அன்பே! என் அன்பே!

அத்தியாயம் – 1

“அம்மா! அவ எழும்பிட்டாளா?” என்ற கேள்வியுடன் வந்து நின்றான் கண்ணன் – தாமரையின் மைந்தன்.

“இல்லப்பா… அவ இன்னு எழும்பலை” என்றார் தாயார்.

“எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்… அதான் அவ இஷ்டப்படி ஆடுறா..” என்றான் கோபமாக.

“சரிப்பா கோபப்படாதே… நான் போய் அவளை எழுப்புறேன்” என்றபடி மகளுடைய அறைக்குச் சென்றார்.

‘ச்சே..! என்ன பொண்ணு இவ! மணி ஒன்பது ஆகப் போகுது… இந்த கும்பகர்ணி இன்னும் தூங்குறா!’ என்று மனதினுள் தங்கையைத் திட்டினான்.

“கீதா! அம்மாடி கீதா எழுந்திரும்மா!” என்று மகளைத் தொட்டு எழுப்பினார் தாமரை.

“ம்ம்… போங்கம்மா இன்னுக் கொஞ்சநேரம் தூங்குறேன்.. ப்ளீஸ்..!” என்று திரும்பி படுத்துக் கொண்டாள்.

“கீதா! என் செல்லமில்லே..! எழுந்திரிடா… அண்ணன் உன்னைக் கூப்பிடுறான்” என்று சொல்லி எழுப்பினார்.

“போங்கம்மா இந்த அண்ணனுக்கு வேற வேலையே இல்லை… எப்ப பாரு என்னை தொந்திரவு செய்துக்கிட்டு இருக்கான்…..” என்று அவள் முடிப்பதற்குள் அண்ணனின் குரல் கேட்டது.

“ஏய் எருமைமாடு! நான் உன்ன தொந்திரவு செய்றேனா? உன் வயசுப் பெண்ணுங்க எல்லாம் காலையில நேரமா எழும்பி அவங்கவங்க அம்மாக்கு உதவியாக எத்தனை வேலை செய்றாங்க. நம்ம தெருவிலேயே போய்ப் பாரு எல்லா வீட்டு வாசல்லயும் எவ்வளவு அழகா கோலம் போட்டிருக்கு தெரியுமா? ஆனால் நீ என்ன பண்றே? நைட்ஃபுல்லா படம் பார்த்துவிட்டு நேரமாகித் தூங்க வேண்டியது. அப்புறம் காலையில நேரமே எழும்புறது கிடையாது. அம்மாக்கு உதவியா ஒரு வேலை செய்யுறதும் கிடையாது” என்று நன்றாக ஒரு லெக்சரை காலையிலே கொடுத்துவிட்டு “தடிமாடு… எழுந்திரிடி…” என்று தங்கையை எழுப்பினான்.

எழுந்தும் படுக்கையை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தவளிடம் “உனக்கு கிளாசுக்கு போக வேண்டாமா? மணி என்னாச்சு தெரியுமா? எழுந்திரு… போ, போய் உன் சென்டருக்கு கிளம்பு!” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டவாறே அவளைப் படுக்கையிலிருந்து தூக்கிவிட்டான்.

“ச்சே! இந்த வீட்ல ஒரு மனுஷிய நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டான் இந்த முட்டக் கண்ணன்” என்ற முணுமுணுப்புடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“பாத்தீங்களாம்மா… நான் அவளுக்கு முட்டக் கண்ணனாம்!  இவ என்றைக்குத்தான் திருந்தப் போறாளோ?” என்றான்.

“என்ன கண்ணா? சின்னப் பொண்ணுதானே! உன்கிட்ட பேசாம அவ வேற யார்கிட்ட இப்படிப் பேச முடியும்?” என்றார் தாயார் அன்பாக.

“சின்னப் பொண்ணா! வயசு பத்தொன்பதாகுது… நீங்க என்னடான்னா அவளை சின்னப் பொண்ணுன்னு சொல்றீங்க” என்றான்.

“எத்தனை வயசானாலும் அவ நம்ம வீட்டு சின்னக் குட்டிதான்டா” என்றார் தாயார்.

“என்னவோ போங்க… நீங்களாச்சு உங்க மகளாச்சு! இந்த முறையாவது அந்த பாடத்தை எழுதி பாஸ் பண்ண சொல்லுங்க. ஆஃபீஸ்ல கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று எரிச்சலைக் காட்டி சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

ஆஃபீசுக்கு செல்வதற்காக தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தவனிடம் “அண்ணா… என்னை சென்டர்ல விட்டுட்டுப் போயேன். இனி சைக்கிள்ல போனா நேரமாயிடும்” என்று வந்து நின்றாள் தங்கை.

“ம்… அதை இவ்வளவு நேரம் தூங்கும்போது யோசித்திருக்கணும் தங்கச்சி” என்றான் தமையன்.

“அண்ணா… ப்ளீஸ்..!” என்று கெஞ்சியவளிடம் “போடி தடிமாடு! ஏற்கனவே எனக்கு லேட்டாயிடிச்சு. இதில் உன்னையும் விட்டுட்டுப் போகணும்னா… நான் ஆஃபீசுக்கு போய் சேரும் போது கண்டிப்பா மணி பத்துக்கு மேலாயிடும். அதனால நீ உன் சைக்கிள்லயே போ… நான் போறேன்” என்று போய்விட்டான்.

“அண்ணா! ஏய் அண்ணா!” என்று கத்தி அழைத்தவள்¸ அவன் நிற்காமலே போய்விட்டான் என்றதும் “சரியான முட்டக்கண்ணன்” என்று தாயாரிடம் திரும்பி “அம்மா உங்க பையன்கிட்ட சொல்லி வைங்க… சும்மா சும்மா என்னை தடிமாடுன்னு சொல்ல வேண்டாம்ன்னு…” என்றாள் கோபமாக.

“அண்ணன்தானம்மா சொன்னான்” என்றார் தாயார் சமாதானப்படுத்தும் விதமாக.

“அண்ணன்னா அப்படி சொல்லலாமா? நான் என்ன பார்க்கிறதுக்கு அப்படியா இருக்கேன்?” என்றாள் இன்னமும் கோபமாகவே.

“அப்படி இல்லம்மா… அண்ணன் தெரியாமல் சொல்லிட்டான். இனிமேல் தடிமாடுன்னு சொல்ல வேண்டாம்….” என்று முகத்தில் சிரிப்புடன் இழுத்தவரிடம் “என்னம்மா ‘வேண்டாம்ன்னு…’ நீங்க இழுக்கிறதைப் பார்த்தால் நீங்களே வேற பெயரை சொல்லிக் கொடுப்பீங்க போல” என்றாள்.

“அடடா! நான்  எதுவும் மோசமான பெயரை சொல்வேனா? அதுவும் இந்த அழகான வட்ட முகத்தில் திராட்சை போன்ற கண்கள்¸ ஆரஞ்சு சுழை போன்ற உதடுகள்¸ மாம்பழ கதுப்புக் கன்னங்கள்¸ கோதுமை நிறமுடைய என் மகளைப் பார்த்து…” என்று தன் மகளது அழகை பெருமையோடு வர்ணித்தவர்¸ சிரிப்புடன்  “அதனால இனிமே கண்ணனிடம் என் மகளை அழகான கன்றுக்குட்டின்னுதா கூப்பிடணும்னு சொல்லிடுறேன்” என்றார்.

“என்ன!! தடிமாடு போய் இப்போ கன்றுக்குட்டியா? ஆனாலும் அம்மா… நீங்கள் சுத்த மோசம்” என்றாள் மகள் புன்னகையுடன்.

“நா உங்களுக்கு மனிதப் பிறவியாவே தெரியலை போல… வேணுன்னா பாருங்க ஒருநாள் உங்க கண்ணனை முட்டித் தள்ளிடுவேன்” என்று சிரித்தவாறே தன் சைக்கிளை எடுத்தவள் “நான் போயிட்டு வர்றேன்மா..” என்று தாயாரிடம் விடைபெற்றாள்.

“சரிடா குட்டி பார்த்து போயிட்டு வா…” என்றவருக்கு “ம்…” என்று தலையசைத்தவாறே சைக்கிளை மிதித்தாள்.

‘இனிமே நைட் ரொம்ப நேரம் முழிச்சிருந்து படம் பார்க்கக் கூடாது. அதனால தான் காலையில எழும்ப இவ்வளவு நேரமாகுது. இன்னிக்கும் அண்ணன் எழுப்பலன்னா அவ்வளவுதான்… அந்த கிழத்திடம் போய் நன்றாக வாங்கிக் கட்ட வேண்டும்’ என்றெண்ணியவாறே வாட்சைப் பார்த்தாள்.

‘ஐயையோ! மணி பத்தைத் தாண்டிவிட்டதே!’

‘இந்த கண்ணன் என்னை சென்டரில் விட்டுப் போயிருக்கலாம். ஒருநாள் ஆஃபீசுக்கு லேட்டாப் போனால் குறைஞ்சா போய்டுவான்’ என்று அண்ணனுக்கு மனதில் அர்ச்சனை நடத்தியவாறே சைக்கிளை விரைவாகச் செலுத்தினாள்.

‘அப்பாடி! ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு…’

சைக்கிளை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு தான் போக வேண்டிய கட்டிடத்தைப் பார்த்தாள்.

அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். பலதரப்பட்ட அலுவலகங்கள்¸ கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன. லிஃப்ட் வசதியும் கிடையாது என்பதால் வேக வேகமாகப் படியேறினாள். மூன்றாவது மாடிக்குச் செல்ல வேண்டுமே! அங்குதான் அவள் படிக்கும் ‘டுடோரியல் சென்டர்’ இயங்கிக் கொண்டிருக்கிறது.

பிளஸ் டூவில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. அதைத்தான் ‘இந்த முறையாவது பாஸ் பண்ண வேண்டும்’ என்று கண்ணன் தாயாரிடம் கூறிக் கொண்டிருந்தான்.

அவளது வகுப்பறையை நெருங்கிவிட்டவள் வாட்சைப் பார்த்தாள்… பத்து முப்பது. ‘போச்சு! இந்த கிழம் எல்லார் முன்னாடியும் என்னை ஏதாவது சொல்லி இன்சல்ட் பண்ணப் போகுது…’ என்று பயந்தபடியே அறை வாசல் முன்போய் நின்றாள்.

அப்போதுதான் மற்ற மாணவர்களின் சத்தம் கேட்கிறதே என்று நிமிர்ந்து பார்த்தவள் ‘அட அந்தாளு இன்னும் வரலை…’ ஆசிரியர் வந்திருக்கவில்லை என்றானதும் நிம்மதியுற்றவளாக சென்று தன் இருக்கையான கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.

“கல்பனா¸ சார் ஏன் இன்னும் வரலை?” என்று அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டாள்

“தெரியலக்கா…”

“டேய் மணி! உனக்குத் தெரியுமா?” என்று ஒருவனிடம் கேட்க¸ அவனும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டுத் திரும்பி பேச ஆரம்பித்துவிட்டான்.

அவர்கள் சமீபத்தில் வெளியான திரைப்படங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். கீதாவின் அருகிலிருந்த மாணவிகளும் அதில் ஈடுபட்டிருக்க போரடித்துப் போனவள் டெஸ்க் மீது தலை சாய்த்தாள்.

சற்றுநேரம் தலையை சாய்த்து வைக்கலாம் என்று சாய்ந்திருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.

அவள் விழித்தபோது வகுப்பில் பழைய சலசலப்பு எதுவும் இன்றி ஒருவித அமைதியுடன் இருந்தது. ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயர்¸ ஊர் மற்றும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு அமர்வது தெரிந்தது.

யாரிடம் சொல்கிறார்கள்? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே… அவளுக்கு அருகிலிருந்த கல்பனாவின் முறை வந்து அவளும் சொல்லிவிட்டு அமர்ந்து இவளை உலுக்கினாள்.

மறுபுறமிருந்த உஷாவும் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டாள்.

அடுத்த நிமிடத்தில் “ஓ.கே. எல்லாரும் உங்களப் பற்றி சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமான ஒரு ஆண் குரல் கேட்டது.

சட்டென நிமிர்ந்தவள் “நான் இன்னும் சொல்லலை” என்று எழுந்து நின்றாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன் முன்புறமிருந்த மேஜைமேல் சாய்ந்து நின்றபடியே “எல்லாரும் சொல்லும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று ஏளனமாகக் கேட்டான்.

தூங்கியதைக் கூற முடியாதென்பதால் அவள் அமைதியாக தலைகுனிந்து நின்றாள்.

“உன்கிட்ட தான் கேட்கிறேன்¸ கேட்டால் பதில் சொல்லத் தெரியாதா..?” என்று மேஜையில் ஓங்கித் தட்டியவன் “ஒருவேளை தூங்கிட்டியோ?” என்றான்.

‘ஜயோ போச்சு!! கண்டுபிடிச்சிட்டான்…’ என்று நினைத்தவள் பதில் சொல்லும் முன்பாக¸ அவனே

“நான் வந்து இருபது நிமிடங்களுக்கு மேலாகிறது.. மற்ற அனைவரைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நீ இப்படி விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நிஜமாகவே நீ தூங்கிவிட்டாய் என்றுதான் தோன்றுகிறது. அப்படித்தானா?” என்றான் கேலியான குரலில். அதற்க்கும் பதில் இல்லை என்றதும்

“அப்படித் தூங்குவதுதான் முக்கியம் என்றால் வீட்டிலேயே இருக்கலாம்… இங்கே வந்து நேரத்தை போக்க வேண்டாம்” என்று சற்று கடுமையான குரலில் கூறிவிட்டு அவளது பதிலுக்காக சில வினாடிகள் காத்திருந்தான்.

அவன் கேலியாகக் கேட்டபோது மட்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்¸ மறுபடியும் தலைகுனிந்தவாறே நிற்கவும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

“ஆன்ஸர் மீ…” என்று குரலை உயர்த்தினான்.

திடுக்கிட்டாலும் அப்படியே நின்றவளிடம் குரலை சற்று தாழ்த்திக் கொண்டு “கேள்விக் கேட்டா பதில் சொல்ல முடியாதா? வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே! வாயை திறந்து பதில் சொல்லு…” என்றான் கோபமாகவே.

அவளுக்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ‘இப்போதுதான் என்னை முதல் முறையாகப் பாக்கிறான். அதற்குள் என்னமா பேசுறான்’ என்று நினைத்துக் கொண்டவள் “சாரி சார்… ஏதோ யோசனையில் நீங்க வந்ததை கவனிக்கல” என்று மன்னிப்பு கேட்டாள்.

“என்ன!! ஏதோ யோசனையா? படிக்க வர்றவங்களுக்கு கிளாஸ்லதான் கவனம் இருக்கனுமே தவிர வேற யோசனையெல்லாம் இருக்கக்கூடாது. அப்படி கண்ட கண்ட யோசனையெல்லாம் உங்க வீட்டோடு இருக்கட்டும்” என்றவன் “ம்… சரி உன்னைப் பற்றி சொல்லு” என்றான்.