அத்தியாயம் – 52

ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்காப்பு யுக்தியைக் கையாண்டு அவர் மறைக்க நினைத்ததை ஷண்முகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார் சீதா. வாசலுக்கு ஒரு செவியைக் கடன் கொடுத்திருந்த ராதிகா அவளுடைய அம்மா பேசியதைக் கேட்டதும் உஷாராகி விட்டாள். அண்ணியைப் பார்க்க அவர்கள் வீட்டிலிருந்து யார் வந்திருக்கிறார்களென்று தெரிந்து கொள்ள சோஃபாவிலிருந்து எழுந்து வாசலுக்கு சென்றவள், அங்கே நின்றிருந்த ஷண்முகத்தை அடையாளம் கண்டு கொண்டவுடன் சீதாவைப் போல் அதிர்ச்சியாகி விட்டாள். அண்ணியின் சகோதரி இல்லை பெற்றோரை எதிர்பார்த்தவளுக்கு ஒன்று விட்ட தம்பி, இதுவரை அவர்களோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியிருந்தவன், போலீஸ்க்காரனை அவள் வீட்டு வாசலில் பார்த்தவுடன் சப்த நாடியும் ஒடிங்கிப் போனது.

“என்னங்க அண்ணனைக் கூப்பிடுங்க.” என்று கணவனுக்குக் கட்டளையிட, அதை நிறைவேற்ற வீட்டினுள்ளே விரைந்து சென்றான் அவளுடைய கணவன்.

சாம்பல் நிறத்தில் சிகப்பு, ஆரன்ஜ் வர்ணத்தில் இக்கத் டிஸைன் குர்த்தி, ஆரஞ்சிகப்பு கலந்த பலட்சோ பேண்ட்டில் கணவனருகே நின்றிருந்தாள் சினேகா. அவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்த அம்மா, பெண் ஜோடிக்கு அவளது கழுத்தில்  இருந்த மெலிதான சங்கிலியைப் பார்த்து குழப்பமானது. ‘இதென்ன கல்யாணமாகி பத்து நாள் ஆகியிருக்குமா அதுக்குள்ளே கழுத்திலே இருந்த தாலியைக் கழட்டி வைச்சிட்டாளா இல்லை தாலி கட்டாத கல்யாணமா?’ என்று சீதாவினுள் சில கேள்விகள் எழுந்தன.  ‘இருக்கும்..இருக்கும்..இவனோட அம்மாவே புருஷனை வேண்டாம்னு சொன்னவதானே..தாலிக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவளோட மருமக வேற எப்படி இருப்பா.’ என்று தாலிக்கு மரியாதை கொடுக்க தெரியாத மகனின் தாயான சீதா, தன்னை ஏமாற்றிய கணவனோடு வாழப் பிடிக்காமல் முறையாக விவாகரத்து செய்து கொண்ட விஜயாவை மனத்தில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் விஜயாவிடமிருந்து ஷண்முகத்திற்கு அழைப்பு வர, அதை ஏற்றவன், பார்வையை அவனெதிரே இருந்தவர்களிடம் வைத்தபடி,”சொல்லுங்க..வந்திட்டேன்..அங்கே தான் இருக்கேன்…எப்போ..சரி நான் ஃபோன் போடுறேன்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனேயே வசந்தியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். 

வீட்டினுள்ளே இருந்த படுக்கையறையொன்றில் வெங்கடேஷின் கணினி அருகே இருந்த வசந்தியின் கைப்பேசி ஒலி எழுப்பியது. அதில் ஒளிர்ந்த ஷண்முகத்தின் பெயரைப் பார்த்து,’காலைலேர்ந்து இவன் அம்மா எத்தனை முறை கூப்பிட்டிருக்காங்க..அவங்க தொல்லையைத் தாங்கமுடியாம அவங்களைப்  பிளாக் செய்தா உடனே இவன் ஃபோன் பண்றான்..இவனையும் இன்னைக்கு பிளாக் செய்தா தான் இந்த வேலையை முடிக்க முடியும்’ என்று ஷண்முகத்தையும் பிளாக் செய்தான் வெங்கடேஷ். அந்த நொடி படுக்கையறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ராதிகாவின் கணவனிடம்,”ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நான் வெளியே வந்த பிறகு தான்..முக்கியமான வேலை..மரத்தான் ஓடிட்டு இருக்கு என் டீம்.” என்றான்.

அதைக் காதில் வாங்காமல், “உன்னோட மாமனார் வீட்லேர்ந்து வசந்தியைப் பார்க்க வந்திருக்காங்க.” என்று ராதிகாவின் கட்டளையை நிறைவேற்றினான் அவளுடைய கணவன்.

“யார்?”

“தெரியலை..’கட்டிக் கொடுத்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கவலையில்லையா, உடம்பு சரியில்லதவளை நாங்க தான் பார்த்துக்கணுமா..உங்களுக்கு பொறுப்பில்லையான்னு’ உங்கம்மா வாசல்லே நிக்க வைச்சு சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க.” என்றான்.

‘ஐயோ..அவளோட நிலையை மறைக்க தானே அவளை இங்கே அழைச்சிட்டு வந்தேன்..அவ குடும்பதோட தொடர்பு இல்லாம கவனமா இருக்கேன்..இப்போ அவளைப் பார்க்க யார் வந்திருக்காங்க..எதுக்கு இந்த அம்மா அவங்கிட்டே வசந்தியைப் பற்றி சொல்லியிருக்காங்க..வாயை மூடிட்டு உள்ளே கூப்பிட்டு உட்கார வைக்க வேண்டியது தானே..இருக்கற பிரச்சனை போதாதுன்னு இவங்க வேற புதுசா இழுத்து விடறாங்க..இன்னைக்குன்னு எல்லாம் இப்படி வந்து சேருது எனக்கு.’ மனதுள் அவனது கோள்களை வைதபடி, பிரேக்கில் போகிறானென்று உயர் அதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு, அவசரமென்றால் ‘கால் மீ’ என்று டீமிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவனுடைய கைப்பேசியை எடுத்துக் கொண்டு ராதிகாவின் கணவனோடு வரவேற்பறைக்கு சென்றான் வெங்கடேஷ்.

“மூணு பொண்ணுக்கும் ஒரே போல செய்ய வக்கில்லைன்னாலும் வக்கனையா பேச மட்டும் வரும் என் சம்மந்திக்கு..என்னை மாதிரி முட்டாள் சம்மந்தியும் என் மகன் மாதிரி ஏமாந்த மாப்பிள்ளையும் கிடைச்சதுனாலே  உன் அக்கா ஓஹோன்னு வாழ்ந்திட்டு இருந்தா..இனியும் நாங்க ஏமாறத் தயாராயில்லை..எந்த குடும்பத்திலே இந்த  அநியாயம் நடக்கும்? வயசான மாமியாருக்கு மருமகள் சிசுருட்சை செய்யறது தான் உலக வழக்கம்…இங்கே தலைகீழா நடந்திட்டு இருக்கு..அவளை உட்கார்த்தி வைச்சு நான் சிசுருட்சை செய்திட்டு இருக்கேன்..” என்றவரின் பேச்சு மேலும் விபரீதமாகும் முன், ஷண்முகத்தை நேராக நோக்கியபடி,

“அம்மா, அவங்க உள்ளே வரட்டும்..எதுக்கு வாசல்லே நின்னு கத்திட்டு இருக்கீங்க? வழி விடுங்க” என்று சீதாவிற்கு அதட்டல் போட்டான் வெங்கடேஷ்.

வீட்டு வாசலில் ஷண்முகத்தைப் பார்த்ததும் பீதியானது வெங்கடேஷிற்கு. காலையிலிருந்து தொடர்ந்து விஜயா அத்தை வசந்தியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தது அவனது வருகையைத் தெரிவிக்க தான் என்று காலம் கடந்து புரிய, ‘மடையா, மடையா’ என்று அவனை அவனே திட்டிக் கொண்டான். இந்தச் சூழ்நிலையில் அவனுடைய அப்பா அங்கே இல்லாதது அவனுக்குப் பெரிய இழப்பாக தெரிந்தது. பல நாள்களாக சென்னைக்கு போகாமல் பெங்களூரிலேயே அவர்கள் இருந்ததால் சென்னை ஃபிளாட்டை விற்பனை செய்ய டீல் அமையவில்லை. யாராவது ஒருவர் ஃபிளாட்டில் தங்கி, விலைக்குக் கேட்பவர்களுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டி, பேரம் பேசி என்று விற்பனைக்கு தேவையானவற்றை செய்தால் சீக்கிரத்தில் டீல் செட்டாகி விடுமென்பதால், அவனுடைய அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த வேலையைச் செய்ய முடியாதென்பதால் நேற்று தான் அவரைச் சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தான் வெங்கடேஷ். 

ஒருபுறம் இந்த நேர்த்தில் அவர் இங்கு இருந்திருந்தால் அவனுக்கு உறுதுணையாக இருந்திருக்குமென்று வெங்கடேஷிற்கு தோன்ற, மறுபுறம் எப்படியும் இந்தச் சூழ்நிலையை ஒரு நாள் சந்தித்து தானே ஆக வேண்டுமென்றும் தோன்ற, பயத்தை வெளியேற்றி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, தைரியமாக ஷண்முகத்தின் பார்வையை நேருக்கு நேராக சந்தித்து அவனை வீட்டிற்குள் அழைத்தான் வெங்கடேஷ். 

வீட்டினுள்ளே சென்ற ஷண்முகத்தைத் தொடர்ந்து உள்ளே சென்ற சினேகா அவளது மனத்தில் உண்டான அவருவருப்பு அவளது முகத்தில் தெரியாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். ‘இந்த மாதிரி பேசற மாமியார் எப்படி அவங்க மருமகளை உட்கார்த்தி வைச்சு செய்யறாங்க? நம்ப முடியலையே.’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது,

“எப்போலேர்ந்து?” என்று சீதாவைப் பார்த்துக் கேட்டான் ஷண்முகம்.

அவன் என்ன கேட்கிறானென்று சீதாவிற்குப் புரியவில்லை. வாசலில் அவனைப் பார்த்ததும் அவர் பேசியது அதற்கு பின் பேசியது என்று அனைத்தும் பொய் என்பதால் எதைப் பற்றி கேட்கிறானென்று அவருக்குத் தெரியவில்லை.

“எப்போலேர்ந்து அக்காக்கு உடம்பு சரியில்லை?” என்று இந்தமுறை அழுதத்துடன் கேட்டான் ஷண்முகம்.

வாய்க்கு வந்ததைப் பேசி விட்டு வசமாக மாட்டிக் கொண்ட சீதா பேய் முழி முழிக்க, அம்மாவின் அந்த நிலையைப் பார்க்க பொறுக்காமல், பொறுமையாக பேச வேண்டுமென்று எண்ணியவன் அந்த எண்ணத்தை உதறி விட்டு,

“அதே நாளே சொல்லியிருந்தா அவ அப்பா, அம்மா வந்து குதிச்சிருப்பாங்களா ?…ஏமாந்த சோணகிரி ஒருத்தன் மாப்பிள்ளையா கிடைச்சிருக்கான் அவனே எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு என் தலைலே மிளகாய் அரைக்கறது தானே அவங்க வழக்கம்.” என்று எகிறினான் வெங்கடேஷ்.

“எல்லாம் உன்னாலே தான் அண்ணா..ஆரம்பதிலிருந்து நீ கெடுபிடியா இருந்திருக்கணும்..உன் பணத்தை போட்டு நீயே எல்லாம் செய்துகிட்ட அதான் இன்னைக்கு இப்படி ஏமாளியா நிக்கற.. அவங்க சின்ன பொண்ணு கல்யாணம் போது கைலே காசு இல்லை அவ அப்பனும் ஒரு பைசா இல்லை இல்லைன்னு அவ அம்மாவும் மெட்டுப் போட்டு பாட்டு பாடினாங்க..இப்போ அவ வீட்டுக்கு ப்ளேன்லே போகாம இறக்கை முளைச்சுப் பறந்து போனாங்களா? ஒரு மகளோட பையனை பெரிய ஸ்கூல்லே டோனேஷன் கொடுத்து சேர்த்து, டர்ம் ஃபீஸ் கட்டி, கணக்குப் பார்க்காம கத்தை கத்தையா பணம் செலவழிக்கறாங்க..இன்னொரு மகளுக்கு வெளிநாட்லே  பிரசவம் பார்க்கறாங்க..முதல் வந்தவனும் கடைசிலே வந்தவனும் காசு இல்லாத வீட்லே சாமர்த்தியமா கறந்திட்டு இருக்காங்க..என் அண்ணன் தான் அவன் சொந்தக் காசைப் போட்டு இத்தனை வருஷமா முட்டாளா இருந்திருக்கான்.” என்று ராதிகாவும் களத்தில் குதித்தாள்.

ஷண்முகத்தின் வருகை அவர்களின் புத்தியை பேதலிக்க வைத்திருந்தது. என்ன பேசுகிறோமென்று தெரியாமல், அவர்கள் மீது குற்றம் வராமல் இருக்க வசந்தியின் குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கி இத்தனை வருடங்களாக மண்டி கிடந்த வன்மத்தை மொத்தமாக கொட்டி அவர்களின் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தினர். 

விருந்தாளி போல் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டதால் உறவு நிலைப் பற்றிய புரிதல் ஷண்முகத்திற்கு இல்லை. ரங்க நாதன், வெங்கடேஷ் இருவருடனும் பெரிதாக பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டதில்லை. சாதாரண விசாரிப்புக்களுடன் அவர்களுடனான உரையாடல் முடிந்து விடும். அதைத் தாண்டி இவனாக அவர்களை கைப்பேசியில் அழைத்து பேசியதோ இல்லை நாடியதோ இல்லை. இவனுடன் தில்லியில் அம்மா இருப்பதால் தான் கடந்த சில மாதங்களாக அக்கா, மாமா, பிரகாஷ், நித்யா என்று நெருங்கிய உறவுகளோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. திருமணம் தேதி நிச்சயமான பிறகு மரியாதை காரணமாக வீட்டு பெரியவர்களோடு சில வார்த்தைகள் பேசி, திருமணத்திற்கான அழைப்பு விடுத்ததோடு சரி. அவர்களும் திருமணத்திற்கு வந்து அதைச் சிறப்பாக நடத்தி கொடுத்து விட்டனர்.  வசந்தி அக்கா மட்டும் வரவில்லை. அவள் விஷயத்தில் அவன் தலையிடுவதை அவனுடைய அம்மா விரும்பவில்லை. அதற்குக் காரணம் வெங்கடேஷ் தான் என்று அவனுக்குத் தெரியும். வசந்தி அக்காவின் திருமண வாழ்வில் அவனால் பிரச்சனை வருவதை அவனும் விரும்பவில்லை.

வெங்கடேஷும் அவனது குடும்பத்தினரும் அவனின் குடும்பத்தினரைப் பற்றி இழிவாக பேசியது அவனுள் பேர்ரதிவை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்றதொரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடுமென்று அவனுக்கு ஒரு துளி கூட ஐடியா இருக்கவில்லை. அக்காவைச் சந்தித்து அவளது உடல் நலத்தை விசாரித்து, அந்த விவரங்களை அம்மாவோடு பகிர்ந்து கொண்டு, முடிந்தால் அக்காவோடு ஒரு செல்ஃபி எடுத்து அதை அம்மாவிற்கு அனுப்பி வைத்து அவரது சஞ்சலத்தை போக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தான். வெங்கடேஷின் அம்மா வாயைத் திறந்த பிறகு தான் வேறு ஏதோ காரணத்தினால் வசந்தி அக்கா அவனுடைய கல்யாணத்திற்கு வரவில்லை என்று ஷண்முகத்திற்குப் புரிந்தது. அந்தக் காரணம் பணம் என்று வெங்கடேஷ் மாமா முதல் அவருடைய தங்கை வரை பேசியதை வைத்து சரியாக கணித்து விட்டான். பணத்தைக் கொடுத்து அவர்களின் வாயை அடைக்க முடியுமென்றாலும் பிரச்சனையின் ஆதி அந்தம் தெரியாமல் பெரியப்பா, பெரியம்மாவின் அனுமதி இல்லாமல் இதில் தலையிட அவன் விரும்பவில்லை. அவர்களின் இழிவான பேச்சால் எழுந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அவனுடைய அம்மாவிற்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடிவு செய்தான் ஷண்முகவேல். 

கல்யாணமான தினத்திலிருந்து கணவனின் உள்ளத்தில் இருப்பதை முகத்தைப் பார்த்து யுகிக்கப் பழகிக் கொண்ட சினேகாவிற்கு இப்போது அவன் என்ன நினைக்கறான் என்று கணிக்கவே முடியவில்லை. சில நொடிகளுக்கு முன்பு அவனது முகத்தில் இருந்தது கோபம் என்று எண்ணியிருக்க இப்போது அது பொய்யோ என்ற அளவிற்கு மாறி இருந்தது அவனது முகம். கிட்டதட்ட பத்து நாள்களாக பல விஷயங்களைப் பேசி, பல கணங்களை அவனோடு நெருக்கமாக கழித்திருந்த மனைவிக்கு இப்போது கணவன் புதியவனாக தெரிந்தான். அவனது பல முகங்களைப் பார்த்துப் பழக்கமாகியிருந்தவளுக்கு இந்த க்ஷணம் அவன் அந்நியனாக இருந்தான். 

‘விஷயம் எதுவும் தெரியாம சாதாரணமா குசலம் விசாரிக்க வந்தவங்ககிட்டே இந்தக் கும்பல் இப்படிப் பாயுது..இந்தப் பிரச்சனைலே இவங்க தலையிட்டா விஷயம் வேற மாதிரி போயிடும்னு இவங்களுக்கு புரிஞ்சதா? கூடப் பிறந்த அக்காவா இருந்தா கூட இந்த மாதிரி சூழ்நிலையை இவங்க எப்படிக் கையாண்டாலும் எல்லோரும் இவங்களைத் தான் குறை  சொல்லுவாங்க..இப்போ இவங்க ஏதாவது பதிலுக்குப் பேசி அது இவங்களோட பெரியப்பா, பெரியம்மா காதுக்குப்  போய், சச்சரவாகி, உறவுலே விரிசல் வந்தா இவங்களை இல்லை இவங்க கூட வந்த நம்மை தான் நம்ம அம்மா முதற்கொண்டு குத்தம் சொல்லுவாங்க’ என்று கவலையடைந்தவள், என்ன செய்து சேதராமில்லாம அந்தச் சூழ்நிலைலேர்ந்து வெளியேறலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். 

கணவன் என்ன நினைக்கறான் என்று யுகிக்க முடியாதது அவளுள் ஒரு விதமான எச்சரிக்கையை விதைத்திருந்ததால் விஷயம் விபரீதமாக மாறும் முன், அந்த வீட்டு பெண்கள் வசந்தி அண்ணியையும் அவரின் குடும்பத்தினரையும் தரக் குறைவாக பேசியதை ஒதுக்கி வைத்து, 

“வசந்தி அண்ணி கல்யாணத்துக்கு வரலை..அவங்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க அத்தை…எங்கே வசந்தி அண்ணி?” என்று கேட்டு, மற்ற விஷயங்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று மறைமுகமாக உணர்த்தி, அவர்கள் வந்த விஷயத்தை சுமூகமாக முடிக்க நினைத்த சினேகாவிற்கு தெரியவில்லை பெரிய பூகம்பத்திற்கு வித்திட்டு விட்டாளென்று.

வசந்தி தங்கியிருந்த அறையின் பக்கம் சீதாவின் பார்வை சென்றதைக் கண்டு கொண்ட ஷண்முகம் அமைதியாக மனைவியின் கேள்விக்கான பதிலிற்காக காத்திருந்தான். வரவேற்பறையிலிருந்து உள்ளே சென்ற பாதையில் இருந்த அறையில் தான் வசந்தி இருக்கிறாளென்று சொல்ல யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. எந்த நிலையில் அவள் இருக்கிறாளென்று கடவுளுக்கு தான் வெளிச்சம். சில சமயம் விடியலில் எழுந்து, தானாக அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்து அந்தத் தினத்தை அமைதியாக கழித்து விடுவாள். சில சமயம் எந்தக் கடமையையும் சரியாக செய்ய மாட்டாள். இன்றைய தினம் அந்த வகையில் தான் சேரும். 

மதிய உணவை வைக்க ராதிகா போன போது காலையில் எப்படி இருந்தாளோ அதே இடத்தில் ஜடம் போல் படுத்திருந்த வசந்தியைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. காலை உணவு அப்படியே இருந்ததைப் பார்த்து, வேகமாக சமையலறைக்கு சென்றவள்,’என் வீடு என்ன ஹோட்டலா..நான் என்ன ரூம் ஸர்வீஸா? காலைலே வைச்சது அப்படியே இருக்குது..பைத்தியத்துக்கு புதுசு எதுக்கு..கெட்டுப் போனதேயே தின்னட்டும்.. ’ என்று மதிய உணவை சீதாவின் கையில் திணித்து விட்டு டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவனருகே அமர்ந்து விட்டாள். 

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும்,’இன்னும் எத்தனை நாள் தான் எங்க வீட்லே இந்த மாதிரி வைச்சிட்டு இருக்க முடியும்..அவங்க வீட்டு ஆளுங்களுக்கு சொல்லி விடுங்க அத்தை.’ என்று சீதாவுக்கு அறிவுரை அளித்த ராதிகாவின் கணவன் தப்பித் தவறி கூட ‘உங்க மகனுக்கு வீடு இருக்கில்லே அப்போ அவரோட மனைவியை அங்கே தானே வைச்சுப் பார்க்கணும்..அங்கே கூட்டிட்டு போங்க’ என்று சொல்லவேயில்லை. அவன் வெளிநாட்டில் இருந்த போதும் சரி திரும்பி வந்த பின்னும் சரி வீட்டுச் செலவுகள் அனைத்தையும் வெங்கடேஷ் கவனித்து வருவதால் அதைக் கெடுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.  சில மாதங்கள் முன்பு வரை உணவு, உபசாரம், ஊழியம் என்று வசந்தியின் உழைப்பை உறிஞ்சியவன் இன்று அவளது அவல நிலையில் அவளுக்கு உதவிக்கரம் நீட்டமால் அதையும் அவனுக்குச் சாதகமாக்கிக் கொண்டதால் அவன் மூலமாக வசந்திக்கு விடிவு காலம் வரவில்லை.

*******

இன்னொரு பாகம் இருக்கு..அதைப் போட்ட பிறகு தான் MK யோட அடுத்த பதிவு வரும்..அந்தப் பாகம் அடுத்த வாரம் வரும்..thanks for the support..stay blessed readers