சில மணி நேரங்களுக்கு முன்பு அவர்களை வரவேற்றது போலவே இப்போதும் மதன் அவரது பில்டிங் வாயிலில் நின்று கொண்டிருந்தார். இந்தமுறை அவர்கள் மூவரையும் அவரது ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததும், ஒரு கதவைக் காட்டி,”அவங்களை அந்த ரூமுக்கு அழைச்சிட்டுப் போ டா..நான் கீழே போயிட்டு அண்ணியை அனுப்பி வைக்கறேன்.” என்றார்.
“இருங்க..நானும் வரேன்.” என்று அவரிடம் சொன்னவன், சினேகாவிடம்,”நீ அக்காவோட இங்கே இரு.” என்று சொல்லி விட்டு மதனோடு கீழே சென்று விட்டான்.‘அக்காவிற்கு உடம்பு சுகமில்லை..அவசரமாக தங்குமிடம் ஒன்று தேவை.’ என்ற அவனது மெசேஜுக்கு .’வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடு..அண்ணி வீட்லே தான் இருக்காங்க..எங்களோட கிளினிக் பக்கத்திலே இருக்குது..எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.’ என்று பதில் கிடைத்தவுடன் ஷண்முகத்தின் டென்ஷன் காணாமல் போனது. அவனுக்குத் தெரிந்ததை, அக்கா வீட்டில் நடந்ததை மதனிடம் பகிர்ந்து கொள்ள தான் அவரோடு கீழே சென்றான்.
மதனோடு அவருடைய அண்ணன் வீட்டில் நுழைந்த போது சோஃபாவில் அமர்ந்திருந்தனர் அனிதாவும் சுதனும். ஷண்முகத்தைக் கண்டு கொள்ளாமல் அவனது வேலையில் கவனமாக இருந்தான் சுதன்.
அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு சாப்பாடு மேஜைக்கு ஷண்முகத்தை அழைத்துச் சென்றார் அனிதா. வசந்தி அக்காவைப் பற்றி அவனுக்கு தெரிந்த விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டான் ஷண்முகம். சுதனுக்குத் துணையாக மதன் இருக்க ஷண்முகமும் அனிதாவும் மதனின் வீட்டிற்கு சென்றனர்.
மதனின் படுக்கயறையில் படுத்திருந்த வசந்தி இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தாள். வசந்தியின் முகத்தைக் கழுவி விட்டு தலையைச் சீர் செய்திருந்தாள் சினேகா. வசந்தியை மேல் பரிதாபம் வராமல் கோபம் தான் வந்தது அனிதாவிற்கு. அதை வெகு அழகாக, ஆழமாக வெளிப்படுத்தவும் செய்தார்.
அவரைப் பார்த்து லேசாக முறுவலித்த சினேகாவிடம்,”மனத் தைரியமில்லாத பெண் எதுக்கு கல்யாணம் செய்துக்கணும் கடைசிவரை அப்பா, அம்மாவோடவே காலத்தை கழிக்க வேண்டியது தானே..எதுக்கு ஓர் ஆம்பளையோட வாழ்க்கையைக் கெடுக்கணும்?” என்று கேட்க சினேகாவிற்குத் திக்கென்றானது.
பிரச்சனையைத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரென்று நினைத்த ஷண்முகம்,”மேம்” என்று ஆரம்பிக்க, கண்களால் அவனுக்கு அவர் எச்சரிக்கை விடுக்க, பட்டென்று வாயை மூடிக் கொண்டான் ஷண்முகம்.
“ஒத்துப் போகலைன்னா ஒண்ணும் வேணாம்னு நீ முடிச்சுக்கணும்..இல்லைன்னா இதுதான் நமக்கு கிடைச்சதுன்னு முழுங்கிக்கணும். இரண்டுமில்லாம இழுத்திட்டு இருந்தா உன்னோட வாழ்க்கை சுவையா மாற அதுயென்ன ஜெல்லி டாஃபியா?” என்று சினேகாவைக் கேட்பது போல் வசந்தியைப் பார்த்துப் பேச, அவள் மூலமாக வசந்தி அண்ணிக்கு சில விஷயங்களைக் கடத்த நினைக்கிறாரென்று சினேகாவிற்குப் புரிந்து போக, அவரது நாடகத்தில் அமைதியாக பங்கேற்றாள்.
சற்று முன்னர் தான் மதனைப் பற்றியும் அவரின் குடும்பத்தினரைப் பற்றியும் வசந்தியிடம் பகிர்ந்திருந்தாள் சினேகா. ஷண்முகத்தின் உயர் அதிகாரி மதன். மதனின் அண்ணன், அண்ணி இருவரும் மருத்துவர்கள் என்று வசந்திக்கு தெரியப்படுத்தி இருந்தாள். அதனால் தான் அனிதாவின் பேச்சு கறாரான பேச்சை பயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் வசந்தி.
தாலியைக் கழட்டி விட்டெறிந்ததை நினைத்து வருந்துவதோ இல்லை வருத்தப்பட வைப்பதோ வசந்தியின் எதிர்காலத்திற்கு எமனாக அமையும் என்பதால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கூடிய எண்ணமே வரக் கூடாதென்ற முடிவில் தான் வசந்தியைக் காண வந்திருந்தார் அனிதா.
“நாம இதைச் செய்யறோம் பதிலுக்கு அவங்க அதைச் செய்யணும், நாம பொறுத்துப் போனா அவங்க புரிஞ்சுகிட்டு நடக்கணும், நமக்கு முடியலைங்கறது நாம சொல்லாமலேயே தெரியணும், எனக்கு அவங்க முக்கியம்னா, அவங்களுக்கு நான் முக்கியம்மா இருக்கணும்..இப்படி கல்யாண வாழ்க்கையைக் கண்டிஷன் வாழ்க்கையா வாழ்ந்தா அது சண்டையா தான் போகும்..எதிர்பார்ப்பு வட்டத்துக்குள்ளே போயிட்டா அதைச் சுத்தி சுத்தி வந்து இரண்டு பேருக்கும் மூச்சு முட்டிப் போகும்..எந்த உறவையும் எதை வைச்சும் கட்டிப் போட முடியாது..முக்கியமா கணவன், மனைவிங்கற பந்தத்தை ஒரு கயிறாலே இழுத்துப் பிடிச்சு வைக்க இயலாது, வலுவாக்க முடியாது..கணவன், மனைவிக்கு இடையே அன்பு, மரியாதை இரண்டும் ஆழமா இருந்தா தான் அவங்க உறவும் ஆரோக்கியமா, வலுவா வளரும்.” என்று பொதுவாகப் பேசியபடி வசந்தியைச் சோதித்து முடித்தவர்,
“உடனே ஓர் ஊசி போடணும்..சில மருந்துக்கள் கொடுக்கறேன்..இரண்டு நாள் கழிச்சு மனசும் உடம்பும் எப்படி இருக்குன்னு பார்த்திட்டு அவங்க பயணம் செய்ய முடியுமா? இல்லைன்னா என்ன செய்யலாம்னு முடிவு எடுக்கலாம்..நீங்க என்னோட வாங்க ஷண்முகம்” என்று வசந்தியோடு ஒரு வார்த்தை பேசாமல் அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.
வசந்திக்கு சொன்ன அறிவுரைகளை அவளுக்கானதாக எடுத்துக் கொண்டாள் சினேகா. பல வருடங்கள் ஒன்றாக, ஒரே கூரையின் கீழ் கணவன், மனைவியாக, இரண்டு குழந்தைகளின் பெற்றோராக, அன்பு மறைந்து போய், மரியாதை குறைந்து போய் கடமைக்காகவாழ்ந்ததால் தான் அவளுடைய அம்மா, அப்பாவின் கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று புரிந்தது. கடமைக்காக கூட வெங்கடேஷ் போன்ற மனிதனுடன் எந்த பெண்ணாலும் வாழ முடியாதென்பதால் வசந்தி அண்ணி எடுத்த முடிவு தான் சரியென்று சினேகாவிற்கு தோன்றியது. அதைப் பெரும் தவறாக வசந்தியின் சகோதரிகள் இருவரும் கருதப் போவது அவளுக்குத் தெரியவில்லை.
கால்மணி நேரம் கழித்து ஊசியோடு வந்தார் அனிதா. ஊசி போட்ட சில மணி நிமிடங்களில் வசந்தி உறக்கத்திற்கு செல்ல, ஷண்முகத்தை துணையாக வைத்து விட்டு சினேகாவும் அனிதாவும் வசந்திக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க அந்தக் காம்ப்ளெக்ஸ்ஸில் இருந்த ஷாப்பிங் செண்டருக்கு சென்றனர்.
வசந்தி உறங்கியதும் அவனுடைய அம்மாவை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லி விட்டான் ஷண்முகம். விஷயத்தைக் கேட்டு லேசாக அதிர்ச்சியான விஜயா,
“சாமி, இந்த மாதிரி ஏதாவது இருக்கப் போகுதுன்னு தான் மனசு கிடந்து அடிச்சுகிச்சு..இப்போ என்ன செய்ய?” என்று மகனிடம் ஆலோசனை கேட்டார்.
“பெரியப்பாக்கு விஷயத்தை சொல்லணும்..அக்காக்கு இரண்டு நாளாவது ஓய்வு தேவைப்படும்..அப்புறம் தான் நாங்க இங்கேயிருந்து கிளம்ப முடியும்.” என்றான்.
“அக்காவும் மாமாவும் பிரச்சனை செய்வாங்க சாமி..அவங்களாலே இதை ஏத்துக்க முடியாது.” என்றார் விஜயா.
“அவங்களை விடுங்க..நீங்க என்ன நினைக்கறீங்க? அக்கா எடுத்த முடிவை உங்களாலே எத்துக்க முடியுதா?” என்று நேரடியாக கேட்டான் ஷண்முகம்.
அடுத்த சில நொடிகள் மௌனத்தில் கழிய, இறுதியில்,”சாமி, வசந்தி எந்த முடிவு எடுத்தாலும் அது தான் என்னோட முடிவு..இத்தனை நடந்த பிறகும் வெங்கடேஷ் மாப்பிள்ளையோட தான் வாழப் போறேன்னு அவ சொன்னா வேணாம்னு நான் சொல்ல மாட்டேன்..அந்த வாழ்க்கை வேணாம்னு அவ தெளிவா இருந்தா அவளுக்குத் துணையா இருப்பேன்..எல்லாம் அவ முடிவு தான் சாமி.” என்றார் விஜயா.
“அம்மா, பிரகாஷ்கிட்டே டாக்ஸி ஏற்பாடு செய்யச் சொல்றேன்..உடனே கிளம்பி வாங்க..உங்களைப் பார்த்தா அக்காக்கு தைரியமா இருக்கும்..முடிவெடுக்க எனக்கு வசதியா இருக்கும்.” என்றான்.
அதே சமயத்தில், ஐ சி யு வாயிலில் நின்று கொண்டிருந்த வெங்கடேஷ் அவனது கைப்பேசியில் உச்சஸதாதியில்,”கால்லே விழுந்து கதறினாலும் விவாகரத்து கொடுக்க மாட்டேன்..வக்கீலுக்கு கொடுத்து என் மொத்த சொத்தை அழிப்பேனே தவிர உன் மகளுக்கு ஒரு பைசா கொடுக்க மாட்டேன்..தாலியை விட்டெறிஞ்ச சிறுக்கியைச் சீரழிக்காம விட மாட்டேன்..எங்கம்மாக்கு ஏதாவது ஆகட்டும் மொத்தமா உங்க குடும்பத்தை உள்ளே வைக்கறேன்..போலீஸ்க்காரன்னா அவன் என்ன பெரிய இவனா..போலீசை வைச்சே போலீஸ்க்காரனை அழிக்கறேன்…உன் மகளுக்கு செலவழிச்சதை தானே கொடுன்னு கேட்டேன்..கல்யாணம் முடிஞ்சதிலிருந்து இன்னைவரை ஒரு பைசா இனாமா கொடுத்திருக்கேயா? உன்னோட மத்த இரண்டு மாப்பிள்ளைகள் மாதிரி உன்கிட்டே பலவிதமா வசூல் செய்தேனா?” என்ற வெங்கடேஷின் மரியாதையற்ற பேச்சை அதற்கு மேல் கேட்க முடியாமல் அந்தப் புறத்தில் இருந்த சபாபதி கைப்பேசி இணைப்பைத் துண்டித்தார்.
இந்தப் பிரச்சனை இப்படி வெடிக்கக் கூடுமென்று அவர் நினைக்கவில்லை. மீதிப் பணத்தை ஷண்முகத்தின் திருமணம் முடிந்ததும் கொடுத்து விடலாமென்று தான் திட்டமிட்டிருந்தார். அதுவரை இதைப் பற்றி யாரிடமும் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது என்று முடிவு செய்து தான் மனைவிக்குக் கூட சொல்லாமல் அனைத்தையும் மனத்தோடு வைத்திருந்தார். இப்போது அவரெதிரே அமர்ந்திருந்த மகள், மாப்பிள்ளை, மனைவி மூவரும் கேள்வியோடு அவரை நோக்க, வேறு வழியில்லாமல் விஷயத்தைச் சொல்லி விட்டார்.
அம்மா, அப்பா, அக்கா, தங்கை, என்று அவளது குடும்பத்தினர் அனைவரும அவளுக்கு எதிராக அணிவகுத்து நிற்க, தனித்துப் போனாலும் அவளது உறுதியிலிருந்து தளர்ந்து போகவில்லை வசந்தி.