கேன்?”

“நீங்க சொல்லுதது சரித்தான் தம்பி.ஆனா வருசம் பூராப் போடப் போகுதில்லையே.ஆடி மாசம் மட்டும்தானே! நம்மூருப் பெருசுக கூட வெடியமின்ன எழுந்துக்கிடுதுங்களே. பள்ளிக்கூடப் பிள்ளைய யாரு அந்த நேரத்துல எழுந்து படிச்சுகிடப் போறாவ? இந்த நேரம் பரீட்சை கூட இல்லையாமே! கொஞ்சம் பொறுத்துக்கிடலாம் தம்பி! எளவட்டப் பயலுவ கொண்டாடுதப்போ நாம குறுக்கே போனோமுன்னா நம்ம மருவாதிக்குக் கேடு வந்துடும் கேட்டியளா!” என்று நயந்த குரலில் பஞ்சாயத்து போர்டு பெருசுகளில் ஒன்று அவனிடமே பஞ்சாயத்துப் பண்ணவும் அதற்கு மேல் ‘எப்படியோ போய்த் தொலையுங்கள்’ என்பதாக விட்டு விட்டான்.

அவனால் இதைத் தடுக்க இயலாது என்பதில்லை. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அந்தப் பெரியவர் குறிப்பிட்ட ‘எளவட்ட பயலுகளை’ இரண்டு எத்து எத்தினால் போதும்.அடுத்த நாள் திருவிழாவாவது ஒன்றாவது ஊர் மொத்தமுமே மயான அமைதியே நிலவும் என்பது அவனுக்குத் தெரியும். அப்படிச் செய்து கொண்டும் இருந்தவன்தான். தவறு கண்டால் தட்டிக் கேட்டுத் தண்டனை கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.எல்லாம் ஒரு வருடம் முன்பு வரை.அதன் பிறகு எல்லாமே மாறித்தான் போய் விட்டது. அவனும் ஊர்ப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிப் போக ஆரம்பித்து விட்டான்.

இப்படிப் போக வேண்டிய நிலை வந்த காரணத்தை யோசித்தவனுக்கு மனதுள் சுறுசுறுவென எரிச்சல் மூள நீண்ட மூச்சை வெளியேற்றி மனதை சமநிலைக்குக் கொணர்ந்தவன் தன் காலை நேரத்துப் பணிகளைப் பார்க்கலானான்.

இரண்டு மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய வீடு அவனது. அவன் தாத்தா முத்துக்குமாரசுவாமி கட்டியது.

கீழே கிராமத்தின் மண்மணம் மாறாமல் அதே நடை, முற்றம், முன்கட்டு, பின்கட்டு, சமையலறை, தோட்டம், கழிவறை என்றிருக்க மாடியை மட்டும் இந்தக் காலத்துக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்திருந்தான் அமுதன்.அதுவும் ஒரு வருடம் முன்புதான்.

மாடியில் தாழ்வாரத்தில் கூடை ஊஞ்சல், கொஞ்சம் உள்ளே வந்தால் சற்று பெரிய இரும்பு ஊஞ்சல், எல்லா அறைகளிலும் கழிவறையுடன் இணைந்த குளியலறை வசதிகள், அதில் கொதிகலன் கருவி, அறைகளில் குளிர்சாதனம், ஒரு அறையில் மட்டும் சிறிய அளவிலான குளிர்பதனப் பெட்டி, இன்னும் ஒரு சிறிய சமையலறை கூட அமைத்திருந்தான்.

இதையெல்லாம் செய்த போது அவன் தாய் மரகதம் அவனைக் கேலி செய்தது நினைவில் வந்தது அவனுக்கு.

“எலேய்! ரொம்பத்தான் தல கால் புரியாம ஆடாதல.நான் கருநாக்குக்காரி. அப்புறம் ஏதாவது சொல்லிற போறேன்.பொறவு வம்பாடாப் போயிரும் பார்த்துக்கிடு.கொஞ்சம் அடக்கித்தான் வாசியேம்ல.ஊருல கண்ணு படப் போவுது”

சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “நான் வேணாம் வேணாம்னு சொல்லச் சொல்லக் கேக்காம எல்லாத்தையும் பண்ணிப்புட்டு இப்போ நான் தலகால் புரியாம ஆடுதேன்னு சொல்லுதியோ? கேடி கெளவி நீ”

“எலேய் எடுபட்ட பயலே! ஆரைப் பார்த்துல கெளவின்னே? பல்லு அம்புட்டையும் தட்டிபுடுவேனாக்கும்”

“ஏன் உன்னைப் பார்த்துத்தான்.பொறவு கொமரியோ நீயி?”

“ஆடுல ஆடு. நீயும் ஒரு நா கெளவனாகாமலா போகப் போறே? அப்போ ஒம் பிள்ளய ஒன்னக் கெளவன்னு கேலி பண்ணுததைப் பார்க்காம நான் போய்க்கிட மாட்டேன்”

பழைய நினைவுகள் மீண்டும் மனதில் அலையலையாய் எழ, தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டான்.

“என்ன எளவு இது? இன்னிக்குக் காலைலயே இப்பிடிப் போட்டுப் படுத்துது” எனத் தனக்குள்ளாக முனகிக் கொண்டவன் உடற்பயிற்சி செய்வதற்காக வேட்டியைப் பின்னிழுத்துக் கட்டாகக் கட்டிக் கொண்டு அந்த நெடிய தாழ்வாரத்தின் இறுதியில் இருந்த படிகளில் ஏறி மொட்டை மாடியை அடைந்தான்.

மழை பெய்தாலும் நனைந்து விடாதவாறு அமைக்கப்பட்டிருந்த சிறு கூடாரத்தில் அவன் உடற்பயிற்சி உபகரணங்கள் இருக்க மீதப் பகுதி காலியாகவே கிடந்தது.

வேர்க்க விறுவிறுக்கப் பயிற்சிகளைச் செய்து முடித்தவன் மீண்டும் கீழே வந்து மின்விசிறியின் அடியில் வியர்வை ஆறி விட்டுக் குளியலறைக்குள் புகுந்தான்.

சுடுநீரும் குளிர்நீரும் சேர்ந்து பதமான சூட்டில் பூஞ்சாரலாய்ப் பொழிந்த தன்ணீரின் அடியில் நின்றவனின் மனம் மீண்டும் குரங்காய்ப் பழைய கதைக்குத் தாவியது.

ஒரு வருடம் முன்பு வரை கீழே புறக்கடையில் கிணற்றில் நீரிறைத்து ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தவன் இப்படி அறையில் குளிப்பதே பிடித்தமாக இருக்கிறது என்றும் இந்த வசதிகளை எல்லாம் செய்தது தனக்காகவே என்றும் காட்டிக் கொள்வதற்காகவே அங்கே குளிக்க வேண்டி ஆனதை நினைக்கவும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

“சே!” எனத் தனக்குத்தானே அலுத்துக் கொண்டவன் மின்னல் விரைவில் குளியலை முடித்து வந்து உடை மாற்ற ஆரம்பித்தான்.

அவன் எண்ண ஓட்டத்தை மடை மாற்றுவது போல அலைபேசி கிணுகிணுத்து அழைத்தது.

“சொல்லுங்க மாணிக்கம்!”

…………………………………………………………………

“சரக்கு வந்துருச்சா? இன்னும் கா மணியில அங்கன இருப்பேன்.”

ஏற்கனவே பனியன், வேட்டியுடன் இருந்தவன் சட்டையையும் அணிந்து கொண்டு கீழே வந்தான்.

கூடத்து மெத்திருக்கையில் வந்து அவன் அமர அவன் முன் பெரிய செம்பில் நீராகாரத்தை நீட்டினான் கண்ணாயிரம். அதை வாங்கிக் கடகடவென்று குடித்து முடித்துப் பின் அவன் நீட்டிய துவாலையில் வாயைத் துடைத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினான்.

வாசலில் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீதேறி அமர்ந்தவன் அங்கே ஓரமாக அவன் அடுத்த கட்டளைக்காகக் காத்து நின்ற கந்தவேளை நோக்கி “இன்னிக்கு நம்ம தென்னந்தோப்புக் கணக்கை எல்லாம் எடுத்துகிட்டு மயில்வாகனம் அண்ணாச்சி வருவாவ. ஒருவேள நான் வீட்டுக்கு வாரதுக்குள்ள அவக வந்துட்டா அதெல்லாம் பத்திரமா வாங்கி அலமாரில வச்சுப் பூட்டு! நான் அவர்கிட்ட போன்ல பேசிக்கிடுதேன்”

“ஆட்டுங்கையா!”

ஒரு உறுமலுடன் கிளம்பியது வண்டி.

மாரியம்மன் கோவிலைக் கடக்கையில்

“கூவுற குயிலு சேவலைப் பார்த்துப் படிக்குது பாட்டு

நீயும் பதில் சொல்லு கேட்டு

மாமா மயங்கிடலாமா”

என்று பாடிக் கொண்டிருந்தது.

இப்படித்தான் இவர்கள்…

காலை நான்கு மணிக்கெல்லாம் பக்திப் பாடல்களைப் போட்டு ஊர் மக்களை எழுப்பி விடுபவர்கள் நேரம் ஆக ஆகக் காதல் பாடல்கள், இன்னும் காது கேட்கக் கூசும் கன்னராவிப் பாடல்களைக் கூடப் போட்டு மக்களைக் குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தாங்கள் கொட்டமடிப்பார்கள்.

ஒரு வருடம் முன்பு வரை அவன் வைத்ததே சட்டம் என்றிருந்தது அந்த ஊரில்.இப்போதும் நேரில் நின்று எதிர்க்க யாரும் துணிய மாட்டார்கள் என்றாலும் அவனே பொது விஷயங்களில் பெரிதாகக் கருத்துச் சொல்வதை, ஏன் பஞ்சாயத்துக்களில் ஊரின் பண்ணையார் என்ற பொறுப்பில் தலைமை தாங்கிப் போவதைக் கூட வேறு அலுவல்கள் இருக்கின்றன எனக் காரணம் கூறித் தவிர்த்துக் கொண்டிருந்தான்.

வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் தாத்தாவுக்குக் கொடுத்து வந்த மரியாதையை அவனுக்கும் கொடுத்து அவனிடம் பார்த்துப் பணிந்து பம்மிக் கொண்டு பேசுபவர்கள் இப்போதெல்லாம் கொஞ்சம் மிதப்பாகத்தான் பேசுவதாக அவனுக்குத் தோன்றியது.யார் அவனிடம் என்ன பேசினாலும் அவர்கள் கண்களில் ஒரு எள்ளல், ஏளனம், இளக்காரம் இன்னும் இத்யாதி இத்யாதி இருந்ததோ என ஐயுற்றானவன். அது அவனது ப்ரம்மையோ என்னவோ? அலசி ஆராய அவனுக்கு விருப்பமில்லை.

ஆரம்பத்தில் ஆத்திரம் கூட வந்தது அவனுக்கு. ஆனால் போகப் போகப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாதிருக்கப் பழகிக் கொண்டு விட்டான்.

அவன் தாத்தா முத்துக்குமாரசுவாமியின் வளர்ப்பு அப்படி.

அவன் தந்தை முத்தீஸ்வரனைப் பெயருக்குத் தகுந்தாற்போல்   நல்முத்தாக வளர்க்காமல் விட்டு விட்டோமே என்ற ஆதங்கமோ என்னவோ அமுதனைத் தன் கைப்பிடியிலேயே வைத்து வளர்த்தார்.

தகப்பனிடம் கற்ற பாடம் அவன் தனயனுக்குப் பயனானது.

அவன் பெயர் கூட அவன் தாத்தாவின் தேர்வுதான்.தன் தந்தை அமுத வாணனின் நினைவாக அமுதன் என்றும், வீரனாக விளங்க வேண்டும் என்பதற்காக இளமாறன் என்றும் அழகாகப் பெயரிட்டவர் தந்தையின் பெயரை உரக்கச் சொல்லிக் கூப்பிட மாட்டார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் மாறன், மாறன் ஐயா என்றே அவனை அழைத்தனர். தொழில் வட்டத்தில் அமுதன் என அறியப்பட்டாலும் வீட்டில், ஊரில், நெருங்கிய வட்டாரத்தில் அவன் மாறன்தான்.

முத்துக்குமாரசுவாமி அவனுக்குப் பத்து வயது ஆனதிலிருந்தே தன்னுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று அனுபவப் பாடத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் அவனறியாமலே அவனுக்குள் புகுத்தினார். பள்ளி நேரம் போக மீத நேரமெல்லாம் பாட்டனுடனேயே கழித்தான் பேரன். அவனுக்கும் அது மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

பதினைந்து வயதிலேயே அவர்களின் நிலபுலன்கள், தொழில், வரவு செலவு, அதில் வீட்டிற்காவது எவ்வளவு, தொழிலுக்காவது எவ்வளவு, வருடத்தில் கிடைக்கும் நிகர லாபம் எவ்வளவு என எல்லாமே அவனுக்கு அத்துபடி.

எந்த ஒரு கணக்குப் போடவும் கணக்கிடும் கருவியைப் பயன்படுத்த மாட்டார் முத்துக்குமாரசுவாமி.தன்னைப் போலவே பேரனையும் பழக்கி இருந்தார்.

கணக்கு வழக்குக்களையெல்லாம் மிகக் குறைந்த நேரத்திலேயே கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து என அனாயாசமாகச் செய்து விடுவான் அமுதன். யாரும் அவனை அத்தனை சுலபத்தில் ஏமாற்றி விட முடியாது.

அத்தனை கணக்கு வழக்குப் போட்டவனின் வாழ்க்கைக் கணக்கை அந்த ஆண்டவன் தவறாகப் போட்டு விட்டான் என்பதற்கு விதியைத் தவிர யாரைக் குறை கூற முடியும்?

வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவன் மனதில் என்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க கண்ணெதிரே நீண்டிருந்த சாலையில் மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் கவனம் வைத்துத் தன் மனதை நடப்புக்குத் திருப்ப முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான் அமுதன்.

பத்து நிமிடங்களில் ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்து இருந்த அந்தத் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

அருஞ்சுவை ஊறுகாய்!

அவன் தாத்தா காலத்திலேயே அவர்களுக்கென நிலபுலன்கள், தோப்பு, துரவு என அதிகம் இருந்தன. அதில் விளையும் பொருட்களெல்லாம் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டன. அவன் வியாபாரத்தில் முழுமூச்சாக ஈடுபட ஆரம்பித்த பின்னர் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தான்.

தங்கள் நிலங்களில் எல்லாம் ஊரில் உள்ள ஆட்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும் உடல் ஊனமுற்றவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் இன்னும் வயதானவர்கள் ஆகியவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக முத்துகுமாரசுவாமியால் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டதுதான் அருஞ்சுவை ஊறுகாய்.

தங்கள் நிலங்களில் விளையும் காய்கனிகளைக் கொண்டே கிட்டத்தட்டப் பத்து விதமான ஊறுகாய் வகைகளைச் சந்தைப்படுத்தி இருந்தனர்.

அமுதன் தொழிலை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நிறைய இயந்திரமயமாக்கப்பட்டாலும் இந்த குடிசைத் தொழில்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வந்தான்.

தன் தொழிற்சாலை வாசலில் வண்டியை நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு உள்ளே நுழைந்தவன் வரவேற்புப் பகுதியிலேயே அமைந்திருந்த ஓராறு முகமும் ஈராறு கரமுமாய்க் காட்சியளிக்கும் சண்முகநாதனின் முன்பும் தன் தாத்தாவின் புகைப்படத்தின் முன்பும் ஒரு கணம் நின்று வணங்கி விட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

அவன் செயலாளர் மாணிக்கம் பின்தொடர அவரிடம்,

“எத்தனை மணிக்குச் சரக்கு வந்துச்சு?”

“இப்ப ஒரு அரைமணி நேரம் முன்னதாங்கையா”

“எல்லாம் வந்து சேர்ந்துச்சான்னு சரி பார்த்துட்டீயளா?”

“ஆச்சுங்கையா”

“அந்த மதுரப் பள்ளிக்கூடத்து ஹாஸ்டல்களுக்கு மொத்த சப்ளையா ஊறுகா வேணும்னுட்டு டெண்டர் விட்டுருந்தாவளே! அதுக்குக் கொட்டேஷன் தயாராயிட்டா?”

“இதோ இப்பக் கேட்டுச் சொல்றேங்கையா”

பக்கத்தில் அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் கிட்டத்தட்டக் குதித்துக் குதித்து நடந்து வந்து கொண்டிருந்தவரைத்  திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்,

“என்ன கேட்டுச் சொல்லுதேங்கிறீய? நாள் ரொம்பக் கொறைச்சலாக் கெடக்கே! இன்னும் அஞ்சே நிமிசத்துல அந்தக் கொட்டேஷன் என் டேபிளுக்கு வந்தாகணும் கேட்டியளா! ”

“இதோ, இப்பக் கொண்டு வந்துடறேன் சார்”

பம்மியபடியே அவர் நகர “பேசாம இவரைத் தூக்கிட்டு ஒரு பொம்பளைப் புள்ளைய வேலைக்கு வச்சுக்கிட வேண்டியதுதான்.இன்னும் கருத்தாச் செய்யும்.சுத்திப் பொம்பளைங்களே வேணாம்னுட்டு இவரை வேலைக்கு வச்சா ஒன்னும் சொகப்படலையே”

உரக்கச் சிந்தித்தவனாகத் தன் வார்த்தைகள் திரும்பிச் செல்பவரின் செவிகளில் விழுந்ததை உறுதிப்படுத்திக் கொண்டவன் அதற்குள் தன் அறையை அடைந்திருந்தான்.

அங்கும் பாட்டனின் புகைப்படத்தை வணங்கி விட்டு அன்றைய நாளின் பணிகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

முதலில் கணினியை இயக்கி மின்னஞ்சல்களைப் பார்த்தவன் அருகில் இருந்த குறிப்பேட்டில் அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளையும் குறித்துக் கொண்டான்.

ஐந்தாவது நிமிடத்தில் கதவு தட்டப்பட்டு மாணிக்கம் உள்ளே நுழைந்தார்.

அவர் நீட்டிய விவரங்களை வாங்கிச் சரி பார்த்தவன் அதில் சில மாற்றங்களைச் செய்து விட்டு மீண்டும் அவரிடம் நீட்டினான்.

“இது இனமே உங்க கையை விட்டுப் போகக் கூடாது.தயார் பண்ணிக் கொண்டாங்க! கையெழுத்துப் போட்டுக் கொடுக்கேன். கவர்ல போட்டு ஒட்டி இன்னிக்குத் தபால்ல போட்டாகணும்”

“சரிங்க ஐயா!”

அவர் வெளியேறவும் மேலும் சில நிமிடங்கள் இருந்து வேலையை முடித்து விட்டு அன்று வந்திறங்கிய சரக்கைப் பார்வையிடக் கிளம்பினான்.

இருபத்தி இரண்டு வயது என்பது சீறும் பாம்பை அதன் வாலைப் பிடித்துத் தரையில் சுழற்றி அடிக்கும் வயது. உடலில் ரத்தம் சூடாக இருக்கும் வயது. அதிலும் அமுதனுக்குக் களம் ஏற்கனவே கிடைத்து விட்டதனாலேயோ என்னவோ முன்னேறும் வழிமுறைகள் பற்றி மட்டுமே அவன் சிந்தனை வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

அப்படிச் சிந்தித்து அவன் செயலாற்றத் தொடங்கிய விடயம்தான் கடற்சுவை ஊறுகாய். கடலில் கிடைக்கும் உயிரினங்களான மீன், இறால், நண்டு இன்னும் கிளிஞ்சல்களின் சதையைக் கொண்டு கூட ஊறுகாய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிறிய அளவில் ஆரம்பித்தவன் மக்களுக்கு அதன் சுவை பிடித்துப் போக, பெரிய அளவில் செய்ய ஆரம்பித்திருந்தான்.

இப்போதும் டன் கணக்கில் இறால் இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து வந்து இறங்கியிருக்க அந்தப் பகுதிக்குச் சென்றான் அமுதன்.

சைவ உணவுகளை ஊறுகாய் தயாரிப்பதை விடக் கடினமான வேலை அசைவ உணவுகளை ஊறுகாய் தயாரிப்பது.சுத்தம் செய்வதற்கே சில நாட்கள் தேவைப்படும். ஆனால் அபாரமான ருசியினாலும் தினமும் அசைவம் சமைக்க முடியாத நாட்களில் கைகொடுப்பதாலும் இதற்கு நல்ல கிராக்கி இருந்தது. அதனாலேயே துணிந்து இதில் இறங்கியிருந்தான்.

இறால் சுத்தம் செய்யப்படுவதையும் அதற்கடுத்தான செய்முறைகளையும் மேற்பார்வை பார்த்தவன் சில திருத்தங்களையும் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

இதைப் போல் சரக்கு வரக் கூடிய நாட்களில் சீக்கிரமே தொழிற்சாலைக்கு வந்து விட்டுப் பின் மீண்டும் வீட்டுக்குச் சென்று காலை உணவருந்தி விட்டுப் பிற வேலைகளைப் பார்ப்பது வழக்கமாதலால் இப்போது காலை உணவுக்கு வீட்டுக்குக் கிளம்பினான்.

வரும் வழியில் தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்திலேயே வயல்வெளிகளின் ஓரத்தில் அமைந்திருந்த ஒரு ஒற்றை ஆலமரத்தடியில் கிடந்த பெரிய பாறையின் பின் இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருக்கக் கண்டு தடையை அழுத்தி வண்டியை நிறுத்தினான்.

என்னவோ ஏதோ என இறங்கி அருகில் சென்று பார்க்க ஒரு மனிதன் தன்னினைவின்றி மயங்கிக் கிடந்தான்.

நான் ஏத்திக் கட்டும் வேட்டிக் கட்ட இதுவரைக்கும்
அத மாத்திக் கட்ட எவனும் இங்கு பொறக்கவில்ல
ஏமாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன் என்னைத்
தூத்துறவன் துதிக்கிறவன் எனக்கு ஒன்னு
அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்டைக் கட்டு
அன்பு கெட்டுப் போச்சுதுன்னா மண்ண விட்டு கெட்டவுட்டு
போடா போடா புன்ணாக்கு போடாத தப்புக் கணக்கு
தலக் கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ பண்ணாத மனக்கணக்கு