அத்தியாயம் – 55

அழைப்பு மணியை ஷண்முகம் அழுத்தும் முன்னரே கதவு திறக்க, அந்தப் புறம் நின்றிருந்த சினேகா, மெல்லிய புன்னகையோடு,“வாங்க” என்று விருந்தினர்களை வரவேற்றாள்.

இரண்டு சிறிய பெட்டிகளைக் தூக்கிக் கொண்டு பெரியம்மா, பெரியப்பா, ஜெயந்தி அக்காவின் கணவன் ரங்கநாதனோடு வீட்டிற்குள் வந்தான் ஷண்முகம். இன்றைக்கு டிரைவருக்கு விடுமுறை அளித்திருந்ததால் இவர்களை அழைத்து வர அவன் தான் இரயில் நிலையத்திற்கு சென்றிருந்தான்.

சமையலறையிலிருந்து வந்த விஜயா,“வாங்க மாமா, வா மகா, மாப்பிள்ளை வாங்க.” என்று சாதாரணமாக அனைவரையும் வரவேற்றார்.

அதற்கு,”எங்கே டீ அவ?” என்று தங்கையிடம் சீறினார் மகாலட்சுமி.

“இப்போதானே வந்திருக்க..முகம் கழுவிட்டு வா..டிஃபன், சாப்பாடு இரண்டு தயாரா இருக்கு..சாப்பிடுங்க..அப்புறம் நிதானமா பேசலாம்.” என்று பொறுமையாக பதில் அளித்தார் விஜயா.

“சின்னத்தை சொல்றது சரி..ஆறமர பேசுவோம்..அதுக்கு தானே இத்தனை தூரம் வந்திருக்கோம்..இராத்திரி வரை நேரமிருக்கு.” என்றார் ரங்கநாதன்.

அதற்கு,”இப்போவே அவளை நம்மகூட அழைச்சிட்டுப் போயிடணும்னு வேகம் வருது மாப்பிள்ளை.” என்றார் மகா.

“அதுக்கு தானே வந்திருக்கோம் அத்தை..எங்கே போயிடப் போறா?” என்று ரங்கநாதன் அவனுடைய அக்காவைப் பற்றி பேசிய பாணியில் கோபமடைந்த ஷண்முகம்,

“அக்கா விருப்பப்படி தான் நடக்கும்..அவளுக்கு உங்களோட வர விருப்பமில்லைன்னா அவளைக் கட்டாயப்படுத்த மாட்டீங்கண்ணு நினைக்கறேன் மாமா.”என்று அழுத்தமான குரலில் பேசினான் ஷண்முகம்.

அதற்கு பதிலுரைக்க வந்த ரங்கநாதனிடம்,”அந்தப் பக்கத்திலே இருக்கற அறை உங்களுக்கும் மாமாக்கும் மாப்பிள்ளை..மகா நீ என்னோட வா.” என்று சொல்லி நடக்கவிருந்த யுதத்தை சிறிது நேரத்திற்கு தள்ளிப் போட்ட விஜயாவிற்குத் தெரியவில்லை அவரது முயற்சி தோல்வியைத் தழுவப் போகிறதென்று.

விஜயாவோடு அவரின் படுக்கையறைக்கு சென்றார் மகா.  அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது நிலைக்கண்ணாடி எதிரே நின்றபடி அவளது கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள் வசந்தி. அடர் மரூன் நிறத்தில் சமிக்கி வேலைப்பாடு செய்திருந்த சல்வார் கமீஸ்ஸில் பத்து வயது குறைந்து இளமையாக காட்சி அளித்தாள். ஷிக்காவின் உபயத்தில் அவளது தோற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. சில மாதங்களாக சரியாக பராமரிக்காத அவளது கூந்தல் இப்போது அவள் முகவெட்டிற்கு ஏற்றார் போல் குட்டையாக வெட்டி சீர் செய்யப்பட்டு இருந்தது. தினமும் இரண்டு வேளை குளிப்பதை வழக்கமாக்கி இருந்ததால், சில நிமிடங்களுக்கு முன்பு குளியலை முடித்துக் கொண்டு வந்திருந்ததால் பளிச்சென்று இருந்தாள் வசந்தி. அவளுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்ந்தெடுப்பது முதல் தைத்துக் கொடுப்பது வரை ஷிக்காவிடம் ஒப்படைத்திருந்தாள். அதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக புது உடைகளைக் கடைக்கு அணிந்து சென்று ஷிக்காவின் கடையில் இருந்த பொம்மைகளுக்கு போட்டியாக உயிருள்ள மாடலாக மாறியிருந்தாள். 

வசந்தியின் உடையைப் பார்த்து, வியந்து, பாராட்டிய வாடிக்கையாளர்கள் சிலர் அதே போல் தைத்துக் கொடுக்க ஷிக்காவிடம் ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். அப்போது,’சினேஹாக்கு நான் ஏதாவது தைச்சு கொடுத்தா ஆயிரம் குறை சொல்லுவா..நீங்க அப்படியில்லை தீதி..நான் தேர்ந்தெடுத்து தைச்சுக் கொடுக்கறதை சந்தோஷமாப் போட்டுக்கிட்டு கடையைச் சுத்தி சுத்தி வர்றீங்க..உங்களைப் பார்த்து நிறைய ஆர்டரும் வருது..இது போல ஒரு மாடல் கிடைச்சிருக்கறது என்னோட அதிர்ஷ்டம் தீதி.’ என்று அவளது ஆனந்தத்தை நன்றியை வசந்தியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.

மீண்டும் அவளது வாழ்க்கையில் அதுபோலொரு அவல நிலை அவளுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் அதை நம்ப மறுக்கிறது வசந்தியின் மனம். அதை நம்ப வைக்க அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் தான் உடல், உடை மீது அவளது அதிக்கபடியான கவனம். அவரது அலமாரியில் குமிந்து போகும் புது உடைகளைப் பார்த்து கவலைக் கொண்ட விஜயா,’எத்தனை லேட்டானாலும் குளிச்சிட்டு, ராத்திரிக்கும் புதுசு போட்டுக் கிட்டு தான் படுக்கறா..காலைலே வீட்லே போட்டுக்கிட்டதை கடைலேர்ந்து வந்த பிறகு மறுபடியும் போடறதேயில்லை…திடீர்னு சில சமயம் அர்த்த ராத்திரிலே குளிக்கறா..’என்ன ஆச்சுன்னு கேட்டா..ஒண்ணுமில்லை சித்தின்னு சொல்றா’ ஒரு நாளைக்கு எப்படியும் நாலு டிரெஸ் ஆகிடுது….அவளுக்கு வேணுங்கறதை செய்து கொடுக்கணும்னு ஷிக்காகிட்டே சொன்னது இப்படி ஆகும்னு நான் நினைக்கலை..இது எங்கே போய் முடியும்னு பயமா இருக்குது கண்ணு.” என்று சினேகாவிடம் அவரது கவலையைப் பகிர்ந்து கொள்ள, அதை அனிதாவிடம் கடத்தினாள் சினேகா.

‘அழுக்கு, அசிங்கம்னு நாம ஒதுக்கி வைக்கற சமாசாரத்திலே சாதாரணமா இருந்திருக்காங்க..அதிலே சாப்பாடு சாப்பிட்டு இருக்காங்க..தூங்கி இருக்காங்க..எதுவும் நடக்காத மாதிரி சாதாரணமா வாழ்ந்திருக்காங்க..அவங்க இருந்த நிலையை நீயே நேர்லே பார்த்திருக்க..இப்போ அந்த மாதிரி இல்லைன்னு அவங்க மனசு உணர்ந்தாலும், அது போல நடக்க வாய்ப்பில்லைன்னு நம்பினாலும் அதிலிருந்து மீண்டு பழைய மாதிரி ஆகறத்துக்கு அதுக்கு அவகாசம் தேவைப்படும்..இப்போ செய்யறதை விட ரொம்ப மோசமாகி அடிக்கடி குளிச்சிட்டு உடை மாத்திட்டு இருந்தா வேற விதமா தான் இதை ஹாண்டில் செய்யணும்.’ என்று சொல்லியிருந்தார்.

அந்தளவிற்கு மோசமாக இருக்கவில்லை வசந்தியின் பழக்கங்கள். எந்த நேரத்திலும் அதாவது வீட்டிலிருந்தாலும் சரி கடையில் இருந்தாலும் சரி வெகு சுத்தமாக, நேர்த்தியாக அவளை வைத்துக் கொண்டாள். அதன் விளைவாக ஆரோக்கியமாக அழகாக மாறியிருந்தாள் வசந்தி. புருஷன் வேண்டாமென்று வந்த மகளின் இந்த கண்ணுக்கு நிறைவான தோற்றம் மகாவின் மனத்தில் பயங்கரமான கோபத்தை உண்டாக்க, பாய்ந்து சென்று அவளது கண்ணத்தில் ஓர் அறை விட்டார். 

அந்தச் சத்தத்தைக் கேட்டு வரவேற்பறையில் இருந்த மற்றவர்கள் படுக்கையறைக்கு வர,”புருஷனை வேணாம்னு சொல்லிட்டு எவனுக்காக டீ இப்படிச் சீவி சிங்காரிச்சிட்டு இருக்க?” என்று மகாவின் வாயிலிருந்து வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்தன.

கண்களில் கண்ணீர் வழிய, கன்னத்தில் கை வைத்தபடி மகாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தியின் அருகில் விரைந்து வந்த விஜயா,”கண்ணு” என்று அவளை அணைத்துக் கொண்டார். படுக்கையறை வாயிலில் நின்றிருந்த ஆண்களைத் தள்ளிக் கொண்டு வந்த சினேகாவும் வசந்தியின் கரங்களை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள்.

”என்ன டீ கண்ணுன்னு அவளைக் கொஞ்சிட்டு இருக்க..திமிரெடுத்த கழுதை..தாலியைக் கழட்டி வீசிட்டு புருஷன் வேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கறவளை உன் வீட்லே உட்கார்த்தி வைச்சு சீராட்டிட்டு இருக்க..இவளாலே மத்த இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் கெட்டுப் போயிடும்.” என்று விஜயா மீது கோபம் கொண்டார் மகா.

“பெரியம்மா, இன்னொருமுறை வசந்தி அக்காவைப் பற்றி ஏதாவது தப்பாப் பேசினீங்க அவ்வளவு தான்.” என்று மகாவை எச்சரித்தான் ஷண்முகம்.

“என்ன டா அவ்வளவு தான்..அவ நான் பெத்த மக..அவளை என்ன வேணும்னாலும் செய்வேன்..அடிப்பேன், உதைப்பேன், கொலை கூட பண்ணுவேன்.” என்று வெறி பிடித்தார் போல் கத்தினார் மகாலட்சுமி.

அதற்கு,”சரி உங்க விருப்பம் போல செய்ங்க அப்படியே உள்ளே போகறத்துக்கும் ரெடியா இருங்க.” என்றான் சாவதானமாக பதில் அளித்தான் ஷண்முகம்.

அவர்கள் திட்டமிட்டு வந்தது போல் இங்கே எதுவும் நடக்கப் போவதில்லை என்று யுகித்த ரங்க நாதன்,”அத்தை, இப்போ எதுக்கு நீங்க இவ்வளவு ஆவசேப்படறீங்க? இரயில்லே வந்தது களைப்பா இருக்குது..முதல்லே குளிச்சு ரெடியாகாலம்..டிஃபன் சாப்பிடலாம்..அப்புறமா நிதானமா பேசி வசந்திக்குப் புரிய வைக்கலாம்.” என்றார்.

அவளது கண்ணீரைத் துடைத்தபடி, ரங்கநாதனிடம்,”என்ன புரிய வைக்கப் போறீங்க?” என்று அழுத்தமான குரலில் கேட்டாள் வசந்தி.

அதற்கு ரங்க நாதன் பதிலளிக்கும் முன் அவரை முந்திக் கொண்ட மகா,“உனக்கு பிள்ளைக்குட்டி கூட இல்லை டீ..பொம்பளை தனியாக் காலம் தள்ள முடியாது டீ..மாப்பிள்ளை கால்லே விழுந்து, அவர் கேட்டதை விட நிறைய பணத்தைக் கொடுத்து உன் வாழ்க்கையை சீர் செய்யறோம்..மகன் ஸ்தானத்தில்லே நின்னு நமக்காக பேச பெரிய மாப்பிள்ளை தயாரா இருக்கார்..இந்த வாய்ப்பை தவற விட்டா திரும்ப கிடைக்காது டீ..புரிஞ்சுக்க டீ.” என்றார்.

“என் கூட வாழத் தயாரா இருக்கேன்னு அவன் சொன்னானா?” என்று கேட்டாள் வசந்தி.