Advertisement

அத்தியாயம் – 10

யமுனா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிறும் வந்தது. ஆனால் அவர் யாரை ஆசையோடு எதிர்பார்த்தாரோ அவன் வந்தபாடில்லை.

அவனது வரவுக்காகவே காத்திருந்தவர்…. நான்கு மணிவாக்கில் ஹாலிலிருந்த சோபாவில் வாயில்புறத்தைப் பார்க்க வசதியாக அமர்ந்து கீதாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அவள் பரத் தனக்கு மருதாணி வைக்கவேண்டும் என்று அடம்பிடித்ததால் மல்லியிடம் சொல்லி அரைத்துவாங்கி அவன் கைகளுக்கு வைத்துக் கொண்டிருந்தாள்.

வாசலையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த யமுனாவைப் பார்த்ததும் அந்த பப்புவின் மேல் அவளுக்குக் கோபம் வந்தது. ‘இந்த அத்தை அவனுக்காக காலையிலிருந்தே எவ்வளவு ஆவலாக் காத்திட்ருக்காங்க… அவனை இன்னும் காணவில்லை…’ என்று நினைத்தவள்¸ தானும் ஒரு தரம் வாசலை எட்டிப் பார்த்துவிட்டு… யாரும் வராதது கண்டு தன் வேலையில் கவனமானாள்.

சில நிமிடங்களில் வேக வேகமாக எழுந்து வாசலை நோக்கிச் சென்ற யமுனா “வா.., பப்பு… வா…” என்று அழைக்கும் குரல் கேட்டது.

‘பப்ளிமாஸ் வந்துட்டான் போல’ என்றெண்ணிக் கொண்டாள் கீதா.

அவனிடம் பேசியவாறே அவனை இவர்களிடம் அழைத்து வந்துவிட்டார் யமுனா. உடன் வந்தவனும் குனிந்து மருதாணியிட்டுக் கொண்டிருந்தவளையே பார்த்தவாறு நின்றான். ‘மருதாணியை வைத்துக் கொண்டிருந்த கரங்களும் எப்படி சிவந்துவிட்டது…’ என்று அவன் ரசித்துக் கொண்டிருக்கும்போதே “கீதா… என் பையன் வந்துட்டான்” என்றார் தாயார்.

அவர் சொன்னதும் எழுந்தவளையே குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் புதியவன்.

“பப்பும்மா… இதுதான் கீதா…” என்று அவர் அறிமுகப்படுத்தவும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் துள்ளி குதிக்காத குறைதான்.

ஏனெனில் யமுனா¸ நாஞ்சில்நாதன் தம்பதியரின் மகன் பப்பு அவள் நினைத்த மாதிரி யாரோ ஒரு பப்ளிமாஸ் அல்ல… அவன் அந்த ‘பனைமரம் பிரேம்’ தான்.

பிரேம் தான் பப்புவாக இருப்பான் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.

“ஹ…ஹலோ…!” சொன்னாள் அவள்.

மனதிற்குள் ‘அட நம்மாளு…!’ என்று மகிழ்ந்து போனவன்¸ அறிமுகமில்லாத யாரையோ பார்ப்பது போலப் பார்த்து தானும் “ஹலோ…!” சொல்லிவிட்டுத் தாயாரிடம் களைப்பாக இருப்பதாகக் கூறித் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அசையாமல் அப்படியே நின்றவளை உலுக்கியவர் “என்னாச்சு? ஏன் அப்படியே நின்னுட்டே?” என்று கேட்டு அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்த யமுனா “எங்க பப்பு எப்படி இருக்கான்?” என்று கேட்டார்.

‘எப்படி இருக்கான்..? முன்பிருந்ததைவிட சதைப் பிடிப்போடு மீசை வைத்து… முதல் முறை பார்க்கும்போதே அவன் எப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருப்பான் என்று எண்ணினேனோ அப்படியே இருக்கான்’

“நீங்க அடிக்கடி பப்புன்னு சொன்னதைக் கேட்டு வேறு மாதிரி இருப்பார்ன்னு நினைச்சேன்… ஆனால்¸ மாமாவைப் போல உங்களோட மகனும் நன்றாகவே இருக்கிறார்” என்றவள்¸ அடுத்து அவர் எதுவும் கேட்டுவிடும் முன்பாக “கை காய்ந்துவிட்டது அத்தை… கழுவிட்டு அப்படியே வெளியே போய் தோட்டத்துச் செடிகளைப் பார்த்துட்டு வர்றேன்” என்று ஓடிவிட்டாள்.

“ம்…” என்று சிரித்துக் கொண்டவர் மகனது அறைக்கு சென்றார்.

கட்டிலில் மல்லாக்கப் படுத்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவன்¸ தாயார் வந்ததைக் கண்டதும் “இவள் எப்படி இங்கே…?” என்று கேட்டான்.

“நீ ஒரு ஏஜென்டிடம் வேலைக்கு ஆள்தேவை பற்றி விளம்பரம் கொடுத்திருந்தாயே… அவர் மூலமாகத் தான் வந்தாள். ஏன்… நீ அதுக்கு அப்புறம் அதைப்பற்றி அவர்கிட்ட பேசலையா?” என்று கேட்டார்.

“இல்லைம்மா…¸ நான் வீட்டோடு தங்குவதற்கு யாரும் ஒத்துக்கலைன்னா… வேறு ஐடியாவை செயல்படுத்தலாம்னு இருந்தேன். இனி அது தேவையில்லைனு நினைக்கிறேன்” என்றவன் எழுந்து சென்று ஜன்னல் வழியாக வெளியே நின்றவளைப் பார்த்தான்.

தோட்டத்தில் மலர்ந்திருந்த ரோஜாவை வருடிக் கொண்டிருந்தாள் அவள். “அம்மா… இவள் யாரென்று ஞாபகம் இருக்கா..?”

“இவளை எங்களால் மறக்க முடியுமா கண்ணா..? எப்போ நீ இவளது புகைப்படத்தை எங்களிடம் காட்டினாயோ… அன்றே அவள் முகம் எங்கள் மனதில் பதிந்துவிட்டது. வேலைக்கு வரப் போகிற பெண்ணின் புகைப்படமாக இவளது இருக்கக் கண்டதும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இருந்தாலும் அதை அவளிடம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவில்லை… நீதான் எங்க மகன்னு அவள் அறிந்துவிடாமலிருக்க உனது படத்தையோ¸ உனது பெயரையோ அவள் தெரிந்து கொள்ளும்படி விடவில்லை” என்றார் தாயார்.

“சரிம்மா… நல்லது. நீங்க அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க” என்றவன் தான் வாங்கி வந்த பொருட்களை வெளியே எடுத்து வைக்கலானான்.

அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவாறே “தம்பி…” என்று யமுனா தயங்க “சொல்லுங்கம்மா..” என்றான் மகன்.

“தம்பி.. நீ அந்த வேலையை விட்டுட்டு இங்கே அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தை பார்க்கக் கூடாதா…? அந்த பிள்ளைகளிடம் தொண்டை கிழிய கத்தி பாடம் நடத்த வேண்டுமென்று உனக்கு என்ன ராஜா தலையெழுத்து…?” என்று தான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டார்.

“அம்மா… என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க? நான் எவ்வளவு ஆசையோடு இந்த வேலையை பார்க்குறேன்னு உங்களுக்கேத் தெரியும்… தெரிந்தும் நீங்க…” என்று தன் வருத்தத்தைக் காட்டியவன்¸ தானே தொடர்ந்து

“ஒவ்வொரு மாணவனும் என்னை ஒரு வழிகாட்டியாக நினைச்சி சந்தேகங்கள் கேட்கும்போதும்… அதை நான் அவங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கும்போது அவங்களோட முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது… எனக்கு எவ்வளவு நிறைவா இருக்கும் தெரியுமா?” என்றான்.

“உன்னோட கனவு¸ லட்சியம் எல்லாமே இந்த வேலைதான்னு எனக்கு நல்லாவே தெரியும்ப்பா… ஆனால் இப்போதெல்லாம் அப்பாவால் எல்லா வேலைகளையும் முன்போல கவனிக்க முடியலைப்பா…” என்று குறைப்பட்டார் அவர்.

“சரிம்மா… அதற்கு வேறு ஆள் போட்டு பார்த்துக்கலாம். அத்தோடு நானும் அடிக்கடி வந்து பார்த்துக்றேன்¸ போதுமா…?”” என்றான் மகன்.

சிரித்தவாறே ஆம் என்று தலையாட்டியவர் “அப்புறம் தம்பி சதாசிவம் மாமா வந்திருந்தார்…”

“என்ன விஷயமா வந்தார்?”

“அவரோட பொண்ணு விஜயாவை உனக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றிப் பேச வந்திருந்தார்”

“அம்மா.. உங்களுக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும்…” என்றான் மகன்.

“நீ இன்னும் அவளையே நினைச்சிட்டு இருக்கியா..? அவதான் உன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகச் சொன்னாயே..!” என்றார் தாயார். மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் அவருக்கு.

“அவள் மறுத்த உடனே நான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணனுமா?” என்றான் சற்று கோபமாகவே.

“என்ன கண்ணா இது? நீ இப்படி சொன்னால்… எங்களுக்கு எப்போ மருமகள் வந்து..¸ உன் குழந்தைங்களை நாங்க எப்போது கொஞ்சி மகிழப் போறோம்?” என்றவர் “நான் வேணும்னா கீதாகிட்ட போய் பேசட்டுமா?” என்று கேட்டார்.

“வேண்டாம்மா… அவளாவே மனசு மாறி சம்மதிச்சான்னா சரி… யாரோட கட்டாயத்துனாலயும் அவ சம்மதிச்சா அந்த வாழ்க்கை நல்லா இருக்காது. அதோட நானும் அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்கவில்லையே..! போகப் போக எல்லாம் சரியாகிடும்.. நீங்க இதை இப்படியே விட்ருங்க…” என்றவன்

“சரிம்மா¸ நான் குளிச்சிட்டு வர்றேன். நீங்க எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க… பயங்கரமா பசிக்குது…” என்று குளியலறைக்குள் நுழைந்தான்.

வெள்ளை வேட்டியும் பனியனுமாக வந்தவன்¸ சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் உலாவச் செல்ல… அங்கு பரத்துடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த கீதா¸ இவனைக் கண்டதும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவனைப் பார்க்கும்போது ஏனென்றே தெரியாத ஒரு படபடப்பை உணர்ந்தாள் அவள். ஆனால்… இதுவரை அவன் அவளைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாததும்¸ அவளைப் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாததும் அவளது மனதில் வலியை ஏற்படுத்தியது.

‘முன்பு பிடித்திருப்பதாகக் கூறி திருமணம் செய்யக் கேட்டதையும்¸ அன்று முத்தமிட்டதையும் மறந்துட்டானா…?’

சிந்தனை வயப்பட்டிருந்தவளை அழைத்து “கீதாக்கா… சின்ன ஐயா உங்களைக் கூப்பிடுறாங்க… அவங்க ரூமுக்குப் போகணுமாம்” என்று சொல்லிச் சென்றாள் மல்லி.

தன்னைக் கண்ணாடியில் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு¸ அவன் அறைக் கதவைத் தட்டினாள்.

உள்ளே வருமாறு அவன் கூறியதும் உள்ளே சென்றாள். அவன் தன் கையில் நிறைய தாள்களை வைத்து அதைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

அவள் உள்ளே சென்றபிறகும் அவன் எதுவுமே சொல்லாமலிருக்க “என்னை எதுக்காக கூப்டீங்க சர்?” என்று கேட்டாள்.

“நான் ஒன்னும் உனக்கு வாத்தியார் இல்லை… என்னை சர் என்று அழைக்க…” என்றான் முகத்திலடித்தாற்போல.

கோபத்தைக் காட்டிவிடாமல் காத்து “பின்னே முதலாளி என்று அழைக்கவா?” என்று கேட்டாள்.

“சம்பளம் தர்றவங்களையே நீ அப்படி அழைக்கவில்லை. என்னை மட்டும் ஏன் அப்படி அழைக்க வேண்டும்?” என்று அவன் பேச்சை வளர்க்க முற்பட¸ எரிச்சலுற்றவளாக “இப்போ என்னை இதுக்காகதான் வர சொன்னீங்களா?” என்று கேட்டாள்.

மௌனமாக அவன் அவளையே பார்க்கவும் “எதாவது வேலை இருந்தா மட்டும் சொல்லுங்க… செய்றேன். வெட்டியா டைம்பாஸ் பண்றதுக்குன்னா… நான் போறேன்” என்று திரும்பினாள்.

“நில்லு கீதா!” என்றவன்¸ அவள் நின்று திரும்பியதும் “எனக்கு இந்த பேப்பர் கரெக்ஷனுக்கு உன்னோட ஹெல்ப் தேவை. அதுக்காக தான் உன்னை வர சொன்னேன்…” என்றான்.

“நான் எப்படி இதை கரெக்ஷன் பண்ண முடியும்? நோட்ஸ் எடுத்துக் கொடுத்தவர் நீங்க¸ அவங்களும் அதையே படித்து எழுதியிருப்பாங்க. எனக்குத்தான் இதிலிருக்கும் எதுவும் தெரியாதே…?” என்றாள்.

“நான் ஒரு பேப்பர் கரெக்ட் பண்ணித் தர்றேன்¸ கூடவே நான் கொடுத்த நோட்ஸையும்… ரெண்டையும் பார்த்து திருத்து..” என்று சொன்னவற்றையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தான்.

வாங்கிக் கொண்டு நின்றவளை அருகிலிருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டுத் தானும் வேலையில் மூழ்கினான்.

அவன் கொடுத்தவற்றைக் கொண்டு அவள் வேலையை வேகமாக செய்ததைக் கண்டவன்¸ “உனக்கு இங்கிலீஸ் பேசவும்¸ இலக்கணப் பிழையில்லாமல் எழுதவும் நன்றாகத் தெரியும்போது… நீ எப்படி ப்ளஸ் டூவில் ஃபெயில் ஆன?” என்று கேட்டான்.

அவன் திடீரென்று அப்படி கேட்கவும் பதில் சொல்லத் திணறிவிட்டாள்.

“உனக்கு இங்கிலீஸ் வராதுன்னு மட்டும் பொய் சொல்லிடாதே..¸ நான் நம்பமாட்டேன்…”

“நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை” என்றாள் அவள் விட்டேற்றியாக.

“பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தவள்… பன்னிரெண்டாம் வகுப்பில் மற்ற பாடங்களில் தொண்ணூறு சதவீத மதிப்பெண் வாங்கியவள்… இங்கிலீஸ்ல மட்டும் எப்படி பெயிலாக முடியும்?” என்றான் தன்னிடமே பேசுவதுபோல.

“ஹலோ சர்..¸ நான் அதை எழுதி பாஸ் செய்து மேலும் மூன்று வருடம் படித்து பட்டமும் வாங்கிட்டேன். நீங்க ஏன் இன்னமும் அதையே பேசிட்டு இருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“ரெண்டு வருடம் வீணாகிவிட்டதே என்ற கவலைதான்…” என்றான்.

“என்னைப் பற்றி நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்” என்றவள்¸ எல்லா பேப்பரையும் பார்த்துவிட்டதாகக் கூறி அவற்றையெல்லாம் அடுக்கி எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

Advertisement